காவிமயமாகிறதா நீதித்துறை?
நீதிமன்றங்கள் அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை தகர்ப்பதற்கும் தங்களின் சொந்த கருத்துகளை பரப்புவதற்குமான மேடைகளாகவும் மாறி வருகின்றன. நீதிமன்றம் என்பது `பார்ப்பன மன்றமாகவே’ இருக்கிறது என்று வெளிப்படையாகவே பெரியார் அறிவித்தார். தன்மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலேயே “பார்ப்பனர்கள் நீதிபதியாக வாழும் நாடு கடும்புலி வாழும் காடு” என்று நீதிபதிகள் முன் அறிக்கை சமர்ப்பித்தார்.
சமூக நீதியின் தாய் வீடு என்று சொல்லப்படும் தமிழ்நாட்டிலேயே நீதிமன்றம் நவீன சனாதனத்தையும், வர்ணாஸ்ரமத்தையும் பேசிக் கொண்டு இருக்கிறது. இதற்கு ஏராளமான சான்றுகளை பட்டியலிட முடியும். சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய `பிராமணர்’ சாப்பிட்ட எச்சில் இலையில் உருண்டு புரளும் சடங்கை பாரம்பரிய மதச் சடங்கு என்று நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பளித்தார். உச்சநீதிமன்றத்தாலும் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வினாலும் தடை செய்யப்பட்ட இந்த சடங்கை சட்டத்தை மீறி நீதிபதி ஜீஆர் சுவாமிநாதன் அனுமதித்தார். கோயில்களை அறநிலையத்துறையிடமிருந்து மீட்க வேண்டும் என்ற பாஜகவின் கருத்தை ஆதரிக்கும் கருத்தரங்கத்துக்கு தலைமை தாங்கி பேசினார்.
தமிழ்நாடு அரசு மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டது சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தமிழ்நாட்டு முதலமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட மசோதாவும் அதில் அடங்கும். நெல்லை மாவட்ட பாஜக தலைவர் துணைவேந்தர் நியமன உரிமை உரிமையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். மதுரை உயர்நீதிமன்ற கிளையின் விசாரணை வரம்புக்கு உட்பட்ட இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
துணைவேந்தர்களை நியமிக்க தமிழக முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய உரிமைக்கு தடை விதித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பை வெளியிட்ட உடன் அரசிதழில் (கெசட்) பதிவு செய்தது தமிழ்நாடு அரசு. இந்த அரசிதழை திருத்தி மோசடியாக மனுதாரர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் என்று அரசு வழக்கறிஞர் சுட்டிக்காட்டியதை நீதிபதி கவனத்தில் எடுக்கவில்லை. வயலூர் முருகன் கோயிலில் உரிய அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் நியமனத்தை ஜீ.ஆர்.சுவாமிநாதன் இரத்து செய்தார். ‘கோத்திரம்,குலம்’ என்ற அடிப்படையில் உரிமை கேட்டு வழக்கு தொடர்ந்த பிரிவினரையே அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கினார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் வந்தன. பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கின் எல்லைக்கு அப்பால்சென்று சனாதனத்தை நியாயப்படுத்தி கருத்தரங்கு பேச்சைப் போல் தீர்ப்பு எழுதினார். நீதிமன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியானதற்குப் பிறகு விதிகளுக்கு மாறாக தீர்ப்பை திருத்தி எழுதி மீண்டும் அவர் வெளியிட்டார்.
அரசிதழில் வெளியான தீர்ப்பில் ஒரு புள்ளியைக் கூட மாற்றக் கூடாது என்பது விதி. ஆனால் அவர் அதை மதிக்கவில்லை. தமிழ்நாட்டில் ஊடகங்கள் இந்த முறைகேடுகளை கண்டு கொள்ளாமல் மவுனம் சாதித்தன. திருவாரூர் அரசு கல்லூரியில் சனாதன கருத்தரங்கம் ஒன்று நடத்தப்படுவதை எதிர்த்து இந்து முன்னணி வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷஷாயி, சனாதனம் தேசத்தின் கடமை, அரசர், மக்கள் பெற்றோர், குடும்பத்தின் கடமை. இதை அழிக்க வேண்டுமா? என்று மத பரப்புரையாளராகவே பேசினார். தேசத்தின் அடையாளம் சனாதனம் என்று அரசியல் சட்டத்தில் எந்த பிரிவு கூறுகிறது?
