Category: அறிக்கைகள்

“தீண்டப்படாத மக்களுக்கு காந்தியார் சூட்டிய பெயர் “ஹரிஜன்”; அதாவது கடவுளின் குழந்தைகள் என்றார்.இந்த அவமதிப்புச் சொல்லை அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு சிந்தனையாளர்களும் கடுமையாக எதிர்த்தார்கள். அந்தச் சொல் இன்றைக்கு வெறுப்புக்குரிய சொல்லாகவே மாற்றப்பட்டுவிட்டது. இன்று (31.08.2026) சட்டமன்றத்தில் தூய்மைப் பணியாளர் பிரச்சனை எழுந்த போது அதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன் தூய்மைப் பணியாளர்களுக்கு “தேவதைகள் ” என்று பெயர் சூட்டுகிறார். தேவர்கள் பட்டமோ, தேவதைகள் பட்டமோ இந்த மக்களுக்கு வேண்டாம் ; முதலில் மனிதர்களாக அவர்களை நடத்துங்கள். அவர்களுக்கு வழங்கப்படுகிற ஊதியம் குறைந்தது ஒரு நாளுக்கு 2,000 ரூபாயாவது இருக்க வேண்டும்.

அனைத்து ஜாதியினரும் பங்கேற்கும் அரசு வேலையாக அது மாற்றப்பட வேண்டும். பணி நிரந்தரம் ஊதிய உயர்வு போன்ற அடிப்படை கோரிக்கைகள் பற்றி அமைச்சர் ராஜ்மோகன் வாய் திறக்கவே இல்லை.
முதலமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பதில் இவர்களுக்கு என்ன தடை இருக்கிறது?

தொழிலதிபர்களும், முதலீட்டாளர்களும் கோட்டு சூட்டு பிரபலங்களும் மட்டும்தான் முதலமைச்சரை சந்திக்க முடியுமா? அதற்கான உரிமை அவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா?

எத்தனை கார்கள் இருந்தாலும் அரசு காரில் செல்வது தான் கெத்து என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கெத்து காட்டத் துடிக்கும் ஆட்சியாளர்கள்; அதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யத் தயாராக இருக்கும் ஆட்சியாளர்கள்; இந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க முடியாதா? பார்ப்பனியமும் மனுதர்மமும் தான் சமூகத்தை இப்போதும் இயக்கிக் கொண்டிருக்கிறது.
– விடுதலை இராசேந்திரன்
31.08.2026
பெரியார் முழக்கம் இதழ் 03092026

பிற்படுத்தப்பட்டோருக்கான கொள்கைக் குறிப்பேட்டில் பெரியார், அம்பேத்கர், நேருவின் பெயர்கள் இடம்பெறாமல் போனது ஏன்? இது திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் இந்த குறிப்பேட்டைப் படித்தாரா? அப்படி படித்திருந்தால் இது விடுபட்டது ஏன் என்று கேட்டாரா? எதிர்க்கட்சிகள் கேட்டதற்குப் பிறகு இந்த உண்மை வெளியே வந்திருக்கிறது.
இதற்கு நான் பொறுப்பேற்கிறேன். மீண்டும் புத்தகங்கள் அச்சடிக்கப்படும் என்ற ஒரு காரணத்தை இப்போது கூறுகிறார். இவர்கள் ஏற்றுக் கொண்டதாக கூறிக் கொண்டிருக்கும் கொள்கைத் தலைவர்களுக்கே இந்த நிலை;
நிர்வாகத்தில் ஏதோ திட்டமிட்ட சதிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. மோடி இடதுசாரிகளுக்கு குறி வைத்துக் கொண்டிருப்பது போல் தமிழ்நாட்டில் கல்லூரிகளில் மாணவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியிலும் சேராமல் தவிர்க்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டது யார் ?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அரசாணை வெளியிட்டது யார்? இதற்குப் பின்னால் என்ன சதி நடக்கிறது?
குறிப்பாக தலைமைச் செயலாளர் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் வந்ததற்குப் பிறகும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய செயலாளர் தோழர் சண்முகம் தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக முதலமைச்சர் இதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அலட்சியப்படுத்துவது அதிகார ஆணவமும் அவமதிப்புமாகவே கருத வேண்டி இருக்கிறது. இத்தனைக்கும் ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. சமூக நீதித்துறையின் கொள்கை குறிப்பேட்டில் அருந்ததியர் என்ற பெயரே இடம்பெறவில்லை என்பதை சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர் வேலு அவர்கள் சுட்டிக் காட்டிய பிறகும் அமைச்சரிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை.
திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கிய 10 இஸ்லாமிய மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிப்பதற்காக ஒவ்வொருவருக்கும் 36 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தை இப்போது நிறுத்தி வைத்திருப்பது ஏன்? இதற்கான அரசாணை வெளியிடுவதை தொடர்ந்து தாமதப்படுத்துவது ஏன் ?
இதைவிட இப்போது மற்றொரு அரசாணை குறித்த அதிர்ச்சியான செய்தியும் வெளிவந்திருக்கிறது. அரசுத் தேர்வாணையத்தில் தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு உரிமைக்காக இந்த ஆட்சி வெளியிட்ட ஆணையில் குளறுபடிகளைச் செய்துள்ளது. இது திமுக ஆட்சி ஆணையில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது.
முன்னுரிமை கோரும் தமிழ் வழி கல்விக்கான சான்றிதழை மாணவர்கள் ஒரு முறை மட்டும் தான் பயன்படுத்த முடியும். ஒரு வேளை குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று பிறகு அதே மாணவர் குரூப்-1 தேர்வையோ அல்லது வேறு பிரிவு தேர்வையோ எழுத வேண்டும் என்று விரும்பினால் அப்போது இந்த தமிழ் வழி கல்வி ச்சான்றிதழை பயன்படுத்த முடியாது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று அரசாணை கூறுவதாக இப்போது செய்திகள் வந்திருக்கிறன. தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் நடத்துனர்களாகப் பணியாற்றுவதற்கு உத்தரப்பிரதேச நிறுவனம் ஒன்றுடன் இந்த ஆட்சி ஒப்பந்தம் போட்டு இருக்கிறது. இதை எதிர்த்து சென்னையில் தமிழ் அமைப்புகள் போராட்டங்களை அறிவித்திருக்கின்றன.
ஆக தமிழ்நாட்டில் ஓடும் பேருந்துகளில் வடநாட்டுக்காரர்கள் நடத்துனர்கள் ஆகப் போகிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. இந்த ஆணைகள் எங்கிருந்து பிறப்பிக்கப்படுகின்றன ?
இந்த அனைத்து அரசாணைகளிலும் ஒன்றை முக்கியமாக கவனிக்க வேண்டும் அனைத்தும் பாஜக சங்கிகளின் பார்வையோடு பிறப்பிக்கப்படுகின்றன. இதை மடைமாற்ற திமுகவோடு மோதல் போக்குகளை திட்டமிட்டு உருவாக்கி வருகிறார்கள். தமிழ்நாடு எங்கே போகிறது?
பெரியார் முழக்கம் இதழ் 03092026

சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு காரும், அதனைப் பராமரிக்க மாதம் ஒரு இலட்சம் ரூபாய் செலவுத் தொகையும் வழங்கப்படும் என்று ஆக-19, அன்று சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்தபோது, எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் அனைவரும் அதனை ஆதரித்தனர்.

தன்னிடம் கார் இல்லை என்று கூறி இந்த வேண்டுகோளை முன்வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணியிடம் கார் உள்ளது என்பது, அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை ஆதரித்துப் பேசிய இதர சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விலையுயர்ந்த கார்கள் இருப்பதை ஏற்கனவே தேர்தல் பத்திரத்தில் ஒப்புக் கொண்டுள்ளனர் என்பதே உண்மை.

முன்பு சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டபோது அதனை மறுத்த பொதுவுடைமைக் கட்சியினர் கூட, தற்போது இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திமுக மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆடம்பரக் கார்களை வைத்திருப்பவர்கள் தான்; அவர்களிடமிருந்தும் “தங்களுக்குக் கார் வேண்டாம்” என்ற எதிர்ப்புக் குரல் சட்டசபையில் எழவில்லை. பிறகு திமுக,பாமக, சி.பி.அய் கட்சிகள் தங்களுக்கு கார் வேண்டாம் என்று மறுத்துவிட்டனர்.

மாத ஊதியம், தங்கும் விடுதி, இலவசப் பேருந்துப் பயணம், சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது வழங்கப்படும் தினசரி படி, ஓய்வூதியம் எனப் பல்வேறு சலுகைகள் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்களைக் கார் இல்லாதவர்கள் போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குவதற்காகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊழலைத் தடுப்பதற்காகவே அரசே கார் வழங்குகிறது என்ற வாதமும் இங்கே முன்வைக்கப்படுகிறது. ஆனால், ஏற்கனவே கார்களை வைத்திருப்பவர்களுக்கு மீண்டும் அரசு சார்பில் கார் வழங்குவது என்பது கூட ஒரு சட்ட ரீதியான ஊழலாகும். தமிழக அரசு வழங்கும் இந்தக் கார் பரிசை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தில் முழுமையான நியாயம் உள்ளது. திமுக,பாமக,இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணித்துள்ளன.

இங்கே ஒரு வரலாற்று நிகழ்வைச் சுட்டிக்காட்ட வேண்டும். 93 வயது வரை தம் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் மக்களுக்காகச் சுற்றுப்பயணம் செய்தவர் தந்தை பெரியார். அவரது பயணத்திற்காகத் திராவிடர் கழகத் தோழர்கள் நிதி திரட்டிக் கார் வழங்கினார்கள்.

பெரியாரின் பரப்புரைப் பயணம் கார் வழியாகவே அமைந்தது. இறுதியில் அவருக்கு வழங்கப்பட்ட கார் பெட்ரோலில் இயங்குவதாக இருந்தது. பெட்ரோல் செலவு அதிகமாகிறது என்று கருதிய பெரியார், அதனை டீசல் என்ஜினுக்கு மாற்ற விரும்பினார். நீண்ட பயணத்திற்குப் பெட்ரோல் என்ஜினே வசதியாக இருக்கும் என்று தோழர்கள் கூறியும் பெரியார் கேட்கவில்லை. பெட்ரோல் காரில் பயணிப்பது ஆடம்பரச் செலவு என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அப்போதைய அமைச்சராக இருந்த ராஜாராம் அவர்களை வற்புறுத்தி, அந்த என்ஜினை டீசல் என்ஜினாக மாற்றினார். அப்படி மாற்றப்பட்ட பிறகு வண்டி பழுதாகிய நிலையில், ஒப்புக்கொண்ட பயணத்தை நிறுத்த விரும்பாத பெரியார், வண்டி பழுதுபார்த்து வரும் வரை ஒரு அம்பாசிடர் காரில் பயணித்தார். தனது உடலமைப்புக்கு ஏற்றதாக இந்தக் கார் பயணம் அமையாத காரணமாகவே அவரது குடலிறக்க நோய் தீவிரமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; அதுவே அவரது மரணத்திற்கும் காரணமாக அமைந்தது.

பொதுமக்கள் கொடுக்கும் பணத்தில் ஆடம்பர வாழ்வு வாழக்கூடாது என்பதில் தந்தை பெரியார் அந்த அளவிற்கு உறுதியாக இருந்தார். ஆனால், இன்று பல சொகுசு கார்களில் ஆடம்பரமாகப் பயணிக்கும் அரசியல் தலைவர்கள், அரசு ஒரு காரைத் தரும்போது “அதுதான் கெத்து’ என்று வாங்குவதற்குத் துடிக்கிறார்கள்.” -இரா
பெரியார் முழக்கம் இதழ் 27082026

தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் எம்.சாய்குமார் அவர் பதவி ஓய்வு பெற்ற நிலையில் நீட்டிப்புக் கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி ஒப்புதலைப் பெற்றது த.வெ.க ஆட்சி. தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் போராட்டங்களிலோ அல்லது காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) கட்சியின் போராட்டங்களிலோ பங்கேற்க விடாமல் தடுக்க வேண்டும் என்ற உத்தரவுக்குக் காரணமாக இருந்தவர்; இந்தத் தலைமைச் செயலாளர் தான் என்பது இப்போது ஆதாரத்துடன் வெளி வந்திருக்கிறது.

ஜூலை-28,ஆம் தேதி தலைமைச் செயலாளர் கூட்டிய சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவரது ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதோடு, ஆகஸ்ட்-17, ஆம் தேதி சிறப்பு அதிகாரியின் வழியாக கல்வி நிறுவனங்களுக்கு இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது மிகவும் அவசரமான நடவடிக்கை என்று அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடும் எதிர்ப்புக்குப் பிறகு அடுத்த இரண்டு நாட்களிலேயே ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்தச் சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. திரும்பப் பெற்றதற்கான காரணம் தனக்குத் தெரியாது என்கிறார் கல்லூரிக் கல்வி கூடுதல் இயக்குனர் சித்தியா செல்வி. உயர்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் தனது இயக்குனரகம் மட்டுமே இப்படி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது என்றும் பள்ளிக்கல்வி துறையிடமிருந்தோ, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்தோ இப்படி ஒரு சுற்றறிக்கை வரவில்லை என்றும் கூறுகிறார். ஆனால் பல்கலைகழகங்களுக்கு இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆட்சி நிர்வாகத்தில் கடும் குழப்பங்கள் நிலவுகின்றன.

இந்த அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களை கணக்கெடுக்கும் பணியில் குஜ்ஜிலியம்பாறை வட்ட ஆட்சி நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இதேபோல் திராவிடர் கழகம் திட்டமிட்டிருந்த நீட் எதிர்ப்பு வாகனப் பரப்புரைக்கும் காவல்துறை அனுமதி மறுத்தது. நாடு முழுதும் கிளர்ந்து எழும் மாணவர் இளைஞர் எழுச்சியை ஒடுக்க வேண்டும் என்ற ஒன்றிய ஆட்சியின் செயல் திட்டத்தை தமிழ்நாட்டில் வேகமாக அமல்படுத்தத் துடிப்பதாகவே தெரிகிறது. தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் அமித் ஷா முன்னிலையில் பேசிய முதலமைச்சர் விஜய் தொகுதி மறுவரையறைத் திட்டத்தை முடக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தைக் குறிப்பிடவே இல்லை. அதிகாரிகள் தயாரித்த உரையில் இந்த முக்கிய கருத்து திட்டமிட்டு தவிர்க்கப்பட்டு இருக்கிறது. இதை மாற்றி அமைக்க முதலமைச்சரும் தயாராக இல்லை; ஆனால் தங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று அமைச்சர்கள் முட்டுக்கொடுத்து சட்டமன்றத்தில் கம்பு சுற்றுகிறார்கள்.

இவர்களுக்கு நாடாளுமன்றத்தில் எந்த உறுப்பினரும் இல்லை. இந்த நிலையில் தலைமைச் செயலாளரை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தக் கோரிக்கையை காதில் வாங்குவதற்குக்கூட இந்த ஆட்சி தயாராக இல்லை. மோடி ஆட்சி பற்றி சட்டசபையில் பேசினால் உடனே அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அமைச்சர்கள் பதறுகிறார்கள்

ஆட்சிக்கு ஆதரவு தரும் ஒரு கட்சிக்கு தலைமைச் செயலாளர் இப்படி நெருக்கடி உருவாக்குவதை இந்த ஆட்சி தொடர்ந்து பதவியில் நீட்டிக்க அனுமதிக்கப் போகிறதா? தமிழ்நாட்டில் ஆட்சியின் கொள்கைகளை முடிவெடுப்பது அதிகாரிகளா? ஆட்சியாளர்களா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தமிழ்நாடு அரசு இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
பெரியார் முழக்கம் இதழ் 27082026

12.08.2026 அன்று காரைக்குடியில் நடைபெற்ற மாற்றத்திற்கான வாழ்வியல் பரப்புரைப் பயணங்களின் நிறைவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்.
எதிர்ப்பைப் பதிவு செய்க
தீர்மானம்-1: ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பார்ப்பன சொற்பொழிவாளர்களும், பிராமணர் மாநாடு போன்ற மாநாடுகளில் உரையாற்றுபவர்களும் முன்வைக்கும் பல வாதங்கள் அரசியல் சட்டம் தனது நோக்கமாக கொண்டுள்ள சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றிற்கு எதிராகவும், பிற சமுதாய மக்களை இழிவுபடுத்துவதாகவும் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட குற்ற வரையறைக்குள் வருவதாகவும் உள்ளன.

அ) அவ்வாறான உரைகள் ஆற்றப்படும் இடங்களிலேயே எதிர்ப்பினைப் பதிவு செய்ய வேண்டுமாறு தோழர்களை, பார்ப்பனரல்லாத மக்களை – குறிப்பாக இளைஞர்களை இம்மாநாடு தமிழ்நாட்டு வேண்டி கேட்டுக்கொள்கிறது

ஆ) தனி இடங்களில் அவ்வாறு பேசப்பட்டாலும் காணொலி வழியாக பொது வெளியில் பரப்பப்படும் போது உரிய நிறுவனங்களுக்கு புகார் (Report) பதிவிடுமாறும், அதே வேளையில் காவல் நிலையங்களில் புகார் அளித்து உரிய ஒப்புகையைப் பெறுமாறும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
குரலற்ற சேவை ஜாதி மக்கள்
தீர்மானம்-2: எண்ணிக்கை பலமும், பொருளாதார பலமும் இல்லாமல், சேவை ஜாதிகளாய் உடை வெளுத்தல், சவரம் செய்தல், கல் உடைத்தல், மண்பாண்டம் செய்தல், கூடை முடைதல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு ஒவ்வொரு கிராமத்திலும் 50 பேருக்கு மிகாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறனர். எண்ணிக்கை பலமோ, பொருளாதார பலமோ அற்றோராய், ஊராட்சி மன்றத்தில் உறுப்பினராகக் கூட வரமுடியாத நிலையில், தங்கள் கருத்துக்களை கோரிக்கைகளை சமூகத்தின், அரசின் காதுகளுக்கு எட்டச் செய்யும் வலிமையும் அற்றவர்களாக அவர்களின் நிலைநீடிக்கிறது.

இவர்களோடு சீர் மரபினர் (DNC/DNT) என்று பட்டியலிடப்பட்டுள்ள ஜாதிகளாக உள்ளோரில் பெரும்பான்மையினர் – இன்று வரை அரசியல் பணிகளோ, அரசுப் பணிகளே கிட்டாதவர்களாக பதவிகளைப் பெறும் வாய்ப்பே அற்றவர்களாக அமிழ்த்தப்பட்டுக் கிடக்கும் சமூகத்து மக்களின் பாடுகளைப் பொதுச் சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து அவர்களுக்கான உரிமைகளுக்காக குரல் கொடுப்பது சமூக நீதியின் அவசியத் தேவை என்று திராவிடர் விடுதலைக் கழகம் கருதுகிறது. “குரலற்ற மக்களின் குரலாக” ஒலிக்கும் வகையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அம்மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் கருத்தரங்குகளை நடத்தி அரசின் கவனத்திற்கும் பொதுச் சமூகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்வது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது. இம்முன்னெடுப்புகளுக்கு மனிதநேயத்தோடு பொதுச் சமூகத்தின் ‘ஆதரவைக் கோரி நிற்கிறது திராவிடர் விடுதலைக் கழகம்.

குரலற்றவர்களான இந்தப் பிரிவினரின் உள்ளக் குமுறலை எடுத்துரைக்க குறைந்த அளவு உள்ளாட்சிகளில் முதற்கட்டமாக மட்டுமாவது ஊராட்சிகளில் 1 இடமும், ஒன்றியங்களில் 2 இடங்களும், மாவட்ட ஊராட்சி மன்றங்களில் 4 இடங்களும் என்ற அளவில் -பல்வேறு சமுதாயங்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் சுழற்சி முறையில், நியமன உறுப்பினர்களாக அமர்த்த வேண்டும் என தமிழ்நாட்டு அரசினை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
ஆணவப் படுகொலை தடுப்பு சட்டம்
தீர்மானம்-3: ஆணவக் கொலைகள் என்பது வாரந்தோறும் வெளியாகும் செய்தியாக இப்போது மாறிவிட்டது. ஜாதிச் சங்கங்கள் ஜாதிக் கட்சிகளாக இடம் பெற்று விடுகின்றன. பெரும்பாலும் கள்ளச் சாராயம், கந்து வட்டி, கல்வித்தந்தைகள் அரசியல் அரங்குக்குள் நுழைந்துள்ளனர்.ஈட்டிய பொருளைப் பாதுகாக்கவும், அரசிடம் தங்கள் பேர ஆற்றலை வளர்த்துக் கொள்ளவும் ஜாதிச் சங்கங்களை உருவாக்கி காலப்போக்கில் அவற்றை அரசியல் கட்சிகளாக மாற்றி ஒரு தேர்தல் கூட்டணியில் இணைந்து கொள்கின்றனர்.
ஜாதிப் பெருமை வெற்றுக் கூச்சல்
ஆனால், தங்களது மதத்தில் `சூத்திர’ நிலையில் அவமானப்படுவதையோ, தாங்கள் எழுப்பிய கோயிலில்கூட வழிபாடு நடத்த உரிமையும் அற்று வெளியில் நிறுத்தப்படுவதையோ, இந்திய அரசுப் பணிகளிலும், அயலகப் பணிகளிலும், அயலக அரசுத் தூதுவர்களாகவோ, ஒன்றிய அலுவலகங்கள், செயலாளர்கள், நீதித்துறை, செய்தி ஊடகம், பெரு வணிக நிறுவனத் தலைமை போன்றவற்றில் எந்த பிரதிநிதித்துவமும் இல்லாததையோ இவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. தாங்கள் அரசியல் அதிகாரத்தைப் பெறவும், பேர ஆற்றலை உயர்த்திக் கொள்ளவும் – மன்னர் பரம்பரை போன்ற வெற்றுக் கூச்சல்களால் ஜாதிப் பெருமை பேசி, அப்பாவி பாமர மக்களை நம்ப வைத்து, அவர்களிடம் ஜாதிப் பெருமித உணர்வை வளர்க்கின்றனர். தங்கள் ஜாதிப்பெண் வேறு ஜாதி ஆண்களை மணம் முடிப்பதால் தங்கள் பாரம்பரிய குலப் பெருமை அழிந்துவிடும் என்பதை அழுத்தமாக நம்ப வைத்து, ஜாதி உணர்வைக் கூர்மைப் படுத்தி, வெறியூட்டி விடுகின்றனர். அதன் விளைவே இந்த ஆணவக் கொலைகள் ஆகும்.

அ) இந்த ஆணவக் கொலைகள் பற்றி ஆராய்ந்த தேசிய சட்ட ஆணையம் ஏற்கனவே 2012ஆவது ஆண்டிலேயே தனது 242 வது அறிக்கையில் தனி சட்டத்தின் தேவையைப் பற்றியும், தேசிய மகளிர் ஆணையத்தோடு கலந்து பேசி தயாரித்து, அதற்கான ஒரு சட்ட முன்வரைவை முன் வைத்துள்ள இந்த நிலையில் திருமண சுதந்திரத்தில் தலையிடுவதைக் தடுக்கும் சட்டம் என்ற பெயரால் ராஜஸ்தானிலும், கருநாடகத்திலும் சட்டமன்றங்கள் தீர்மானங்களைக் கடந்த ஆண்டு நிறைவேற்றியும் இருக்கின்றன. அதன் ‘தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசும் அவ்வாறான ஒரு தனிசட்ட வரைவை சட்டமன்றத்தில் உடனடியாக நிறைவேற்றி சட்டமாக்க வேண்டும் என்று இம் மாநாடு வலியுறுத்துகிறது.

ஆ) சட்டங்கள் நிறைவேற்றி விடுவதே குற்றங்களைத் தடுத்து விடாது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இருப்பினும் இவ்வாறான ஆணவக் கொலைகளை அம்பலப்படுத்தியும், அதைக் கைவிட வேண்டிய தேவைகளை வளர்ந்து வரும் நாகரீக சமூகத்தில் ஆணவக் கொலைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் மிகவும் தேவையான ஒன்றாகும். தமிழ்நாடு அரசு தன்னுடைய செய்தி விளம்பரத் துறை வழியாக, வேண்டுகோளாக, வானொலி, தொலைக்காட்சிகள் வழியாக ஏன், குடும்ப நலத் திட்டம் போன்றவற்றுக்கு செய்யப்பட்டதைப் போல கலைக் குழுவினரைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் பரப்ப வேண்டியதும், அவ்வாறான சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்லும் இயக்கங்களுக்குத் துணையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியதும் அவசியமான ஒன்று என்பதையும் மாநாடு சுட்டிக்காட்டுகிறது.
சாமியார்களால் ஏமாறும் மக்கள்
தீர்மானம்-4: அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கைகளை நம்பி மக்கள் சாமியார்களிடம் போகிறார்கள். அவர்களின் ஆலோசனைகளைப் பெற அவ்வேளைகளில் நகைகளைப் பறிகொடுப்பதும், பாலியல் தொல்லைக்கு உள்ளாவதும், சில நேரங்களில் மரணத்தில் முடிவதும் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சிகளில், செய்திகளில் இந்த குற்றங்கள் தொடர்பான மூடநம்பிக்கைச் செய்திகளே முதலிடம் பெற்று வருகின்றன.
அரசியல் சட்டம் குடிமக்களின் கடமையாக 51A(h) அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தும் பிரிவுக்கு இவை எதிரானவை. பேய், பில்லி, சூனியம், நரபலி, மந்திரித்தல் போன்ற மூடநம்பிக்கைகளை குற்றமாக்கி ஏற்கனவே மகாராஷ்டிரா, கர்நாடகம், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், அசாம் போன்ற மாநிலங்களில் மூடநம்பிக்கை தடைச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசும் அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுவதில் இருந்து காப்பாற்றுவதற்கு மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று மாநாடு வலியுறுத்துகிறது.
அமைச்சர்களின் கண்டனத்துக்குரிய மதச்சார்பு
தீர்மானம்-5: வேளாண் துறை அமைச்சர் மாண்புமிகு வினோத் நிதிநிலை அறிக்கையை முன்கூட்டியே திருப்பதி ஏழுமலையானிடம் சமர்ப்பித்துள்ளார். நிதி அமைச்சர் மரிய வில்சன் ஜெபமாலையை வைத்துக்கொண்டு சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையைப் படிக்கிறார். சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பதவி ஏற்கும் போது இஸ்லாமிய குருக்களை வைத்து `துவா’ செய்கிறார். அனைத்து மதத்தினருக்கும் மதநம்பிக்கை இல்லாதவர்களுக்கும் சட்டப்படி மதச்சார்பின்மை அடையாளத்தோடு செயல்பட வேண்டிய அமைச்சர்கள் தங்கள் தனிமனித மத அடையாளத்தை ஆட்சிப் புலத்தில் வெளிப்படுத்துவது அரசமைப்பு சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும்.

