மனிதம்-அடையாளம்; ஜாதி- அவமானம் மடியட்டும் ஆணவப் படுகொலைகள்
ஜாதிப் பெருமைக்குள் புதையுண்டு கிடக்கும் ஜாதியவாதிகளே! உங்களிடம் சில கேள்விகள்:
ஜாதி என்ற அடையாளம் நாம் தேர்வு செய்ததா?
படிப்பு, தொழில், வாழ்க்கையைத் தான் நாம் தேர்வு செய்கிறோம். அதேபோல் ஜாதியை நாம் தேர்வு செய்கிறோமா?
ஒரு காலத்தில் நமது மூதாதையர்கள் பிறந்த ஜாதிக்கு ஒதுக்கப்பட்ட தொழிலை மட்டும் செய்து வந்தார்கள் இப்போது அந்த தொழில்களை நாம் செய்கிறோமா? இல்லை.
முடி வெட்டுவது, துணி துவைப்பது, செருப்பு தைப்பது, மலம் அள்ளுவது, செக்கு ஆட்டுவதும் ஜாதிக்கான தொழில் என்ற நிலையை இப்போது நாம் பின்பற்றுகிறோமா? ஜாதியை உதறி விட்டு வேறு தொழில்களுக்கு மாறிவிட்டோமா இல்லையா? இவற்றில் எல்லாம் ஜாதியைக் கைவிடலாம்; ஆனால் திருமணத்தில் மட்டும் கட்டாயமாக ஜாதியைப் பின்பற்ற வேண்டுமா?
மேல் ஜாதி, கீழ் ஜாதி, தீண்டப்படாத ஜாதி என்று நம்மைப் பிரித்தார்கள். கெட்ட ஜாதி, நல்ல ஜாதி என்று இழிவுபடுத்தினார்கள்; நான் ஏன் கீழ் ஜாதி என்று ஜாதியை எதிர்த்து நாம் கேள்வி கேட்கிறோம். இதில் ஜாதியை நாம் மறுக்கும் போது திருமணத்தில் மட்டும் நீடிக்க வேண்டுமா?
நமது அண்ணனுக்கோ, தங்கைக்கோ, உடல்நலம் பாதிக்கப்பட்டால் பதறிப் போய் மருத்துவமனைக்கு ஓடுகிறோம். அங்கே குருதி அவசரமாக தேவைப்படும்போது நம்ம ஜாதிக்காரன் குருதியை மட்டுமே ஏற்றுக் கொள்வோம் என்று நாம் கூறுகிறோமா? இல்லை, சிகிச்சைக்கு ஜாதியை மறுக்கிறோம். ஆனால் திருமணத்தில் மட்டும் ஏற்க வேண்டுமா?
இந்தியாவிலேயே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. வேறு ஒரு உடலில் இருந்து உறுப்புகளை எடுத்து பாதிக்கப்பட்டவரின் உடலுக்குள் பொருத்த முடியும் என்று மருத்துவம் வளர்ந்திருக்கிறது. உறுப்புகளைப் பொருத்துவதற்கு உடல் உறுப்பு தேவைப்படும்போது அது எங்க ஜாதிக்காரர் உடல் உறுப்புகளாகவே இருக்க வேண்டும் என்று நாம் கூறுகிறோமா? இல்லை; இதில் எங்கே போனது ஜாதி?
ஜாதிக்குள் வரன் தேவை என்று விளம்பரங்களைப் பார்த்து வரன் தேடிக் குடும்பத்தில் திருமணத்தை முடித்து விடுகிறோம். குடும்பத்தில் பிரச்சனை வரும்போது மணமுறிவு ஏற்பட்டு மகளுக்கோ, மகனுக்கோ இரண்டாவது திருமணம் செய்ய விரும்பினால் சொந்த ஜாதிக்காரர்களின் குடும்பத்திலிருந்து ஜாதியைக் காப்பாற்ற உறவு கொள்ள வருகிறார்களா?
இரண்டாம் திருமணம் செய்ய விரும்பும்போது “எந்த ஜாதியாக இருந்தாலும் பரவாயில்லை; நல்லவர்களாக இருந்தாலே போதும்” என்று ஜாதியை ஒதுக்கி விடுகிறோமா இல்லையா?
ஜாதி உறவுகளின் அவமதிப்புக்கு உள்ளாகிவிடக் கூடாது என்பதற்காக அரிவாளைத் தூக்குவது அறிவுடைமையா? உங்கள் வாழ்க்கை தேவைகளுக்கு நெருக்கடிகள் வந்தால் ஜாதி உறவுகள் ஓடிவந்து உதவுமா?
மருத்துவர்கள் தங்கள் ஜாதிக்குள் மட்டுமே மருத்துவம் பார்ப்போம் என்று கூறுவார்களா? பொறியாளர்கள் தங்கள் ஜாதிக்கு மட்டுமே சேவை செய்வோம் என்று அறிவிப்பார்களா? வணிகர்கள் தங்கள் பொருட்களை சொந்த ஜாதிக்காரர்களுக்கு மட்டுமே விற்பனை செய்வோம் என்று கூறுவார்களா? அங்கெல்லாம் எங்கே போகிறது ஜாதி?
