ஆர்.எஸ்.எஸ். கூடாரமாகிறதா அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்? – அப்பாவி மாணவர்களின் கல்வி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்

சென்னை தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், 2024-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ்-ஸை சேர்ந்த இருவர் உள்ளே நுழைந்து, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான ஆவணங்களைக் கையில் வைத்துக்கொண்டு மாணவர்களிடையே ஜாதிய மதவாத நச்சுக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்தனர். குறிப்பாக, ஏ.பி.வி.பி-யின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கையில் வைத்துக்கொண்டு, நாங்குநேரியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் சின்னதுரை ஆதிக்க ஜாதிவெறி கொண்ட மாணவர்களால் தாக்கப்பட்டவுடன் தமிழ்நாடு அரசால் நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிட்டியின் பரிந்துரையை விமர்சித்தும், அந்த அறிக்கை இந்துக்களின் மத உணர்வுகளுக்கு எதிரானது என்றும் பிரச்சாரம் செய்துள்ளனர். இதனை அறிந்துகொண்ட சட்டக்கல்லூரி மாணவர்கள், குறிப்பாக சமூக அக்கறைகொண்ட, அரசியல் உணர்வு கொண்ட மாணவர்கள் (தமிழ்நாடு மாணவர் கழகம், இந்தியா மாணவர் சங்கம், புரட்சிகர மாணவர் இளைஞர் முண்ணனி) கல்லூர்ri மாணவர்கள் நேரில் சென்று ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் இருவரையும் விசாரித்தனர்.

விசாரிக்கும் போது அதிர்ச்சியளிக்கும் விவரங்கள் வெளிவந்தது. அந்த குண்டர்களின் கையிலிருந்த டைரியில் பல்கலைக்கழகத்தின் ஆண்கள் மற்றும் பெண்களின் கழிவறைக்குச் செல்வதற்கான வழி, சில மாணவர்களின் பெயர்கள் என பல்கலைக்கழகத்தின் மொத்த உள்கட்டமைப்பின் வரைபடமும் இருந்தது. இதுபோல் சென்னையில் இருக்கும் மூன்றுக்கும் மேற்பட்ட கல்லூரியின் விவரங்கள் இருந்துள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட மாணவர்கள், உதவிப் பேராசிரியர் ஹாசன் அவர்களுக்கு தகவல் தெரியப்படுத்தி குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அழைத்தனர். உடனடியாக உதவிப் பேராசிரியர்கள் இருவர் (ஹாசன், ஜெய்சங்கர்) நேரில் வந்து ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை விசாரித்தனர். அப்போது சட்டக்கல்லூரி மாணவர் ஒருவரின் சட்டையைக் கிழித்து ஆர்.எஸ்.எஸ் குண்டர் ஒருவர் தாக்குதலிலும் ஈடுபட்டார். சிறிய சலசலப்பிற்குப் பின் மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருவரையும் ஒப்படைத்து அவர்கள் மீது போலீசில் வழக்குத் தொடுக்குமாறு வலியுறுத்தினர்.

ஆனால் தலைகீழாக, அதன்பிறகு நடந்தது அனைத்தும் ஜனநாயக விரோதமான ஒடுக்குமுறைதான். சட்டக் கல்லூரி மாணவர்கள் சிறைப்படுத்திக் கொடுத்த ஆர்.எஸ்.எஸ் குண்டர்களின் மீது போலீசில் வழக்குத் தொடுக்காமல் அவர்களைப் பாதுகாக்க முயற்சி செய்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். நீண்ட நேரம் காத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், நிர்வாகம் திட்டமிட்டே காலம் தாழ்த்துவதை அறிந்துகொண்டு போராட்டத்தில் இறங்கினர். இப்போராட்டம் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது. ஆனாலும் போராடிய மாணவர்களின் தடுப்பையும் மீறி பல்கலைக்கழகத்தின் மகிழுந்தில் போலீசு பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் அழைத்துச் செல்லப்பட்டு எந்தவித வழக்கும் விசாரணையும் இன்றி விடுவிக்கப்பட்டனர். இதனையும் கண்டித்து போராட்டத்தைத் தொடர்ந்த மாணவர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகம் போராட்டத்தைக் கலைக்கும் நோக்குடன் கண்துடைப்புக்காக ஒரு விசாரணை கமிட்டி அமைப்பதாகவும், ஐந்து நாட்களுக்குள் அந்த அறிக்கையின் அடிப்படையில் வழக்குத் தொடுப்பது குறித்து முடிவு செய்யலாம் என்றும் துணைவேந்தர் சந்தோஷ் குமார் நேரடியாக வந்து வாக்குறுதியளித்தார். மாணவர்கள் நிர்வாகத்தின் கயமைத்தனத்தைப் புரிந்துகொண்டு எழுத்துப்பூர்வமாக ஒரு கடிதத்தையும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

