ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் சரியா? (2) ‘ஜீவா’ வரலாறுகளின் குழப்பங்கள்
ஜீவாவின் ‘ஈரோட்டுப் பாதை சரியா?’ என்பதை பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு முன்னர் சில செய்திகளை முன்னோட்டமாக முன்வைக்கிறோம்.
தோழர் ஜீவா அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை பலர் எழுதியிருந்தாலும், தோழர் எம். இஸ்மத் பாஷா எழுதிய ‘ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு’ மட்டுமே ஜீவா வாழ்ந்த காலத்தில் (1946 மார்ச்) வெளிவந்த நூலாகும். அந்நூலுக்கு முகவுரை எழுதியுள்ள தோழர் ஏ.எஸ்.கே (அய்யங்கார்) அம்முகவுரையில் “நான் கண்டிப்பாக முகவுரை எழுத வேண்டும் என்று ஜீவாவே கூறினார். என் நண்பரின் கட்டளைக்குப் பணிகிறேன்” என்று குறிப்பிட்டே முகவுரை எழுதியுள்ளார். எனவே அந்த நூல் ஜீவாவின் பார்வைக்கும் ஏற்புக்கும் பின்னர் தான் வெளிவந்திருக்க வேண்டும்.
அந்நூலின் 12ஆம் பக்கத்தில் “கொள்கைக்காக வீட்டை விட்டு ஜீவா நேராக சுசீந்திரம் என்ற ஊருக்குச் சென்றார். அங்கு தெருப்பிரவேச சத்தியாகிரகம் ஆரம்பிக்கும் தருவாயில் இருந்தது. தெருக்களில் அரிஜனங்கள் செல்லக்கூடாது என்ற சமூக அநீதி அங்கு பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது; உலகப் பிரசித்திப் பெற்ற வைக்கம் சத்தியாக்கிரகத்தின் எதிரொலியாக சுசீந்திரத்திலும் சத்தியாக்கிரகம் செய்ய ஏற்பாடு ஆயிற்று. ஜீவா அந்தப் போராட்டத்தில் குதித்தார். சத்தியாக்கிரகிகளின் முதல் கோஷ்டியின் தலைவரானார். வைதீக ஜாதி இந்துக்கள் ஏவிவிட்ட குடி வெறியர்களின் மூங்கில்கழி அடிகளையும், வெற்றிலையை அதக்கி உமிழ்ந்த உமிழ்தல்களையும், வசை மாரிகளையும் பொறுத்து சாத்வீக சத்தியாகிரக பயிற்சியில் தேறினார். ‘வழி விடுவீர்’ என்று அவரால் ஆக்கப்பட்டு சத்தியாகிரக தொண்டர்களால் பாடப்பட்ட பாட்டு வீடுகளிலெல்லாம் எதிரொலித்தது.
அதே நூலின் 13-ஆம் பக்கத்தில் மற்றொரு செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது. “பிரபல தேச பக்தரான ஸ்ரி வ.வே.சு. ஐயர் அவர்களால் சேரன்மாதேவியில் அப்போது ஒரு ஆசிரமம் நடத்தப்பட்டு வந்தது. ‘பரத்வாஜர் ஆசிரமம்’ என்று அதற்குப் பெயர். பிராமண மாணவர்களுக்கு மட்டும் ஒரு தனி இடத்தில் உணவு பரிமாறும் வழக்கம் அங்கு இருந்தது. இது கூடாது எல்லோருக்கும் ஒரே இடத்தில் உணவு பரிமாறப்பட வேண்டும் என்று ஈ.வெ.ரா., வரதராஜ நாயுடு முதலியோர் கிளர்ச்சி செய்தனர். ஜீவா இந்தக் கிளர்ச்சியிலும் கலந்து கொண்டார். சிறந்த தேசியவாதிகளையும் இக்கொடிய ஜாதி மதப்பேய் விடவில்லையே என்று நினைத்து மிகவும் வருந்தினார். இக்கொடுமையை ஒழிக்க கடுமையாகப் போராட வேண்டும் என்று உறுதி செய்து கொண்டார்”.
“நண்பர்கள் சிலருடன் செட்டிநாட்டுக்குச் சென்றார் காரைக்குடிக்கு அருகே உள்ள சிரா வயல் என்ற கிராமத்தில் தானே ஒரு ஆசிரமத்தைத் தோற்றுவித்தார். ‘காந்தி ஆசிரமம்’ என்று இதற்குப் பெயர். ஸ்ரீ கும்பலிங்கம் என்பவரைத் தலைவராகக் கொண்ட இவ்வாசிரம நிர்வாகக் கமிட்டியில் பொதுக் காரியதரிசியின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்” என்பவையே அவ்வரிகள்.