பாஜக ஆட்சி செய்யும் வேறு எந்த மாநிலத்திலும் கூட இதற்கு முன்னுதாரணம் இல்லை. தனிப்பட்ட மத நம்பிக்கையை அரசின் அடையாளமாக மாற்றுவதை இம்மாநாடு கண்டிக்கிறது. ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் கொள்கைத் தலைவர்களாக ஏற்றுள்ள பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளுக்கும் இது எதிரானது என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.
சுயஜாதி மறுப்பு இயக்கம்
தீர்மானம்-6: `ஜாதிய சமூக உறவுகள்’ தான் ஜாதியைக் காப்பாற்றி வருகின்றன. அதுவே ஆணவப் படுகொலைக்குத் தூண்டுதலாக அமைந்து விடுகிறது. தனது குடும்பத்தில் ஜாதி கடந்த திருமணங்களை ஏற்க விரும்பினாலும் ஜாதி சமூகம் அவமதிக்குமே, அவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது என்ற மன அழுத்ததுக்கு உள்ளாகி ஆணவப் படுகொலைகளுக்கும் தயாராகி விடுகிறார்கள்.
இந்த நிலையில் சுயஜாதி மறுப்புக்கான இயக்கத்தின் தேவை அவசியமாகிறது. ஜாதி சமூக இறுக்கத்தைத் தகர்க்க இம்மாநாட்டு மேடைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ள கானாடு காத்தான் வை.சு.சண்முகம் சுயஜாதி எதிர்ப்பாளராக ஜாதி எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்தவர் ஆவார். அதன் தொடர்ச்சியாக சுயஜாதி மறுப்பு அமைப்புகளை ஒவ்வொரு ஜாதிப் பிரிவில் அடங்கியுள்ள ஜாதி எதிர்ப்பாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் தொடங்க வேண்டும். ஜாதி எதிர்ப்பில் இது முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என்று இம்மாநாடு கருதுகிறது.
பெரியார் முழக்கம் இதழ் 20082026

அகமண முறையை அகற்றுவோம்! ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்! எனும் கேள்வி பதில் வடிவில் ஜாதி எதிர்ப்பு கருத்துக்களை உள்ளடக்கி 16 பக்கத்தில் ரூ.5 விலையில் சிறுநூல் வெளியிடப்பட்டுள்ளது.

பேய், பில்லி, சூனியம், வாஸ்து, தீ மிதித்தல் எனும் தலைப்பில்
மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் விளக்கத்துடன் செய்திகள் இடம் பெற்றுள்ளன. 24 பக்கம் கொண்ட இந்நூல் ரூ.10 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
பெரியார் முழக்கம் இதழ் 13082026

தோழர் வைகறை வாணன் (77) முடிவெய்தினார். பெரியாரிய பொதுவுடமை சிந்தனை கொண்டவர். ஈழ விடுதலைப் பிரச்சனையில் முனைப்புடன் செயல்பட்டவர்.
குத்தூசி குருசாமி எழுத்துக்களையும், தர்ம தீர்த்த அடிகளார் மலையாளத்தில் எழுதிய நூலை தமிழாக்கம் செய்து “இந்து மத கொடுங்கோன்மை வரலாறு” என்ற நூலையும் தனது சாளரம் பதிப்பகம் வழியாக வெளியிட்டவர். அவர் நடத்திய `பாலம்’ இதழ் வழியாக ஈழத்துக் கவிஞர்கள், கவிதைகள், நாவல்களை வெளியிட்டு பதிப்பித்தவர்.
விடுதலைப் புலிகளின் கவிஞரான புதுவை ரத்தினதுரை கவிதைகளை தொகுத்து வெளியிடும் முயற்சிகளில் முனைப்புடன் இருந்தார். இந்த நிலையில் உடல்நலன் பாதிக்கப்பட்டு விடை பெற்றுக் கொண்டு விட்டார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

பெரியார் முழக்கம் இதழ் 06082026

சேலம் மாவட்டம், கொளத்தூர் , இலக்கம்பட்டி கழகத் தோழர் குமார் (52) 01.08.2026 அன்று மாலை 6.00 மணியளவில் மறைவுற்றார். தோழரின் இறுதி நிகழ்வு 02.08.2026 காலை 10.00 மணிக்கு இலக்கம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தோழரின் உடலுக்கு சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான தோழர்கள் அணிவகுத்து கழகக் கொடி மற்றும் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. கழகப் பெண் தோழர்களே குமார் அவர்களின் உடலைச் சுமந்து இறுதி ஊர்வலத்தை தலைமை ஏற்று நடத்தினர். இறுதி நிகழ்வை சடங்கு, சம்பிரதாயங்கள் இன்றி நடத்த தோழரின் குடும்பத்தார் முழு ஒத்துழைப்பு வழங்கினர். கழகத் தலைமைக்குழு உறுப்பினராக செயல்பட்டவர் தோழர் குமார்.

நிகழ்வில் கொளத்தூர், காவலாண்டியூர், மேட்டூர், மேட்டூர் ஆர்.எஸ், சேலம் மாநகரம், நங்கவள்ளி, வனவாசி, இளம்பிள்ளை, ஏற்காடு, திருப்பூர், குருவரெட்டியூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கழகத் தோழர்கள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி இரங்கல் அறிக்கை:

அவருடைய பெற்றோர்கள் இருவரும் சென்னையில் 1972 மே 27, 28 ஆகிய நாட்களில் நடந்த மாநில பகுத்தறிவாளர் மாநாடு, சமூக இழிவு ஒழிப்பு மாநாடு, மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடுகள் முதல், திராவிடர் கழகத்தின் அனைத்து மாநாடுகளிலும் பங்கேற்றவர்கள். அவரது தந்தை தோழர் மு. அர்த்தனாரியோ மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்ற மாநாட்டிலும், பின்னர் நடந்த டெல்லி போராட்டத்திலும் பங்கேற்றவர். அவரது தாயார் சந்திராவும் தாலி, நகைகள் அணியாத கழகக் கொள்கைப் பற்றாளராகவே வாழ்ந்து வருபவர் ஆவார்.தமிழீழ விடுதலைப்புலிகள் பயிற்சி முகாமுக்கு இடம் தேடியபோது அவர்கள் வசித்து வந்த நிலம் காடுகளுக்கு அருகில் இருந்ததாலும், மற்றொரு நிலம் காவிரி ஆற்றின் கரையில் (மேட்டூர் தேக்கத்தின் பின்புறத்தில்) இருந்ததாலும் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் பின்னர் தான்இடமாற்றம் நிகழ்ந்தது.

அவரது தந்தை தன் மகனுக்கு ஜாதி மறுப்புத் திருமணமே செய்வது என்பதில் உறுதியாக இருந்தவர். அவ்வாறே திராவிடர் கழகத்தின் மேச்சேரி ஒன்றியத் தலைவராக இருந்து, தோழர் மேச்சேரி கோபால் முடிவெய்திய பின்னர் அவரது மகள் கோ. தமிழரசியுடன் நடத்தியும் வைத்தார். அந்தத் திருமணத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தேதி கிடைக்காத காரணத்தால், மணமக்களின் இரு குடும்பத்தாரும் ஒற்றைப் பேருந்தில் பயணத்து, பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் நிகழ்த்திக் கொண்டனர். வழங்கப்பட்ட இனிப்பும். காரமும் வீட்டிலேயே செய்து எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு வாங்கிய தேநீர் விருந்தோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது. ஆசிரியர் அவர்கள் பாராட்டிப் பேசிய ஒரு விழாவாகவும் அது இருந்தது. மீதமான மணவிழாச் செலவை கழகத்துக்கு நன்கொடையாகவும் வழங்கினார் அவருடைய தந்தையார். தோழர் குமாரும் தொடக்கத்தில் தன் கல்லூரி நாட்களில் ஈரோடு மாவட்ட மாணவரணிச் செயலாளராகப் பணியாற்றியவர். பின்னர் திராவிடர் கழக மாநில மாணவரணிச் செயலாளராக திண்டுக்கல் தோழர் தி. தாமரைக்கண்ணனும் இவரும் நியமிக்கப்பட்டனர். இரண்டு ஆண்டுகளில் தாமரைக்கண்ணன் தன்னை திராவிடர் கழகத்திலிருந்து விடுவித்துக் கொண்டதன் பின்னர், தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொடங்கப்படும் வரை திராவிடர் கழக மாநில மாணவரணிச் செயலாளராக நான்காண்டு காலத்துக்கு மேலாகப் பணியாற்றி வந்தார். அவர் விளிம்பு நிலை மக்களிடம் கொண்டு இருந்த ஈடுபாடு காரணமாக அவரது ஆய்வியல் அறிஞர் (M.Phil.,) ஆய்வு பழங்குடி மக்களை குறித்ததாகவே இருந்தது.

அவரது தந்தைக்கு நிகழ்ந்த இதய அறுவை சிகிச்சையின் காரணமாக முழுவீச்சில் ஈடுபட முடியாமல் உள்ளூர் அளவில் அவரது கழகப் பணி குறுக நேர்ந்தது. தன் மகன் த.கு.இனியனை வில்வித்தைப் பயிற்சியில் ஈடுபடுத்தி தேசிய அளவிலான முதல் இடம் பெறும் அளவு வளர்த்தெடுத்தார். அவரது முன்னெடுப்பே கொளத்தூர் பகுதி கழகக் குடும்பங்களிலும் பலர் அந்த்த் துறையில் வளர்ந்து மாநில அளவிலான வெற்றிகளையும், இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்பும் நிகழச் செய்தது.

அப்போட்டிகள் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவில் அனைத்திந்திய அளவிலான போட்டிகளாக ஆண்டுதோறும் நடைபெறும். தமிழ்நாடு வில்வித்தைப் பயிற்சியாளர் சங்க செயலாளராக அப்போட்டியின் முன்னேற்பாடுகளுக்காக ஒரு நாள் முன்னதாகவே சென்று போட்டி ஒழுங்குகளில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மயக்கத்தின் காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோதுகூட மருத்துவமனைக்குள் நடந்தே உள்நுழைந்த தோழர் குமார் மருத்துவம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். முதன் முறையாய் ஏற்பட்ட மாரடைப்பு அவரது மரணத்தில் முடிந்த நிகழ்வு அவரை அறிந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பெரியார் முழக்கம் இதழ் 06082026

திராவிடர் கழகம் நடத்தும் நீட் எதிர்ப்புப் பரப்புரை ஏன் தவெக ஆட்சியைப் பதற வைக்கிறது? நீட்டைத் திணிக்காதே என்று ஒன்றிய பாஜக ஆட்சிக்கு எதிராக பரப்புரைச் செய்வதை தனது ஆட்சிக்கு எதிரான பரப்புரையாக ஏன் இந்த ஆட்சி கருதுகிறது?

ஒன்றிய ஆட்சியுடன் அனுசரித்துப் போவது என்பது அவர்கள் திணிக்கும் கொள்கைகளோடு அனுசரித்தல் தானா?

கருத்துரிமை பறிப்புகள் எல்லை மீறுவது கண்டனத்துக்குரியது!
பெரியார் முழக்கம் இதழ் 06082026

கைது அடக்குமுறை அரசியலின் காலம் மலையேறிவிட்டது என்பதை முதல்வர் விஜய் உணர வேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது அவதூறு என்றால் அதற்காக வழக்கு ப்பதிவு செய்வதற்கு உரிமை உண்டு. ஆனால் வழக்குப் பதிவு செய்தவர்களை எல்லாம் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் என்ன வந்திருக்கிறது?

நாளை சட்டமன்றம் கூடும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்றத்தில் தனது கடமையை ஆற்ற விடாமல் தடுப்பது சட்டமன்ற ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைப்பது ஆகும்! உயர்நீதிமன்றம் அவசர வழக்காக இதை எடுத்துள்ள நிலையில் பகல் 12 மணி வரை கைது செய்ய தடை விதித்த நிலையில் நீதிமன்ற ஆணையையும் மீறி கைது செய்வது அப்பட்டமான பழிவாங்கும் அரசியல் அல்லாமல் வேறு என்ன?
நேற்று தஞ்சை ஆர்ப்பாட்டம் முடித்து வந்தவரை மீண்டும் காலையில் கைது செய்து தஞ்சை வரை வேனில் ஏற்றிச் சென்று பழிவாங்க வேண்டும் என்ற அற்ப அரசியலைத் தவிர இதற்கு வேறு ஒரு காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டதைப் போல இது ஒரு நல்ல காமெடி என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. வழக்கு பதிவு செய்து விட்டதாலயே கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை; கைது செய்யவும் கூடாது என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கி இருக்கின்றன.

ஜோகிந்திர குமார் எதிர் உ.பி மாநில ஆட்சி -1994
சீதாராம் எதிர் மகாராஷ்டிரா- 2021
சத்தேர் குமார் எதிர் சி.பி.அய்- 2022
அம்னீஸ்குமார் எதிர் பீகார் அரசு

இப்படி பல வழக்குகளில் வழக்கு பதிவு செய்த உடனே கைது செய்வது கூடாது என்று உச்சநீதிமன்றம் தலையில் குட்டி இருக்கிறது.
ஏழு ஆண்டு தண்டனைக்குக் குறைவான குற்றப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட எவரையும் கைது செய்யக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி இருப்பதோடு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஓடி விடுவார்கள் என்று கருதினால் அதற்கான சான்றுகளைக் கூற வேண்டும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது.

கரூரில் 42 அப்பாவி மக்கள் விஜய் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி மரணம் அடைந்தபோது முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் விஜயை நிச்சயமாக கைது செய்திருக்க முடியும். மரணம் நடந்த உடனேயே கரூரை விட்டு ஓடிப்போனவர் விஜய். ஆனால் அவர் பழிவாங்கும் அரசியலை நடத்த விரும்பவில்லை. மக்கள் இதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஏதோ முதல்வர் விஜய் பகவானாக அவதாரம் எடுத்து வந்தவர் போலவும் அவரைப் பற்றி பேசுவது தேசத் துரோகம் என்பது போலவும் கதைகள் உருவாக்கப்படுகின்றன. இது அதிகார ஆணவத்தின் உச்சம் வன்மையான கண்டனத்துக்குரியது!

சொல்லப்போனால் திமுகவை மீண்டும் உணர்வுகளோடு உயிர்ப்பித்துக் களமாட இந்தக் கைதுகள் மேலும் ஊக்கத்தையும் உற்சாகத்தையுமே வழங்கும்.
பெரியார் முழக்கம் இதழ் 06082026

காரைக்குடியில் ஆக-12,ல் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் பயண நிறைவு விழா மாநாட்டின் மேடைக்கு சுயமரியாதைச் சுடரொளி வை.சு. சண்முகம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. காரைக்குடி பகுதியில் செல்வவளம் மிக்க நகரத்து செட்டியார் சமூகத்தினர் வாழ்ந்த பகுதியில் சுயமரியாதைக் கொள்கைகளை முன்னெடுத்த பெரியாரின் உற்ற தோழராக விளங்கியவர் கானாடுகாத்தான் வை.சு.சண்முகம். ஜாதிக்குள் திருமணத்தையும் இந்துமத பார்ப்பனியத்தையும் எதிர்த்து நின்ற அந்த சுயமரியாதைச் சுடரொளி பெயரை மிகப் பொருத்தமாக மாநாட்டு அரங்கிற்கு சூட்டியுள்ளோம்.

முகவை மாவட்டம் கானாடுகாத்தானில், 1883ஆம் ஆண்டில் பிறந்த வை.சு. சண்முகம் அவர்கள். காங்கிரசில் இருந்தபோதே சேரன்மாதேவியில் நடந்த குருகுலப் போராட்டத்தில் பெரியாருக்கு பெரும் ஒத்துழைப்பு நல்கியவர். “பார்ப்பனரல்லாதார்” உணர்வு நிரம்பியவராகையால், வகுப்புரிமைக்கு பெரியார் சுயமரியாதை இயக்கம் அமைக்கையில் இவரும் உடன் தோழராய்த் தோள்கொடுக்க முன்வந்தார்.

இவரது நேர்மையும், ஆர்வமும், தகுதியும் உணர்ந்த சுயமரியாதைத் தலைவர்கள் செங்கற்பட்டு மாநாட்டிலேயே இயக்கத்தின் பொருளாளராகத் தேர்வு செய்தார்கள். நாட்டின் பல பகுதிகட்கும் சென்று பல்வகை நடவடிக்கைகளின் வாயிலாக இயக்கத்தை வளர்த்தார். ஜாதி மறுப்பு திருமணங்களையும், புரோகிதமற்ற திருமணங்களையும் நிறைய நடத்தியதுடன், தம் முதல் மனைவியார் மறைவுற்ற பின் கைம்பெண்ணாய் இருந்த மஞ்சுளாபாய் அம்மையாரை வாழ்க்கைத் துணைவியாக ஏற்று, வழிகாட்டியாய் விளங்கினார்.

மரபுகளையும் வேண்டாத பழைய சடங்குகளையும் விடாப்பிடியாய்ப் பின்பற்றி வந்த செட்டிநாடு நகரத்தார் எனும் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினரிடம் சுயமரியாதைக் கொள்கைகளை பரப்பினார். தனது மகள் பார்வதியின் திருமணம் 1935இல் நடந்தபோது வாழ்க்கைத் துணைவர் நடராசன் என்பார் கழுத்தில் மகளைவிட்டுத் ‘தாலி’ கட்டும் துணிச்சலான நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார்.

“நாட்டுக் கோட்டையாரும் சீர்திருத்தமும்” என்று 1930-இல் இவர் எழுதிய கட்டுரை பிரபலமானது. பெரியார் இயக்கத்தின் கொள்கை அறிமுக நூலாக போற்றப்படும் தயானந்த சரஸ்வதி எழுதிய “ஞான சூரியன்” எனும் அறிவுநூலை முதன் முதலாக வெளியிட்ட பெருமை இவருக்கு உண்டு. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் இந்த நூலுக்கு அணிந்துரை எழுதினார்.

பெரியாருக்கு ஊர்தியொன்று தேவையாக இருந்த நிலையறிந்த சண்முகனார் தம் மதிப்புயர்ந்த ‘கெடிலாக் மகிழுந்தினை பெரியாருக்கு வழங்கினார். இவ்வண்டியை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினையொட்டி அரசு பறிமுதல் செய்தது.

1961-ஆம் ஆண்டில் இவர் இயற்கையெய்தியபோதுகூட இவரது உறவினர்கள் இறுதி நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ள முன்வரவில்லை! இயக்கத் தோழர்களே இவரது உடலுக்குச் சுடுகாட்டில் எரிமூட்டிக் கடமையாற்றினர். சுயஜாதிக்காரர்களை எதிர்த்த சுயஜாதிமறுப்பாளர் வை.சு.சண்முகம். இவரது பெயரை சூட்டி காரைக்குடி மாநாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளோம்.

இந்தப் பரப்புரை நோக்கத்தை பலரும் பாராட்டுகிறார்கள் வரவேற்று பேசுகிறார்கள். தோழர்கள் உற்சாகமாக களமிறங்கி செயல்படுகிறார்கள். பயணங்களில் பங்கேற்க வாய்ப்பில்லாத தோழர்கள் நிறைவு விழா மாநாட்டில் பங்கேற்குமாறு கழகம் அறைகூவி அழைக்கிறது.
பெரியார் முழக்கம் இதழ் 06082026

வேளாண் துறை அமைச்சர் வினோத் தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டை திருப்பதி ஏழுமலையான் முன் சமர்ப்பித்துள்ளார். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் கூட இப்படி ஒரு கேவலம் நடந்ததாக தகவல் இல்லை!

சட்டமன்றத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு பேரவைத் தலைவர் தான் அனுமதிக்க வேண்டும். ஆனால் இந்த ஆட்சியின் அமைச்சர் திருப்பதி ஏழுமலையானிடம் அனுமதி கேட்கிறார். ஏழுமலையான் பட்ஜெட் முழுவதையும் படித்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசுவார் என்று அமைச்சர் எதிர்பார்க்கிறாரா?

பட்ஜெட் என்ற அரசு ஆவணத்திற்கு மதம் கிடையாது; அது மக்களுக்கான ஆவணம்.அனைத்து மதப் பிரிவு மக்களுக்கும் மத நம்பிக்கை அற்றவர்களுக்கும் தயாரிக்கப்படுகின்ற ஒரு அரசு ஆவணத்தை இந்து மத கடவுளுக்கு முன் சமர்ப்பித்து ஆசிர்வாதத்தையும் அனுமதியையும் கேட்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட அயோத்தி ராமன் கோயில் முன் பட்ஜெட்டை சமர்ப்பிக்கவில்லை. துறையின் அமைச்சர் ஒரு இஸ்லாமியராக இருந்து அவர் பட்ஜெட்டை மசூதி முன்வைத்து அனுமதி கேட்டால் அனுமதிப்பார்களா? வாஸ்துப்படி முதல்வரின் அலுவலகம் பெரும் செலவில் மாற்றி அமைக்கப்படுவதும் முதலமைச்சரின் ஆஸ்தான சோதிடருக்கு அரசு பதவி கொடுக்க துடிப்பதும் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் நடந்ததே இல்லை! கடவுள் பெயரால் உறுதி ஏற்க மறுத்த ஆதவன் அர்ஜூனாக்கள் இதை ஆதரிக்கிறார்களா?

துறை சார்ந்த அமைச்சர்கள் மானிய கோரிக்கைகளில் சமர்ப்பிக்கும் அறிக்கைகளையும் இப்படி ஒவ்வொரு கோயிலுக்கும் குலதெய்வத்துக்கும் சென்று அனுமதி பெற்றுத் தான் சட்டசபையில் சமர்ப்பிக்கப் போகிறார்களா?

பேரவையில் சமர்ப்பிக்க தன்னிடம் அனுமதி பெற வேண்டிய ஒரு அமைச்சர் ஏழுமலையானிடம் சென்று முன்கூட்டி அனுமதி பெறுவதை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொள்கிறாரா?

பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கும் ஆட்சி இலட்சணம் இதுதானா?

கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் அமைச்சர்களும் இதை ஏற்கிறார்களா? இது மாற்றம் அல்ல ; மிகவும் கண்டிக்கத்தக்க ஏமாற்றம்!
-விடுதலை இராசேந்திரன் முகநூல் பதிவு. 03.08.2026
பெரியார் முழக்கம் இதழ் 06082026

கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் விடுத்துள்ள அறிக்கை: நீட் போராட்டத்தின் நியாயத்தை உணராமல் மாணவர்களை வாட்டி வதைக்கிறது ஜோசப் விஜய் அரசு. நீட் தேர்வை எதிர்க்கிறோம் என ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டுப் போராடிய மாணவர்களைத் தாக்கியது மட்டுமல்ல; போராட்டத்தை நீர்த்து போகச் செய்யும் பணியைத் தனது அமைச்சர்களைக் கொண்டு செய்கிறார்.

மாணவர் போராட்டத்தைத் திசை திருப்பி ஜூலை 23-ம் தேதி வெளியான ஜனநாயகன் திரைப்படத்தை கோலாகலமாக கொண்டாடுங்கள் என ஒரு அமைச்சர் அறிக்கை கொடுக்கிறார். ஜூலை-22ம் தேதி இரவு தமிழ்நாடு முழுவதும் திரையரங்கம் முன்பு தமிழ்நாட்டு மாணவர்கள் இளைஞர்கள் பாலாபிசேகம் செய்வதும் 150 ரூபாய் டிக்கெட்டை 1000, 1500-க்கு வாங்கி செல்வதுமான அவலநிலையைக் காண முடிந்தது. முற்போக்கான மாநிலம் தமிழ்நாடு என்றும் அது உரிமைகளுக்கு முதலாவதாக போராடும் என்ற வரலாற்றை மாற்றி தமிழ்நாட்டு மாணவர்கள் இளைஞர்களைத் தற்குறிகளாக மாற்றும் வேலையை ஜோசப் விஜய் அரசு செய்கிறது.

வடமாநிலங்களைப் பிற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் என வசை பாடினோம் அவர்கள் தங்கள் உரிமைக்காக உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்களைத் திரையரங்க வாசலில் குத்தாட்டம் போட வைக்கிறது இந்த அரசு. தூய்மைப் பணியாளர் போராட்டத்தின் போது மேனாள் முதலமைச்சர் கூலி படம் பார்க்கப் போகலாமா? என கேட்ட அன்றைய நடிகர் ஜோசப் விஜய் இன்று முதலமைச்சர் ஆன பின்பு ஜனநாயகன் திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு அமைச்சர் திரைப்படம் பார்க்க விடுமுறை கேட்கிறார், கல்வியில் முன்னணி மாநிலமான தமிழ்நாட்டை விஜய் அரசு கீழ் நோக்கி இழுத்துச் செல்கிறது. தமிழ்நாட்டின் அமைச்சரவை இன்று திரையரங்கில் சென்று கேக் வெட்டுவதும் திருவிழா போன்று தான்வகிக்கும் பொறுப்பை மறந்து கூத்தடிக்கிறார்கள். அமைச்சர்கள் திரைப்படம் பார்க்கக் கூடாது என்பதல்ல; ஒரே நாளில் அனைத்து அமைச்சர்களும் திரைப்படம் காண திரையரங்கில் கிடப்பது தமிழ் மக்களைத் திசைதிருப்பும் செயலாகும்.

புதிதாக எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாமல் முந்தைய அரசின் திட்டங்களைப் பெயர் மாற்றம் செய்யும் பணியை மட்டுமே செய்யும் இந்த மைனாரிட்டி குதிரை பேர அரசு தமிழ்நாட்டின் இளைஞர்கள் மாணவர்களைத் தவறாக வழி நடத்துவதைக் கண்டிக்கிறோம்.
பெரியார் முழக்கம் இதழ் 30072026

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது மிகப்பெரும் அவமானம்! பல்கலைக்கழகத்திற்கு மனோன்மணியம் சுந்தரனார் பெயரை சூட்டியவர் கலைஞர். அவர் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் பாட வைத்தவர் கலைஞர். அந்தப் பாடலுக்கு அரசாணை வழங்கியவர் திராவிட மாடல் ஆட்சி முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலோடு தேசிய கீதத்தையும் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்திய போது ஏற்க மறுத்தவர் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின். ஆளுநர் தான் அவையை விட்டு வெளியேறினாரே தவிர தமிழ்த்தாய் வாழ்த்து முதலிடம் பெறுவதை வெளியேற்ற முடியவில்லை.

