நுழைவுத் தேர்வுகளின் தோல்வி!
மாணவர் தகுதியை நிர்ணயிக்கும் நுழைவுத்தேர்வு முறைகள் தோல்வி அடைந்து வருகின்றன. மாணவர் அனைவரும் ஒரே தேர்வை எழுத வேண்டி இருப்பதால், இத்தகைய நுழைவுத் தேர்வு முறையின் வழியாக, எவ்விதக் குளறுபடிகளும் இல்லாத, நியாயமான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பரவலாக நம்பப்படுகிறது. இந்தியாவில், நுழைவுத் தேர்வுகள் சட்டபூர்வமானதும், மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒன்றாகவும் கருதப்படுகிறது. உண்மையில், கவனமாக ஆய்வுசெய்து பார்த்தோமேயானால், நுழைவுத் தேர்வு முறை குறித்த கூற்றுகளும் நம்பிக்கைகளும் கேள்விக்கு உரியவையாக ஆகிவிடுகின்றன. மகாராஷ்டிரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டுவசதி மேம்பாட்டுக் குழுமத்தில் ஆள்சேர்க்கைக்கான தேர்வு நடைபெற்றபோது, தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் வெளியாகிவிட்டன. மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற வியாபம் ஊழல் நாட்டையே உலுக்கியது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவந்த வியாபம் தேர்வு முறைகேடு களில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், மாணவர்கள், இடைத்தரகர்கள் ஈடுபட்டு இருந்தது அம்பலமாகியது. எண்ணற்ற மர்ம மரணங்களையும் நாம் கேள்வியுற்றோம். நீட் நுழைவுத் தேர்வு குறித்த சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை...
