அமெரிக்க ஜாதி எதிர்ப்பு பெண் போராளிக்கு வைக்கம் விருது
2025ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் வைக்கம் விருது! கலிபோர்னியாவைச் சேர்ந்த தேன்மொழி சவுந்தரராஜனுக்கு அறிவிப்பு! ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப்பாடுபட்டு, மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசால் வைக்கம் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த தேன்மொழி சவுந்தரராஜனுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேன்மொழி சவுந்தரராஜனுடைய பெற்றோர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அமெரிக்காவில் வசித்து வரும் தேன்மொழி சவுந்தரராஜன், இந்திய அமெரிக்க ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் ஆவார். கட்டமைப்பு ஜாதியத்தால் ஓரங்கட்டப்பட்டவர்களின் உரிமைகளுக்காக அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அமெரிக்காவிலும், உலக அளவிலும் ஜாதியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் சிவில் உரிமைகள் அமைப்பான ‘ ஈக்வாலிட்டி லேப்ஸின்’ (Equality Lab) நிறுவனர் / நிர்வாக இயக்குநர் ஆவார். தலித் பெண் பார்வையில் ஜாதிய ஒடுக்குமுறை குறித்து ஆய்வு நூலை எழுதியவர். வைக்கம் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தேன்மொழி சவுந்தரராஜன் அவர்களுக்கு அய்ந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பெரியார் முழக்கம் இதழ் 30102025
