பெரியார் நடத்திய `ரிவோல்ட்’ வெளியிட்ட பட்டியல் மதவெறிக்கு உயிர்ப் பலியானவர்கள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை (9)

கடவுள், மதத்தை எதிர்த்ததால் கொடூரமாக கொல்லப்பட்டவர்களின் பட்டியலை பெரியார் நடத்திய `ரிவோல்ட்’ ஆங்கில வார ஏடு, 7-7-1929 இதழில் வெளியிட்டது. அதன் விவரம்.

புதிய சிந்தனைகளை வெளியிட்டமைக்காகப் பண்டைய கிரேக்க அறிஞர் பித்தகோரஸ் பழமை வெறியர்களால் பாய்ந்து துரத்தப்பட்டு, கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார்.

இளைஞர்களை அரசு ஏற்றுக் கொண்ட `கடவுளர்’ களிடமிருந்து பிரித்தார் என்று குற்றஞ்சுமத்தப்பட்டு, நஞ்சு தரப்பட்டு சாகடிக்கப்பட்டார் சாக்ரட்டீஸ்.

கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் மத நிறுவனத்தைத் துணிவாக எதிர்த்த ப்ரெஷ்யாவின் ஆர்னால்டு தூக்கு மரத்தில் தொங்கவிடப்பட்டார்.

மத நிறுவனத்தின் தீயபண்புகளை 15ஆம் நூற்றாண்டில் எதிர்த்த இத்தாலியச் சீர்திருத்தக்காரர் சவோன ரோலாவை தேடிப் பிடித்து உயிருடன் எரித்தனர்.

16-ஆம் நூற்றாண்டில் அறிவு விடுதலை வேண்டிப் போராடிய பாவியாவின் உல்ரிச் வான் ஹட்டன் உடைமைகள் அனைத்தையும் இழந்து விட்ட நிலையில் தன்னைக் காத்துக் கொள்ளும் பொருட்டு அடிமட்டப் பணியாளர் படையில் சேருமாறு நேரிட்டது.

அதே நூற்றாண்டில் சீர்திருத்தக்காரர் தாமஸ்முவென்ஸர் மத வெறியர்களால் கொல்லப்பட்டார்.

பகுத்தறிவு நூல் பதிப்பாளர் எட்டியர் டோலட் சமய எதிர்ப்பாளனாகக் கருதப்பட்டு எரிக்கப்பட்டார்.

மதவாதிகளால் மிரட்டப்பட்டு பணிந்து தான் முதலில் கூறியதை மாற்றிக் கூற மறுத்து விட்ட புகழ்பெற்ற மருத்துவர் மிக்கேல் செர்வட்டஸ் கொல்லப்பட்டார்.

ரபெலா என்னும் கற்பனைத் தெய்வ நம்பிக்கையாளர் தான் வாழ்ந்த ஃப்ரான்ஸிஸ்கள் மடத்தில் பகுத்தறிவாளராக மாறியதால் சிறைக்கு அனுப்பப் பட்டார்.

17-ஆம் நூற்றாண்டில் உரியேல் அகோஸ்டா மதத்தை கேள்வி கேட்டதால் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு இலக்காகி இறுதியில், தானே சுட்டுக் கொண்டு மாண்டு போகுமாறு செய்யப்பட்டார்.

மத நம்பிக்கைக்கு எதிரான அறிவியல் கருத்து வெளியிட்ட ஜியார்டனோ ப்ரூனோவை உயிரோடு எரித்துக் கொன்றனர்.

கருத்துரிமை எழுத்தாளர் லூசிலியோவை நாத்திகக் கருத்துகளைப் பரப்பினார் என்று தீர்ப்பளித்து உயிருடன் எரித்தனர்.

கலிலியோவை இருண்ட சிறையில் போட்டு வாட்டியெடுத்தனர்.

முற்போக்கு எழுத்தாளர் மாலியர் மாண்டு கிடந்த போது முறைப்படி அவரை அடக்கம் செய்ய மறுத்து விட்டனர்.

ஸ்பையினாஸா என்ற ஸ்பானிய யூத அறிஞர் மதக் கொள்கைக்கு மாறுபட்ட கோட்பாட்டை வெளிப்படுத்தியமைக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில் ஹாலந்துக்கு ஓடிப்போய் எளிய வாழ்வு மேற்கொள்ள நேர்ந்தது.

புகழ் பெற்ற ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் பாய்ல் மத எதிர்ப்பாளர் என்னும் குற்றம் சுமத்தப்பட்டதுடன் அவரின் உடைமைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

வேதியியல் வல்லுநர் ஜோஹன் கொன்ராட்டிப்பேல் பலமுறை தலைமறைவாகவும் ஏழாண்டுகள் சிறைவாழ்வு ஏற்கவும் நேர்ந்தது.