விஜய் ஆட்சிக்கு வந்ததும் பதவியேற்பு விழாவிலேயே ‘வந்தே மாதரம்’ முதன்மையிடம் பெற்றுவிட்டது. பேரவையில் ஆளுநர் உரையில் திராவிட மாடல் ஆட்சி தொடக்கத்தில் அனுமதிக்காத தேசிய கீதம் பாடலும் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் ஆளுநர் ரவி விருப்பம் போல் நிறைவேற்றப்பட்டு விட்டது.

உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்தாத இந்த ஆட்சியின் மவுன மொழி தான் இப்போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாம் இடத்திற்கு தள்ளி இருக்கிறது. ஆளுநரின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு கல்வி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை என்ற செய்தியைத் தவிர ஏன் கலந்து கொள்ளவில்லை? என்ற காரணத்தை வெளியிட துணிவின்றி மவுனம் சாதிக்கிறார்கள்.பாஜக ஆட்சியை நேரடியாக எதிர்க்கத் தயாராக இல்லை என்பதையே இந்த மவுனம் உறுதிப்படுத்துகிறது. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வஞ்சிக்கும் ஏமாற்று நாடகம். முதலமைச்சரின் மவுன மொழிகளுக்கு சொற்களைப் பொருத்திக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்கள். ஜனநாயகத்தின் உரிமைகளுக்கு “சைலன்ட் மோடு”போட முடியாது.

தமிழ் வாழ்த்துப் பாடலில் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய”ஆரியம் போல் உலக வழக்கொழிந்து”என்ற பார்ப்பன சமஸ்கிருத எதிர்ப்பு வரிகளை பெருந்தன்மையுடன் கலைஞர் நீக்கினார் வாழ்த்து ப்பாடலில் வசவு வேண்டாம் என்று கலைஞர் கூறினார். அந்தப் பெருந்தன்மை இப்போது ஆரியத்துக்கு இல்லை;அதிகாரத் திமிரோடு தமிழைப் புறந்தள்ளுகிறது!

இனி தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது விலக்கி வைத்த ஆரிய சமஸ்கிருத எதிர்ப்பு சொற்றொடரையும் இணைத்துப் பாட வேண்டும் இதுவே சமஸ்கிருத வார்த்தைகள் நிறைந்த ‘வந்தே மாதரத்திற்கு’ காட்டப்படும் எதிர்வினையாக இருக்கும்.
– விடுதலை இராசேந்திரன்
28.07.2026
பெரியார் முழக்கம் இதழ் 30072026

முதலமைச்சர் விஜய்யின் ஆஸ்தான சோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ஆலோசனையில் முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறதாம். மாநாடு கூட்ட அரங்கமாக இருந்த தளம் இப்போது அவசர அவசரமாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. புதிதாக மாற்றியமைக்கும் பணியில் வாஸ்து பண்டிதர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். தொடர்ந்து உச்சத்தில் இருக்க வேண்டும் என்றால் உயரமான கட்டடத்திலும் முதலமைச்சரின் இருக்கை கிழக்கு முகமாகவும் இருக்க வேண்டும் என்பது ஜோதிடரின் ஆலோசனையாம். அது மட்டுமல்ல தற்போது முதலமைச்சர் பயன்படுத்தும் அறை வாஸ்துப்படி சரியில்லையாம்!
மக்கள் மீதான நம்பிக்கை தான் சக்தி வாய்ந்ததே தவிர, வாஸ்து சோதிட நம்பிக்கைகள் அல்ல! என்பதை முதலமைச்சர் உணர வேண்டும். வாஸ்து அறிவியல் தானா?
வாஸ்து ஒரு போலி அறிவியல். வாஸ்துப்படி கட்டப்பட்ட வீடுகளில் தான் வெற்றியும் மகிழ்ச்சியும் இருக்கிறது என்பதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை. நிலச்சரிவு என்றால் வாஸ்து கட்டிடம், வாஸ்து பார்க்காத கட்டிடம் எல்லாமே இடிந்து விழுகின்றன.
ஆக்கபூர்வ சக்தி, எதிர்மறை சக்தி என்று வாஸ்து கூறுகிறது. அந்த சக்திகளைக் கண்டறியும் அளவிடும் கருவிகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி அறிவியலாக எந்த சக்திகளும் இல்லை.
காலை வெய்யிலும் காற்றோட்டமும் வீட்டுக்குத் தேவை என்பது இயல்பான உண்மை. ஆனால் வாஸ்து இதை திசையை வைத்துப் பேசுகிறது. மின்சாரம், மின்விசிறி, குளிர்சாதன விஞ்ஞான வசதிகள் எதுவும் இல்லாத காலத்தில் பேசப்பட்ட கருத்துகள் இவை. இதை இப்போதும் பேசுவது அறிவியல் தானா? பல நாடுகள் கடலுக்குள்ளே கட்டிடங்கள் கட்டுகின்றனவே!
வாஸ்து நாட்டுக்கு நாடு மாறுபடுமா? சென்னையில் சூரியன் திசை ஆஸ்திரேலியாவில் மாறுபடுகிறது. அப்போது ஆஸ்திரேலியாவுக்கு தனியாக வாஸ்து இருக்கிறதா? உலக நாடுகளில் வாஸ்து பார்த்து கட்டடங்கள் கட்டப்படுவதில்லை!
பழைய காலத்தில் அடுப்புப் புகையை வெளியில் விடுவதற்கு சமையலறையை தென்கிழக்கில் வைத்தார்கள். இப்போது புகை அடுப்பு இல்லை; புகை வெளியேற்றக் கருவிகள் வந்துவிட்டன. எனவே இப்போதும் அந்தக் கருத்தைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்க வேண்டுமா?
சென்னை நகரில் கடல் காற்று தெற்கு, கிழக்காக வீசுகிறது. படுக்கையறை; வரவேற்பு அறைகளை இந்த திசையை நோக்கி அமைப்பதே நல்லது. ஆனால் வாஸ்து சாஸ்திரப்படி இந்த திசையில் சமையலறை வைத்துக் கட்டுகிறார்கள். இது அறிவியல் தானா?
ஆந்திர முதல்வராக இருந்த என்.டி.ராமராவுக்கு ஒரு வாஸ்து ஆலோசகர் இருந்தார். அவரது பெயர் வி.என்.ரெட்டி. முதலமைச்சர் அலுவலகத்துக்கு கதவு தெற்கே இருப்பது ஆபத்து! வடக்கே கதவு இருக்க வேண்டும் என்று கூறினார். அவரது ஆலோசனையை ஏற்று முதலமைச்சர் அலுவலகத்தின் திசையை மாற்றி அமைப்பதற்கு புதிதாக சாலையே போடவேண்டி இருந்தது. பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு சாலை போட்டும் என்.டி.ராமராவின் ஆட்சி கவிழ்ந்துவிட்டது.
தேவகவுடா பிரதமராக வந்தபோது பிரதமர் அலுவலகத்தில் இரண்டு படிக்கட்டு இருப்பது ஆபத்து; மூன்று படிக்கட்டுகள் வேண்டுமென்று வாஸ்து பண்டிதர்கள் கூறினார்கள். கட்டி முடிந்ததும் தேவகவுடா ஆட்சி கவிழ்ந்துவிட்டது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையை இரவோடு இரவாக அகற்றினார். கண்ணகி சீற்றத்துடன் நிற்கும் சிலை அருகே தலைமைச் செயலகம் இருப்பதால் ஆட்சிக்கு ஆபத்து வரும் என்று வாஸ்து பண்டிதர்கள் கூறியதே காரணம். ஆனாலும் தேர்தலில் ஜெயலலிதா தோற்றார். 2006-ல் ஆட்சிக்கு வந்த கலைஞர் அதே இடத்தில் கண்ணகி சிலையை நிறுவினார்.
வாஸ்து சாஸ்திரம் வர்ண பேதத்தையும் பேசுகிறது. பிராமணர்களுக்கு, சத்திரியர்களுக்கு, வைசியர்களுக்கு, சூத்திரர்களுக்கு தனித் தனியாக வீட்டுமனைகளை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறது. அதை இப்போது பலஅடுக்கு மாடி கட்டிடம் கட்டும் ஒப்பந்தக்காரர்களால் பின்பற்ற முடியுமா? விற்பனையிலும் இதைக் கூற முடியுமா?
வாஸ்துவைப் பார்ப்பனக் கடவுளாக்கிவிட்டது சாஸ்திரம். நெற்றியில் விபூதி, மார்பில் பூணூலோடு மல்லாந்து படுத்துத் தூங்குகிறார் வாஸ்து பகவான் என்றும், ஆண்டுக்கு 8 முறை மட்டுமே கண்விழிப்பார் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. வாஸ்துப்படி வீடு கட்டாதவர்களை துன்புறுத்துவார் என்றும் மிரட்டுகிறார்கள். ஆண்டுக்கு சில நிமிடங்கள் மட்டுமே கண்விழிக்கும் பகவான் ஒவ்வொரு வீட்டையும் கண்காணித்து எப்படி மக்களை மிரட்ட முடியும்?
வாஸ்து மூடநம்பிக்கைகளை விளக்கி இப்படி நீண்ட பட்டியல் போட முடியும். வாஸ்து அறிவியலுக்கு எதிரானது. மூடநம்பிக்கையில் மூழ்கியவர்கள் அதிகாரப் பதவியில் இருந்தால் அவர்கள் எடுக்கும் முடிவுகள் குழப்பங்களாகவே இருக்கும். – இரா
வாஸ்து சோதிடத்தை நம்பும் முதல்வர் விஜய்
பெரியார் முழக்கம் இதழ் 30072026

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஜாதியில் திருமணம், மதத்தில் பார்ப்பனியம், வாழ்வில் மூடநம்பிக்கை இவற்றிற்கு எதிரான “மாற்றத்தை நோக்கிய வாழ்வியல் பரப்புரைப் பயணம்’’ என்கின்ற தலைப்பில் வருகின்ற ஆகஸ்ட் 6-ஆம் நாள் முதல் தமிழ்நாட்டில் மூன்று முனைகளிலிருந்து தொடங்கும் பரப்புரை நடைபெற உள்ளது. இந்தப் பயணத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை கழகப் பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் அப்பகுதிகளுக்குச் சென்று கலந்தாய்வு செய்தனர்.

08.07.2026 அன்று மதியம் நிறைவு மாநாடு நடைபெற உள்ள காரைக்குடிக்கு சென்று கழக மாவட்டப் பொறுப்பாளர் முத்துவை சந்தித்து மாநாடு நடைபெற உள்ள இடத்தையும் பேரணி தொடங்கும் இடத்தையும் பார்வையிட்டு இறுதி செய்தனர். மாநாட்டின் ஏற்பாடு குறித்தும் தோழர்கள் தங்குமிடம், உணவு மற்றும் மாநாட்டிற்கான விளம்பரம் செய்வது குறித்தும் ஆலோசனை வழங்கினர். மாலை 05.00 மணியளவில் பேராவூரணி சென்று தலைமைக்குழு உறுப்பினர் திருவேங்கடம் அவர்களை சந்தித்து பேராவூரணியில் 06.08.2026 அன்று கழகத் தலைவர் பங்கேற்கும் பரப்புரைப் பயண தொடக்கவிழா பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டனர்.

07.08.2026 அன்று பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற உள்ள உடையநாடு, மல்லிப்பட்டினம், மற்றும் அன்றைய நிறைவு கூட்டம் நடைபெற உள்ள அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் பரப்புரைக் கூட்டம் நடைபெற உள்ள இடங்களை பார்வையிட்டு இறுதி செய்தனர். இந்நிகழ்வில் பேராவூரணி திருவேங்கடம், கலைச்செல்வன், அதிராம்பட்டினம் கவிமணி ஆகியோர் தலைமைக் கழகக்குழுவினருடன் சென்றனர்.

09.07.2026 அன்று காலை அதிராம்பட்டினத்தில் கவிமணியின் தந்தையார் எதிர்பாராத விதமாக காலமானார் என்ற செய்தியறிந்ததும் காலையில் அதிராம்பட்டினம் சென்று அய்யா அவர்களுக்கு பொருளாளர் துரைசாமி அவர்களும், பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் அவர்களும் மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், சித.திருவேங்கடம், கு.பாரி, வடசேரி சிவசுப்பிரமணியம், திருப்பூர் அய்யப்பன் ஆகியோர் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர். பரப்புரைப் பயணம் நடைபெற உள்ள இடங்களான துவரங்குறிச்சி, பரவக்கோட்டை, மதுக்கூர், வடசேரி, மன்னார்குடி ஆகிய இடங்களைப் பார்வையிட்டு இறுதி செய்தனர். நீடாமங்கலம், நாச்சியார் கோவில், கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று பரப்புரை நடைபெற உள்ள இடங்களைத் தேர்வு செய்தனர். அதன் பின் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள தஞ்சை மாவட்டத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன் அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். அவ்வமயம் பல்வேறு திராவிடர் இயக்க நிகழ்வுகள் குறித்து பகிர்ந்து கொண்டார். நாச்சியார் கோவில் தோழர் வெங்கடேசன் அவர்கள் தான் புதியதாக கட்டிய வீடு திறப்பு விழா மகிழ்வாக கழக ஏடான புரட்சி பெரியார் முழக்கம் இதழுக்கு ரூபாய் 5000/- த்தை கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமியிடம் வழங்கினார்.

10.07.2026 அன்று காலை சிவகங்கை சென்று ஆசிரியர் புலவர் இளங்கோவை சந்தித்து 11.08.2026 அன்று சிவகங்கையில் பரப்புரை நடைபெற உள்ள பகுதியினைத் தேர்வு செய்து உறுதிபடுத்தினர். ஆசிரியர் இளங்கோ தேனீர் வழங்கி உபசரித்ததோடு, முன் ஏற்பாட்டு குழுவினர் வழி செலவிற்காக ரூபாய் 5000/- வழங்கினார். சுயமரியாதை இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான சிவகங்கை ராமசந்திரன் அவர்கள் நினைவாக பேரறிஞர் அண்ணா அவர்களால் திறக்கப்பட்ட பூங்காவில் உள்ள இராமச்சந்தினார் சிலையைத் தோழர்கள் பார்வையிட்டனர்.

மதியம் மதுரையில் மாவட்டக் காப்பாளர் தளபதி அவர்களின் இல்லத்தில் மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி, மதுரை முருகேசன் ஆகியோரிடம் பரப்புரைச் செய்யும் இடம் மற்றும் தோழர்கள் தங்குமிடம் குறித்தும் கலந்து ஆலோசித்து இறுதி செய்யப்பட்டது. மூன்று நாட்கள் தோழர்களைச் சந்தித்து பரப்புரைப் பயணம் குறித்து ஆலோசனை மற்றும் தோழர்கள் தங்குமிடம், உணவு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை வழங்கியதும் தோழர்கள் உற்சாகமாக பயணம் வெற்றி பெற பணியாற்ற உறுதியளித்ததும் பரப்புரைப் பயணம் – மாநாடு சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் தலைமைக் கழகக் குழுவினர் விடைபெற்றனர். மூன்று நாட்கள் நடைபெற்ற கலந்தாய்வில் தலைமைக் குழு உறுப்பினருடன் திருப்பூர் வடக்கு மாவட்ட அமைப்பாளர் அய்யப்பன் அவர்களும் உடன் இருந்தார்.
பெரியார் முழக்கம் இதழ் 23072026

இந்து இந்தியாவின் தேசியக் கடவுளாக பகவான் பாலராமனை முன்னிறுத்தியது ஒன்றிய பாஜக ஆட்சி. அந்தத் தேசியக் கடவுளுக்கே நாமம் போட்டு இருக்கிறார்கள் ராமரின் பக்தர்கள். கோடிக்கணக்கான பக்தர்களின் காணிக்கைப் பணம் களவாடப்பட்டு இருக்கிறது; வெள்ளி நகைகள் காணாமல் போயிருக்கின்றன. ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை 70 முறை காணிக்கைப் பணத்தை களவாடியதை சிசிடிவி கேமராக்கள் படம் பிடித்துள்ளன. வேறு வழியின்றி உ.பி. ராமராஜ்யம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இப்போது உச்சநீதிமன்றமே தலையிட்டு இதுவரை வாய்ப்பூட்டு போட்டுக் கொண்டிருக்கும் ஒன்றிய ஆட்சிக்கும் மாநில ஆட்சிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்து இருக்கிறது.

பாபர் மசூதிக்குள் இந்து ராமன் கோயில் இருந்தது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்றாலும் கூட, நம்பிக்கையின் அடிப்படையில் கோயில் கட்ட அனுமதிப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு அளித்த தலைமை நீதிபதி தனது கனவில் ராமன் வந்து இந்தத் தீர்ப்பை வழங்கும்படி கூறினார் என்று கூறினார். இந்தக் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியவர் பிரதமர் `மோடி.’ கோயிலுக்கு கொடியேற்றம் செய்தவர் பிரதமர் `மோடி’ கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே நாடாளுமன்றத் தேர்தலுக்குள் கோயிலைத் திறந்து விட வேண்டும் என்று அவசரம் காட்டி கோயிலுக்குள் பாலராமனை நிறுவும் சடங்கை நடத்தியவர் `மோடி’ இந்த கோயிலுக்கான அறக்கட்டளையை நிறுவியவரும் `மோடி’தான்.

இந்த அறக்கட்டளைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து விதிவிலக்கு தந்த வரும் `மோடி’தான் ஆனால் இந்த ஊழல் திருட்டு குறித்து இதுவரை வாய் திறக்காதவரும் `மோடி’தான். இப்போது உச்ச நீதிமன்றமே தலையிட்டு ஒன்றிய ஆட்சியின் விளக்கத்தைக் கேட்டு இருக்கிறது. பகவான் ராமனே தன்னுடைய கனவில் வந்து கோயில் திறப்புக்கான தேதியை அறிவித்துவிட்டு போனார் என்று பேசினார் மோடி. தலைமை நீதிபதி கனவிலும் மோடியின் கனவிலும் வந்த ராமன் இப்போது மோடி கனவில் வந்து தனது காணிக்கைகள் கொள்ளையடிக்கப்படுவதை முறையிட்டதாக மோடி இதுவரை வாய் திறக்கவில்லை. பகவான் ராமனின் உண்மையான பக்தர்களே கோயில் நிர்வாகிகளாக ஊழியர்களாக சலித்து சலித்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இந்து பக்தர்களின் காணிக்கையை உண்மையான இந்து பக்தர்களே சூறையாடுகிறார்கள் என்றால், இது இந்து அவமதிப்பு பட்டியலில் சேராதா?
கோயிலைக் கட்டுவதே தனது `பிறவிப்பயன்’ என்று சபதம் ஏற்று செயல்பட்ட பிரதமர் மோடி வாய்மூடி கிடப்பது ஏன்?

இந்துக்களை புண்படுத்துவதாக வீதிகளில் இறங்கிப் போராடுவதையும், நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதையும் முழு நேர வேலையாக செய்து கொண்டிருந்த கடவுள்களின் `போர்க்கள நாயகர்கள் எங்கே போனார்கள்?
`கண்டா வரச் சொல்லுங்க!.’
பெரியார் முழக்கம் இதழ் 23072026

கருநாடக மாநில அரசைப் பின்பற்றி தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலை சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் நீதிபதி சந்துரு `டைம்ஸ் ஆப் இந்தியா’ ஜூலை 17, நாளேட்டில் எழுதிய கட்டுரை.

திருமணச் சட்டங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களை உருவாக்கிய தமிழ்நாடு, ஜாதி அடிப்படையிலான ஆணவக் குற்றங்களைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டுவருவதில் ஏன் இன்னும் தாமதிக்கிறது? கர்நாடகா ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளது. நாம் ஏன் இல்லை?

இந்தக் கொலைகளில் எந்தவிதமான “குடும்ப கௌரவமும்” இல்லை. இத்தகைய ஜாதி அடிப்படையிலான ஆணவக் குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு உடனடியாக ஒரு தனிச்சட்டத்தை இயற்ற வேண்டிய அவசியம் உள்ளது. சமூக நீதி மற்றும் முற்போக்கு சீர்திருத்தங்களில் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்டதாக பெருமை பேசும் தமிழ்நாட்டில், “ஆணவக் கொலைகளைத்” (Honour Killings) தடுக்க தனிச்சட்டம் தேவையா? என்ற விவாதம் இன்னும் தொடர்கிறது. இதேவேளை, கர்நாடகா 2025, மார்ச் மாதத்தில் இதற்கென ஒரு சட்டத்தை இயற்றி இந்தத் துறையில் முன்னோடியாகத் திகழ்கிறது.

“கர்நாடகா திருமணத் தேர்வு சுதந்திரம் மற்றும் ஆணவம், பாரம்பரியம் என்ற பெயரில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கும் மற்றும் தடைசெய்யும் சட்டம், 2025 (Karnataka Freedom of Choice in Marriage and Prevention and Prohibition of Crimes in the Name of Honour and Tradition Act, 2025) பொதுவாக “எவ நம்மவா” (Eva Nammava)” சட்டம் என அழைக்கப்படுகிறது. இந்தச் சட்டம் 16-ஆம் நூற்றாண்டு தத்துவஞானி பசவண்ணர் அவர்களின் வாக்கியத்தை மேற்கோள் காட்டுகிறது:

“அவர்கள் யார் என்று கேட்காதீர்கள்; அவர்கள் நம்மவர்களே.” என்பது பசவண்ணா கூற்று. இந்தச் சட்டத்தின் பிரிவு 4-ன் படி, திருமணம் செய்ய விரும்பும் இரு வயது வந்த சம்மதமுள்ள நபர்கள் மாவட்ட ஆட்சியர் அல்லது நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் பாதுகாப்பு கோரி அணுகலாம். அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் அல்லது சமூக அமைப்புகளின் அழுத்தத்தின் பேரில் அந்தத் தம்பதியினருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதபடி உள்ளூர் காவல்துறை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த அரசுகள் இதுபோன்ற தனிச்சட்டத்தை இயற்றுவதில் தயக்கம் காட்டி வந்துள்ளன. அண்மையில் சமூக நீதி அமைச்சர் வன்னி அரசு, நீதிபதி கே.என். பாஷா தலைமையிலான குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு, ஜாதி அடிப்படையிலான ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற முதலமைச்சரிடம் வலியுறுத்துவேன் என்று கூறினார். ஆனால் இந்தக் கருத்தை அவர் தனிப்பட்ட முறையில் வெளியிட்டதாகவும், தற்போது இத்தகைய சட்டத்தை இயற்றுவதில் அரசுக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜாதிப் பாகுபாட்டை ஒழிக்கப் பணிபுரியும் ஒரு தன்னார்வ அமைப்பு, 2016-இலேயே, கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஜாதி மறுத்து திருமணம் செய்ததற்காக 80-க்கும் மேற்பட்ட தம்பதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்தது. இந்தச் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எடப்பாடி கே. பழனிசாமி அரசிடம் தனிச்சட்டம் கொண்டுவர வலியுறுத்தியது. ஆனால் அப்போதைய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ஏற்கனவே உள்ள குற்றவியல் சட்டங்களே போதுமானவை என்று கூறி தனிச்சட்டத்தை எதிர்த்தார்.

லதா சிங் எதிர் உத்தரப் பிரதேச அரசு (2006) வழக்கில் உச்சநீதிமன்றம், ஜாதி மற்றும் மதம் கடந்து திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு எதிரான வன்முறையைக் கடுமையாகக் கண்டித்தது. ஜாதி அமைப்பு `நாட்டின் சாபம்’ என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், ஜாதி மறுப்பு திருமணங்கள் தேசிய நலனுக்குப் பயன்படுகின்றன என்றும், அவை ஜாதித் தடைகளை உடைக்க உதவுகின்றன என்றும் கூறியது. மேலும், ஒவ்வொரு வயது வந்த நபருக்கும் தன் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளும் அடிப்படை உரிமை இருப்பதாகவும், பெற்றோர் விரும்பவில்லை என்றால் உறவைத் துண்டிக்கலாம்; ஆனால் மிரட்டவோ, தொந்தரவு செய்யவோ அல்லது வன்முறையில் ஈடுபடவோ உரிமை இல்லை என்றும் தெளிவுபடுத்தியது. அதுமட்டுமல்லாமல், இத்தகைய தம்பதிகளுக்கு காவல்துறையும் நிர்வாகமும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், அவர்களை மிரட்டுபவர்கள் அல்லது தாக்குபவர்கள் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இருப்பினும், ஒன்றிய அரசு இதுகுறித்து மாநிலங்களுக்கு அறிவுரைகள் வழங்கியதைத் தவிர பெரிதாக எதையும் செய்யவில்லை. 2009-ஆம் ஆண்டு அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், ஆணவக் கொலைகள் தொடர்பான தனிப்பட்ட புள்ளிவிவரங்கள் தேசிய குற்றப் பதிவுத் துறையிடம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இத்தகைய குற்றங்கள் பெரும்பாலும் குடும்ப விவகாரங்களாக மறைக்கப்படுவதால் அவற்றை தனி வகையாகப் பதிவு செய்வது கடினம் என்றும் அவர் கூறினார். பின்னர் நீதிபதி பி.வி. ரெட்டி தலைமையிலான சட்ட ஆணையம் தனது 242-வது அறிக்கையில், ஆணவக் குற்றங்களைத் தடுக்க தனிச்சட்டம் தேவை என்று பரிந்துரைத்தது. திருமணங்களை எதிர்த்து சமூகக் கூட்டங்கள் நடத்துதல் அல்லது சமூகப் புறக்கணிப்பை திணித்தல் போன்றவை சட்டவிரோதக் கூட்டமாகக் கருதப்பட வேண்டும் என்றும், அவற்றுக்கு கட்டாய குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் “Prevention of Crimes in the Name of Honour and Tradition Bill, 2010” என்ற மசோதாவையும் மத்திய அரசு மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தியது.

2021-இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தனிச்சட்டம் கோரி அழுத்தம் கொடுத்தன. இதையடுத்து நீதிபதி கே.என். பாஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றது. பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், “காதலுக்கு சிவப்பு நாடா முறை இருக்காது” என்று அறிவித்து, திருமணப் பதிவு எளிதாக நடைபெறும் என உறுதியளித்தார். திருமணப் பதிவுக்கு பெற்றோரின் சம்மதம் அல்லது வருகை தேவை என்ற முந்தைய அரசின் சுற்றறிக்கையும் சட்டவிரோதமானது என ரத்து செய்யப்பட்டு, துணைப் பதிவாளர்கள் எந்தத் தடையும் இல்லாமல் திருமணங்களைப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டனர்.

ஆனால், முற்போக்கான அறிவிப்புகள் இருந்தபோதிலும், ஜாதி அடிப்படையிலான ஆணவக் குற்றங்களைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. நீதிபதி கே.என். பாஷா குழுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் நடுப்பகுதியில் முடிவடைய உள்ளது. அது நீட்டிக்கப்படுமா? என்பதும் தெளிவாக இல்லை. உண்மையில், இத்தகைய சட்டம் தேவையா? என்று தொடர்ந்து விவாதிப்பதை விட, இந்தப் பிரச்சினைக்கு உறுதியான சட்டரீதியான தீர்வை உருவாக்குவதே காலத்தின் தேவை.