பல்கலைக்கழகம் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் விஜயலட்சுமி தலைமையில் நான்கு பேர் கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால் விசாரணை தொடங்குவதற்கு முன்பே, மாணவர்கள் மறுநாள் பல்கலைக்கழகத்தில் காலை நுழையும் போதே ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது, அந்த அறிவிப்பு பல்கலைக்கழக சுவர்களில் பரவலாக ஒட்டவும் பட்டது. “பல்கலைக்கழக வளாகத்திற்குள் கலவரத்தில் மற்றும் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவதோடு, சீர்மிகு சட்டப் பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்” என்ற சூழ்ச்சி நிறைந்த இந்த அறிவிப்பு போராடிய மாணவர்களுக்கு எதிரான மிரட்டல், பல்கலைக்கழக ஜனநாயகத்திற்கு வெட்டப்பட்ட படுகுழி. குறிப்பாக இரகசியமாக பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்து சாதி மற்றும் மதவெறி பிரச்சாரம் செய்த ஆர்.எஸ்.எஸ் குண்டர்களைப் பாதுகாக்க பல்கலைக்கழக நிர்வாகம், நடந்தது ‘சட்டக் கல்லூரி மாணவர்களிடையே மோதல்’ என திரித்து திசைதிருப்பும் சூழ்ச்சியைச் செய்தது.

விசாரணை தொடங்குவதற்கு முன்பே வெளியிடப்பட்ட அறிவிப்பு பல்கலைக்கழக நிர்வாகத்தின், குறிப்பாக துணைவேந்தர் சந்தோஷ் குமாரின் சங்கித்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியது. பல்கலைக்கழகத்தில் முற்போக்கு மாணவர் அமைப்புகள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்தி வந்த “எரிதழல்”, “ஜெய் பீம்” போன்ற வாசகர் வட்டத்தை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. விளையாட்டு மைதானத்தில் இருக்கும் கேலரி (GALLERY) மூடப்பட்டது. அம்பேத்கரின் “விசாவுக்காக காத்திருக்கிறேன்” என்ற நூலை மாணவிகள் படித்து விவாதித்துக் கொண்டிருந்த போது நூல் பறிக்கப்பட்டு “இதற்கெல்லாம் யார் அனுமதி கொடுத்தது” என்று மிரட்டப்பட்டார்கள். அடக்குமுறைகளை எதிர்கொள்ள முடியாமல் குறிப்பாக தேர்வு காலமும் நெருங்கியதால் போராடவும் வாய்ப்பு இல்லாமல் இப்போது வரை வாசகர் வட்டங்கள் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருக்கும் பூங்காவில் நடத்தப்படுகிறது. மேலும், இந்தக் கல்வியாண்டு முழுவதும் இப்போராட்டத்தில் முன்னணியில் இருந்த மாணவர்கள் குறிவைக்கப்பட்டு நிர்வாகத்தால் பல்வேறு முனைகளில் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

பல்கலை. நிர்வாகத்தின் பழிவாங்கும் படலம்

2025 – கல்வியாண்டின் முதல் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, போராட்டத்தில் முன்னணியில் இருந்த மாணவர்கள் குறிவைக்கப்பட்டு பல்வேறு காரணங்களுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டனர். தற்போது உண்ணாநிலை போராட்டத்தில் இருக்கும் ஒன்பது மாணவர்களில் 4 பேர் 60 நாட்களுக்கும் மேலாக இடைநீக்கம் செய்யப்பட்டு வஞ்சிக்கப்பட்டுள்ளனர். விசாரணைக் கமிட்டிகள் அமைத்து விசாரணை என்ற பெயரிலும், விளக்கக் கடிதங்கள் கேட்டும் துன்புறுத்துவதன் மூலம் மன ரீதியாகவும் தாக்கப்படுகின்றனர். அக்டோபர் மாத தொடக்கத்தில் தொடர்ச்சியாகத் துன்புறுத்தப்படும் மாணவர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பதில் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட பல்கலை நிர்வாகம், வெறி தலைக்கேறி போராட்ட முன்னணியில் இருந்த ஒன்பது மாணவர்களைக் குறிவைத்து, அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டு இருப்பதாகக் கூறி (ஆர்.எஸ்.எஸ் குண்டர்களுக்கு எதிரான போராட்டத்தை இந்த ஒன்பது பேரும் சக மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகக் கூறி திரித்து இணைத்தனர்) விசாரணைக் கோரினர்.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் மிகவும் இழிவான பொய்க் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அவர்களே மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலர் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தனர். இந்த ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டதும், விசாரணைகளும் திட்டமிட்டே இந்த கல்வியாண்டின் முதல் பருவத் தேர்வுகள் தொடங்கும் காலத்தில் முன்தள்ளப்பட்டது. இவையெல்லாம் முழுக்க முழுக்க ஒன்பது பேரையும் தேர்வு எழுத விடாமல் இறுதி நேரத்தில் நீதிமன்றத்திற்கும் செல்ல முடியாமல், போராடவும் முடியாமல் வாயடைக்கப்பட்டு கைகளும் கட்டப்பட்டு, கழுத்தறுப்பது போல் இடைநீக்கம் செய்வதற்கான திட்டம்.

