கொள்கைக்காக உங்களை ஒப்படைத்துக் கொள்ளுங்கள்- அறிவுத் திருவிழாவில் கழகத் தலைவர் பேச்சு
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவம்பர் 8,9 ஆகிய தேதிகளில் திமுக இளைஞர் அணி நடத்திய இருவண்ணக் கொடிக்கு வயது 75 நிகழ்ச்சியில் ‘கருஞ்சட்டை கழகமும் கருப்பு சிவப்புக் கழகமும்’ என தலைப்பில் ஆற்றிய உரையின் தொடர்ச்சி.
இந்திய விடுதலையைப் பற்றி பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இரண்டு விதமான கருத்து வேறுபாடு இருந்தது. தலைவர் பெரியார் துக்கநாள் என்றார். பொதுச்செயலாளர் அண்ணா மகிழ்ச்சியான நாள் என்றார். இரண்டு எதிரிகளில் ஒருவன் போய்விட்டான், மகிழ்ச்சி என்றார் அண்ணா. வெள்ளைக்காரனை விட இப்போது ஆட்சியில் அமர்ந்திருப்பவன் மோசமானவன் என்பது பெரியாரின் நிலை. அப்படித்தான் இருந்தது நிலைமை. ஆகஸ்ட் 15 விடுதலை என்றார்கள், பார்ப்பனர்களுக்கு விடுதலையாக இருந்தது.
அப்படித்தான் தூத்துக்குடி மாநாட்டில் ஒரு தீர்மானத்தை பெரியார் 1948-இல் இயற்றினார். மற்ற மாகாணங்களில் என்னமோ செய்துவிட்டுப்போ. “ சென்னை மாகாணம் சம்பந்தப்பட்ட வரையில் இந்திய யூனியன் அரசாங்கம் சென்னை மாகாண ஜாதிவாரி பிரதிநிதித்துவ முறை சட்டத்தை தபால், தந்தி, ரயில்வே, அகில இந்திய ரேடியோ, அகில இந்திய உத்தியோகங்களில் அனுசரிக்க வேண்டும்” அம்மாநாட்டில் தீர்மானம் இயற்றினார் பெரியார். ஆனால் அப்போது முடியவில்லை. இப்போது அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புகளில் அமல்படுத்தப்படாமல் இருந்த இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வழக்கு போட்டு நடைமுறைப்படுத்தச் செய்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதனால் இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பயன்பெற்றனர்.
டாக்டர் சந்திரசேகர் அவர்கள் பெரியாரை பேட்டி கண்டார். ஒன்றிய அரசினுடைய இணையமைச்சராக இருந்து குடும்ப நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் அவர். அனைத்திந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவராக இருந்தவர். சேலத்தில் பெரியார் சிலையை திறந்து சிறப்புரையாற்றியவர். அவர் சென்னை வானொலிக்காக பெரியாரை பேட்டி எடுத்தார். “அரசியல் உத்தியோகங்களில் பெண்களுக்கு 50 விழுக்காடும் ஆண்களுக்கு 50 விழுக்காடும் ஒதுக்குவது பெண்களுக்கு சம உரிமை அளிக்கும். பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்க உதவும்” என்று அந்த பேட்டியில் பெரியார் சொன்னார். இப்போது தி.மு.க. அரசு ஒவ்வொரு துறைகளிலும் அதைச் செய்துகொண்டு வருகிறது. குரூப் 1 பிரிவில் ஆண்களை விட பெண்கள் கூடுதலான (63 விழுக்காடு) அளவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதை இந்தியாவில் வேறு எங்காவது யோசித்துப் பார்க்க முடியுமா? இதற்கெல்லாம் முத்தாய்ப்பான காரணமாக இருப்பது என்பது இந்த இயக்கத்தை வழிநடத்தி, அதை ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக தொடர்ந்து செலுத்துவதற்கு வாய்ப்பாக உருவாக்கி வைத்த நமது தலைவர்கள். தங்கள் இளமைக்காலத்திலிருந்து கொள்கையை உள்வாங்கியவர்களாக அதை உட்செரித்துக் கொண்டவர்களாக, தங்கள் குருதியோடு கலந்து கொண்டவர்களாக இருந்ததுதான், இத்தனை மாற்றங்களையும் நிகழ்த்த அவர்களுக்கு உந்துதலைத் தந்தது.