எனவே, கர்நாடகாவின் `எவ நம்மவா’ சட்டத்தின் சிறந்த அம்சங்களை எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டிலும் அதேபோன்ற ஒரு சட்டத்தை இயற்றுவது பொருத்தமானதாக இருக்கும். சமூக நீதியின் நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டில், அந்தச் சட்டத்திற்கு `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருக்குறள் வரியைப் பெயராக வைப்பதைவிட பொருத்தமானது வேறு எதுவும் இருக்க முடியாது. இது நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒரு சட்டத் தேவையாகும்.
பெரியார் முழக்கம் இதழ் 23072026

முதலமைச்சர் விஜய் கரூர் பேச்சு ஒரு முதலமைச்சர் தகுதிக்குரிய பேச்சாக இல்லை.மாறாக ஏதோ படை எடுத்து வந்து தமிழ்நாட்டைப் பிடித்து மன்னர் ஆகிவிட்டது போன்ற மனநிலையில் பேசுகிறார். குறிப்பாக கரூர் சம்பவம் குறித்து அவர் உருவாக்கி உள்ள சதி திரைக்கதை வஞ்சகமானது.

ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டு இருந்தார் என்ற ஒரு வரலாற்று நிகழ்வு உண்டு. தீ பற்றியதற்கு காரணம் மன்னர்தான் என்ற குற்றச்சாட்டு வந்த போது அதை மறைக்க கிறிஸ்தவர்கள் மீது பழி போட்டு அவர்களைக் கைது செய்து பழிவாங்கி தன் குற்றத்தை மறைக்கப் பார்த்தார் என்ற வரலாறு தான் இப்போது நினைவுக்கு வருகிறது.

கரூர் கூட்டத்தில் போலீசார் திட்டமிட்டு தன்னை உள்ளே அனுப்பியதாக அவர் பேசுவதும் அந்தக் கூட்டத்திற்கு ஏன் தடை போடவில்லை என்று கேட்பதும் எதிர்மறையான நேர்மையற்ற பழிச்சொற்கள். இவர்களே கேட்டு அனுமதி வாங்கிய கூட்டத்திற்கு காவல்துறை தடை போட வேண்டும் என்று இதுவரை எந்த ஒரு தலைவரும் பேசியதாக வரலாறு இல்லை. அப்படி தடை போட்டு இருந்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை இதைவிட கூடுதலாக இருந்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு.

“நெரிசல் மிகுந்த மேடை போடப்பட்டிருந்த பகுதிக்கு செல்ல வேண்டாம்,அந்தப் பகுதிக்கு முன்பாகவே பேசி விடுங்கள்” என்று காவல்துறை எச்சரித்ததை ஆதவ் அர்ஜுனாவும் அவர்களது சகாக்களும் கேட்க மறுத்து, “ஏற்பாடு செய்த இடத்தில் தான் பேசுவோம்” என்று அடம்பிடித்து பேச வைத்தார்கள். கூட்டத்தில் நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்து கொண்டிருக்கும்போதே விஜய் பேசிக் கொண்டே இருந்தார். இது காவல்துறை சதியா அல்லது விஜய் தெரிந்தே நடத்திய சதியா என்று கேட்டால் விஜய் அதற்கு என்ன பதிலைக் கூறுவார்?

விஜய் கட்சிக்கு எதிராக திமுக எந்த ஒரு எதிர் நிலையும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.விஜய் கட்சி ஒரு வலிமையான எதிர்ப்பு சக்தி என்பதை திமுக கருதி பார்க்க வில்லை. அதன் காரணமாகவே தேர்தல் களத்தில் தவெக என்ற கட்சியையோ விஜய் பெயரையோ மு.க.ஸ்டாலின் எந்த ஒரு பிரச்சாரக் கூட்டத்திலும் உச்சரிக்கவே இல்லை. சொல்லப்போனால் விஜய் கட்சி கூடுதல் ஓட்டுகளை வாங்கினால் ஆட்சிக்கு எதிரான ஓட்டுகள் பிரிந்து அது திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்பதே திமுகவின் தேர்தல் வியூகமாக இருந்தது. இதனால் விஜய் கட்சிக்கு எந்த இடையூறும் அரசுத் தரப்பில் இருந்து செய்யப்படவில்லை என்பதே உண்மை. கரூர் சம்பவத்திற்குப் பிறகும் விஜய் மீது மு.க.ஸ்டாலின் நேரடி குற்றம் சாட்டவில்லை. புஸ்ஸி ஆனந்தையும் விஜயையும் கைது செய்வதற்கான நியாயமான காரணங்கள் இருந்தும் கைது செய்யவில்லை.

அதே கரூர் கூட்டத்தில் பேசிய விஜய் காவல்துறை சிறப்பான ஏற்பாடுகள் செய்ததைப் பாராட்டினார். இப்போது சதித்திட்டம் புரியாமல் பாராட்டியதாக நாடகமாடுகிறார். சதி நடந்தது என்பதற்கு என்ன ஆதாரங்களை ஒரு முதலமைச்சர் என்ற முறையில் அவர் திரட்டி வைத்திருக்கிறார்? அந்த ஆதாரங்களை ஏன் கரூர் கூட்டத்தில் பேசவில்லை?
உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அதற்குப் பின்னால் உண்மைகளை மறைக்க முடியும் என்ற கடந்த கால மன்னர் ஆட்சி திரைப்படக்கதைகளை இப்போது மக்கள் நம்ப மாட்டார்கள்.
விடுதலை இராசேந்திரன்,
11.07.26
பெரியார் முழக்கம் இதழ் 16072026

இடிப்போம்‌ ஜாதிச் சுவரை! உடைப்போம் இந்த பழைய பூட்டை! ஒரே குரலில் முழங்குவோம்! “நாமெல்லாம் ஒன்று”
இப்படி நாம் கூறினால் எதிர்ப்பு வருகிறது. நீ வேறு; நான் வேறு; எப்படி சமமாக முடியும்? இப்படித்தான் நமது சமூகம் கேட்கிறது. 3,000 ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத கணக்கு இது . இந்தத் தடை உடைய வேண்டாமா? இந்தக் கேள்வியுடன் தான் நாங்கள் உங்களிடம் வருகிறோம். கல்வியும் கால மாற்றமும் இளையோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ள வேலை வாய்ப்பு, சம வாய்ப்பு, சந்திப்பு காதலை நோக்கி நகர்த்துகிறது. ஆனால் ஜாதி அதற்குத் தடை போடுகிறது. வாழ வேண்டிய இளையோர் வாழ்க்கையையே தடுக்கிறது; இல்லையேல் ஆணவக் கொலை என்று வாழ்க்கையே முடிக்கிறது.
ஜாதி பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒவ்வொரு இந்து மீதும் பிரிக்க முடியாமல் ஒட்டப்படும் ஸ்டிக்கர்.
ஜாதி விலை கொடுத்து பத்திரம் எழுதி வாங்கிய சொத்தா?

பல்கலைக்கழகத்தில் படித்து வாங்கிய பட்டமா? இல்லை இல்லை; இது திணிக்கப்பட்ட அடையாளம். சொல்லப்போனால் விலையில்லாமல் கிடைக்கும் இலவசம். கேட்காமலே ஒட்டிக் கொள்ளும் ஜாதி எப்படி வந்தது தெரியுமா?
இதோ ஒரு சிறு விளக்கம்: பார்ப்பனர்கள் உருவாக்கிய மாபெரும் சதி! சமூகத்தை பிறப்பின் அடிப்படையில் கூறு போட விரும்பியவர்கள் ஒரு கதையை உருவாக்கினார்கள். கதையின் ஹீரோ பிரம்மா எனும் கடவுள்; அந்த கடவுள் தனது தலையில் இருந்து பிராமணர்களையும், அதற்குக் கீழே தோளிலிருந்து சத்திரியர்களையும், அதற்குக் கீழே தொடையிலிருந்து வைசியர்களையும், எல்லோருக்கும் கீழே காலில் இருந்து அடிமைக் கூட்டமாக சூத்திரர்களையும் படைத்ததாக ஒரு கதையை எழுதினார்கள். ‘ரிக்’ வேதத்தின் புருஷ சூக்தம் 16-வது பிரிவிலும், சுக்ல, யஜுர் வேதத்தில் 22- ஆவது பிரிவிலும், அதர்வண வேதத்தில் 16-வது பிரிவிலும் இருக்கிறது இந்த புருஷ சூக்தம் என்ற இழிவு. இந்த வேதத்திற்கு விளக்கம் கூற அரச கட்டளைகளைப் போல் வந்தது‌ மனு சாஸ்திரம் என்ற கொடூரமான சட்டம். ‘பிராமணன்’ எந்த குற்றம் செய்தாலும் தண்டிக்கப்படக் கூடாது; வணங்க வேண்டும்; கடவுளே அவனது வேத மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர் என்று கூறியது அந்த சாஸ்திரம். சூத்திரனுக்கு எந்த உரிமையும் இல்லை; அவன் அடிமை, பிராமணர்களின் உல்லாசக் காதலிகளான வைப்பாட்டிகளுக்குப் பிறந்தவர்கள் என்று சூத்திரர்களை அது இழிவு செய்தது.
ஆனால் இந்த வர்ணாசிரம பாகுபாடுகளையும் தாண்டி சமூகத்திலேயே உறவுகள் நிகழ்ந்தன; குழந்தைகளும் பிறந்தன; அந்த குழந்தைகளை மீண்டும் எந்த வர்ணத்திலும் சேர்க்க முடியாது என்பதால் ஜாதிகளை உருவாக்கினார்கள் பார்ப்பனர்கள்; அதற்குத் தொழிலையும் வரையறுத்தார்கள். பெரியார் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் போராட்டத்தால் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகள் வந்தன. ஜாதித் தொழில் கட்டமைப்பு கலகலக்கத் தொடங்கியது. ஆனால் ஜாதியின் கோரத்தாண்டவம் தொடர்கிறது.
ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனி ஜாதி அடையாளங்கள் இருக்கிறதா? இல்லை; ஆனால் செயற்கையாக இந்து தர்மம் பூணூலையும், விபூதி, நாமத்தையும் போட வைத்து இருக்கிறது.
உறுப்பு மாற்று மருத்துவம் வந்துவிட்டது; ஒரு ஜாதிக்காரரின் உறுப்பு வேறு ஒரு ஜாதிக்காரருக்கு பொருத்தி உயிர் காப்பாற்றப்படுகிறது. அந்த நேரத்தில் வேறு ஜாதிக்காரர் உறுப்பை எனது ஜாதிக்கு பொருத்த வேண்டாம் என்று கூறுவார்களா? நிச்சயம் கூற மாட்டார்கள்!‌
தனது ஜாதிக்குள் தான் திருமணம் செய்வேன் என்று அடம் பிடிக்கும் வணிகர்களும், தொழில் முனைவோரும், மருத்துவரும்,பொறியாளரும், தங்கள் ஜாதிக்காரர்களுக்கு மட்டுமே வணிகம் செய்வோம் என்று கூறுவார்களா?
மதத்தில் பார்ப்பனியம்
” நாம் அனைவரும் இந்துக்கள்; அதுவே நமக்கு அடையாளம்; அதுவே நமக்கான நாடு” என்ற மதவெறி இப்போது பரப்பப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறதா?
இந்து என்ற ஒரே அடையாளத்துடன் தான் நாம் வாழ்கிறோமா?
இந்து என்பதைவிட ஜாதி தான் இப்போது முதன்மையான அடையாளம்.இந்து ஒற்றுமை பேசுகிறவர்கள் ஜாதி வேண்டாம் என்று பேசுகிறார்களா?
வெவ்வேறு ஜாதி இந்துக்களுக்குள் நடக்கும் திருமணத்தை ஏன் இவர்கள் ஆதரிப்பதில்லை? அது இந்துக்களுக்கு இடையே நடக்கும் திருமணம் தானே!
இந்துக்களுக்குள்ளேயே நடக்கும் ஆணவப் படுகொலைகளை ஏன் கண்டிப்பதில்லை?
பெரும்பான்மையான இந்துக்கள் அசைவ உணவையே உண்கிறார்கள். ஆனால் இந்து மதம் இந்த உணவு முறையை புனிதமற்றது என்று ஏற்க மறுக்கிறது. உழைக்கும் இந்துக்களின் மாட்டுக்கறி உணவை தண்டிப்பதோடு அவர்களை கொலை செய்யவும் தயங்குவதில்லை!
பெரும்பான்மை இந்துக்கள் பேசும் தமிழ் மொழியை கடவுளின் மொழியாக ஏற்க ஏன் மறுக்க வேண்டும்?
சமஸ்கிருதம் தான் கடவுள் மொழி என்று ஏன் திணிக்க வேண்டும்?
அனைத்து இந்துக்களும் அர்ச்சகராக முடியாது; பிராமண இந்துக்கள் மட்டுமே கடவுளிடம் நெருங்க முடியும் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடுவது ஏன்?
இந்து மதச் சடங்குகளை செய்யும் அனைத்து உரிமைகளும் பார்ப்பன இந்துக்களுக்கு மட்டும்தானா? பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு ஏன் மறுக்க வேண்டும்?
குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற உயர் அதிகாரம் படைத்தவர்கள் கூட சட்டை போடாமல் பூணூல் மேனியுடன் காட்சி அளிக்கும் “பிராமண” இந்துக்களிடம் தான் ஆசி பெற வேண்டுமா?
இந்துக்களையும்- இந்து மதத்தையும்- மொழியில், உணவில்,வழிபாடுகளில், பண்பாடுகளில் பார்ப்பனியமே ஆட்டிப் படைக்கிறது! எத்தனை ஆண்டு காலம் பெரும்பான்மை இந்துக்கள் இதை அனுமதிக்கப் போகிறார்கள்? சுயமரியாதையுடன் போராட வேண்டாமா?
வாழ்வியலில் மூடநம்பிக்கை
சனாதனம் விதித்த தடைகளை எதிர்த்து தான் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கும், இந்துப் பெண்களுக்கும் கல்வி முன்னேற்றமே வந்தது. கிடைத்த கல்வி குடும்பத்தில் பெண்கள் உரிமையைக் கொண்டு வந்து விடவில்லை; மூடநம்பிக்கைகளையும் ஒழித்து விடவில்லை.
சாமியாரிடம் போய் பெண்கள் நகைகளைப் பறி கொடுப்பதும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதும் அன்றாட செய்திகளாகிவிட்டன. இதுவரை எந்த ஒரு சாமியாரும் அற்புதங்களை நிகழ்த்தவில்லை! இயற்பியல் விதிகளுக்கு மாறாக எந்த ஒரு அற்புதமும் நடக்காது என்பதுதான் அறிவியல். கடவுளே வந்தாலும் அவர் இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டு தான் வாழ வேண்டும். அனைத்து சாமியார்களுமே போலி சாமியார்கள் தான்; நல்ல சாமியார் என்று எவரும் இல்லை!
அறிவியலுக்கு எதிரானது வாஸ்து; வாஸ்து பார்த்து கட்டப்படும் வீட்டில் வாழும் குடும்பங்களில் பிரச்சனைகளே இல்லையா? பெரும் வெள்ளம் வரும் போதும் நிலநடுக்கம் வரும்போதும் வாஸ்து பார்த்து கட்டப்பட்ட வீடுகள் சிதைந்து விடாமல் தப்பி விடுகின்றனவா? இல்லையே!
விவாகரத்து வழக்குகளில் ஜோதிடப் பொருத்தம் பார்த்து நடத்தப்படும் திருமணங்கள் பெரும்பான்மையாக இருப்பது ஏன்?
இறந்து போன உறவினர்களின் ஆன்மா வானத்தில் உலவுகிறது என்ற மூடநம்பிக்கையில் பார்ப்பனர்களை அழைத்து திதி கொடுப்பது ஏன்? கிரகங்களுக்கு விண்வெளிப் பயணம் போகிற விஞ்ஞானிகள் யாராவது அங்கே ஆன்மாக்கள் உலவுகின்றன என்று இதுவரை கூறியதே இல்லையே! சொர்க்கம் நரகம் என்ற கிரகங்கள் இல்லையே; சமஸ்கிருத மந்திரத்தின் சக்தி பொருட்களை `மோட்சத்தில்’ கொண்டு சேர்க்கிறது என்று இந்த அறிவியல் யுகத்திலும் நம்ப முடியுமா?
– இப்படி எத்தனையோ மூடநம்பிக்கைகள் சமூகத்தை ஆட்டிப் படைக்கின்றன.
ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்வோம்!
சமுதாயத்தில் மக்களிடம் ஏற்படும் மாற்றங்கள் தான் முன்னேற்றத்திற்கான கதவுகளைத் திறந்து வைக்கும்.
ஆட்சிகள் மாறலாம்;சட்டங்கள் வரலாம்; ஆனால் சமுதாய மாற்றம் வரும் போது தான் சட்டங்களே வெற்றி பெறும்.‌ இந்த மாற்றத்துக்கான சிந்தனைகளைப் பரப்புவதே இந்தப் பயணத்தின் நோக்கம்!
தடைகளைத் தகர்ப்போம்! சமத்துவ வாழ்வியலை முன்னெடுப்போம்!
– திராவிடர் விடுதலைக் கழகம்
(பரப்புரைக்கான துண்டறிக்கை)
பெரியார் முழக்கம் இதழ் 16072026

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாத்தான்குடி கிராமத்தில் ஜாதி மாறி காதலித்த இளைஞர்களை ஜாதிவெறி உயிர்ப்பலி வாங்கியிருக்கிறது. பட்டியல் இனப் பிரிவைச் சேர்ந்த 19 வயது இளைஞரும் பிளஸ் டூ வகுப்பை முடித்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 17 வயது பெண்ணும் காதலித்துள்ளனர்.

பெண்ணின் பெற்றோர்கள் ஜாதி வெறியுடன் எதிர்ப்பு தெரிவித்து பட்டியல் இனப்பிரிவு இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பொறையார் காவல் நிலையத்தில் திங்கட்கிழமை இளைஞர் புகார் செய்திருக்கிறார்.செவ்வாய்க்கிழமை விடியற்காலை தங்களது மகளைக் காணவில்லை என்றும் பட்டியல் சமூகத்தின் இளைஞர் மீது சந்தேகம் இருப்பதாகவும் பெண்ணின் பெற்றோர்கள் புகார் செய்துள்ளனர். புகார் பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் காதலர் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பெண்ணின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜாதி மாறி திருமணம் செய்ய விரும்பினால் அவர்கள் உயிருடனே வாழ முடியாது என்ற கொடூரமான சமூக அமைப்பில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புரையோடி நிற்கும் இந்த ஜாதி அவலங்களைப் பேசுவதற்கு எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை. கட்சி மாறினால் பதவியும் பணமும் கிடைக்கும். ஜாதி மாறி காதலித்து வாழ விரும்பினால் மரணம் பரிசாக கிடைக்கும். இதுதான் இங்கே சனாதன தர்மம்!
பெரியார் முழக்கம் இதழ் 09072026

இதுகுறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :

சேலம், பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நிருவாகக்குழுவில் மாற்றங்கள் செய்ய அரசு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகிறோம். இவ்வேளையில் பெரியார் பல்கலைக்கழகச் சட்ட விதிகளின்படி பணிமூப்பில் முதல்நிலையிலுள்ள பேராசிரியர் ஒருவரைத் துணைவேந்தர் பொறுப்பில் நியமனம் செய்யலாம் என்ற விதிப்படி பணிமூப்பில் முதலாவதாகவுள்ள பட்டியலினப் பேராசிரியரைப் பொறுப்புத் துணைவேந்தராக நியமிக்க வேண்டுகிறோம். பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டுமே பட்டியலினப் பேராசிரியர் ஒருவர் துணைவேந்தராக இருந்துள்ளார். எனவே, இடைக்கால ஏற்பாடாக அரசு தற்போது துணைவேந்தர் பணிகளைக் கவனிக்க பட்டியலினப் பேராசிரியரைப் பொறுப்புத் துணைவேந்தராக நியமிக்க வேண்டும். அதுவே சமூகநீதியாகும்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்த ஒரே ஜாதியின் ஆதிக்கம் முடிந்து, துணைவேந்தர் நிருவாகக்குழு அமைக்கப்பட்டுக் கடந்த ஓராண்டாக நிருவாகக்குழு பல்வேறு பாராட்டத்தக்க சமூகநீதி சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்தது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை துறைத்தலைவர் மாற்றம், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு, முனைவர் பட்ட ஆய்வேடு சமர்ப்பிப்பதிலிருந்த இடர்ப்பாடுகள் களைதல், அனைவருக்கும் நிருவாகப் பொறுப்புகள் என நிருவாகக்குழுவின் பணிகள் சிறப்பாகவே இருந்தன. இந்நிலையில் தற்போதுள்ள நிருவாகக்குழுவை அரசு மாற்ற உள்ளதாக அறிகிறோம். அதில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பல்கலைக்கழகத்தில் ஆதிக்கம் செலுத்திய ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு சர்ச்சைகளுக்குப் பெயர்போன, ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட பேராசிரியர் ஒருவர் அப்பதவிக்கு வர தீவிரம் காட்டி வருவதாக அறிகிறோம். அப்படியான முயற்சிக்கு உயர்கல்வித்துறை துணைபோகக் கூடாது. மேலும், அந்தச் சர்ச்சைக்குரிய பேராசிரியர் இந்தப் பதவியைக் குறிவைத்து நிருவாகத்திற்கு எதிராகப் பல்வேறு செயல்பாடுகளை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. பதவியைக் குறிவைத்தே அவர் இப்படியான செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளாரோ என்ற சந்தேகம் வலுப்பெறுவதாகக் கூறப்படுகிறது. தற்போதுள்ள நிருவாகக்குழுவில் மாற்றம் செய்யும்போது இது போன்ற சர்ச்சைக்குரிய நபர்களுக்கு அரசு இடமளிக்கக்கூடாது.

மேலும், பல்கலைக்கழக விதிகளின்படி மூத்தப் பேராசிரியரைத் துணைவேந்தர் பொறுப்பாக நியமிக்க வேண்டும். அதற்கான நல்வாய்ப்பாகப் பல்கலைக்கழகத்தின் மூத்தப் பேராசிரியராகப் பட்டியலினப் பேராசிரியரே பணிமூப்பில் முதலிடத்தில் உள்ளார். அவர் நாடறிந்த அறிவியலாளராகவும், நிருவாகியாகவும் இருந்துள்ளார். எனவே, அரசு உடனடியாகப் பட்டியலினப் பேராசிரியரைப் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்பில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

– கொளத்தூர் மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.
05.07.26
பெரியார் முழக்கம் இதழ் 09072026

* ஜாதியில் திருமணம் * மதத்தில் பார்ப்பனியம்
* வாழ்வில் மூடநம்பிக்கை
தடை, அதை உடை……
* மாற்றத்தை நோக்கிய வாழ்வியல் பரப்புரை பயணம்
பெரியார் முழக்கம் இதழ் 02072026

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு கூட்டம் 28.06.26 ஞாயிறு பிற்பகல் 2.30 மணி அளவில் திருப்பூரில் கழகப் பொருளாளர் துரைசாமி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

தலைமைக் குழுக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார்.

தலைமைக் குழுக் கூட்டத்தில் கழகத்தின் அடுத்த கட்ட செயல் திட்டங்கள், பரப்புரை பயணம், கருத்தரங்குகள் நடத்துவது, குடும்ப விழாக்கள் நடத்துவது ஆகியவை குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.

நிறைவாக தலைமைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. “குரலற்ற மனிதர்களுக்கான குரல்”

சீர் மரபினர் (DNC/DNT) என்று பட்டியலிடப்பட்டுள்ள ஜாதிகளில் இன்று வரை அரசியல் அதிகாரமோ, அரசு பதவிகளையோ பெறும் வாய்ப்பே கிட்டாமல் அமிழ்த்தபட்டுக் கொண்டிருக்கும் சமூகத்து மக்களின் பாடுகளை பொதுச் சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து அவர்களுக்கான உரிமைகளுக்காய் குரல் கொடுக்கும் நோக்கத்துடன் “குரலற்ற மக்களின் குரலாக” ஒலிக்கும் வகையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கருத்தரங்குகளை நடத்தி அரசின் கவனத்திற்கும் பொதுச் சமூகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

2. பரப்புரை பயணத் திட்டம்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 14-ம் ஆண்டு பரப்புரை பயணத்தை தென் மாவட்டங்களில் முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் பரப்புரை பயணம் 2026 ஆகஸ்டு 6ம் தேதி திருச்சி, பேராவூரணி, நாகர்கோயில் ஆகிய 3 முனைகளில் இருந்து தொடங்கி கழகம் தொடங்கிய நாளான ஆகஸ்ட் 12-ஆம் தேதி காரைக்குடியில் பயண நிறைவு மாநாடு நடத்துவது முடிவு செய்யப்பட்டது.

“சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு” என்கின்ற தந்தை பெரியாரின் கருத்தின் அடிப்படையில் இந்த பரப்புரை பயணம் அமைய உள்ளது.

ஒரே ஜாதி திருமணங்கள், மதத்தில் சமஸ்கிருதம், பார்ப்பனர்கள் திணிக்கும் இழிவுகள், குடும்பத்தில் அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிலிருந்து இளம் தலைமுறையினர் விடுவித்துக் கொண்டு அறிவியல் சமத்துவ வாழ்வியலுக்கான மாற்றம் நோக்கி நகர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பரப்புரை இயக்கத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இப்பயணத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கழகத் தோழர்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள், துண்டறிக்கைகள், தெருமுனைக் கூட்டங்களாக இப்பரப்புரைப் பயணம் நடைபெறும்.

