அரசியல் ஊழலும் ஆன்மீக ஊழலும்
திருப்பதி ஏழுமலையான், சபரிமலை அய்யப்பன், குருவாயூர் கிருஷ்ணன் என்ற பிரபலமான கோயில்களின் ஊழல் மோசடிகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. திருப்பதியில் பக்தர்கள் காணிக்கையான உண்டியல் பணத்தில் ரூ.100 கோடி திருடப்பட்டுள்ளது. நிர்வாக அதிகாரிகள், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இணைந்து திருடியப் பணத்தில் பங்கு போட்டு இருக்கிறார்கள். திருடியவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பங்குச் சந்தையிலும், வீடு, மனைகள் வாங்கிக் குவிப்பதிலும் ஏழுமலையான் காணிக்கை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர நெய், லட்டு பிரசாதம், தரிசன டிக்கெட் ஊழல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது.
இதே போல் சபரிமலை கோயிலின் கருவறை வாயிலில் உள்ள துவாரக பாலர் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த கவசங்களில் பூசப்பட்டிருந்த தங்கம் திருடப்பட்டுள்ளது. இந்த தங்கக் கவசத்தை பழுது நீக்கி செப்பனிட்டு தரும் வேலை ஒரு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு முறை சீரமைத்து ஒப்படைத்துள்ளார். இந்த சீரமைப்பின் போது 4.5 கிலோ தங்கம் திருடப்பட்டது கண்டறியப்பட்டு, இப்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தங்கத்தை மறைத்து செப்பு தகடு என்று பதிவு செய்துள்ளார்கள். நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதிகளையும் மீறி இந்த மோசடி நடந்துள்ளது.
கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவில் தங்கம், வெள்ளி மற்றும் விலை மதிப்புள்ள சொத்துக்கள் காணாமல் போய் இருப்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2019 லிருந்து 2021 வரை யானை தந்தங்கள், தங்க நகைகள் காணாமல் போய் இருப்பதை தணிக்கைத் துறை கண்டறிந்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
கடவுளுக்குக் காணிக்கையாக்கப்பட்ட உடைமைகளைத் திருடுகிறவர்கள் தீவிரமான கடவுள் நம்பிக்கையாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் கடவுள் தண்டிப்பார் என்ற அச்சமே இவர்களுக்கு கிடையாது. இவர்களின் நம்பிக்கை உண்மையாக இருந்தால் இந்த குற்றங்களை அவர்கள் ஒருபோதும் செய்திருக்க மாட்டார்கள். காணிக்கை என்பதே ஊழல் தான்; கடவுளுக்கான லஞ்சம். கருப்புப் பணம் தான் பெருந்தொகையாக உண்டியலில் போடப்படுகிறது.
அரசியல் ஊழல்கள் மட்டும் இங்கே அனல் கக்கிக் கொண்டிருக்கிறது. ஊழலற்ற ஆட்சி என்று முழங்குகிறார்கள், ஆனால் பக்தியின் பெயரால், ஆன்மிகத்தின் பெயரால், கோயிலின் பெயரால் நடக்கும் ஊழல்களைப் பேச எவருமே முன்வருவதில்லை.
அரசியலில் நடமாடும் ஊழல் பணம் முடங்கிக் கிடப்பது இல்லை. அது பல்வேறு வடிவங்களில் சமூகத்தில் புழங்குகிறது. ஆனால் கோயில்களில் பல லட்சம் கோடி சொத்துக்கள் முடங்கிப் போய் கிடக்கின்றன, அசைவின்றி தேங்கி இருக்கிறது. கல்வி, மருத்துவம் போன்ற மக்கள் சேவைகளுக்குக் கூட கோயில் நிதியை பயன்படுத்தக்கூடாது என்று சங் பரிவாரங்கள், பார்ப்பனர்கள் எதிர்க்கிறார்கள். நீதிமன்றங்களும் கோயில்களின் சடங்குகளுக்கு மட்டுமே நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு எழுதுகின்றன. இந்த சொத்துக்கள் ரிசர்வ் வங்கியில் மூலதனமாக்கப்பட்டால் நாட்டில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் எந்த ஒரு அரசியல் கட்சியும் இதை பேசத் தயாராக இல்லை.