வேறு எவருக்கும் வராத சிந்தனை!
ஒன்றியத்தில் மட்டும் விடுதலை நாளில் பிரதமர் கொடியேற்றுவார், குடியரசு நாளில் குடியரசுத் தலைவர் கொடியேற்றுவார். ஆனால் மாநிலங்களில் விடுதலை தினம், குடியரசு தினம் இரண்டு நாட்களிலும் ஆளுநரே கொடியேற்றுவார் என்பதுதான் வழக்கமாக இருந்தது. மாநிலத்தில் மட்டும் ஏன் இரண்டு தினங்களிலும் ஆளுநர் மட்டும் கொடியேற்ற வேண்டுமா என்று கேள்வி எழுப்புகிற சிந்தனை யாருக்கு வரும்? கலைஞர் மட்டும்தான் அந்த கேள்வியை எழுப்பினார். அதன்பின்னர்தான் விடுதலை நாளில் முதலமைச்சர் கொடியேற்றும் உரிமை கிடைத்தது. அது தமிழ்நாட்டிற்கு மட்டும் கிடைத்த உரிமை அல்ல, அனைத்து மாநிலங்களுக்கும் கலைஞர் பெற்றுத்தந்த உரிமை.
ஒவ்வொரு நிலையிலும் கூட அடித்தட்டு மக்களை சிந்திப்பவர்களாக நமது தலைவர்கள் இருந்தனர். நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன், தார்சாலையில் தார் ஊற்றுவனுக்கு கூட காலுக்கு ஷூ வாங்கி தர வேண்டும் என்று கலைஞர் காலத்தில்தான் சட்டம் இயற்றினார். எந்த முதலமைச்சராவது தரையை பார்த்திருப்பார்களா? வானத்தை பார்த்துக்கொண்டுதான் போவார்கள். பதவிக்கு போன பின்பும், இவர் அடித்தட்டு மக்களின் காலை அல்லவா பார்த்துக்கொண்டு பயணம் செய்திருக்கிறார். அதுவும் உழைக்கும் மக்களின் கால்கள் அவர் கண்ணுக்கு தெரிந்தது. அதனால் அப்படியொரு திட்டம் வகுக்கப்பட்டது. எனவே இந்த அடித்தட்டு மக்களை உயர்த்துவதற்காகவும், வாய்ப்பு மறுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு வாழ்கிற மக்களுக்கான வாழ்வியல் கொள்கையை உள்வாங்கியும் உருவானதுதான் திராவிடர் இயக்கம். அது இயக்கமாக இருந்தது. இயக்கத்தின் சிந்தனைகளை உள்வாங்கிய தலைவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள், நடைமுறைப்படுத்தினார்கள். அது தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கி இருக்கிறது.
சுயமரியாதைச் சாயம் போகாது!
எனவே இந்த காலகட்டத்தில் இளைஞர்களாக இருப்பவர்களும், அந்த கொள்கையை உடசெரித்துக்கொண்டு, உள்வாங்கிக் கொண்டு, குருதி ஓட்டத்தில் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இளைஞர் அணி இந்த அறிவுத்திருவிழாவை ஏற்பாடு செய்திருக்கிறது. இடையில் வந்து கட்சியில் சேர்ந்தவர்களுக்கு இந்த கொள்கை உணர்வு வாய்க்குமா வாய்க்காதா நமக்குத் தெரியாது. ஆனால் இளமைக்காலத்திலிருந்து உள்வாங்கிக் கொண்டிருப்பவர்கள், இளமைக்காலத்திலேயே கொள்கையை உச்சரித்துக் கொண்டிருப்பவர்கள் நினைத்தாலும் மாறிப்போக முடியாது. எங்களுடைய தலைவர் ஒருவர் சொல்லுவார் “சுயமரியாதைச் சாயம் கெட்டிச்சாயம்; துணி கிழிந்தால்தான் உண்டு; சாயம் போகாது” என்பார். நாம் கெட்டிச்சாயமான சுயமரியாதைச் சாயத்தை திராவிடர் அடையாள சாயத்தை மனதில் ஏந்திக் கொள்வோம்.