நம் வீட்டுப் பிள்ளைகள் தாங்கள் விரும்பிய வாழ்க்கைத் துணைவர்களைத் தேர்வு செய்கின்ற உரிமையை நாம் பறிக்கலாமா? நமக்கு அந்த உரிமையை யார் கொடுத்தது?
நம் வீட்டுப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் அவர்கள் விரும்புவதை எல்லாம் மகிழ்ச்சியோடு வாங்கித் தருகிறோம். ஆனால் அவர்கள் விரும்புகிற வாழ்க்கையை மட்டும் நாம் மறுக்கிறோமே? இது அவர்களின் உணர்வுகளையும் அழிப்பதல்லவா!
ஒரு ஆணவக் கொலை என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது தெரியுமா? ஒரு குடும்பத்தின் உயிரைப் பறித்துவிடுகிறது. குற்றவாளிகளைச் சிறைக்கு அனுப்புகிறது. இரண்டு குடும்பங்களுமே பாதிப்புக்கு உள்ளாக்குகிறது இந்த ஜாதிவெறி.
உலகத்திலேயே எந்த நாட்டிலாவது இப்படி ஜாதி என்ற அடையாளம் இருக்கிறதா?
நமது பெருமைக்குரிய திருக்குறள், சங்க இலக்கியமானாலும் ஜாதியைப் பேசுகிறதா? காதலையும் வீரத்தையும் தானே நமது இலக்கியங்கள் பேசுகின்றன.
கீழடி அகழ்வாய்வு என்ன கூறுகிறது? தமிழர்களாகிய நாம் மதம், கடவுள் என்று அடையாளம் இல்லாமல் வாழ்ந்தோம் என்ற வரலாற்றைத் தானே!.
கடவுளுக்கு ஜாதி இருக்கிறதா? நீங்கள் ஜாதியைப் புறக்கணித்தால் கடவுள் உங்களை தண்டித்து விடுவாரா? ஜாதிக்காக அரிவாள் தூக்கிக்கொண்டு ஓடுகிறவர்களை சட்டத்திலிருந்து கடவுள் காப்பாற்றி விடுவாரா?
மதங்களை கடவுள் உருவாக்கினாரா? கடவுள் தோன்றிய காலத்தில் மதங்கள் வந்துவிட்டதா? கடவுள் முந்தியதா? மதம் முந்தியதா?
கடவுளுக்கும் ஜாதிக்கும் உறவுகளை உருவாக்கியது யார்? பார்ப்பனர்களின் வேத மதம்தான்! கடவுள் எங்கள் மந்திரத்துக்கு கட்டுப்பட்டது என்றார்கள்; கல்லாக செதுக்கப்பட்ட சிலைகளை கடவுளாக சக்தி பெறச் செய்வதும் வேத மந்திரம் என்றார்கள்; கடவுளுக்கு தெரிந்த மொழி எங்கள் சமஸ்கிருதம் மட்டும்தான் என்றார்கள்.
‘பிராமணன்’ பிரம்மா தலையில் பிறந்ததாகவும், சூத்திரர்கள் அதே கடவுளின் காலில் பிறந்ததாகவும் சொல்கிறார்கள்; நாமெல்லாம் சமமில்லை வெவ்வேறு ஆட்களப்பா, நாம் ஒன்றாக கலந்து விடக்கூடாது; இதுவே கடவுள் கட்டளை என்றார்கள்.
ஆனாலும் என்ன நடந்தது? வெவ்வேறு வர்ணங்களுக்கு இடையே கலப்பு நடந்தது வர்ணக் கலப்பில் பிறந்த குழந்தைகளை எந்த வர்ணத்தில் சேர்ப்பது என்ற கேள்வி எழுந்தது. கலப்பில் பிறந்தவர்களுக்காகவே தனித் தனி ஜாதிகள் வந்தன. ஜாதியே கலப்பில் பிறந்ததுதான்.
நாம் அறிவியல் உலகத்தில் வாழ்கிறோம்.
மனித மரபணுக்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன.
வெவ்வேறு ஜாதியினரிடம் இருந்து பெற்ற விந்துக்களைக் கொண்டு குழந்தைகளை சோதனைக் குழாய் முறைகளில் பிறக்கச் செய்கிறோம்.
ஆனாலும் ஜாதியையும் ஜாதிவெறியையும் கைவிட மறுக்கிறோம் எனவே தான் கூறுகிறோம்:
மனிதம்-நமது அடையாளம்
ஜாதி- நமக்கு அவமானம்!
மடியட்டும் ஆணவப் படுகொலைகள்!
பெரியார்முழக்கம்இதழ்07082025