3. குடும்ப விழாக்கள்

தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று அந்தந்த மாவட்ட கழகங்களின் சார்பில் கழக தோழர்களின் குடும்பங்கள் ஒன்றிணைந்து பங்கேற்கும் விழாக்களை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இவ்விழாக்களில் கலை நிகழ்ச்சிகள் சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றின் மூலம் கழகக் குடும்பங்களை ஒருங்கிணைத்து உற்சாகப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் கழகப் பொருளாளர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், வெளியீட்டு செயலாளர் கோபி இராம.இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, சமூக ஊடக பொறுப்பாளர் பரிமளராசன், சென்னை உமாபதி, மேட்டூர் கோவிந்தராஜ், காலாண்டியூர் ஈஸ்வரன், பேராவூரணி திருவேங்கடம், திருச்சி மனோகரன், கோவை நிர்மல் குமார், சூலூர் பன்னீர்செல்வம், வேலூர் சிவா ஆகிய தலைமைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 02072026

ரசிகர்களை வெறியூட்டுவதற்கும் உசுப்பேற்றுவதற்கும் தயாரிக்கப்பட்ட பேச்சுகளை பேசி பழக்கப்பட்டவர் விஜய். இப்போது முதல்வர் பதவிக்கு வந்த பிறகும் அதைத் தவிர வேறு எந்த பேச்சையும் அவரால் பேச முடியவில்லை. எனவே தான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் அவையை விட்டு வெளியேற்றிவிட வேண்டும் என்பது அவரது முதல் பிரச்சினையாக இருந்தது. அதற்காகவே வசைச் சொற்களை வீசினார் ; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு தான் அவருக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைத்தது” அப்பாடா; இனி ஸ்கிரிப்ட்டை ரசிகர்களிடம் பேசுவது போல் பேசலாம் என்ற நிம்மதி பெருமூச்சு அவருக்கு வந்திருக்கிறது. எதிரே அமர்ந்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ரசிகர்கள் அல்ல! அவர்கள் முதல்வர் விஜயின் பேச்சுக்கு விசில் அடித்து கைதட்டி ஆரவாரம் செய்ய சட்டமன்றத்திற்கு வரவில்லை என்பதை அவருக்கு பேச்சு தயாரித்து கொடுத்தவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.

விஜய் வருகைக்கு முன் தங்கள் அலுவலகத்துக்கு சோபா வந்தது என்பதை சில தலைவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்; இதற்கு முதல்வர் விஜய்யிடம் இருந்து ஏன் திட்டவட்டமான மறுப்பு வரவில்லை? பூசி மெழுகி அதை கடந்து செல்வதற்கு இவர் ஏன் முயற்சிக்கிறார்? தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளில் “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடி தொடங்கும் மரபு தமிழ் நாட்டில் நீடிக்கிறது. “தமிழ்த்தாய் வாழ்த்து” தான் தமிழ்நாடு அரசின் பாடல் என்று திராவிட மாடல் ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின் அரசு ஆணையும் பிறப்பித்திருக்கிறார். அதேபோல் சட்டமன்ற நிகழ்வு தொடங்குவதற்கு முன்பும் “தமிழ்த் தாய் வாழ்த்து” தான் பாடப்பட்டு வந்தது இதில் “ஜன கன மன” தேசிய கீதத்தை ஏன் இணைக்க வேண்டும் ? “வந்தே மாதரம்” பாடலைப் போல் தமிழ் வாழ்த்துப் பாடலும் ஒரு விருப்ப தேர்வுதானே தவிர சட்டபூர்வ தமிழ்நாட்டுக்கான பாடல் அல்ல ; தேசிய கீதமே சட்டபூர்வமான பாடல் என்ற கருத்தியலை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம்.

மாநில உரிமையை அடகு வைத்து விட்ட இந்த செயலை மறைப்பதற்கு ஒரு ஆதாரத்தை தேடித் தேடி கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதாவது சட்டமன்றத்தில் கலைஞர் படத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்றபோது முதலில் தேசிய கீதமும் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப் பெற்றது என்று முதலமைச்சர் விஜய் கூறுகிறார். இந்த ஓட்டைவாதம் மக்களிடம் எடுபடாது என்பதை தெரிந்து கொண்ட அவரே இதற்கான பதிலையும் கூறிவிட்டார் குடியரசுத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சி என்பதால் தேசிய கீதம் பாடி இருக்கலாம் என்று அவரே அதற்கு விளக்கமும் கூறியிருக்கிறார். பிறகு இதில் குற்றம் சாட்டுவதற்கு என்ன இருக்கிறது?

சொல்லப்போனால் இந்திய அரசியல் சட்டத்தின் படி இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் மட்டுமே பாடப்பட வேண்டும் என்று இருந்த மரபை தமிழ்நாடு அப்படியே ஏற்காது ; தேசிய கீதத்தோடு தமிழ்த்தாய் வாழ்த்தையும் இணைத்து இங்கே பாட வேண்டும் என்று அதிலும் மாநில உரிமையை நிலைநாட்டி இருக்கிறார் அன்றைய முதல்வர் மு.க ஸ்டாலின். இதற்கு நேர் மாறாக தமிழ்நாடு சட்டமன்ற மரபுகளை மாற்றி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலோடு தேசிய கீதத்தையும் கொண்டு வந்து இணைத்து தமிழ்நாட்டின் தனித்துவமான அடையாளத்தை சிதைத்து இருக்கிறார் முதல்வர் விஜய்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரையில் எடுத்து வைத்த எந்த குற்றச்சாட்டுக்கும் முதல்வரிடம் இருந்து பதில் வரவில்லை.மாறாக வசை மொழிகளை முதல்வர் என்ற தகுதியிலிருந்து கீழே இறங்கி வீசி இருக்கிறார். எதிர்க்கட்சிகள் இல்லாத போது அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை பேசலாமா? என்று அவரே கேட்டுக் கொண்டு அதற்கு பேரவை தலைவர் அனுமதியையும் வாங்கிக்கொண்டு பிறகு தனது “ஜிக்கு புக்கு” வசனங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.பொதுவாக சட்டமன்ற உரைகளில் மேடைப் பேச்சு போல உரத்த குரலில் முதல்வர்கள் பேசுவதில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் காதில் விழ வேண்டும் என்பதற்காக உரத்த குரலில் பேசுகிறேன் என்றும் அதற்கு பேரவைத் தலைவர் அனுமதிக்க வேண்டும் என்றும் உலக சட்டமன்ற வரலாற்றில் எந்த முதலமைச்சரும் கேட்காத ஒரு அனுமதியை முதல்வர் விஜய் கேட்டு அதற்கு பேரவைத் தலைவர் அனுமதியும் வழங்கிய ஒரு அதிசய காட்சியும் சட்டமன்றத்தில் நிகழ்ந்திருக்கிறது.

இத்துடன் கூடுதலான ஒரு கோரிக்கையையும் முதலமைச்சர் வைத்திருக்கலாம்; உரத்த குரலில் பேசும்போது அவையில் ஒலிபெருக்கிகளை அணைத்து விட வேண்டும் என்றும் கேட்டு இருக்கலாம். அதேபோல் உரையின் இறுதியில் தான் ஒரு “ஆக்க்ஷன்” நடிப்பு செய்யப் போவதாகவும் அதற்கு பேரவைத் தலைவர் அனுமதிக்க வேண்டுமென்றும் கேட்டிருக்கிறார். உடனே பேரவைத் தலைவர் உங்கள் விருப்பப்படி எந்த “ஆக்க்ஷனையும்” செய்து கொள்ளுங்கள் என்றும் அனுமதி அளித்திருக்கிறார். முதல்வர் விஜய் நிகழ்த்திய அந்த ஆக்க்ஷன் என்ன தெரியுமா? கழுத்தை சீவுவது போல ஒரு ஆக்க்ஷன்! பின் வரிசையில் அமர்ந்திருந்த அவரது கட்சி உறுப்பினர்களும் இந்த அரியகாட்சியை கண்டு ரசிப்பதற்கு ஒரு டிஜிட்டல் திரையை ஏற்பாடு செய்திருக்கலாம். பேரவைத் தலைவர் இந்த ஆக்க்ஷனை சபை குறிப்பேட்டில் எப்படி பதிவு செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை! ஆனால் தமிழ்நாட்டு மக்கள் தொலைக்காட்சியில் இந்த ஆக்ஷனை நேரில் பார்த்திருக்கிறார்கள். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இப்படி ஒரு முதலமைச்சரா என்று தலைகுனிய வைத்து விட்டது முதல்வரின்
சவுண்ட் – ஆக்‌ஷன்-டயலாக்.

விடுதலை இராசேந்திரன்
முகநூல் பதிவு
23.06.2026

பெரியார் முழக்கம் இதழ் 25062026

பள்ளிகளில் ஜாதிக் கயிறு, மத அடையாளங்களை மாணவர்கள் அணிய அனுமதி இல்லை என்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பை பாராட்டி வரவேற்கிறோம்.

பள்ளிகளில் மாணவர்களிடையே ஜாதிக் கலவரங்கள் தாக்குதல்கள் நடந்ததை ஒட்டி திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் தலைமையில் அமைத்த குழு அளித்த முக்கிய பரிந்துரைகளில் இது ஒன்றாகும்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நீதிபதி சந்துரு பரிந்துரைகளை அரசு ஏற்று செயல்படுத்தும் என்று அறிவித்திருப்பதையும் பாராட்டி வரவேற்க வேண்டும். இந்த அறிவிப்பு வந்தவுடன் முதல் எதிர்ப்பு பாஜக தலைவர் நயினாரிடம் இருந்து வந்திருக்கிறது.”ஜாதி மத அடையாளங்கள் தமிழர் மரபு என்றும் பாரம்பரியம் என்றும் அதில் கை வைக்கஅனுமதிக்க மாட்டோம்” என்றும் மிரட்டுகிறார்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதே தமிழரின் அடையாளம், ஜாதியும் மதமும் அல்ல. ஆரிய பார்ப்பனியத்தின் சூழ்ச்சியால் திணிக்கப்பட்ட அடிமைச் சின்னங்களை தமிழர் மரபு என்று பாஜக கொண்டாடலாம் ஆனால் தமிழ் இன உணர்வாளர்கள் ஒருபோதும் அதை ஏற்க மாட்டார்கள். மாணவர்களிடம் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உருவாக்குவதே பள்ளிகளின் நோக்கமாக இருக்க வேண்டும். பூணூல், உச்சிக் குடுமி அடையாளங்களுடன் பிராமணர்களுக்கு மட்டுமே வேதங்களைக் கற்பிக்கும் குருகுலங்கள் மட்டுமே இந்த நாட்டில் இருந்தன.இதற்கு மாற்றாக அனைத்து சமூகப் பிரிவு மாணவர்களும் ஒன்றாக அமர்ந்து ஒரே பாட நூலை படிக்கும் பள்ளிக் கல்விமுறையை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் ஆட்சியில் மெக்காலே என்ற அதிகாரி தான். பார்ப்பனியத்தின் மத அடையாளங்களையும் பாகுபாடுகளையும் ஒழிக்க வந்த பள்ளிக்கல்வி முறையில் ஜாதி அடையாளத்தையும் மத அடையாளத்தையும் மீண்டும் திணிப்பது பள்ளிக்கல்வி நோக்கத்திற்கே எதிரானதாகும். மிரட்டலுக்கு பணிந்து விடாமல் பள்ளிக் கல்வி அமைச்சர் உறுதியோடு இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.” – “விடுதலை இராசேந்திரன்”,

(குறிப்பு: அமைச்சர் ராஜ்மோகன் அதற்குப் பிறகு விபூதி, குங்குமம் அணியலாம்; ஜாதிக்கயிறு மட்டுமே தடை செய்யப்படுகிறது என்று விளக்கமளித்துள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய் நெற்றியில் பொட்டு வைத்திருப்பதாலோ என்னவோ அமைச்சர் இப்படி ஒரு மறுஅறிவிப்பை வெளியிட்டிருப்பார் போல் தெரிகிறது. )
பெரியார் முழக்கம் இதழ் 18062026

தமிழ்நாட்டுக்கு உரிமையான உயர் சிறப்பு மருத்துவ மேல்படிப்புக்கான (super speciality) 152 இடங்களை ஒன்றிய ஆட்சியிடம் சரணடையச் செய்திருக்கிறது தவெக ஆட்சி; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த அதிர்ச்சியான தகவலை அம்பலப்படுத்தி இருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஜோசப் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் திமுக ஆட்சி சரியான வாதங்களை எடுத்து வைத்தது. இந்த இடங்கள் அகில இந்திய கோட்டாவுக்கு சென்று விடாமல் தடுத்து நிறுத்தியது.

இதை அகில இந்திய கோட்டாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு தனி நபர் தொடர்ந்த வழக்கில் நடந்த விவாதத்தில் த.வெ.க ஆட்சி சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சரண்டர் செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்; சரியான உறுதியான வாதங்களை எடுத்து வைக்கவில்லை. குறிப்பாக வழக்கு போட்டவர் சுட்டிக்காட்டிய என். எஸ் கார்த்திகேயன் எதிர் தமிழ்நாடு அரசு வழக்கு இந்த வழக்கோடு தொடர்பு இல்லாதது நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் இதை வலிமையாக மறுத்திருக்க வேண்டும் ஏன் மறுக்கவில்லை? அரசின் சார்பில் நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள் கொள்கைகளுக்கு எதிரானவர்களாக இருந்துவிடக் கூடாது; இது மிகவும் ஆபத்தானது!
மருத்துவமனையிலேயே பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் இவை. இந்தியாவிலேயே சிறப்புமிக்க உயர் மருத்துவர்கள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு! இதற்காகவே பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டை நோக்கி சிகிச்சைக்கு வருகிறார்கள். இதேபோல்தான் மோடி ஆட்சி மருத்துவ மேல் பட்டப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை மறுத்தபோது;தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் சட்டப் போராட்டம் நடத்தி தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; அனைத்து மாநில பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் அந்த இட ஒதுக்கீட்டு உரிமையை மீட்டுத் தந்தார் என்பது வரலாறு!

புதிய ஆட்சி இப்படி ஒரு சமூக அநீதிக்கு துணை போய் இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. மீண்டும் பறிகொடுத்த இடங்களை மீட்டுத் தருவதற்கான முயற்சிகளில் தமிழ்நாடு அரசு இறங்க வேண்டும். தமிழ்நாட்டின் தலைசிறந்த மருத்துவக் கட்டமைப்பை ஒருபோதும் சீர்குலைத்து விடக்கூடாது!

-விடுதலை இராசேந்திரன்.
பெரியார் முழக்கம் இதழ் 11062026

ரூ.12,698 கோடி வழங்கப்பட்டு வந்த நிலையில், ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.3,923 கோடி: தென் மாநிலங்களை ஓரம்கட்டும் ஒன்றிய அரசு. ஒட்டுமொத்த நிதியில், தமிழ்நாடு இதுவரை 10 சதவீத பங்கைப் பெற்று முன்னணியில் இருந்தது. ஆனால், புதிய கணக்கீட்டு முறையின்படி, தமிழ்நாட்டின் பங்கு 4.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் எதிர்கால நிதி உரிமை, ஒரேயடியாக பாதிக்கும் கீழ் சரிந்துள்ளதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன.

இதுமட்டுமின்றி, ஜிராம்ஜி திட்டத்தின் கீழ் ஆந்திராவுக்கு 8.8 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில் 4.20 சதவீதமும், கேரளாவுக்கு 3.94 சதவீதம் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2.38 சதவீதமும், தெலங்கானாவுக்கு 3.94 சதவீதம் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2.17 சதவீதமும் குறைப்பட்டுள்ளது. இதனால் தென் மாநிலங்கள் ஓரங்கட்டப்பட்டு இருப்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

ஆனால் பாஜ ஆளக்கூடிய உத்தரபிரதேசத்திற்கு ஒதுக்கப்படும் நிதி 9.67 சதவீதத்தில் இருந்து 17.62 சதவீதமும், பீகாருக்கான நிதி 6.10 சதவீதத்தில் இருந்து 9.95 சதவீதமும், மராட்டிய மாநிலத்திற்கு நிதி 3.99 சதவீதத்திலிருந்து 6.44 சதவீதமும், குஜராத்துக்கு அளிக்கப்படும் நிதி 1.49 சதவீதத்தில் இருந்து 3.76 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மாற்றியமைக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிலுவைத் தொகையான ரூ.4,034 கோடியை (கூலி மற்றும் பொருட்கள் பங்கு) ஒன்றிய அரசு நீண்ட நாட்களாக தமிழ்நாட்டிற்கு வழங்காமல் இழுத்தடித்தபோது திமுக சார்பில் மாநிலம் தழுவிய பிரமாண்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. கல்வி நிதியை சமக்ர சிக்‌ஷா அபியான் முடக்குவது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை தராமல் தாமதிப்பது மற்றும் வரிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்கு தகுந்த பங்களிக்காமல் புறக்கணிப்பது என பல்வேறு தளங்களில் ஒன்றிய அரசு காட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையைமு.க.ஸ்டாலின் மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

தமிழக முதல்வர் விஜய் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்துவாரா அல்லது போராட்டங்களை முன்னெடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் தமிழக அரசு அமைதியாக இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

12 வருடத்தில் ரூ.87 ஆயிரம் கோடி நிதி

கடந்த 2014 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் இந்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடமிருந்து ஒட்டுமொத்தமாக ரூ.87,639 கோடியை பெற்றுள்ளது.

நாட்டின் மொத்த நிதியில் 10 சதவீதம் பங்கினை தமிழ்நாடு மட்டுமே பெற்று வந்த நிலையில், தற்போதைய புதிய சட்ட மாற்றங்கள் இந்த நிதிப் பகிர்வை பாதியாகக் குறைத்துள்ளன. கடந்த காலங்களை பொறுத்தவரை 2023 -24 நிதியாண்டில் ரூ.12,698 கோடி, 2024-25 நிதியாண்டில் ரூ.10,156 கோடி, 2025-26 நிதியாண்டில் ரூ.5,878 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

– “விடுதலை இராசேந்திரன்,”
பெரியார் முழக்கம் இதழ் 11062026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சாமி கோவிலில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால் `உச்சிப்பிள்ளையார் கோயிலில் அல்ல, மலையின் உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவின் சர்வே கல் பகுதியில்தான் விளக்கு ஏற்ற வேண்டும், அந்த சர்வே கல்தான் தீபத்தூண்’ என இந்து அமைப்புகள் கலவரத்திற்கு வித்திட்டு வருகின்றன. முந்தைய திராவிட மாடல் அரசு இவ்விவகாரத்தில் தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிக்காட்டி, வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயிலில்தான் தீபம் ஏற்றப்படும் என்பதை உறுதி செய்தது. நீதிமன்றப் படியேறிப் பார்த்தும், சங்கிகளின் கலவர முயற்சி நடக்கவில்லை. மலையை முற்றுகையிட்டு கலவரம் செய்ய காவிகள் முயற்சித்த நொடியில் கூட, We are not allowing..we will face the consequences… என்று காவல்துறையை வைத்து தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது அன்றைய ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம்.

இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் ஆட்சி மாறிவிட்ட நிலையில், தற்போதைய புதிய அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியிருக்கிறது உயர்நீதிமன்றக் கிளை. தமிழக வெற்றிக்கழகத்தைப் பொறுத்தவரையில் கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை, இவ்விவகாரத்தில் துணிச்சலாக எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. மாறாக, இது தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை சிதைக்கும் செயல் என்று அறியாமல் பாஜகவும் திமுகவும் திட்டமிட்டு செய்யும் சண்டை என்பதாக கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்துவிட்ட பின்பு, இத்தகைய பதிலை ஒரு அரசாக சொல்ல முடியாது என்ற நிலையில் தெளிவான விளக்கத்தை மக்கள் எதிர்பார்த்தனர்.

தவம் – தமிழ் தாசன் ஆகியோர் இணைந்து திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ் என்ற ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளனர். திமுக ஆட்சிக்காலத்திலேயே வெளி வந்துவிட்ட இந்த ஆவணப்படம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்திலும் திரையிடப்பட்டது. தற்போது ஆட்சி மாறிவிட்ட சூழலில், புதுக்கோட்டையில் இந்த ஆவணப்படம் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது. மேலிட உத்தரவு என்று காவல்துறை கூறியிருக்கிறது. மேலிடம் என்றால் அது யார்? தமிழ்நாடு அரசா அல்லது ஒன்றிய அரசா என தெளிவுபடுத்தவில்லை. இந்தத் திரையிடலை எப்படித் தடுக்கலாம் என கழகப் பொதுச்செயலாளர் கேள்வி எழுப்பிய நிலையில், அவரது பதிவு சென்னை திவிக முகநூல் பக்கத்தில் முடக்கப்பட்டது.

அதுவும் அரசுத்தரப்பில் இருந்து முறையிடப்பட்டதால் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை உறுதியோடு செயல்படுத்திக் காட்டிய மதுரை காவல் ஆணையர் லோகநாதன், தேர்தலுக்குப் பிறகு 25 நாட்களுக்கு மேல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு, தற்போது தொழில்நுட்பப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகைய போக்குகளால் தமிழ்நாடு அரசு எந்த நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்ற குழப்பம் நிலவியது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், மின்சாரத்துறை அமைச்சருமான சி.டி.ஆர். நிர்மல் குமார், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அரசின் நடைமுறையே தொடரும் என விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தெளிவாக கூறியிருக்கிறோம் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள், இரண்டு வருடத்திற்கு முன்பாக எந்தச் சூழல் இருந்ததோ, அதையேதான் தொடர வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள். மக்கள் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். இதுதான் அரசின் கொள்கையும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. எந்த மதவாத சக்திகளும் உள்ளே வந்து அரசியல் செய்ய 100% அனுமதிக்க மாட்டோம்” என தெளிவுபடுத்தியுள்ளார். இவர் முன்பு பாஜகவில் இருந்தபோது மிக மோசமான மதவாத கருத்துக்களை தனது முகநூல் பக்கத்தில் வெளிப்படுத்தியவர். ஆனால் இன்று தனது போக்கில் இருந்து மாறுபட்டு, தவெகவின் நிலைப்பாடாக கூறியிருக்கும் கருத்துக்கள் வரவேற்கத்தக்கவையாகவே உள்ளன. அதேசமயம் பத்திரிகையாளர்களிடம் அளித்த இந்த உறுதியை, ஜூன் 22 -ம் தேதிக்குள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையிலும் தெளிவுபடுத்த வேண்டும். முந்தைய திமுக ஆட்சியைப்போல எவ்வித சமரசமும் இல்லாமல் இவ்விவகாரத்தில் தவெக அரசும் உறுதிகாட்ட வேண்டும். ஒவ்வொரு விவகாரத்திலும் நெருக்கடிகள் முற்றிய பிறகு தனது கருத்தை வெளிப்படுத்துகிற போக்கில் இருந்து வெளி வந்து, எந்தவொரு சிக்கலிலும் தனது கொள்கைப்பார்வையை தெளிவோடு தயக்கமின்றி வெளிப்படுத்த வேண்டும்.
பெரியார் முழக்கம் இதழ் 11062026

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் கெம்பனூர் கிராமத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த பேருந்து தீண்டாமையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது திராவிடர் விடுதலைக் கழகம். பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாட்டமாக நடத்தாமல் கிராமங்களில் நிலவும் தீண்டாமை அவலங்களின் பட்டியலை தயாரிக்கும் செயல்திட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் இறங்கியது. அப்போதுதான் இந்த பேருந்துத் தீண்டாமை கவனத்திற்கு வந்தது.

பேருந்து நிற்கும் இறுதி முனையமாக இந்த ஊர் இருந்த காரணத்தினால் பட்டியல் இனப் பிரிவினர் பேருந்துகளில் உட்கார்ந்து விடுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கட்சிகளைக் கடந்து ஆதிக்க ஜாதியினர் கைகோர்த்துக் கொண்டு பேருந்து ஊருக்கு வராமல் தடுப்பதில் ஜாதி வெறியுடன் முரட்டுப் பிடிவாதம் காட்டி வந்தனர். திராவிடர் விடுதலைக் கழகம் பலமுறை போராட்டங்கள் நடத்தியும் கவனத்தில் கொண்டு வந்தும் போக்குவரத்துத் துறை அலட்சியம் செய்தது.

இந்தக் கோரிக்கைக்காக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான கழகத் தோழர்கள் திரண்டு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தியும் நிர்வாகம் ஜாதி வெறியர்களுக்கு பணிந்து நின்றது. தற்போது சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வன்னி அரசு அவர்களின் கவனத்திற்கு இந்த தீண்டாமை பிரச்சனை குறித்து தோழர்கள் கொண்டு சென்றனர். மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அமைச்சர் அவர்கள் இந்தப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர அழுத்தம் தந்த பிறகும் நிர்வாகம் சில நாட்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து மீண்டும் கழகத் தோழர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்த பிறகு பேருந்து தீண்டாமை முடிவுக்கு வந்திருக்கிறது. கழக கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார் இந்த ஒற்றை கோரிக்கைக்காகவே தொடர்ந்து பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்தார். இப்பிரச்சினையில் கவலையோடு தலையிட்டு செயல்பட்ட அமைச்சர் வன்னிஅரசு அவர்களுக்கு கழகத்தின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கலைஞர் ஆட்சிக் காலத்தில் பட்டியல் இனத்தின் தலைவர் போராளி சுந்தரலிங்கம் பெயரை தென் மாவட்டங்களில் போக்குவரத்துக் கழகத்திற்கு சூட்டிய போது அந்தப் பெயர் சூட்டிய பேருந்துகளை தங்கள் ஊருக்கு வரக்கூடாது என்று ஜாதி வெறியர்கள் தடுத்து நிறுத்தி பெரும் கலவரத்தில் இறங்கினர். அப்போது அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கலைஞர் கூட்டி அனைத்து மாவட்டப் பேருந்துகளுக்கும் சூட்டப்பட்ட அனைத்துத் தலைவர்களின் பெயர்களையும் நீக்கும் முடிவை எடுத்ததோடு பெரியார் சமத்துவபுரம் திட்டத்தை அறிவித்தார். இது ஊர் சேரி பாகுபாட்டை ஒழிக்கும் ஒரு முன்னோடித் திட்டம். இந்தியாவில் இதுபோன்று ஒரு திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

பெரியார் திராவிடர் கழகமாக “தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் உடைப்பு, திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய அகமண முறை எதிர்ப்பு, ஜாதி வாழ்வியல் எதிர்ப்பு” என்று தமிழ்நாடு முழுதும் பரப்புரை இயக்கங்களை, போராட்டங்களை கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டு நடத்தியது வரலாறு. திராவிடர் விடுதலைக்கழகம் “சுயஜாதிப்பற்றோடு ஜாதி எதிர்ப்பு பேசுவது ஜாதி எதிர்ப்பல்ல!” என்ற கருத்தில் உறுதியோடு நிற்கிறது. திராவிடர் விடுதலைக் கழகம் இப்போது இந்தப் பேருந்து தீண்டாமையை முடிவிற்கு கொண்டு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த லட்சிய பயணத்தை நோக்கி இறுதி வரை மேலும் வேகத்தோடு களத்தில் கழகம் போராடும்.
அரசியல் அதிகாரம் மட்டுமே சமூக மாற்றத்தை கொண்டு வராது என்ற பெரியார் கொள்கை வெளிச்சம் பெரியார் இயக்கங்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. பெரியார் இயக்கமான சமுதாய இயக்கம் தொடர்ந்து நடத்திய போராட்டங்கள் அழுத்தத்தின் காரணமாகவே இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. உயர் ஜாதிப்பற்றுடன் வெளியிடும் அவதூறு அறிக்கைகளைப் புறந்தள்ளுவோம்.
விடுதலை இராசேந்திரன்,
பொதுச்செயலாளர்
தன் கவனத்துக்கு வந்தவுடன் அங்கு பேருந்து செல்ல உத்தரவிட்டு – அடுத்த சில நாட்களிலேயே 06.06.26 அன்று மதியம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்களின் உத்தரவுப்படி பேருந்து சென்றது. அதை வெற்றிகரமாக செயல்படுத்திய மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்களின் பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும். கத்தியின்றி – இரத்தமின்றி பெரியாரின் வழி நின்று போராடிய திராவிடர் விடுதலைக் கழகத்திற்கு கிடைத்தது வெற்றி; இக்கொடுமையை முடிவுக்கு கொண்டு வருவதில் உறுதியாக இருந்த “திராவிடர் விடுதலைக் கழகம்” இதற்கான தீர்வை நோக்கி பல முனைகளில் ஓடியது. கழகத்தின் தொடர் போராட்டத்திற்கான பலன் 06.06.2026 இன்று கிடைத்திருக்கிறது. “பலன்” என்பதையும் விட கெம்பனூர் அண்ணா நகர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைத்த “விடுதலை” என்றே சொல்லலாம். இதன் மூலம் கெம்பனூர் ஆதிக்க ஜாதிவெறி அரசியல் சக்திகளுக்கு சவுக்கடி கிடைத்திருக்கிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஜாதி ஒழிப்பு பணியில் இது ஒரு மைல்கல்.