இளைஞர்களுக்கு வகுப்புகள் நடத்தி கொள்கைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்பதும், இளம் பேச்சாளர்களை உருவாக்க வேண்டும் என்பதும், நீங்களும் கொள்கைகளை உள்வாங்கிக் கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் என உங்களை கொள்கையாளர்களாக உருவாக்கவே இத்தகைய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. 1949-இல் திமுக உருவானபோது தலைவர் கலைஞருக்கு என்ன வயது? 25 வயதுதான். கட்சியில் வயதானவரே அண்ணாதான். அவருக்கு வயது 40. மற்ற எல்லோருமே இளைஞர்கள்தான். இளைஞர்கள் இணைந்துதான் இந்த இயக்கம் உருவானது.
18 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வரும்போதும் பலரின் வயது 40க்கு குறைவுதான். 25 வயதில் அவர்கள் உள்வாங்கிய சிந்தனையை, 40 வயதில் ஆட்சியில் அமர்ந்தபோது செயல்படுத்தினார்கள். இப்போது உங்களிடமும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். நீங்களும் இந்த இயக்கத்தின் சிந்தனைகளை உள்வாங்கி கொள்கைப்புரிதலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பின்னர் அதை செயல்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும்.
செயல்படுத்துமாறு உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்; நீங்கள் அதற்கு துணை நில்லுங்கள். எங்கள் மூளைக்குள் இந்த கொள்கை ஏறியது உங்களைப்போல நாங்கள் இளைஞராக இருந்த காலத்தில்தான். நீங்களும் நல்ல இலட்சியவாதிகளாக வளர வேண்டுமென்பதற்காகத்தான் இளைஞர் அணி இந்த பணிகளை முன்னெடுக்கிறது. பழைய கட்சிக்காரர்களை நான் இப்போது எண்ணிப் பார்க்கிறேன். அவர்கள் இளமைக்காலத்திலேயே இந்த கொள்கையில் மூழ்கியவர்கள். அவர்கள் எப்படி இருந்தார்கள் என்று நீங்களும் அறிந்துகொள்ள வேண்டும்.
இயக்கத்திற்காக உங்களை ஒப்படையுங்கள்!
பெரியார் நூற்றாண்டு விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எந்த இயக்கம் நிகழ்ச்சி நடத்துகிறதோ அவர்கள் நாடகம் நடிப்பார்கள், இசை நிகழ்ச்சி நடத்துவார்கள். ஆனால் பெரியார் நூற்றாண்டு விழாவில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிதேவன் மயக்கம் நாடகம் நடைபெற்றது. நாடகத்தில் நடித்தவர்கள் யார் தெரியுமா? ராவணனாக நடித்தவர் உத்தரமேரூர் கே.எம் ராஜகோபால். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை இருந்தவர். கம்பராக நடித்தவர் சி.வி.எம். அண்ணாமலை. அமைச்சராக இருந்தவர். நீதிதேவனாக நடித்தவர் சி.வி. சம்பந்தம். சட்ட மேலவை உறுப்பினராக இருந்தவர்.
ஒருமுறை அமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராக இருப்போர் மேடையேறி நடிப்பாரா என்பதே ஐயம். ஆனால் இன்னொரு இயக்கத்தின் நிகழ்ச்சியில் மேடை நாடகம் நடத்துகிறார்கள். அதுவும் முன்னாள் அமைச்சர் நடிக்கிறார்; முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் மேலவை உறுப்பினர் நடிக்கிறார். அவர்களுடைய இதயத்தில் ஏறி இருக்கிற கொள்கை அவர்களை இயங்க வைத்தது. அப்படி நீங்களும் இந்த இயக்கத்தின் கொள்கையை நெஞ்சத்தில் பதித்துக்கொள்ளுங்கள். நமக்கான கொள்கை, நம் மக்களுக்கான கொள்கை, எளிய மக்களுக்கான கொள்கை இது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற கொள்கை இது. இந்த கொள்கைக்கு உங்களை உட்படுத்திக் கொள்ளுங்கள். உங்களை இயக்கத்திற்கு ஒப்படைத்துக் கொள்ளுங்கள். நன்றி, வணக்கம்.
(நிறைவு)
பெரியார் முழக்கம் இதழ் 20112025