மருத்துவ கல்லூரிகளில் `டீன்கள்’ நியமனம் தற்காலிகமானதாக இருக்கக் கூடாது என்ற வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் இந்த வழக்கிற்கு தொடர்பு இல்லாத, மாணவர்களிடையே ஜாதி மோதல்களை தடுக்க நியமிக்கப்பட்ட நீதிபதி சந்துருவின் அறிக்கையை கடுமையாக விமர்சித்தார். அந்த அறிக்கை தனக்கு ஏற்புடையது அல்ல என்றும் ஜாதியப் பாகுபாடுகளை சகிப்புத்தன்மையால் மட்டுமே அகற்ற முடியும் என்று கூறினார். அறிக்கை வந்த உடனே தான் நெற்றியில் திலகம் இட்டு நீதிமன்றத்திற்கு வரத் துவங்கியதாக கூறி ஜாதி அடையாளத்தை நியாயப்படுத்தினார்.
திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல்கண்ணன் என்பவர் திருவரங்கத்தில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்பட வேண்டும் என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். வழக்கு தொடரப்பட்டு குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் ஆனது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.ஜெயச்சந்திரன் வழக்கை தள்ளுபடி செய்தார். கடவுள் மறுப்பு வாசகம் கோபத்தைத்தான் உருவாக்கும்; அந்த கோபத்தில் நியாயம் இருக்கிறது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டதோடு இந்த பேச்சினால் கலவரம் எதுவும் நிகழவில்லை எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பு எழுதினார். திருவரங்க பெரியார் சிலையில் கடவுள் மறுப்பு வாசகமே இடம் பெறவில்லை என்பது தான்உண்மை. இதை விசாரித்து அறியாமலேயே மனுதாரரின் கருத்தை அப்படியே ஏற்று நீதிபதி தீர்ப்பு எழுதினார்.
நீதிபதிகளின் கையொப்பம் இல்லாமல் வெளியானது பாபர் மசூதி இடிப்பு வழக்கு. ராமர் கோயில் இடிக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று கூறிய தீர்ப்பு மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ராமன் கோயில் கட்டுவதற்கு அனுமதிப்பதாக கூறியது. சட்டத்தை ஒதுக்கிவிட்டு நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் வழங்கப்பட்டது இந்த தீர்ப்பு. கடவுள் வழியாக இந்த தீர்வு தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக அமர்வில் இடம்பெற்ற நீதிபதி சந்திர சூட் கூறினார். தீர்ப்பு எழுதிய நீதிபதிகள் அனைவருக்கும் பதவி ஓய்வுக்குப் பிறகு ஒன்றிய அரசு பதவிகளை வழங்கி கவுரவவித்துள்ளது.
மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதிகள் தர்மாதீகாரி மற்றும் கஜேந்திர சிங் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்ததே தவறு என்றும் அதன் சேவை கடந்த 50 ஆண்டுகளாக முடக்கப்பட்டது என்றும் பாராட்டி நீதிமன்றத்தில் பதிவு செய்தனர். தேசத் தந்தை காந்தி கொலை வழக்கில் தொடர்புள்ள இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என்பது குறித்து இவர்கள் கவலைப்படவே இல்லை. இப்படி ஏராளமாக பட்டியலிட முடியும்.
உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியத்தின் ஒப்புதலுக்கு பிறகு நீதிபதிகள் நியமனம் நடக்கிறது. கொலிஜியம் தேர்வு செய்யும் நீதிபதிகளை ஒன்றிய ஆட்சி ஏற்க மறுப்பது, அதிகரித்து வருவதாக தலைமை நீதிபதி கவாய் அண்மையில் வருத்தத்துடன் கூறியுள்ளார். இந்த நிலையில் அய்.ஏ.எஸ், அய்.பிஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்யும் வழிமுறைகளை பின்பற்றி இந்திய நீதித்துறை சர்வீஸ் (அய்.ஜே.எஸ்) ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. சட்ட ஆணையங்களும் இதே கருத்தை பரிந்துரைத்துள்ளன.
அரசியல் சட்டத்தின் 312 வது பிரிவு இதை வலியுறுத்துகிறது. ஏற்கனவே சட்ட ஆணையங்களும் வி.ஆர் கிருஷ்ண ஐயர் போன்ற மூத்த நீதிபதிகளும் இந்த கருத்தை வலியுறுத்தி உள்ளனர். குறிப்பாக பாஜக ஆட்சிக்கு பிறகு நீதித்துறைமில் பல நீதிபதிகள் மதச்சார்பின்மைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டால் சிதைந்து போய் கிடக்கும் இன்றைய ஜனநாயக அமைப்பு மேலும் சீர்குலைந்து விடும் என்பது உறுதி!
பெரியார் முழக்கம் 17072025இதழ்