கோயில்கள் பார்ப்பன அதிகாரத்தின் அடையாளச் சின்னங்களாகவே நீடிக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் உறுதி காட்டுகிறார்கள். கோயிலும், கடவுள் சிலைகளும், கோயில் விழாக்களும், பண்டிகைகளும் பார்ப்பனர்களுக்கு சமூக மூலதனம். இந்த மூலதனத்துக்கு வலிமை சேர்கின்றபோது பார்ப்பன சமுதாய ஆதிக்கமும் வலிமை அடைந்து வருகிறது. பார்ப்பனர்களின் வேத மதத்தில் கோயிலோ, உருவ வழிபாடோ கிடையாது. வேத காலத்தில் பின்பற்றி வந்த அக்னி, வருணன், இந்திரன் போன்ற கடவுள்களை அவர்களே ஒதுக்கிவிட்டு, இப்போது உருவ வழிபாட்டுக்கு வந்து விட்டார்கள். கோயில்கள் தோன்றிய காலத்தில் இருந்த நிலையிலிருந்து இப்போது நவீனத்துக்கு ஏற்ப கோயில்களில் மாற்றங்கள் வந்துவிட்டன. ஆனாலும் கோயில் பழமைவாதங்களில் தளர்ச்சி ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் பார்ப்பனர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
கடவுள் நம்பிக்கையிலும் மாற்றங்கள் வந்துள்ளன. ‘கடவுள் நம்மை வழி நடத்துவார்; தவறுகளை தண்டிப்பார்’ என்ற நம்பிக்கைகள் மக்களிடம் குறைந்து வருவதை உணர்ந்து கொண்ட பார்ப்பனர்கள், மதத்தை அரசியலாக்கி விட்டனர். இந்து என்ற ‘நம்பிக்கைத் தளத்தில் இருந்து பிற மத எதிர்ப்பு’ என்ற போர்வையில் இந்து மதத்தைக் காப்பாற்றும் செயல் திட்டங்களை உருவாக்கி விட்டனர். புராணக் கதைகளால் கட்டமைக்கப்பட்ட பண்டிகைகளை உயிர்த்துடிப்போடு நீடிக்க அதன் உள்ளடக்கத்திலும் பார்ப்பனர்கள் சமரசம் செய்து கொண்டுள்ளார்கள். தேவர்களையும் வேதங்களையும் எதிர்த்தால் மரண தண்டனை என்ற மனநிலையை உருவாக்குவதற்காக பண்டிகைகள் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டன. இப்போது அது மறைக்கப்பட்டு வணிக மயமாக்கப்பட்டு மக்களின் கொண்டாட்டமாக மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் இந்து மத உணர்வு மட்டும் அப்படியே நீடித்துக் கொண்டிருக்கிறது.
உலமயமாக்கல் என்ற கொள்கை வந்த பிறகு பெரும் தொழில் நிறுவனங்களுக்கும் மதத்துக்குமான உறவுகளை பார்ப்பனர்கள் தகவமைத்துக் கொண்டு விட்டார்கள். அரசு, மத நிறுவனம், வணிகம் பெரு வணிக குழுமங்களுடன் இந்து மதத்தையும் இணைத்து விட்டது பார்ப்பனியம்.
ஆக காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப பார்ப்பனியம் தன்னை தகவமைத்துக் கொண்டு வருகிறது. கோயில், பக்தி என்ற பெயரில் நடக்கும் ஊழல்களோ, மோசடிகளோ பெருமளவில் எதிர்க்கப்படுவதில்லை. “நம்பிக்கை” “புண்படுத்துதல்” என்ற போர்வையால் அது மூடி மறைக்கப்படுகிறது. கடவுள் சக்தி இதில் காணாமல் போய்விட்டது என்ற உண்மையும் மறைக்கப்படுகிறது. அரசியல் ஊழல் பற்றி பேசுகிறவர்கள் சமூகத்திற்கு பெரும் கேடுகளை உருவாக்கும் இந்த பார்ப்பனிய கோயில் ஊழலை மட்டும் பேச முன்வராதது ஏன்?
பெரியார் முழக்கம் இதழ் 16102025
