மனிதம்-அடையாளம்; ஜாதி- அவமானம் மடியட்டும் ஆணவப் படுகொலைகள்
ஜாதிப் பெருமைக்குள் புதையுண்டு கிடக்கும் ஜாதியவாதிகளே! உங்களிடம் சில கேள்விகள்: ஜாதி என்ற அடையாளம் நாம் தேர்வு செய்ததா? படிப்பு, தொழில், வாழ்க்கையைத் தான் நாம் தேர்வு செய்கிறோம். அதேபோல் ஜாதியை நாம் தேர்வு செய்கிறோமா? ஒரு காலத்தில் நமது மூதாதையர்கள் பிறந்த ஜாதிக்கு ஒதுக்கப்பட்ட தொழிலை மட்டும் செய்து வந்தார்கள் இப்போது அந்த தொழில்களை நாம் செய்கிறோமா? இல்லை. முடி வெட்டுவது, துணி துவைப்பது, செருப்பு தைப்பது, மலம் அள்ளுவது, செக்கு ஆட்டுவதும் ஜாதிக்கான தொழில் என்ற நிலையை இப்போது நாம் பின்பற்றுகிறோமா? ஜாதியை உதறி விட்டு வேறு தொழில்களுக்கு மாறிவிட்டோமா இல்லையா? இவற்றில் எல்லாம் ஜாதியைக் கைவிடலாம்; ஆனால் திருமணத்தில் மட்டும் கட்டாயமாக ஜாதியைப் பின்பற்ற வேண்டுமா? மேல் ஜாதி, கீழ் ஜாதி, தீண்டப்படாத ஜாதி என்று நம்மைப் பிரித்தார்கள். கெட்ட ஜாதி, நல்ல ஜாதி என்று இழிவுபடுத்தினார்கள்; நான் ஏன் கீழ் ஜாதி என்று ஜாதியை எதிர்த்து...