ஃப்ரெஞ்ச் மத எதிர்ப்பாளர் லாமெட்ரியின் நூற்களெல்லாம் எரிக்கப்பட்டன. நாட்டை விட்டே ஓடியொளிய வேண்டியிருந்த அவர் இரண்டாம் ஃப்ரெடரிக் மன்னரிடம் புகலிடம் தேடிக் கொள்ள வேண்டியிருந்தது.

ஜெர்மானியப் பதிப்பாளர் ஜோஹன் ஜேகப் மோசர் அய்ந்தாண்டுகள் கடுங்காவலில் வைக்கப்பட்டார்.

நாத்திகக் கருத்துக்களை எழுதினார் என அறிவிக்கப்பட்டு, டைடராட் என்ற அறிஞர் சிறை வாழ்வு வாழ வேண்டியிருந்தது.

டான் சூபார்ட் எனும் ஜெர்மானிய நூலாசிரியர் மத எதிர்ப்பாளராகத் தீர்ப்பளிக்கப்பட்டு, விளக்கம் கூற வாய்ப்பளிக்கப்படாமல், 10 ஆண்டுகள் கடுங்காவலில் இருக்குமாறு செய்யப்பட்டார்.

`மார்ஸேல்ஸ்’ எனும் நூலாசிரியரான ரோஜர் டிலைல் தனது இறுதிக் காலத்தைச் சிறைக்கூடத்தில் கழிக்க நேரிட்டது.

19ஆம் நூற்றாண்டில் கருத்துரிமைக்குப் போராடிய மெசன் ஹாசர் சட்டப்படியே வெளிப்படையாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதே போன்று ஜெர்மன் குடியாட்சிக் கொள்கையரான ராபர்ட்ப்ளம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஃப்ரெஞ்ச் இசைக்கலைஞர் பெராங்கர் 10,000 ப்ராங்க் ஒறுப்புத் தொகை கட்டியதுடன் ஓராண்டு சிறை வாழ்வும் மேற்கொண்டார்.

மடமையொழிப்பு முயற்சியில் ஈடுபட்ட ஃப்ரான்ஸிஸ்கோ ஃபெரர் இயேசுநாதர் சங்க உறுப்பினர்களின் தூண்டலின் விளைவாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தப் படுகொலைகள் பட்டியலை வெளியிட்டு அதற்கு கீழே பெரியார் ஒரு குறிப்பை எழுதினார்.

“இந்தியாவிலும் இதே நிலைதான் நீடிக்கிறது; சுயமரியாதைக்காரர்களாகிய நமக்கும் இந்த நிலை ஏற்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். மனித சமுதாயத்தை குறைந்த அளவேனும் சிந்திக்க தொடங்கி விட்டோம் என்ற மன நிம்மதியோடு மரணத்தையும் நாம் சந்திப்போம், அதற்கு தயாராகவே இருப்போம்” என்று பெரியார் எழுதினார்.

நாத்திக கொள்கைக்காக தூக்கு மேடையில் ஏறவும் தயார் என்று 1929-ல் குடி அரசில் பெரியார் எழுதினார்.

“தூக்குமேடையில் இருந்துகொண்டு நான் நாஸ்திகன்தான் அதுவும் நல்ல பரிசுத்தமான நாஸ்திகன்தான் என்று கூப்பாடு போட்டுச் சொல்லிக் கொள்ளத் தயாராயிருக்கின்றேன் பிறவியின் காரணமாக மனிதனுக்கு மனிதன் ஒரு நீதியும் ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியும் உள்ள எந்த மதமானாலும் சரி, அது `கடவுளை’ நேரே கொண்டுவந்து காட்டி, மோட்சத்திற்கு அழைத்துச் செல்லச் செய்யும் மதமாயிருந்தாலும் சரி, அல்லது நம்மையே கடவுளாக்கும் மதமாயிருந்தாலும் சரி, அதை அழிக்க வேண்டியதும் அழிக்க முடியாவிட்டாலும் அந்த அழிக்கும் வேலையில் உயிரை விடவேண்டியதும் உண்மையான மனிதனது கடமை என்றுதான் நான் தீர்மானித்துக் கொண்டிருக்கிறேன். இதில் சிறிதும் ராஜிக்கு இடமில்லை என்பதைக் கண்டிப்பாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.”
(குடிஅரசு: 19-5-1929)

பெரியார்முழக்கம்இதழ்31072025

You may also like...