மற்றொரு வாழ்க்கை வரலாற்று நூல் ‘ஜீவா வாழ்க்கை வரலாறு’ ஆகும். அது நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் சார்பாக முதல் பதிப்பு ஜனவரி 1966இலும், இரண்டாம் பதிப்பு மார்ச் 1975இலும் வெளிவந்த ஒன்றாகும். அதை எழுதிய தோழர் கே. பாலதண்டாயுதம், ஜீவா அவர்களோடு இணைந்து பணியாற்றியவர்; ஜீவாவின் மரணத்துக்கு முதல் நாள் ஜனசக்தி அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது “தோழர், நாளைக்கு எனக்கு ஓய்வு; பத்திரிக்கையைப் பார்த்துக் கொள்ளுங்கள், பாலன்” என்று சொல்லிவிட்டு சென்ற செய்தியைக் கூட அந்நூலில் பதிவு செய்துள்ளார். அவர்தான் ஜீவா சிலை அமைப்புக் குழுவின் செயலாளராக இருந்தவரும் கூட. அவருடைய நூலில் உள்ள பதிவுகள் ஜீவாவுடன் பழகிய காலத்தில் ஜீவாவிடம் இருந்து நேரடியாக பெற்ற செய்திகளின் தொகுப்பாகவே இருக்க வேண்டும். அந்நூலில் கீழ்க்கண்ட செய்திகள் காணப்படுகின்றன.
அந்நூலின் 25 ஆம் பக்கம் “கொள்கையை விட முடியாது; வீட்டை விடுகிறேன் என்று கூறி ஜீவா வீட்டை விட்டு வெளியேறினார். வைதீகக் கோட்டையான வைக்கம் என்ற ஊரில் தீண்டாமை ஒழிப்பு சத்தியாக்கிரகம் தொடங்கிற்று. பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு ஜீவா அதில் தொண்டராகப் போய்ச் சேர்ந்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார்; அடிபட்டார்; வேறு பல அடக்குமுறைகளுக்கும் ஆளானார். அங்கிருந்து திரும்பிய ஜீவா நாகர்கோவிலுக்கு 5 மைல் தூரத்தில் உள்ள சுசீந்திரத்திலும் அத்தகைய போராட்டத்தில் கலந்து கொண்டார்.
சுசீந்திரம் தாணுமாலையன் சந்நதியில் ஜோசப் பூதலிங்கம் என்ற தாழ்த்தப்பட்ட தோழரையும் வேறு பலரையும் அழைத்துக் கொண்டு பிரவேசித்தார். வைதீக இந்துக்கள் இவர்கள் மீது காறி உமிழ்ந்தார்கள்; குடி வெறியர்களைக் கொண்டு கம்பால் தாக்கினார்கள். ஆனால் ஜீவா அவற்றைப் பொருட்படுத்தாமல் ‘வழி விடுவீர்’ என்று தான் இயற்றியப் பாடலை பாடிக் கொண்டே தடையை மீறி நுழைந்தார்”.
அந்தப் போராட்டத்தைத் தான் தோழர் இஸ்மத் பாஷா தான் எழுதிய ஜீவானந்தம் வாழ்க்கை வரலாற்றில் தெருப்பிரவேச சத்தியாகிரகம் என்று குறிப்பிடுகிறார்.
வைக்கத்தில் வெற்றி பெற்ற தெருக்களில் அனைவரும் நடக்கும் உரிமைப் போராட்டத்தின் தாக்கம், சுசீந்திரத்திலும் அதே திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகை பகுதியில் இருந்த சுசீந்திரத்தில் இருக்கிற தாணுமாலயன் ஆலயத்தைச் சுற்றி இருக்கிற தெருக்களிலும் சில சமுதாயத்து மக்கள் நடப்பதற்கு இருந்த தடையை எதிர்த்து 1926 ஜனவரி 29-ம் நாளில் சுசீந்தரம் போராட்டம் தொடங்கி இருக்கிறது.
ஆனால் கே.பாலதண்டாயுதம் எழுதியுள்ள ஜீவா வாழ்க்கை வரலாறு என்னும் நூலின் 25-ஆம் பக்கத்தில் சுசீந்திரம் தாணுமாலயன் சந்நதியில் ஜோசப் பூதலிங்கம் என்ற தாழ்த்தப்பட்ட தோழரையும் வேறு பலரையும் அழைத்துக் கொண்டு பிரவேசித்தார் என்று போராட்டத்தை ஆலய நுழைவுப் போராட்டமாக பதிவு செய்திருக்கிறார்.