பேருந்து அண்ணாநகர் சென்று வந்ததை ஒட்டி கழகத் தோழர்கள் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கும், எண்-21, பேருந்தில் பயணித்தவர்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் பேருந்தில் ஜாதி எதிர்ப்பு பரப்புரையை, மேற்கொண்டனர். தோழர்கள் சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார் வெங்கட், சிவராசு, கிருஷ்ணன், சதீஷ், சத்தியமூர்த்தி தரணி, நவீன் கதிரவன், ஸ்டாலின்ராஜா, சௌந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 11062026

29.05.2026 அன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் கிராமத்தில் பட்டியல் இனத்தவர் இல்ல திருமணத்திற்கு பிளக்ஸ் பேனர் வைத்த விவகாரத்தில் ஏற்பட்ட சிறுவாக்குவாதம் தீவிரமடைந்து வன்முறை தாக்குதலாகி 8 பேருக்கு அரிவாள் வெட்டு என இன்று தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பிற பகுதியிலும் பேசு பொருளாகியுள்ளது. கண்ணில் பட்டோரை எல்லாம் வெட்டிப்போடும் அளவிற்கு அங்கு என்ன நடந்தது என விசாரிக்கும் போது பிளக்ஸ் பேனர் கதையினை சொல்கிறார்கள். பட்டியலின இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் 6-பேர் கடும் காயங்களோடு நெல்லை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூர்மையான ஆயுதங்களோடு 10-க்கும் மேற்பட்ட நபர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஒரு இளைஞரது கைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது. கால், கை என காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடந்தேறியுள்ளது. இதுவரை 8 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில் நெட்டூர் பகுதியில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்க நிரந்தர தீர்வை ஆலோசித்து தமிழ்நாடு அரசு நடைமுறைபடுத்த வேண்டும்.

நெட்டூர் சுற்றுவட்டாரங்களில் கல்வி இடை நிற்றல் அதிகம் என்பதாலும் போதைக்கு அடிமையாவதும் தான் முக்கியகாரணம் என்பதை அறியமுடிகிறது. இதில் கவனம் செலுத்தினால் மட்டுமே தொடர் கலவரங்கள் போன்ற வன்முறைகள் நடைபெறாமலிருக்கும். ஜாதிக்கு எதிரான பரப்புரையை அரசு செய்திட வேண்டும். ஜாதி கெளரவம் என பேசும் இளைஞர்களிடம் ஜாதி இழிவு என்பதை புரிய வைக்க வேண்டும். உழைக்கும் மக்கள் ஒருவருக்கொருவர் வெட்டிக் கொல்வதை நாகரீக சமூகமாக நாம் பார்க்க முடியவில்லை.

நெட்டூர் பகுதிகளில் உயர் கல்வியோ, பாலிடெக்னிக், அய்.டி.அய். போன்ற எந்த கல்வி நிறுவனமும் இல்லை. அதனை அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நெட்டூரில் காவல் நிலையம் அமைத்திட வேண்டும்; காவல்துறை தொடர் கண்காணிப்பில் இப்பகுதி இருக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவாகள் மீது விரைவான விசாரணை, விரைவான தண்டனை என்பதை உறுதி செய்ய வேண்டும். இளம் சிறார்களும் இந்த ஜாதிவெறியாட்டத்தில் பங்குபெற்றிருப்பதை அரசு கூர்ந்து கவனிக்க வேண்டும். தற்போதைய சம்பவத்திற்கு தக்க நடவடிக்கையும் நிரந்தர தீர்விற்கு ஒரு குழு அமைத்து விசாரித்து அதன் பரிந்துரையை நடைமுறைபடுத்துவதன் மூலமே இந்த ஜாதிய கலவரங்களை தடுக்க முடியும். வழக்கப்போல் கடந்த கால ஆட்சியாளர்கள் மீது குற்றம் சுமத்தாமல் தமிழ்நாடு அரசு மௌனம் கலைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியார் முழக்கம் இதழ் 04062026

அமர்நாத் இராதகிருஷ்ணன் தந்த கீழடி அகழாய்வு ஆய்வு அறிக்கையை முடக்கி வைக்காமல் ஒன்றிய அரசு உடனே வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் உரிமை பேரவை ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பழ.நெடுமாறன், முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், ஓவியா உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டோர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். அறிக்கையின் விவரம்.

2014 – 2016 காலகட்டத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ( Archeological Survey of India – ASI ) சார்பாகக் கீழடி அகழாய்வு, தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களால் மேற்கொள்ளப் பட்டது. கீழடியில் கிடைக்கப் பெற்ற பொருட்கள் மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்திற்கு 2023 ஜனவரி மாதத்தில் முறைப்படி சமர்ப்பித்துள்ளார். அறிவியல் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் கீழடியின் காலம் கி.மு.800 – 500 வரை என்பதாக அவர் வரையறுத்துள்ளார்.

ஆனால், போதிய உண்மையான காரணங்களோ, மதிப்புயர் நியாயங்களோ இன்றி அமர்நாத் அவர்கள் சமர்ப்பித்த ஆய்வறிக்கையினை மறுத்து, அவரின் ஆய்வறிக்கையை மேம்படுத்தி அனுப்புமாறு இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அவருக்கே திருப்பி அனுப்பியது. இந்த அறிக்கையை அனுப்பிய இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் உறுப்பினர் குழுவில் உள்ள எவரும் கீழடிக்கு வந்ததே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தனக்கு அனுப்பிய அறிக்கை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்ப அடிப்படையில் உருவாக்கப் பட்டதாக அமர்நாத் அவர்கள் தெளிவு படுத்துகிறார். பல்வேறு தரவுகளின் அடிப்படையில் கீழடியின் தொன்மையைக் கணித்த அமர்நாத் அவர்களின் காலத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ஏற்கத் தயாராக இல்லை. அதை மாற்ற வேண்டும் என அது வலியுறுத்துகிறது. இதுதான் இச்சிக்கலின் சாரம்.

ஆனால், எவ்விதப் புறச் செல்வாக்கிற்கும் உள்ளாகாமல், உண்மையான மற்றும் சரியான அறிக்கையைக் கடமை உணர்வோடும் மனச்சாட்சியோடும் சமர்ப்பித்ததாகக் கூறி, தனது ஆய்வறிக்கையை மாற்றி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என அமர்நாத் அவர்கள் திட்டவட்டமாக எழுத்து வடிவில் தெரிவித்து விட்டார். ஆனால் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அறிக்கையைத் திருத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருவதை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துறைவாரியான கடிதப் போக்குவரத்தோடு இந்த முக்கியமான செய்தி முடங்கி விடுவது ஏற்புடையதல்ல! அமர்நாத் அவர்கள் தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து மூன்று ஆண்டுகளாகியும் கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாமல் இருப்பது பெரும் ஐயத்தை உண்டாக்குகிறது. இதனால் உண்மை நிலை என்ன என்பதை அறிய முடியாமலும் இருக்கிறது. எனவே இத்தகைய குழப்பத்தைப் போக்கும் வகையில், அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் கீழடி ஆய்வறிக்கையின் மூலப்பிரதியை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் உடனடியாகப் பொதுவெளியில் வெளியிட்டு, அனைவரின் ஐயத்தையும் போக்க வேண்டும்.

மேலும், அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் நிலைப்பாட்டை ஆதரித்தும், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியல் அறம், விதிகள், விழுமியங்களுக்கு எதிராகத் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை ஏற்க மனமின்றிச் செயல்படும் போக்கினைக் கண்டித்தும் முந்தைய மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்திருந்தது. தமிழகத்தின் தொன்மையை அறிவியல் வழியில் நிறுவும் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட இன்றைய மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் அரசும் உரிய அனைத்து வழிகளிலும் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

கூட்டறிக்கை ஒருங்கிணைப்பு
கண. குறிஞ்சி (தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை)
பெரியார் முழக்கம் இதழ் 04062026

மத நல்லிணக்கத்தை பேசும் “திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்” ஆவண படத்தை புதுக்கோட்டையில் திரையிட காவல்துறை மறுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வீதி கலை இலக்கிய களம் என்ற அமைப்பு இந்த படத்தை திரையிடும் முயற்சிகளில் ஈடுபட்டது. திராவிட மாடல் ஆட்சியில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தமிழ்நாடு முழுதும் எந்த தடையுமின்றி இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டு வந்தது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்திலும் திரையிடப்பட்டது.

`திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்!’ என்ற வெறிக்கூச்சலோடு மதவாத சக்திகள் சட்டங்களை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்டதையும்; நீதிமன்ற தீரப்பின் முரண்பாடுகளையும் இந்த ஆவணப்படம் அம்பலப்படுத்துகிறது.தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை உருவாக்கும் இந்த முயற்சியை திராவிட மாடல் ஆட்சி உறுதியாக முறியடித்தது. காவல்துறை அனுமதி மறுப்பதற்கு மேலிட உத்தரவு என்ற ஒரு காரணத்தை கூறுகிறது. எந்த மேல் இடத்திலிருந்து உத்தரவு வந்தது? பெரியார் அம்பேத்கரை தங்களின் கொள்கைத் தலைவராக அறிவித்துக் கொள்ளும் த.வெ.க ஆட்சி அவர்கள் வலியுறுத்திய கொள்கைக்கு எதிராக செயல்படுவதை வன்மையாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டிக்கிறோம்.

கழகப் பொதுச்செயலாளரின் அறிக்கை `திவிக தென்சென்னை’ முகநூல் பக்கத்தில் செய்தி கார்டு வடிவில் பகிரப்பட்டிருந்த நிலையில், அதனை இந்தியாவில் யாரும் பார்க்க முடியாத வகையில் முடக்கியுள்ளது முகநூல் நிர்வாகம். முடக்கப்பட்டதற்கான காரணத்தில், ‘இந்தப் பதிவைத் தடுக்கச் சொல்லி வந்த ஒரு சட்டப்பூர்வக் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டு முடக்கியுள்ளோம்’ என பதிலளித்துள்ளது முகநூல் நிர்வாகம். தடை செய்யச்சொல்லி கோரிக்கை வைத்தது தமிழ்நாடு அரசா? அல்லது ஒன்றிய அரசா? என்பது இன்னும் தெரியவில்லை. எனினும், கருத்துரிமைக்கு எதிரான மிகமோசமான இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்செயலுக்கு தமிழ்நாடு டிஜிட்டல் ஊடலவியலாளர்கள் சங்கமும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
பெரியார் முழக்கம் இதழ் 04062026

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் இரங்கல் அறிக்கை:

கலைவாணன் (67) இறந்துவிட்டார் என்ற செய்தியை உள்ளம் ஏற்கவே மறுக்கிறது; அவருடன் பழகிய எவரும் அவருடைய நினைவுகளில் இருந்து மீளவே முடியாது. தன்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் எப்போதும் கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கக்கூடிய உயர்ந்த பண்பாளர்.

அவரது தந்தை முத்துக்கூத்தன் மிகச்சிறந்த திராவிட இயக்கத்தின் கலைப் போராளி; வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம் வழியாக பகுத்தறிவு சிந்தனைகளையும் திராவிட இயக்க கொள்கைகளையும் பரப்பியவர். தனது மகனை மிகச்சிறந்த கொள்கை வாரிசாக வளர்த்து எடுத்தார். மகனுக்கு என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக அவர் சூட்டிய பெயர்தான் கலைவாணன். தந்தையிடமிருந்து பெற்ற உணர்வுகளோடு தனது கலை ஆர்வத்தை மிகச் சிறப்பாக வளர்த்துக் கொண்டார் கலைவாணன்.

தமிழ்நாட்டில் அபூர்வமாக உள்ள பொம்மலாட்டக் கலைஞர்களில் ஒருவர் கலைவாணன்.புராணங்களுக்கும் மடமை பிரச்சாரங்களுக்கும் பயன்படுத்தப்பட்ட பொம்மலாட்ட கலை வடிவத்தை சமூக மாற்றத்திற்கு பயன்படுத்திய பெருமை முத்துக்கூத்தன் அவர்களுக்கும் கலைவாணன் அவர்களுக்கும் உண்டு. பன்முக கலைத்திறன் அவரோடு இணைந்து இருந்தது பொம்மலாட்டம் மட்டுமல்ல; நாடகம், மேடை அலங்காரம், குழந்தைகளுக்கான பயிற்சி அளித்தல், சுற்றுச்சூழல் கருத்துக்களை பரப்புதல், மனித உரிமைகளுக்கான கருத்து பரப்புதல் என்று பன்முக ஆற்றல் கொண்டவர்.

பெரியார் கொள்கை உணர்வுடனே தனது குடும்பத்தையும் வளர்த்தார்; இரண்டு மகன்களுக்கும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தார். நான் திராவிடர் கழகத்தில் இருந்த போது வீதிநாடகங்கள் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு அவரிடம் கூறியபோது போது அவரே முன்வந்து கழக இளைஞர்களுக்கு நாடகப் பயிற்சிகளை வழங்கினார். அப்போது கவிஞர் காளமேகம் உருவாக்கிய நாடகக் குழுவில் நானும் தோழர்களும் பங்கேற்று நடித்தோம். கலைவாணனும் எங்களோடு இணைந்தார்.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டங்களில்; தூக்கு தண்டனை எதிர்ப்பு போராட்டங்களிலும் அவர் பங்கு மிகப்பெரிது! பெரியார் திராவிடர் கழகம் தொடங்கிய காலத்தில் திண்டுக்கல் அருகே ஒரு மலைப்பகுதியில் தோழர்களுக்கு 10 நாள் நாடகப் பயிற்சி அளித்தார். பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் மேடைகளில் பகுத்தறிவு கலை நிகழ்ச்சிகளை நடத்தியவர். குழந்தைகளிடம் பகுத்தறிவு கருத்துக்களை கொண்டு சேர்க்கும் நூல்களை குழந்தைகள் விரும்பி படிக்கும் வடிவத்தில் எழுதி உருவாக்கி வெளியிட்டவர். அவரது கற்பனைத் திறனும் அதை வடிவமைக்கும் ஆற்றலும் வியக்கத்தக்கது.

மாணவர் நகலக உரிமையாளர் எங்கள் அன்புத் தோழர் சவுரிராஜன் தமிழர்களின் தாள இசைப் பண்பாட்டை மீட்டெடுக்கும் நோக்கத்தோடு பெரும் பொருட்செலவில் நடத்திய “மகுடம்” நிகழ்ச்சியில் கலைவாணனின் பங்களிப்பு அளப்பரியது. சேலத்தில் ஏப்ரல்-2023 ஆம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநில மாநாட்டில் பேரறிஞர் அண்ணா எழுதிய “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்” பொம்மலாட்ட நிகழ்ச்சியை நிகழ்த்தினார்.

பயணமும் சுற்றுலாவும் போகும் போதெல்லாம் கலைவாணன் கட்டாயம் இருக்க வேண்டும் என்று தோழர்களால் விரும்பப்பட்டவர். அவரது கலகலப்பு சிரிப்பு, உரையாடல்கள் எப்போதும் கொள்கை சார்ந்தவை. தனது விரல்களாலும் குரல்களாலும் பொம்மைகளை பகுத்தறிவு பேச வைத்தவர். அவரது இருப்பு இன்னும் நீண்ட காலம் இருந்திருக்க வேண்டும். நட்பு சக்திகளை மகிழ்ச்சியாகவே வைத்திருந்தவர் இப்போது கண்ணீர் கலங்க வைத்து விட்டார்.கலைவாணனுக்கு புகழ் வணக்கம்!

பொம்மலாட்டக் கலைஞர், பெரியார் தொண்டர், திராவிடர் கழகப் பொறுப்பாளர் கலைமாமணி மு. கலைவாணன் அவர்கள் மே-22, 2026 இரவு 11 மணிக்கு முடிவெய்தினார். ‌அவருக்கு கழகத்தின் சார்பில், 23/5/26 மதியம் 4 மணிக்கு, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பெரியார் இயக்க தோழமைகளான தோழர் சைதை மா.அன்பரசன் (திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்), பேராசிரியர் சரஸ்வதி (பியூசிஎல்), அண்ணன் பேரறிவாளன், தோழர் சவுரிராஜன் (மாணவர் நகலகம்), ஊடகவியலாளர் குணசேகரன் (சன் நியூஸ்) ஆகியோர் புகழ் வணக்கம் செலுத்தினர்.

கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் ரவிபாரதி, சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், தோழர்கள் குகன், கார்த்திஸ்வரன், ஏழுமலை, அசோக், சு. கோபிநாத் (பகுதித் தலைவர்), த.நா. சூர்யா (பகுதி அமைப்பாளர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 29052026

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் பட்டியலின பிரிவினருக்கு கிடைத்த திட்டங்களை விளக்கி வெளியிட்ட முகநூல் பதிவுவின் ஒரு பகுதி.

எமது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று அவற்றை அரசாணைகளாக மாற்றிய மாண்புமிகு மேனாள் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றியை இந்த தருணத்திலும் மனப்பூர்வமாக பதிவிடுகிறேன். தேர்தல் தோல்வியின் போதுகூட கலங்காத என் மனம் இதை எழுதும் போது நன்றியால் கரைகிறது. இந்த நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்த பட்ச அறம் என நம்புகிறேன்.

எமது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தேசிய ஆணையம் இருப்பதை போல The Tamilnadu State Commission for the Scheduled Castes and Scheduled Tribes Act 2021 எனும் சட்டம் இயற்றப்பட்டு 22.09.2021 அன்று தமிழ்நாடு SC/ST மாநில ஆணையம் நிறுவப்பட்டுள்ளது.

அரசின் அனைத்து திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கங்களில் எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு உரிய விகிதாச்சார ஒதுக்கீடு கிடைப்பதை சட்டப்பூர்வமாய் உறுதி செய்திட (சிறப்பு உட்கூறு திட்டம்) ‍ SC/ST Development Action Plan Act 2024 எனும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு ஒன்றிய அரசு 3% முன்னுரிமை வழங்குவதைப் போல தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் 5% முன்னுரிமை வழங்கும் வகையில் Tender Transparency Act ல் திருத்தம் (Amendment) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எஸ்.சி எஸ்.டி பிரிவை சார்ந்த தொழில் முனைவோர் வங்கி கடனில் 35 % முன் ஒப்பளிப்பு மானியம் (Front end Subsidy) பெறும் வகையில் (அதிகபட்சம் ரூ.1.5 கோடி )ஆண்டுக்கு ரூ.200 கோடியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்.

சர்வதேச பல்கலைக்கழகங்களில் பட்டியல் இன மாணவர்கள் பயில ரூ.36 இலட்சம் முதல் ரூ.24 இலட்சம் வரை உதவித்தொகை வழங்கும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவி திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

பட்டியல் வகுப்பார் குடியிருப்புகளில் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ள அடிப்படை வசதிகளை உருவாக்கிட ஆண்டுக்கு ரூ.200 கோடி ஒதுக்கீட்டில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டமும், பழங்குடியினருக்கு தொல்குடிகள் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் நமக்கு நாமே திட்டத்தில் பட்டியலின, பழங்குடியினருக்கு மக்கள் பங்களிப்பு அய்ந்தில் ஒரு பங்கு என குறைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 30 ஆண்டுகளாய் முடங்கி கிடந்த ஈங்கூர் மற்றும் முதலிப்பாளையம் தாட்கோ தொழிற்பேட்டைகள் ரூ.200 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு பட்டியல் வகுப்பார் மற்றும் பழங்குடி சமூகங்களைச் சார்ந்த தொழில்முனைவோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பெரியார் முழக்கம் இதழ் 29052026

இந்து அறநிலையத்துறையின் பார்ப்பன அமைச்சரையும், இயக்குனரான பார்ப்பன அதிகாரியையும் திரும்பப் பெற வேண்டும்! கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை !

“தமிழ்நாட்டின் புதிய அமைச்சரவையில் ஏழு பேர் பட்டியல் இனப் பிரிவினரும், 4 பெண்களும் இடம் பெற்று இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். அதே நேரத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இந்த பட்டியல் இனப் பிரிவினரில் ஒருவரை ஏன் நியமிக்க கூடாது என்ற எண்ணம் எழத்தான் செய்கிறது.

இந்தத் துறைக்கு அமைச்சராகவும் துறையின் இயக்குனராகவும் பார்ப்பனர்களையே தேர்ந்தெடுத்து நியமித்திருப்பதின் நோக்கம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் பனகல் அரசர் முதன் முதலாக கொண்டு வந்த அறநிலையத்துறை சட்டம் (Hindu Devastaan Act) பார்ப்பனர்கள் கொள்ளையிலிருந்து கோயில்களை காப்பாற்றுவதற்காகத் தான்! அப்போதிலிருந்தே பார்ப்பனர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பிறகு ஓமந்தூரார் முதலமைச்சராக இருந்த காலத்தில் இதற்கான முழு சட்ட வடிவம் ( Hindu Religious Endowments Act) கொண்டுவரப்பட்டது. அப்போதும் பார்ப்பனர்களின் கடுமையான எதிர்ப்பு இருந்தது.

பல்வேறு பிரிவுகளைக் கொண்ட இந்து மதம் இப்போது ஒற்றை மதமாக்கப்பட்டு பார்ப்பனர்களின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வரப்பட்டு விட்டது. அனைத்து இந்துக்களும் அர்ச்சகர்கள் ஆகும் உரிமை கிடையாது.அது பார்ப்பனர்களுக்கு மட்டுமே என்று நீதிமன்றங்கள் வழியாக பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறார்கள்.

இப்போதும் கோயில் திருவிழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக தரையில் காத்துக் கிடக்க, பல்லக்கிலும் தேரிலும் இரண்டு அல்லது மூன்று பார்ப்பனர்கள் சட்டை இல்லாமல் பூணூல் அடையாளத்தை காட்டிக் கொண்டு நிற்பது எதைக் காட்டுகிறது? இந்து மதமும் இந்துக்களும் பார்ப்பனர்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதைத் தானே?

இந்து மதத்தை மட்டுமல்ல,அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து அறநிலையத்துறையையும் கட்டுப்படுத்தக் கூடியவர்கள் பார்ப்பனர்கள் தான் என்பதை உணர்த்துவதாகத் தான் இந்த நியமனங்கள் அமைந்திருக்கின்றன.

இந்த பார்ப்பன அமைச்சர் ஏற்கனவே ஒரு பதிவில் பாஜகவின் குரலை எதிரொலித்திருக்கிறார்.அதாவது கோயிலில் தமிழ் வழிபாட்டு உரிமை கேட்பவர்கள் ஏன் முஸ்லிம் கிறிஸ்தவ மதங்களை நோக்கி அந்த கேள்விகளைக் கேட்பதில்லை என்று அவர் கேட்டிருக்கிறார்.

இப்படி பாஜக மனநிலை கொண்ட ஒருவரை அறநிலையத்துறையின் அமைச்சராக நியமித்திருப்பது ஏற்கத் தக்கது அல்ல. இந்த முடிவு தமிழ்மக்களின் உளவியலுக்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் இந்து அறநிலையத்துறையின் பார்ப்பன அமைச்சரையும், இயக்குனரான பார்ப்பன அதிகாரியையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

(குறிப்பு: அறநிலையத்துறையின் செயலாளராக இருந்த பார்ப்பன பெண் அதிகாரி மாற்றப்பட்டு குமரகுருபன் என்ற பார்ப்பனரல்லாத அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இது பாராட்டுக்குரியது!)

– “கொளத்தூர் மணி,”
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.
22.05.26
பெரியார் முழக்கம் இதழ் 29052026

தமிழ்நாடு இதுவரை இத்தகைய கட்சி மாறும் காட்சிகளைக் கண்டது இல்லை. குதிரை பேரம் கொடி கட்டி பறக்கிறது. பெரும்பான்மை இல்லாத ’தமிழக வெற்றிக் கழகத்திற்கு’ காங்கிரஸ் ஓடிப்போய் ஆதரவு அளித்தது. திமுக அணியில் இருந்து போட்டியிட்டு தவெக, அஇஅதிமுக வேட்பாளர்களைத் தோற்கடித்தவர்கள் ஒரே நாளில் அணி மாறினார்கள். அடுத்த 5-ஆண்டுகளுக்கு தவெக அணிதான் என்று கூச்சமின்றி அறிவித்தார்கள். பாஜக தலையிடாமல் தடுக்கிறோம் என்று காரணம் கூறினார்கள். ஆனால் பாஜகவின் கட்சிமாறல் கலாச்சாரத்தை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள் என்பதுதான் உண்மை!

காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பல மாநிலங்களில் அந்த கட்சியில் இருந்து எம்.எல்.ஏ-க்களை பேரம் பேசி இழுத்து கட்சி மாறசெய்யும் பாஜகவின் அரசியல் கலாச்சாரத்தை அப்படியே இப்போது வெட்கமின்றி பின்பற்றுகிறது காங்கிரஸ். அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிகளை உடைத்து தனது ஆட்சிகளை நியமித்துக் கொண்டது பாஜக.