ஆர்.எஸ்.எஸ் குண்டர்களுக்கு எதிராக என்று சொல்லிக்கொள்ளப்பட்டு 2024 – ல் அமைக்கப்பட்ட உதவிப் பேராசிரியர் விஜயலட்சுமி தலைமையிலான விசாரணைக் கமிட்டியின் அறிக்கை ஒரு ஆண்டுக்குப் பிறகு இப்போது சிங்காரவேலர் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் தாக்குதலுக்குத் துணையாக வெளியிடப்பட்டது. (உதவிப் பேராசிரியர் ஒரு நபர் ஆணையத்தின் குறுக்கு விசாரணையின் போது, தான் விசாரணைக் கமிட்டியின் அறிக்கையை 2024 -ஆம் ஜீன் மாதமே துணைவேந்தரிடம் ஒப்படைத்துவிட்டதாகத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது) அந்த அறிக்கையும் உண்மைகளைக் குழி தோண்டி புதைத்துவிட்டு வெறும் பொய்யால் கட்டமைக்கப்பட்ட அறிக்கை.

இறுதியாக அவர்கள் திட்டமிட்ட முறையில் ஒரு நபர் ஆணையம் அக்டோபர் மாதம் கூடியது. ஒன்பது மாணவர்களும் வழக்கறிஞர் திருமூர்த்தி அவர்களின் தலைமையில் புகைப்படம் மற்றும் எழுத்துப்பூர்வமாக இருந்த ஆதாரங்களை ஒப்படைத்து தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். ஆனால் ஒன்பது பேரும் சக மாணவர்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பொய்யை அறிக்கை மீண்டும் வலியுறுத்தியது. வெளியிலிருந்து வந்த நபர்கள் (ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள்) அட்மிஷனுக்காக உள்ளே வந்து மாணவர்களிடையே பேசியதாகத் தெரிந்த உண்மையை மறைத்து திரிக்கிறார்கள். (உதவிப் பேராசிரியர் விஜயலட்சுமி தலைமையிலான கமிட்டியின் அறிக்கையில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான ஆவணங்கள் அந்த குண்டர்களின் கையிலிருந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.)

ஆர்.எஸ்.எஸ் குண்டர்களில் ஒருவர் விவேகானந்தர் புகைப்படம் வைத்திருந்தாக அறிக்கையில் சொல்லப்படுகிறது. விவேகானந்தர் புகைப்படம் வைத்திருப்பவருக்கும் நியாயம் கற்பிக்கப்பட்டு, கூடுதலாக விவேகானந்தர் வரலாறும் விரிவாக அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது. “குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் ஏன் உங்களை இடைநீக்கமோ, பல்கலைக்கழக மாணவர் பட்டியலிலிருந்து நிரந்தர நீக்கமோ செய்யக் கூடாது” என்று விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது பல்கலைக்கழக நிர்வாகம்.” மாணவர்களின் உரிமைகளுக்காகவும், பறிக்கப்படும் பல்கலைக்கழக ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், நிர்வாக அடக்குமுறைக்கு எதிராகவும் தொடர் போராட்டத்தில் இருக்கும் ஒன்பது மாணவர்களையும் இறுதியாக தேர்வு எழுத விடாமல் முடக்கும் பல்கலைக்கழகத்தின் சதியை எதிர்த்துத்தான், சட்ட ரீதியாகவும், களத்தில் உண்ணாநிலை போராட்டத்தையும் தற்போது மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசும், சட்டத்துறை அமைச்சரும் உடனடியாக மாணவர்களின் எதிர்காலக் கல்வியை உறுதி செய்ய வேண்டும். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ஆர்எஸ்எஸ் கூடாரமாக்கப்படுவதைத் தடுத்த நிறுத்த வேண்டும்.
(வினவு தளத்தில் வெளியான செய்தியில் இருந்து)…
பெரியார்முழக்கம்இதழ் 06112025

You may also like...