நாம் எழுப்புகிற கேள்வி சுசீந்திரத்தில் நடந்தது தெரு பிரவேசப் போராட்டமா? ஆலய நுழைவுப் போராட்டமா? என்பதுதான்.
இந்த இடத்தில் கட்டுரையை படிப்பவர்கள் புரிதலுக்காக சில வரலாற்றுப் பதிவுகளை முன் வைக்க விரும்புகிறோம்.
வைக்கம் போராட்டம் 30.3.1924 இல் தொடங்கிற்று 27.11.1925 அன்று பெரியார் தலைமையில் வைக்கத்தில் நடந்த வெற்றி விழா பொதுக்கூட்டத்தோடு நிறைவு பெற்றது.
சுசீந்திரம் போராட்டம் 29.1.1926 இல் தொடங்கியது, 4.9.1927 நாளிட்ட குடிஅரசு இதழில் அரசினர் உறுதியளித்தபடி வீதிகளை திறந்து விடாமல் இருக்கின்றார்கள் என்பதோடு அரசுக்கு ஒரு மாத அவகாசம் கொடுத்து மீண்டும் சத்தியாகிரகத்தை தொடங்க வேண்டும் என்று பெரியார் எழுதியுள்ளார்.
சேரன்மாதேவி போராட்டம் 1924-ம் ஆண்டின் இறுதியில் தொடங்கி அந்த ஆசிரமத்தை பொறுப்பேற்று நடத்தி வந்த வ.வே.சு அய்யர் 4.06.1925 அன்று பாபநாசத்தில் நீர்ச்சுழலில் சிக்கி இறந்ததும் முடிவுக்கு வந்தது.
குடிஅரசு 25.4.1926 நாளிட்ட இதழின் 11-ம் பக்கத்தில், சிராவயல் காந்தி ஆசிரமத் தலைவர் கும்பலிங்கம் விடுத்துள்ள அறிக்கையின்படி குரோதன வருஷம் தை மாதம் 29ஆம் தேதி 12.2.1926 அன்று தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
இஸ்மத் பாஷா எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல் 14-ஆம் பக்கத்தில் வீட்டை விட்டு வெளியேறி 29.1.1926 இல் தொடங்கும் சுசீந்திரம் போராட்டத்தின் முதல் கோஷ்டியின் தலைவராக பொறுப்பேற்றார் என்கிறார். (21.8.1907)-ல் பிறந்த ஜீவாவுக்கு அப்போது வயது 18 ஆண்டுகள் 5 மாதம் தான்).
அடுத்து 15-ம் பக்கத்தில் சேரன் மாதவி குருகுலப் போராட்டத்தில் கலந்து கொண்டதாக உள்ளது. ஆனால் அந்தப் போராட்டமும் 4.6.1925 அன்று முடிவுக்கு வந்திருந்தது. அந்தப் போராட்டம் ஆர்ப்பாட்டமாகவோ, மறியலாகவோ, சத்தியாகிரகமாகவோ நடந்தது அல்ல!. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரான வரதராஜுலு நாயுடும், பொதுச்செயலாளராக இருந்த பெரியாரும் ஜாதி பேதம் காட்டுகிற சேரன்மாதேவி குருகுலத்திற்கு நன்கொடை அளிக்காதீர்கள் என்று 1924 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிட்ட அறிக்கையில் தொடங்கியது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டங்கள்; காந்தியாரின் சமாதான பேச்சு போன்ற செயல்பாடுகள்தான் சேரன்மாதேவி குருகுல போராட்டம் என்று சொல்லால் குறிக்கப்படுகிறதே தவிர, அந்தப் போராட்டம் ஆர்ப்பாட்டமாகவோ, சத்தியாகிரமாகவோ, மறியலாகவோ நடக்கவில்லை. அவ்வாறானால் இரண்டு நூலாசிரியர்களும் எழுதியிருப்பதைப் போல ஜீவா எந்த அடிப்படையில் சேரன்மாதவி போராட்டத்தில் பங்கேற்று இருப்பார் என்பதே கேள்விக்குரியதுதான். பதில் உண்மைக்கு புறம்பானது என்று மட்டும் தான் வரலாற்று தகவல்களில் இருந்து நாம்மால் அறிய முடிகிறது.