2017-ல் கோவாவில் 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக 17 இடங்களில் வெற்றி பெற்று இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களை கட்சி மாற வைத்து ஆட்சி அமைத்தது. மனோகர் பாரிக்கர் முதலமைச்சரானார்; அவர் மரணம் அடைந்தார்; 2019ல் 10 காங்கிரஸ் உறுப்பினர்களை விலைக்கு வாங்கியது பாஜக. 1967-ல் தேர்தலில் `கயா ராம்’ என்பவர் அடிக்கடி கட்சி தாவல் செய்து கொண்டிருந்தார். எனவே இந்த கட்சித் தாவலுக்கு `ஆயா ராம் கயா ராம்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

ஆந்திராவில் என்.டி.ராமராவ் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை அவர் வெளிநாடு சென்ற காலத்தில் பாஸ்கர் ராவ் என்பவர் இரண்டாக உடைத்து துரோகம் செய்தார். நாடு திரும்பிய என்.டி. ராமராவ் கட்சி தாவியவர்களை மீண்டும் இணைத்து குடியரசுத் தலைவர் முன்நிறுத்தி இழந்த ஆட்சியை மீட்டார் என்பது வரலாறு!

பாஜக கூட்டணியில் போட்டியிட்ட அஇஅதிமுகவினரை தவெகவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று நிபந்தனை விதித்த காங்கிரஸ்; இப்போது பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஒரு பிரிவினரை குதிரை பேரம் நடத்தி தன் பக்கம் தவெக எடுத்திருக்கிறது இதை காங்கிரஸ் தலைவர் மாணிக் தாகூர் நியாயப்படுத்துகிறார். அதே கட்சியை சேர்ந்த எம்.பி ஜோதிமணி எதிர்க்கிறார்.

மீண்டும் ஒரு தேர்தல் திணிக்கப்படக் கூடாது அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்டு விடக்கூடாது என்ற ஒரே நோக்கத்தோடு இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து மெஜாரிட்டி எண்ணிக்கையைக் காட்டுவதற்கு தங்கள் கட்சி வாக்குகளை அளிக்க முன்வந்தார்கள். ஆட்சியைக் கவிழ்க்கக் கூடாது என்பதாலேயெ திமுகவும் எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் வேறுபட்ட நிலையை எடுத்தது. வெளியில் இருந்து ஆதரவு என்று அறிவித்த அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறகு காங்கிரஸ் கட்சியின் வழியில் கூட்டணி அமைச்சரவையில் இணையும் முடிவை எடுத்து அனைவரையும் வியப்படையச் செய்து விட்டார்.

அம்பேத்கர் கூறிய அதிகாரத்தில் பங்கு என்பது என்ன? அரசியல் அதிகாரத்தின் தேவையை உணர்த்திய அம்பேத்கர் தேர்தல் ஜனநாயகம் மட்டும் வெற்றியைத் தேடி தராது; சமூக ஜனநாயகம் அதைவிட முக்கியம் என்றார். 33 பேர் அமைச்சரவையில் ஒரே ஒருவர் மட்டுமே விடுதலை சிறுத்தைகள் சார்பில் அமைச்சராகி மக்களுக்கான அதிகாரத்தை மீட்டு விடமுடியுமா? 120 உறுப்பினர்களில் இருவர் மட்டுமே விடுதலை சிறுத்தைகள்.

இனி எதிர்காலத்தில் அக்கட்சியின் செயல்பாடுகள் எப்படி அமையப் போகின்றன என்ற கேள்விகள் எழுகின்றன. கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுக் கொண்டு தவெக கூட்டணியில் இல்லை என்று கூறுவதில் கூட்டணி நேர்மை இல்லை. இந்தியாவில் மாநிலங்கள் ஒரு நகரசபை போலத்தான் அதிகாரமற்று இயங்குகின்றன. எனவே தமிழ்த்தேசிய அரசியலே உண்மையான அதிகாரத்தை மீட்டெடுக்கும் என்ற உண்மையான கருத்தை பேசிவந்த கட்சி மாநிலத்தில் ஒரு அமைச்சர் பதவியை ஏற்பதை அதிகாரத்தில் பங்கு என்று கூறுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?.

பெரும்பான்மை எண்ணிக்கைக்குத் தேவையான இடங்கள் கிடைத்த பிறகு அஇஅதிமுக கூட்டணியை உடைக்கும் முயற்சிகளில் தவெக ஏன் இறங்க வேண்டும்? உறுப்பினர்கள் அவர்களாகவே விரும்பி வருகிறார்கள் என்ற கருத்து மக்களை ஏமாற்றுவதாகும். காங்கிரசை உடைத்த பாஜக இதே கருத்தை தான் கூறியது. அமைச்சர் செங்கோட்டையன் போல் தேர்தலுக்கு முன் தானாக போய் சேர்ந்தார்களா? தங்களது கட்சி வெற்றி பெறவில்லை, தவெகவிற்கு பெரும்பான்மை இல்லாமல் போனதாலும் பதவி ஆசையால் உருவான விருப்பத்தை எப்படி தானாக வந்த விருப்பமாக கூறமுடியும்?

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய வேலுமணி அணியை மட்டும் தனிமைப்படுத்தி முதலமைச்சர் ஜோசப். விஜய் சந்தித்து ஆடை போர்த்தி வரவேற்றார். அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அவர் சந்தித்தது போல அஇஅதிமுக கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை ஏன் சந்திக்கவில்லை? அதற்கு மாறாக பழனிசாமிக்கு எதிராக போர்க் கொடி தூக்கிய எதிர்ப்பு அணியை மட்டும் ஏன் முதலமைச்சர் சந்தித்தார்? இதிலிருந்து அவர் கட்சியை உடைக்கவே விரும்புகிறார் என்ற முடிவுக்கு எளிதாக வந்துவிட முடியும். பெரும்பான்மையை எட்டிய நிலையில் ஊழல்வாதிகளாக குற்றம்சாட்டப்பட்டவர்களை ஏன் சேர்க்க வேண்டும்?

பேரவைத் தலைவரிடம் விலகல் கடிதத்தை தந்த உடனேயே அவர்களுக்காக ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த தவெக கட்சி உறுப்பினர் அட்டையும் உடனடியாக வழங்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து பிண்னனியில் தவெக இருக்கிறது உறுதியாகிறது. 20 நாட்களுக்கு முன்பு எந்த விசில் சின்னத்தை எதிர்த்து ஓட்டு கேட்டார்களோ அதே விசில் சின்னத்துக்கு ஓட்டு கேட்பது வழியாக வாக்களித்த மக்களை இவர்கள் அவமதிக்கிறார்கள்?

தேர்தல் ஆணையம் தேர்தலை உடனே நடத்துமா? வழக்கு நீதிமன்றம் போவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டால் நீதிமன்றத்தில் எவ்வளவு காலம் வழக்கு நடக்கும்? நீதிமன்றத்தினுடைய முடிவு என்னவாக இருக்கப் போகிறது.

தூய சக்தி என கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த கட்சி அதிமுக ஆதரவை பெற மாட்டோம் என்று ஆதரவு சக்திகளிடம் உறுதியளித்துவிட்டு அக்கட்சிகளை உடைக்க முயற்சிப்பதுதான் தூய சக்தியா? இது பாஜக வழியில் நடைபோடுவதாகும். இனி எப்போது அமைச்சர் பதவி கிடைக்கப்போகிறது? இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா? என்ற துடிப்புதான் மேலோங்கி இருக்கிறது. வட மாநிலங்களில் நடக்கும் கட்சி தாவல் கலாச்சாரம் தமிழ்நாட்டில் நுழைந்திருப்பது தமிழ்நாட்டை தலைகுனிய வைத்து விட்டது என்பது மட்டும் உண்மை!
பெரியார் முழக்கம் இதழ் 29052026

பெரியார் கொள்கைகளை உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்த கழகத்தின் மூத்த தோழர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் விடைபெற்றுக் கொண்டார். அவரது விருப்பப்படி அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது.

கொளத்தூர் மணி
கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள இரங்கல் செய்தி:

திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் தோழர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் (83) அவர்கள் வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு கோவை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 17.05.26 ஞாயிறு காலை 04.30 மணியளவில் காலமானார்.

தோழர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் அவர்கள் மூத்த பெரியார் தொண்டர் ஆவார்.தந்தை பெரியாரை நேரில் சந்தித்தவர்.தன் வாழ்நாள் முழுவதும் பெரியார் கொள்கைகளை பரப்பி அதனை தன் சொந்த வாழ்விலும் கடைபிடித்து செயல்படுத்திய கொள்கைப் பற்றாளர் ஆவார். மிகவும் துணிச்சலாக செயல்படக்கூடியவர். மிகவும் சுறுசுறுப்பானவர்.வயதான நிலையிலும் ஒரு இளைஞரை போல பெரியார் பணி செய்வதில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் உடையவர்.அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் தோழமை உணர்வு பாராட்டி அரவணைத்து அழைத்துச் சென்றவர். தன்னை சந்திக்க வருபவர்களிடமெல்லாம் பெரியார் குறித்தும், திராவிடர் இயக்க வரலாற்றுச் சம்பவங்களையும் செய்திகளையும் நினைவூட்டி இடையறாது பேசி வந்தவர்.

மேட்டுப்பாளையத்தில் மதவாத சக்திகளுக்கு எதிரான பரப்புரையில் தாக்குதலை நேர் கொண்டு சந்தித்து அவர்களின் இடையூறை முறியடித்து தொடர் பரப்புரையில் ஈடுபட்டவர். இப்படியான ஆற்றல்மிகு செயல்வீரரை இழந்திருப்பது திராவிடர் விடுதலைக் கழகத்திற்கு பேரிழப்பு ஆகும்.தோழர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புகழ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழரின் இன இழிவு ஒழிப்புப் பணியை தொடர்ந்து தொய்வின்றி முன்னெடுத்துச் செல்வோம்.அதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான இறுதி மரியாதை ஆகும்.

விடுதலை இராசேந்திரன்
கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் விடுத்துள்ள இரங்கல் செய்தி:

மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் முடிவடைந்து விட்டார் என்ற செய்தி என்னை மிகவும் கலங்க செய்துவிட்டது. மிகுந்த மன அழுத்தத்துடன் இந்த பதிவை நான் வெளியிடுகிறேன்.

திராவிடர் கழக காலத்தில் இருந்து பெரியார் கொள்கையை தனது வாழ்க்கையாக சுமந்து கொண்டு பயணித்த தீவிர பெரியார் தொண்டர். என்னுடன் தனிப்பட்ட முறையில் மிகவும் உறவு கொண்டவர்; மாதத்திற்கு இருமுறையாவது அலைபேசியில் அழைத்து என்னிடம் பேசுவது அவரது வழக்கம்; அந்த உரையாடல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும்; அத்தனையும் இயக்கத்தில் பழைய வரலாறுகள் தொடர்புடையதாகவே இருக்கும் பழைய நினைவுகளை அசைபோடுவதற்கு இயக்கத்தில் எனக்கு கிடைத்த ஒரே தோழர் அவராகவே இருந்தார்.

அவரோடு உரையாடி இயக்க வரலாறுகளை மலரும் நினைவுகளாக பேசுவதில் மிகுந்த மன ஆறுதலும் உற்சாகமும் இருவருக்குமே கிடைக்கும். இயக்கத்தின் பேச்சாளர்கள் திருவாரூர் தங்கராசு, திருச்சி செல்வேந்திரன் ஆகியோரோடு நெருக்கமாக பழகியவர்.

மன்னார்குடியில் பெரியார் நடத்திய தமிழ்நாடு விடுதலை மாநாட்டில் அவர் பங்கேற்றதை நினைவு கூறுவார். கடந்த கால பெரியார் இயக்க வரலாறுகளோடு பயணித்த பெருமைமிக்க பெரியார் தொண்டர்களின் மிச்சமாக அவர் திராவிடர் விடுதலைக் கழகத்தில் இருந்து வந்தார்.

பெரும்பாலும் இளைஞர்களைக் கொண்ட திராவிடர் விடுதலைக் கழகத்தில் இந்த தீவிர பெரியாரியவாதி தன்னை இணைத்துக் கொண்டு இளைஞர்களோடு தன்னை தகவமைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தார். அண்மையில் அவரது மகனின் அகால மரணம் மிகப் பெரும் துயரம் அதில் கடுமையான உளப்பாதிப்புக்கு உள்ளானார். ஆனாலும் அதிலிருந்து மீண்டு வருவதற்கு கொள்கை உணர்வுகளே ஆறுதல்களை வழங்கியது. பெரியார் திராவிடர் கழகத்தில் இருந்தபோது மேட்டுப்பாளையத்தில் பல நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்தார். கொள்கை எதிரிகளின் மிரட்டலுக்கு அஞ்சாமல் பணியாற்றினார். இந்து முன்னணிகளின் சலசலப்புகளை எதிர்கொண்டு மேட்டுப்பாளையத்தில் அவர் நடத்திய பொதுக்கூட்டத்தை இப்போதும் மறக்க முடியாது! மேட்டுப்பாளையத்தில் அனைத்துக் கட்சி தோழர்களாலும் மதிக்கப்பட்டவர். அவருக்கான நட்பு வட்டாரம் ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார். நிறைய நூல்களைப் படிப்பார் படித்துக் கொண்டிருக்கும் போது அது தொடர்பான கருத்துக்களை உடனே அலைபேசியில் தொடர்பு கொண்டு என்னிடம் பகிர்ந்து கொள்வார்.

சேலத்தில் கழகம் நடத்திய மாநில மாநாட்டில் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் கலந்து கொண்டார். எனக்கு இப்போது வயது 80; அவரது வயது 83. மாணவப் பருவத்தில் இருந்து இயக்க உணர்வோடு நான் வளர்ந்தவன். அந்த உணர்வுகளையும் வரலாறுகளையும் எனது வயதை ஒத்த அவரோடு பகிர்ந்து கொள்வதிலும் உரையாடுவதிலும் உற்சாகமும் மன அமைதியும் கிடைத்தது. இனி அந்த உணர்வுகள் இல்லாமல் போய்விட்டதே! என்று கவலைப்படுகிறேன் எனது புகழ் வணக்கத்தை கண்ணீரோடு அர்ப்பணிக்கிறேன்!.

பால்.பிரபாகரன்

கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் விடுத்துள்ள இரங்கல் செய்தி:
கோவை மாவட்டக் கழகத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமசந்திரன் இன்று (17.05.2026) கோவை அரசு மருத்துவமனையில் மறைவுற்றார் என்ற செய்தி பெரும் துயர் கொள்ள செய்தது.

யாருக்கும் எந்த நிலையிலும் தன் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத கொள்கை வைரம் அவர். சிறியவராக இருந்தாலும் தந்தை பெரியார் போன்று வாங்க என மரியாதையாக அழைக்கும் பண்பு கொண்டவர். மன்னார்குடியில் பிறந்தாலும் தன் பெயருக்கு பின்னால் மேட்டுப்பாளையம் என்ற தான் வாழ்ந்த ஊரையே அடையாளமாக்கியவர் சாதாரண தோழர்களையும் மேடையில் பேச வைக்க மேடை போட்டு கொடுத்து அழகு பார்த்தவர். திராவிடர் இயக்கத் தலைவர்கள் அனைவரிடமும் பழகியவர்.

கழகம் சார்பில் பரப்புரைப் பயணம் அவர் பகுதிக்கு செல்லும் பொழுது எல்லாம் சிறப்பான ஏற்பாட்டை இளைஞர் போன்று செய்து முடிக்கும் கடமை தவறா பெரியார் தொண்டர். அகவை முதிர்வு காரணமாக மறைவுற்றாலும் ஏற்க மனமில்லை

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவரை அவரது இல்லத்தில் சந்தித்தபோது புகைப்படம் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தந்தை பெரியாருடன் அய்யா இராமசந்திரன் எடுத்துக்கொண்ட புகைப்படம் பின்பகுதியில் இருக்குமாறு எடுங்கள் என்றார். எப்பொழுதும் கொள்கை பேசும் வேழம் தன் பரப்புரையை முடித்துக் கொண்டார். இனி என்று காண்போம் அய்யா இராமச்சந்திரனை! கொள்கை மாறா தலைவனை கொள்கைக்கு புறம்பான செயலின்றி அவர் கனவை நிறைவேற்றுவதே குடும்பத்தார் இயக்கத் தோழர்கள் அனைவரும் அவருக்குச் செய்யும் இறுதி வணக்கமாகும். கொள்கை மாவீரருக்கு புகழ் வணக்கம்!

அவரது மறைவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை 5.00 மணி அளவில் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இராமச்சந்திரன் உடலிற்கு புகழ் வணக்கம் செலுத்தினார்.

இராமச்சந்திரன் அவர்களின் விருப்பப்படி அவரின் குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலோடு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு தோழர் இராமச்சந்திரன் அவர்களின் உடல் கொடையாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கழகப் பொருளாளர் துரைசாமி, கழக மாநில அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி, கழக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராஜன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்.

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக 3-வது குழந்தை பெற்றால் ரூ.30,000; 4-வது குழந்தை பெற்றால் 40,000 தருவதாக அறிவித்துள்ளார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு. இது முட்டாள்தனமான கண்டிக்கத்தக்க அறிவிப்பு. பெண்களை பிள்ளை பெறும் இயந்திரமாக இழிவுபடுத்துகிறார். உலகம் முழுவதும் “குழந்தைகள் வேண்டாம்” என்ற இயக்கத்தை நோக்கி பெண்கள் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். திருமணங்களுக்கு மாற்றாக “ஒன்றாக வாழ்தல்” என்ற முறையை தேர்வு செய்கிறார்கள். நீதிமன்றங்களும் இதற்கு சட்ட அங்கீகாரம் தருகின்றன.

ஒன்றிய பாஜக ஆட்சி குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்களுக்கான தொகுதிகளைக் குறைக்கிறது என்றால் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டுமே தவிர, கூடுதலாக குழந்தை பெற வேண்டும் என்று வலியுறுத்தக்கூடாது. சந்திரபாபுவின் இந்த அறிவிப்புக்கு எதிராக அம்மாநிலத்தில் எந்த எதிர்ப்புக் குரலும் வரவில்லை என்பது வெட்கக்கேடானது.
பெரியார் முழக்கம் இதழ் 21052026

நீட் வினாத்தாள் கசிவு இரண்டாவது முறையாக நிகழ்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஒருமுறை கசிந்தது. வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் இருந்தவர்களே இதற்கு காரணமாக இருந்துள்ளனர். கடந்த மே 3-ம் தேதி 5432 மய்யங்களில் இருந்து தேர்வு எழுதிய 22.79 இலட்சம் மாணவர்கள் மீண்டும் ஜூன்-21ல் தேர்வு எழுத வேண்டும். மிகுந்த மன அழுத்தத்திற்கு மாணவர்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த முறை “ஆன்லைன்” வழியாக தேர்வு நடத்தப்படும் என்கிறார் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் இருவருமே நீட் தேர்வு கூடாது; பிளஸ்டு (+2) மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர். கல்விக் கட்டமைப்பையே சீரழித்து வரும் நீட் வேண்டாம் என்பதே தமிழ்நாட்டின் ஒருமித்த குரல்!
பெரியார் முழக்கம் இதழ் 21052026

மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் செயல்பட்ட “திராவிட மாடல்” ஆட்சி பல்வேறு சாதனைகளுக்காக கொள்கை எதிரியான ஒன்றிய பாஜக அரசிடம் இருந்தே விருதுகளைப் பெற்று வந்தது. ஆனாலும் ஆட்சியின் சாதனைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க இயலாத நிலையை தேர்தல் களம் உருவாக்கி விட்டது.இப்போதும் அந்த சாதனை விருதுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கடலோரங்களில்இருக்கும் பல்வேறு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துகளுக்கான கொள்கைகள்; திட்டங்களை உருவாக்குதல்; அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்துதல் உள்ளிட்டவைகளில் “திராவிட மாடல்” ஆட்சியே முதலிடத்தைப் பெறுகிறது என்ற 2025ம் ஆண்டுக்கான விருதை ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

வேடிக்கை என்னவென்றால் இந்த பாராட்டு விருதுக்கான சான்றிதழை புதிய முதல்வர் ஜோசப் விஜயிடம் டிட்கோ அதிகாரிகள் நேரில் வழங்கி வாழ்த்து பெற்று உள்ளனர். வாழ்த்து பெறும் படத்தை இன்று தினமலர் நாளிதழ் வெளியிட்டு இருக்கிறது. நடந்தது தீய சக்தியின் ஆட்சி அல்ல; வளர்ச்சி சக்தியின் வரலாற்று சிறப்புமிக்க ஆட்சி என்பதை புதிய முதல்வர் இப்போதாவது உணரட்டும்!
பெரியார் முழக்கம் இதழ் 21052026

“ஈரோட்டுப் பாதை சரியா?” என்ற நூலில் ஜீவா அவர்கள் பெரியார் மீது சுமத்தியுள்ள விமர்சனங்களுக்கும் (பழிசுமத்தல் என்ற சொல்லைக் கூட தவிர்க்கிறேன்). தோழர் ஜீவானந்தம் மீதான மிகைமதிப்பீட்டுக்கும் பதில் அளிப்பதே எனது நோக்கம்

“ஈரோட்டுப் பாதை சரியா?” நூலில் தோழர் ஜீவா எழுதியுள்ளவற்றுள் நினைவூட்டலுக்காக சில “நாகரிக” சொற்றொடர்கள் கீழே:

“ஜஸ்டிஸ் கட்சியுடைய குற்றவாளித்தனத்தை மறைத்தார். பொதுவுடைமை இயக்கமல்ல என்று அரசாங்கத்தை நம்பச் செய்ய வேண்டுமென்று எண்ணுகிற, எழுதுகிற அளவுக்குச் சாக்கடையில் சறுக்கி விழுந்தார். தான் உயிரோடு இருக்க (யாருக்காக?) பிற்போக்குக் கும்பல்களின் யோசனைப்படி ஈவெரா யார் காலையும் பிடிக்கத் துணிந்தார்.”

“சென்னையில் ‘நால்வர் சந்திப்பு’ நடந்தது (1-8- 1927). அடுத்த வார குடிஅரசில் வெளியான பிராமணியச் சடங்கை விலக்கியவர் பட்டியலில் ஈ.வெ.ரா., திரு.வி.க., டாக்டர் நாயுடு, ஆர்.கே.ஷண்முகம் ஆகிய நால்வரின் பெயர்களும் முன்வரிசையில் இடம் பெற்றன. இவ்வாறு காங்கிரஸ்காரர்களோடு இணைந்து, சமூகச் சீர்திருத்தத்திற்கு ஆதரவு தேடுவதாகக் காட்டி, காங்கிரஸ் ஒழிப்பு வேலைக்கு மறைமுகமாகப் பணம் திரட்ட முனைந்தார் ஈ.வெ.ரா.”

“1935 மார்ச் 10ஆம் நாள் `குடிஅரசு’ மூலம் மானங்கெட்டத்தனமான ஒரு அறிக்கையை வெளியிட்டார்.”

“1942 வாக்கில் ப.ஜீவானந்தம் நம் ஆள்தான் என்றும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தமக்கும் வித்தியாசம் இல்லை என்றும் ….. …. …. வாலிபர்களைத் திராவிடர் கழகம் வலை வீசிப் பிடிக்க முயன்றது”. “இந்தச் சந்தர்ப்பத்தில் மாகாண சட்டசபை தேர்தல் வந்தது. என்னைப் போன்றவர்களுக்கும் கூட ஓட்டுப் போடாமல் நடுநிலை வகித்தனர் திராவிடர் கழகத்தார்.”

“இங்கிலாந்தில் லான்ஸ்பரி என்ற பிரிட்டிஷ் தொழிலாளர் தலைவர் ஆற்றிய உரைக்கு விடை கூறும் முறையில் ஈவெரா பேச சந்தர்ப்பம் கிடைத்தது. தோழர் சக்லத்வாலா எழுதிக் கொடுத்த பிரசங்கத்தை ஈவெரா படித்தார்.”

“ராஜாஜி இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கினார். வெறும் வாயையே மென்று கொண்டிருந்த கிழவிக்கு ஒரு வாய் அவல் கிடைத்தது. ஈவெரா சந்தர்ப்பத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தார். கட்டாய இந்தியை எதிர்த்து காங்கிரஸ் மந்திரி சபைக்கு ஓரளவுக்குத் தொந்தரவு கொடுக்க முடிந்தது”.

“முதலில் இந்தி எதிர்ப்பு வீர்ர்களை எடுத்துக் கொள்வோம். ……… …………. ……… ஈ.வெ.ரா எந்த சாக்கிலும் காங்கிரசைத் திட்டி திட்டியே சாவதென்ற தீர்க்கமான தீர்மானத்திற்கு வந்து அந்த ‘புனித’ கைங்கரியத்திலே தனது ‘பொன்னான’ நேரத்தைப் போக்கிக் கொண்டிருப்பவர்… ……… …….. ……… ஏகாதிபத்தியத்தின் தாஸானுதாசர். ஏகாதிபத்திய எஜமானர்களின் மேஜைகளிலிருந்து விழும் ரொட்டித் துண்டுக்கு நாக்கில் ஜலம் ஊற அண்ணாந்து நிற்கும் அரசியல் பிற்போக்காளர்.”

தோழர் ஜீவாவின் புனைவுகளையும், பொருந்தா வாதங்களையும், உண்மையல்லாத வீரப்பிரதாபங்களையும் பற்றி இதுவரை விளக்கி வந்திருக்கிறோம்; இன்னும் எழுதுவதற்கும் திறனாய்வு செய்வதற்கும் ஏராளம் இருந்தாலும் இந்த அளவோடு நிறுத்திக் கொள்கிறோம்.

சீமானுடன் ஜீவாவை ஒப்பிட்டு பேசியதற்காக சினமுற்று சீறினார்கள். சீமான் மீது சுமத்தப்பட்ட தனிமனித ஒழுக்கம் குறித்த குற்றச்சாட்டுகள் ஜீவா மீதும் சுமத்தப்பட்டுள்ளன. நம்மால் எடுத்துக் கூற முடியும் என்றாலும் அந்தத் திறனாய்வு நமது நோக்கம் அல்ல!

இதுவரை வைக்கப்பட்டுள்ள விளக்கங்களுக்கும், திறனாய்வுகளுக்கும் ஏதேனும் விளக்கமும், வழக்கமான சுடுமொழி பின்னூட்டமும் வருமேயானால் அதற்கும் விளக்கம் கொடுக்கவும் நாம் தயாராக இருக்கிறோம்.

பெரியார் என்ற அந்த மாமனிதர் ஜீவாவின் அந்த நூலைப் படித்திருக்க மாட்டார் என்று நாம் யாரும் நம்ப மாட்டோம்; ஆனால் ஜீவாவின் இழிவான அவதூறுகளை புறந்தள்ளிவிட்டுதான் பெரியார் இயங்கி இருக்கிறார்; ஜீவாவோடு இறுதி நாட்கள்வரை பழகியும் வந்திருக்கிறார்; தேர்தலிலும் அவருக்கு ஆதரவளித்துள்ளார். ஆனாலும் ஒரு பயிற்சி வகுப்பில் தோழர்கள் கேட்ட கேள்விக்கு விடை அளித்ததையே பொறுத்துக் கொள்ள முடியாமல் சொகுசு பொதுமையர் ஒருவர் பூர்ஷ்வா பார்வை என்கிறார்; கிண்டல் சிரிப்பு என்கிறார்.

