ஜாதி எதிர்ப்பைப் பேசும் ‘பைசன்’
“மாரி செல்வராஜின் படைப்பாக்கத்தில் ஐந்தாவது திரைப்படமாக ‘பைசன்’ வந்திருக்கிறது .திரை அரங்கில் இந்தப் படத்தைப் பார்த்த போது படம் முழுதும் பார்வையாளர்களிடம் அப்படி ஒரு அமைதி.படம் முடிந்து வெளியேறும் போதும் கனத்த இதயத்துடன் எந்தப் பேச்சும் இல்லாமல் வெளியேறியதை பார்க்க முடிந்தது. பார்வையாளர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை படம் உருவாக்கி இருக்கிறது என்பதை உணர்த்தியது.
1990-களின் முற்பகுதியில் நெல்லை மாவட்டம் ஜாதிக் கலவரங்களில் மூழ்கிக் கிடந்த நேரத்தில், ஜாதி வலிகளை சுமந்து ஒரு இளைஞன் தான் நேசித்த கபடியில் சர்வதேச அளவில் தடம் பதித்த வெற்றிக்கதையை ஜாதி எதிர்ப்போடு படம் பேசுகிறது.
கதையின் நாயகர் நாயகிகளை, உணர்வுகளின் வடிவமாக்கி, தனது நுட்பமான திரை மொழியில் எமோஷன்களாக மக்களிடம் கடத்தும் இயக்குனர், இந்த உணர்வுகளோடு ஜாதி எதிர்ப்பையும் குழைத்துத் தந்திருக்கிறார்.
படத்தின் மய்யம் கபடியாக இருப்பதால் அது இளைஞர்களை ஈர்க்கிறது. கபடியோடு ஜாதித் தடைகளும், கொடுமைகளும் இணையும் போது புரிதலற்ற, இளைஞர்களை சிந்திக்கத் தூண்டுகிறது.ஜாதி ஆதிக்கத்தை எதிர்க்கும் போது, ஜாதி குடும்பப் பெருமைகளை பேசுவது ஆபத்தானது என்று இயக்குனர் மிகச் சரியான ஜாதி எதிர்ப்புப் பார்வையை முன்வைக்கிறார்.
திருமண உறவில் ஆண்களை விட பெண்களின் வயது குறைவாக இருக்க வேண்டும் என்ற சமூகத்தடையையும், பாகிஸ்தான் வீரர்களோடு விளையாடும் போது மட்டும் விளையாட்டை விட மதவெறி துருத்திக் கொண்டிருப்பதையும் இயக்குனர் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
படத்தின் காட்சிப்படுத்தலும், ஜாதிகளை சுமந்து வாழும் மக்களின் வலிகளும், கூர்மையான வசனங்களும், பாடல்களும் உணர்வுகளை உலுக்குகின்றன
“ஜாதிப் படங்களையே ஏன் எடுக்கிறீர்கள்?” என்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது மாரி செல்வராஜ் இவ்வாறு பதிலளித்தார்,”நான் ஜாதி வலிகளைக் கடந்து வந்தவன்; ஜாதி எதிர்ப்பு என்பது தான் எனக்கான அடையாளம்; ஜாதி எதிர்ப்பு படைப்புகளைத்தான் தயாரிப்பேன்” என்று நெஞ்சு நிமிர்த்தி பதிலடி தந்திருக்கிறார்.
சல்யூட் தோழர்!!!
– விடுதலை இராசேந்திரன்,
முகநூல் பதிவு,
25.10.25
பெரியார் முழக்கம் இதழ் 30102025