எனவே இஸ்மத் பாஷாவின் ஜீவானந்தம் வாழ்க்கை வரலாற்று நூலின் 15-ம் பக்கத்தில் சேரன்மாதேவி குருகுலத்தில் இருந்து வெளியேறிய ஜீவா சிராவயல் என்ற கிராமத்தில் ஒரு ஆசிரமத்தை தோற்றுவித்தார் என்று குறிப்பிட்டு இருப்பதும் சரியல்ல. அந்த போராட்டம் 4.6.1925ஆண்டிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. சுசீந்தரம் போராட்டத்தை அடுத்து சிராவயல் சென்றார் என்பதாகவே இருக்க முடியும்.
இறுதி நாட்களில் ஜீவாவோடு பணியாற்றிய கே.பாலதண்டாயுதம் எழுதிய ஜீவா வாழ்க்கை வரலாறு என்ற நூலில் 27-ஆம் பக்கத்தில் ‘ஆசிரமத்தில் அமர்ந்தார்’ என்ற தலைப்பின் கீழ், ஜாதி பேதம் காட்டுகிற தமிழ் குருகுலம் அல்லது பரத்வாஜ் ஆசிரமம் என்ற ஸ்தாபனம் சேரன்மாதேவியில் மூடு விழா கண்ட பிறகு புதிய சமத்துவ ஆசிரமம் ஒன்றினை அமைக்கும் பணியில் ஜீவா ஈடுபட்டார் என்பதும் உண்மையாக இருக்க முடியாது.
நண்பர்கள் சிலருடன் செட்டிநாட்டுக்குச் சென்றார். காரைக்குடிக்கு அருகில் உள்ள சிராவயல் என்ற கிராமத்தில் காந்தி ஆசிரமம் என்ற பெயருடன் தானே ஒரு ஆசிரமத்தை தோற்றுவித்தார் என்று காணப்படுகிறது. 29.1.1926 சுசீந்திரம் சத்தியாகிரக போராட்டத்தின் முதல் கோஷ்டிக்கு தலைமை தாங்கிய ஜீவா 300 கி.மீ அப்பால் உள்ள சிராவயல் சென்று 12 நாட்களுக்குள் ஆசிரமத்தை கட்டித் தொடங்கினார் என்பது உண்மையாக இருக்க முடியுமா?.. அவர் ஜீவாவா? இல்லை ஜீபூம்பாவா என்ற குழப்பம்தான் மிஞ்சும்.
அடுத்த கேள்வி: இஸ்மத் பாஷா அவர்களின் நூலின் 12 ஆம் பக்கத்தில் “ கொள்கைக்காக வீட்டை விட்டு” ஜீவா நேராக சுசீந்திரம் என்ற ஊருக்கு சென்று தெருப்பிரவேச சக்தியாகரத்தில் ஈடுபட்டார் என்று கூறுகிறது. ஆனால் கே.பாலதண்டாயுதம் எழுதிய வாழ்க்கை வரலாற்றின் 25-ம் பக்கத்தில் ”கொள்கையை விட முடியாது; வீட்டை விடுகிறேன்” என்று கூறி ஜீவா வீட்டை விட்டு வெளியேறினார். வைதீக கோட்டையான வைக்கம் என்ற ஊரில் தீண்டாமை ஒழிப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார்; அடிபட்டார்; வேறு பல அடக்குமுறைகளுக்கும் ஆளானார். அங்கிருந்து திரும்பிய ஜீவா நாகர்கோவிலுக்கு 5 மைல் தூரத்தில் உள்ள சுசீந்திரத்திலும் அத்தகைய போராட்டத்தில் கலந்து கொண்டார் என்று குறிப்பிடுகிறது. இஸ்மாத் பாஷா எழுதிய வாழ்க்கை வரலாறு நூல் ஜீவாவின் வாழ்நாள் காலத்திலேயே வெளியிடப்பட்டது.
ஜீவா இறுதி நாட்களில் உடன் பணியாற்றிய கே.பாலதண்டாயுதம் அவர்கள் ஜீவா இறந்த ஓரிரு ஆண்டுகளில் வாழ்க்கை வரலாற்றினை எழுதுகிறார். இருவரின் வாழ்க்கை வரலாறுகளும் நேரடியாக ஜீவாவிடம் இருந்து பெற்ற செய்திகளாகத்தான் இருக்க முடியும். இதில் ஏன் முரண்பாடுகள் வருகின்றன, ஜீவாவே தவறாக சொன்னாரா (அ) தங்கள் தோழருக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று துடிப்பில் இவர்களாக இந்தப் பகுதிகளை எழுதியிருப்பார்களா? என்பதே நாம் எழுப்பும் கேள்வி.
தொடரும்..
பெரியார் முழக்கம் இதழ் 30102025
