கோவையில் தீண்டாமை ஒழிப்பு ஆர்ப்பாட்டம்! மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை!

திருப்பூர் வீரபாண்டி பெரியார் படிப்பகத்தில் 03-11-2025 மாலை 5 மணி அளவில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமையில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :

தீர்மானம் -1

டிசம்பர் 24 தலைவர் பெரியார் நினைவு நாளையொட்டி கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கையை வலியுறுத்தி கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் மாபெரும் போராட்டத்தை நடத்துவது.

அதற்கான சுவர் எழுத்து, சுவரொட்டி, சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்வதின் மூலமாக ஜாதியத் தீண்டாமைக்கு எதிரான இந்தப் போராட்டத்தின் நோக்கத்தை மக்களிடத்தில் எடுத்துச் செல்வது அதன் வாயிலாக தோழர்கள் மற்றும் மக்களை அணி திரட்டுவது

தீர்மானம்- 2

கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” ஆண்டு சந்தா மூன்று மாவட்டங்கள் இணைந்து மொத்தம் 500 சந்தாக்களை நவம்பர் 03 தேதி முதல் டிசம்பர் 15ம் தேதிக்குள் சேர்த்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களிடம் ஒப்படைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தந்தை பெரியாரின் நினைவு நாளில் 24- 12 -2025 நடைபெற உள்ள ஜாதிய, தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்திற்கு மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் தோழர்களை அழைப்பது குறித்தும், கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் தீண்டாமைக் கொடுமைகள் அதிகமாக நிலவுவது குறித்தும் விவாதித்தனர்.

டிச.25 ஆர்ப்பாட்டம் குறித்து சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வது, தொடர்ந்து அதைப் பற்றி விவாதிப்பது, தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது போன்ற போராட்டத்திற்கு வலுசேர்க்கும் கருத்துக்களை தோழர்கள் தெரிவித்தார்கள்.

நிகழ்வில் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், தலைமைக்குழு உறுப்பினர் நிர்மல்குமார், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு, ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வகுமார், ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் செல்வராஜ், பொள்ளாச்சி நகரச் செயலாளர் சபரிகிரி, பொள்ளாச்சி ஆனந்த், திருப்பூர் தெற்கு பகுதிச் செயலாளர் ராமசாமி, மாநகர துணைத் தலைவர் மாரிமுத்து, மாநகர அமைப்பாளர் முத்து, வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், இனியன், ஈரோடு தெற்கு கோபிநாத், நல்லதம்பி உள்ளிட்ட தோழர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருப்பூர் வெங்கட் நன்றி கூறினார். தோழர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

பெரியார் முழக்கம் இதழ் 13112025

You may also like...