Zeal of the new convert (புதிதாக மதம் மாறியவர்களின் உற்சாக சேட்டைகள் அதிகமாகவே இருக்கும். அப்படி பல்வேறு ’புரட்சிகர’ அமைப்புகளில் இடம்பெற்று ’புரட்சிகளை’ முழுமையாக நடத்தி முடித்துவிட்டு, அண்மையில் தேர்தல் அரசியலுக்காக இந்திய பொதுவுடைமைக் கட்சிக்குள் வந்திருக்கும் ’ஒரு முழு புரட்சியாளர்’ இப்படி பதிவிட்டிருக்கிறார். என்னை உளவுத்துறைக்கும் ‘ரா’வுக்கும் இரகசிய உளவாளி என்று தனது காதில் வழியும் மூளையில் இருந்து கண்டுபிடித்து கூறியிருக்கிறார். ஜீவாவின் மீது விமர்சனம் வைத்தாலே அது உளவுத்துறையின் சதியாம்!.

அதேபோல் ஜீவாவுக்காக மற்றொருவர் சீறிப்பாய்ந்தார். அவர் இப்போது திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர். குறைகூற முடியாத குணக்குன்று ஜீவாவை எப்படி விமர்சிக்கலாம்? என்று கொதித்து எழுந்த அவர் கொளத்தூர் மணி ’அற்ப மானுட பதர்’ ‘செக்கு எது? சிவலிங்கம் எது? என்று தெரியாயத பிராணி’ என்று தனது ’தத்துவமொழியில்’ கழிவைக் கொட்டியிருக்கிறார்.

கடந்த 16 வாரங்களாக ஜீவாவின் உண்மை முகத்தை கிழித்துக்காட்டி ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளோம். சீமான் பெரியார் மீது சுமத்திவரும் இழிவுகளையும் அவதூறுகளையும் விட மிஞ்சி நிற்கிறது ஜீவாவின் எழுத்தும் பேச்சும். பெரியார் மீதான ஜீவாவின் இந்த கீழ்த்தரமான கருத்துக்களை நம்மை குற்றம் சாட்டுகிறவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? நாம் சுட்டிக்காட்டிய ஜீவாவின் பொய்மையை, நேர்மையின்மையை அவர்களால் மறுக்க முடியமா? இதற்கு ஏதேனும் விடைகூற முன்வந்தால் அதற்கும் விளக்கம் அளிப்பதற்கு நாம் தயராகவே இருக்கிறோம் என்ற உறுதியான அறிவிப்புடன் இந்த தொடரை நிறைவு செய்கிறோம். -நிறைவு

ஜீவாவின் இழிவான அவதூறுகளை புறந்தள்ளிவிட்டுதான் பெரியார் இயங்கி இருக்கிறார்; ஜீவாவோடு இறுதி நாட்கள்வரை பழகியும் வந்திருக்கிறார்.

பெரியார் முழக்கம் இதழ் 14052026

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் உருவாக்கிய மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு விஜய் கட்சி ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை பெற்றிருக்கிறது. தேர்தல் களத்தை டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான போராட்டமாக கட்டமைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் டெல்லியின் ஊடுருவலை தோல்வியடைய செய்திருக்கிறார். விஜய் கட்சியை பயன்படுத்தி தமிழ்நாட்டில் கால் பதிக்கலாம்; அதற்கு ஆளுநரை பயன்படுத்தலாம் என்ற சதி திட்டத்தை தமிழ்நாடு முறியடித்திருக்கிறது. முதல்வர் பதவியை ஏற்க இருக்கும் விஜய் முழுமையாக பாஜக எதிர்ப்பு அணிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி மட்டும் தான் துரோக சக்தியாக மாறி உள்ளது. மற்றபடி சிபிஅய், சிபிஎம், இடதுசாரிகளும், விடுதலை சிறுத்தை கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் திமுக கூட்டணியின் நட்பு சக்தியாக இருந்து கொண்டு பாஜக ஊடுருவலை தடுப்பதற்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் மிகச் சிறப்பான முடிவை எடுத்திருக்கின்றன. இதைத் தான் ஏற்கனவே நாமும் வலியுறுத்தி பதிவிட்டோம்.

முதன்மையான எதிரி இந்துத்துவாவை தனிமைப்படுத்தும் நோக்கத்தோடு திமுக தலைவர் மேற்கொண்ட அணுகுமுறை வரலாற்றுச் சிறப்புமிக்கது. புதிய ஆட்சியை ஆளுநர் அனுமதிக்க வேண்டும்; இதுகாலத்தின் கட்டாயம் என்றும்; ஆளுநர் காலம் தாழ்த்தக்கூடாது என்றும் வலியுறுத்தினார் மு. க.ஸ்டாலின் திமுக தலைவர் மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களின் தலைவர் என்ற நிலைக்கு அவரை இந்த கருத்து உயர்த்தி விட்டது. பாசிச கருத்தை மிகவும் மலினப்படுத்தி அரசியல் புரிதல் இல்லாமல் பாயாசமாக கேலி செய்த விஜய்; பாசிசத்தின் அடக்குமுறைகளை இப்போதாவது உணர்வாரா? என்பது தெரியவில்லை! கொள்கைப் பார்வையில் முதன்மை முரண்பாடுகளை முன்னிறுத்தி அரசியலை அணுகும் தெளிவை வேறு எந்த மாநிலத்திலும் எதிர்பார்க்க முடியாது!
– விடுதலை இராசேந்திரன்
09.05.2026
பெரியார் முழக்கம் இதழ் 14052026

தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து கழக தலைவர் “கொளத்தூர் மணி” அறிக்கை:

“தமிழக வெற்றிக் கழகத்துக்கு” பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆளுநர் ஒன்றிய ஆட்சியின் தூதுவராகி அதிக பெரும்பான்மை பெற்றுள்ள கட்சியை ஆட்சி அமைக்க மறுத்து வருகிறார். ஆளுநர் உருவாக்கும் இந்த குழப்பத்தால் பல்வேறு அரசியல் குழப்பங்கள் உருவாகி வருகின்றன. இது தொடர்பாக அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளி வந்திருக்கிறது. மக்களால் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்ட அஇஅதிமுகவை ஆட்சி அமைக்க அனுமதித்து அந்த ஆட்சிக்கு திமுக வெளியிலிருந்து ஆதரவைத் தெரிவிக்க முடிவு செய்து இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.இது உண்மையாக இருந்து விடக்கூடாது என்று நாம் அஞ்சுகிறோம்.

இந்திய அரசியலில் கொள்கைக்கான இலட்சியத் தலைவராக மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார். மாநில அடையாளங்களை அழிப்பதற்கு ஒன்றிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக சமரசம் இன்றி அவர் போராடுகிறார். இந்தியாவிலேயே மாநிலங்களுடைய உரிமைக்குப் போராடும் ஒரே தலைவராக இன்றைக்கு பல்வேறு கட்சிகளிலும் அவர் மதிக்கப்படுகிறார். மக்கள் ஆதரவோடு அதிக இடங்களை பெற்று இருக்கிற த.வெ.க ஆட்சி அமைய தடையாக இருக்க மாட்டோம் என்றும், நிலையான ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்றும், ஆறு மாத காலம் இந்த ஆட்சியின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிப்போம் என்றும் மிகுந்த அரசியல் நேர்மையோடு தமிழக முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கை பலராலும் பாராட்டப்படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அஇஅதிமுகவில் குழப்பங்கள் உருவாகி கட்சி பல பிரிவுகளாகப் பிரிந்து நின்றது. அப்போது வலிமையான உறுப்பினர்களின் எண்ணிக்கையோடு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நினைத்திருந்தால் ஆட்சியைக் கவிழ்த்து இருக்க முடியும். ஆனால் அப்படி செய்வதற்கு அவர் தயாராக இல்லை முழுமையாக ஆட்சி காலம் முடியும் வரை காத்திருந்தார். அதே பார்வையோடு தான் இப்போதும் எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்று சரியான முடிவை எடுத்துள்ளார். ஆனால் இப்போது எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கி திமுக வெளியிலிருந்து ஆதரவு தரும் நிலையை எடுத்தால் எதிர்காலத்தில் நிகழக்கூடிய பாதிப்புகளையும் கருதிப் பார்க்க வேண்டும்.

திமுக எடப்பாடிக்கு அளித்து வரும் ஆதரவை கொள்கை அடிப்படையில் திரும்பப் பெற்றால்கூட பிறகு அதிமுகவும் தவெகவும் கூட்டணி சேரும் நிலைதான் உருவாகும். மற்றொரு கசப்பான உண்மையையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். தற்போது திமுகவில் கொள்கைக்காக பதவிகளில் இருப்பவர்களை விட அதிகாரத்திற்காக பதவிகளில் இருப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.இப்படி அதிகாரத்திற்காக இருக்கிறவர்கள் தான் இப்படி ஒரு விபரீத யோசனைகளை முன் வைக்கிறார்கள் என்று கருதுகிறோம். அதிகாரத்திற்காக பதவிகளில் இருப்பவர்களை கொள்கைக்காக இருப்பவர்களாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் திமுகவுக்கு இருக்கிறது. இந்தியாவில் கொள்கை அடையாளத்தோடு நேர்மையான அரசியல் பிம்பத்தோடு நிமிர்ந்து நிற்கும் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிம்பம் குலைந்து விடக்கூடாது என்ற கவலையோடு இதை எழுதுகிறோம். மு.க.ஸ்டாலின் உறுதியாக இந்த விபரீத முடிவுகளை எடுக்க மாட்டார் என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு உண்டு.”
(குறிப்பு: இடதுசாரிகள், விசிக ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில் அதற்கு முன்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டது இந்த அறிக்கை. கழகத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்ட அறிக்கை என்பதால் கழக இதழில் பதிவு செய்யப்படுகிறது.)
– கொளத்தூர் மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.
08.05.26
பெரியார் முழக்கம் இதழ் 14052026

தமிழ்நாட்டின் சமூக அரசியல் அடையாளங்களாக மூன்றை குறிப்பிடலாம். மாநில உரிமை, சமூக நீதி, மதச் சார்பின்மை என்ற மூன்று கோட்பாடுகள் தான் அவை.
காமராசர் ஆட்சிக் காலத்தில் இருந்து திமுக, அதிமுக ஆட்சி வரை இதுதான் தமிழ்நாட்டு அரசியலின் அடிப்படைக் கொள்கை. இதற்கு மாறாக ஆட்சி நடத்த முயன்ற இராஜகோபாலாச்சாரி ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டார். ஜெயலலிதா ஒரு பார்ப்பனராக இருந்தாலும் கூட இந்துமத கொள்கையில் அவருக்கு ஈடுபாடு இருந்தாலும் மாநில உரிமை, சமூக நீதியைக் கொள்கையை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்திய தேசிய கட்சியான காங்கிரஸ் ஒரு காலத்தில் இட ஒதுக்கீடு கொள்கையை ஏற்க மறுத்தது; மதச்சார்பின்மை கொள்கையையும் ஏற்க மறுத்தது; பார்ப்பனியக் கட்சியாகவே அது திகழ்ந்தது. சோனியா காந்தி தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி வந்ததற்குப் பிறகு அதில் பண்பு மாற்றங்கள் ஏற்பட்டன. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் தான் திமுகவின் வற்புறுத்தல் காரணமாக மண்டல் பரிந்துரையில் கல்விக்கான இட ஒதுக்கீட்டு உரிமைக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது.

பாஜகவின் தலைவரான வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அந்தக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த திமுகவின் நிர்ப்பந்தம் காரணமாக பாஜக ஆட்சியின் செயல் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு உரிமை காப்பாற்றப்பட்டது; அயோத்தியில் ராமன் கோயில் கட்டும் முயற்சி முறியடிக்கப்பட்டது; பிற மதத்தினர் மீது இந்துமத கொள்கைகளைத் திணிக்கும் பொது சிவில் சட்டம் கொண்டுவரும் முறை தடுத்து நிறுத்தப்பட்டது. திமுக ஆட்சி வலியுறுத்திய குறைந்தபட்ச செயல்திட்டம்தான் இதற்குக் காரணம்.

ஒன்றியத்தில் 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. ஒற்றை ஆட்சியை நோக்கி இந்துராஷ்டிரத்தை அமைக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களில் தனது ஆட்சியின் கீழ் பாஜக கொண்டு வந்துவிட்டது. அகில இந்திய கட்சியான காங்கிரஸ் கட்சியால் இதை முறியடிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த `திராவிட மாடல்’ ஆட்சி ஒன்று மட்டுமே இந்த ஆதிக்கத்தை எதிர்த்து துணிவுடன் களத்தில் நின்று போராடியது. தேர்தல் களத்திலும் இதே விளக்கத்தை முன்வைத்தது.

இப்போது தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இல்லாமல் முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் தீர்ப்பளித்து இருக்கிறார்கள். வெகுமக்கள் ஆதரவோடு தனித்து போட்டியிட்ட ஜோசப் விஜய் முதலமைச்சராகி இருக்கிறார். ஆனால் ஆட்சி அமைப்பதற்குரிய 118 எண்ணிக்கையை எட்ட முடியாமல் 10 இடங்கள் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. இந்த எண்ணிக்கை குறைவுதான் இப்போது மிகப்பெரும் அரசியல் மாற்றங்களை, நெருக்கடிகளை உருவாக்கி இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை ஒன்றிய பாஜக ஆட்சியை தனது வாய்ப்பாக மாற்றிக் கொள்ளும் முயற்சிகளைத் தடுக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் பொதுவான உணர்வாக இருந்தது.

குடியரசுத் தலைவர் ஆட்சி வராமல் தடுக்கவும் மீண்டும் ஒரு தேர்தல் திணிப்பை எதிர்கொள்ளக்கூடாது என்ற கருத்திலும் திமுகவும் மதச்சார்பற்ற கட்சிகளும் உறுதியாக இருந்தன. அந்த அடிப்படையில் தான் திமுக அணியில் இருந்த மதச்சார்பற்ற கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தரும் சரியான முடிவை எடுத்தன. திராவிடர் விடுதலைக் கழகம் இதே கருத்தை வலியுறுத்தியது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களும் இந்தப் பிரச்சனையில் பாஜகவின் ஊடுருவலுக்கு இடம் அளித்து விடக்கூடாது என்ற கொள்கைப் பார்வையோடு தோழமைக் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தரும் முயற்சிக்கு ஆதரவாகவே இருந்தார்.

இடையில் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் ஒரு திட்டத்தை அதிமுக முன்வைத்த போது திமுகவின் பரிசீலனைக்கு பிறகு அது கைவிடப்பட்டு கருவிலேயே சிதைக்கப்பட்டது. இதுகுறித்து செய்திகள் கசிந்தவுடன் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி இத்திட்டம் மக்கள் தீர்ப்புக்கு எதிரானது; தமிழ்நாடு முதலமைச்சரின் மாண்பை சீர்குலைத்து விடும் என்று தனது எதிர்ப்பை அறிக்கையின் வழியாக பதிவு செய்தார். மக்கள் ஆதரவோடு தேர்வு பெற்றுள்ள ஒரு கட்சிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தர வேண்டும் என்ற நோக்கத்தோடு மு.க.ஸ்டாலின் தனது கருத்துக்களை நாகரிகமாக வெளிப்படுத்தினார். இதன் காரணமாகவே தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்த உணர்வுகளுக்கு மதிப்பளித்து மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழ்நாட்டின் பல்வேறு தலைவர்களையும் அவர் சந்தித்து உயர்ந்த நாகரிகத்தை வெளிப்படுத்தி வருகிறார். தமிழ் நாட்டு மக்கள் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். அமித் ஷாக்கள் தான் கலங்கிப் போய் அடுத்த சதி திட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள்.

தனது கட்டுப்பாட்டில் உள்ள அஇஅதிமுகவை இரண்டாக உடைத்து ஒரு அணியை ஆட்சிக்கு ஆதரவாக மாற்றி ஆட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கி இருக்கிறார்கள். திரு.வேலுமணி தலைமையில் ஒரு அணி ஆட்சிக்கு ஆதரவை தெரிவித்துள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய் கேட்காமலே அவர்களாகவே முன்வந்து இந்த ஆதரவை தந்திருக்கிறார்கள். மற்ற தலைவர்களை சந்தித்தது போல் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் நேரில் சென்று சந்திக்கவில்லை. ஆனால் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது அதிருப்தி கொண்டு தனி அணியாக செயல்பட தொடங்கிய சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பை நேரில் சென்று சந்திருக்கிறார் விஜய். மறுநாள் சட்டமன்றத்தில் அந்த அதிருப்தி தவெகவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு தருகிறது.

இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக செய்த இந்த கட்சி உடைப்பு அரசியல் தமிழ்நாட்டில் தவெகவால் நடந்திருக்கிறது. இதன் மூலம் இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் ஆதரவை மட்டுமே நம்பி விஜய் ஆட்சி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. பாஜகவின் பக்கம் முதலமைச்சர் ஜோசப் விஜய் சாய விரும்பவில்லை என்பதற்கான அறிகுறிகள் இப்போது தென்பட்டாலும், எதிர்காலத்தில் இவர் உறுதியாக `திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர் மு.க ஸ்டாலின் போல் உறுதியாக எதிர்த்து நிற்பாரா? என்ற கேள்வியும் எழுகிறது!

பேரவைத் தலைவர் தேர்வு ஒருமனதாக நடந்திருக்கிறது. போட்டியை உருவாக்க திமுக விரும்பவில்லை. சட்டமன்றத்தில் பேசிய அனைத்துக்கட்சி தலைவர்களும் `தமிழ், தமிழ்நாடு’ என்ற கருத்தோட்டத்தை மய்யமாக வைத்தே பேசியுள்ளனர். குறிப்பாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டின் உரிமைக்கு இந்த அவை ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதோடு, `ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக செயல்படும், எதிரி கட்சியாக செயல்படாது’ என்று அறிவித்தார். அதுமட்டுமின்றி பதவியேற்பு விழாவில் `வந்தே மாதரம்’ பாடப்பட்டதுபோல் ஆளுநர் உரையில் அதை அனுமதிக்க கூடாது என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார். `சனாதனத்தை வீழ்த்துவோம்’ என்ற முழக்கத்தோடு தனது உரையை நிறைவு செய்தார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு உணர்வுபூர்வாக அனைவரையும் ஈர்த்தது.

இந்த அமைச்சரவையில் ஒரு பார்ப்பனர் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவர் இனி பார்ப்பனர்- பார்ப்பனரல்லாதார் பிரச்சனைகள் எடுபடாது என்று கூறியிருக்கிறார். அருண்ராஜ், நிர்மல்குமார் ஆகிய தீவிர மோடி ஆதரவாளர்கள் இருவரும் அமைச்சரகளாகி இருக்கிறார்கள். முதலமைச்சர் விஜயின் சோதிடர் நாதன் பண்டிட் என்பவர் முதலமைச்சரின் சிறப்புப் பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஒரு சோதிடருக்கு அரசுப் பதவி வழங்கியிருப்பது சரிதானா? சட்டமன்றத்தில் விசிகவின் வன்னிஅரசு, தேமுதிகவின் பிரேமலதா ஆகியோர் சுட்டிக்காட்டியதால் அந்த முடிவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆஸ்தான சோதிடராக இருந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த சோதிடரின் ஆலோசனைப்படிதான் முதலமைச்சர் பொட்டு வைத்து வருகிறார் போலும்!

மும்மொழி திட்டத்தின் ஒரு பகுதியான “பி.எம்.ஸ்ரீ “திட்டத்தை ஒன்றிய ஆட்சி ஏற்றுக் கொள்ள கட்டாயப்படுத்துகிறது. நீட் தேர்வின் மோசடிகள் அம்பலமாகி வருகின்றன. இந்தப் பிரச்சனைகளுக்கு புதிய ஆட்சி எப்படி முகம் கொடுக்கப் போகிறது? என்பதையும் நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப திமுக கொள்கை இளமையோடு தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியமும் தேவையும் இருக்கிறது என்பதையும் நாம் சுட்டிக் காட்டி ஆக வேண்டும். பெரியார் கருத்தியலுக்கு எப்போதும் மிக நெருக்கமாகவும் அருகிலும் இருப்பது திமுகவின் தலைமைதான் என்பதில் நாம் உறுதியாகவே இருப்போம்!
பெரியார் முழக்கம் இதழ் 14052026

இராயப்பேட்டையை பெரியார் பாசறையாக மாற்றிய கழகச் செயல் வீரர் பத்ரி நாராயணன் அவர்களின் 22-வது நினைவு நாளை முன்னிட்டு இரா.உமாபதி தலைமையில் கழகத் தோழர்கள் மயிலாப்பூரில் உள்ள அவரது நினைவிடத்துக்கு 30.04.2026‌ அன்று ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தோழர் பத்ரி நாரயணனின் நினைவுகளை பாடலாக தோழர்கள் பொன்ராஜ், சத்யா, லதா ஆகியோர் இணைந்து பாடினர்.

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் சென்னையில் தலித்துக்களையும், இஸ்லாமியர்களையும் பெரியார் இயக்கத்தின் பக்கம் ஒன்றிணைத்தவர்களில் பத்ரி முதன்மையானவர். மேலும் கொண்ட கொள்கையில் துடிப்போடு பணியாற்றிய ஆற்றல்மிகு இளைஞர் என்று கூறினார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில் அனைத்து இயக்கங்களையும், அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழர் திருநாள் பொங்கல் விழாவை எழுச்சியுடன் நடத்தி வந்தவர். பத்ரியின் நினைவு நாளில் தோழர்கள் இன்றைய தலைமுறையினரை திராவிடர் இயக்கம் நோக்கி அணிதிரட்ட சூளுரைத்தனர்.

ஆர்.என் துரை (திமுக மாவட்டத் துணை.செயலாளர்), க.வே மோகன் (வட்டச் செயலாளர் திமுக) ,லைனர் பிரபு (வட்டச் செயலாளர்), வெங்கடேஷ் (மாவட்டச் செயலாளர் விசிக), மதன் (விசிக) ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். தோழர்கள் தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்), திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு, மடத்துகுளம் ஒன்றிய தலைவர் சிவானந்தம், சங்கீதா, இராவணன் (மாவட்டத் துணைச் செயலாளர்), மாவட்ட அமைப்பாளர்கள் எட்வின் பிரபாகரன், தட்சணா மூர்த்தி, ஜெயபிரகாஷ் (இளைஞரணி ஒருங்கிணைப்பாளர்), அருண் (இளைஞரணி அமைப்பாளர்), பிரகாசு (நிமிர்வோம் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர்), திருவல்லிக்கேணி பகுதி பொறுப்பாளர்கள் கோபிநாத் (பகுதி தலைவர்), ராஜேஷ் (பகுதி செயலாளர்), சூர்யா (பகுதி அமைப்பாளர்), தோழர்கள் இரண்யா, அசோக், மயிலை சிவா, பிரவீன், மாரி (திக), மகிழவன், லட்சுமணன், குறளரசி, பிரபாகரன் (சேலம் இளைஞரணி), கவியரசு( தமிழ்நாடு மாணவர் கழகம் சேலம்), மயிலை அருண், வீரா, பிரகாஷ் மாஸ்டர், ப்ரித்தி, ஏசு, அஸ்வின், மேட்டூர் முத்துராஜ், மோகன், ஜேம்ஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் இதழ் 07052026

ஒவ்வொரு முறையும் கொளத்தூர் தொகுதிக்கு போகும்போதெல்லாம் மக்களை சந்திக்கும் போது மிகவும் உற்சாகம் பெறுவதாக மு.க ஸ்டாலின் பெருமையுடன் கூறுவார்; மிகவும் கவலை எடுத்து தனது தொகுதியை வளர்த்தெடுத்து அடுக்கடுக்கான திட்டங்களைக் கொண்டு வந்தார். அதே கொளத்தூர் தொகுதி இன்று முதல்வரை கைவிட்டதை அறியும்போது இதயம் வலிக்கிறது.

தனது ஐந்தாண்டு ஆட்சியை சாதனைகளின் சரித்திரம் ஆக்கினார் மு. க.ஸ்டாலின். இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டை பல்வேறு துறைகளில் முதலிடத்தில் கொண்டு வந்த நிறுத்தினார். ஒன்றிய ஆட்சி வஞ்சகத்தை இவரைப் போல் துணிவுடன் வேறு எந்த மாநில முதல்வரும் எதிர் கொள்ளவில்லை.

இவர் செயல்படுத்திய பெண்களுக்கான உரிமை திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவின் பல்வேறு மாநிலங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டுப் பெண்களுக்கு கிடைத்த உரிமை பல்வேறு மாநில பெண்களுக்கும் இவரால்தான் கிடைத்தது.

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கும் ஆளுநரின் அத்துமீறல்களிலிருந்து மாநில உரிமைகளை காப்பாற்றுவதற்கும் இவர் மேற்கொண்ட சட்டப் போராட்டங்களும் ;அதில் கிடைத்த வெற்றிகளும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல;‌‌ இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் உரிமைகளை கிடைக்கச் செய்தன.

புதிய புதிய மக்கள் நலத்திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார். அந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு மிக நேர்த்தியான செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.இதை பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு குழுவினர் வந்து நேரில் கண்டறிந்து தங்கள் மாநிலங்களில் பின்பற்றினர்.

இப்படி இவர் நடத்திய ஆட்சி தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல; ஏனைய மாநிலங்களுக்கும் பயன்களை. கிடைக்கச் செய்தன. கொள்கை மாறுபாடு கொண்டவர்களையும் அவர் நேசித்தார்; அவர்களுக்கு பாராட்டுகளையும் விருதுகளையும் வழங்கினார்.

தமிழர் நாகரிகத்துக்கு முந்தையது கங்கைச் சமவெளி நாகரிகம் என்ற ஆரிய வரலாற்றுப் புரட்டை உடைத்த கீழடி நாகரீக ஆய்வுகளுக்கு ஆதரவாக நின்றார். அதற்கான அருங்காட்சியகத்தை உருவாக்கி ஆரிய புரட்டுகளுக்கு பதிலடி தந்தார்.

இந்தியாவிலேயே ஒன்றிய ஆட்சியின் மதவாத அரசியலுக்கும் மாநில உரிமை பறிப்புக்கும் எதிராக இவரது குரல் மட்டும் தான் சிங்கமாக கர்ஜித்தது. இந்தியாவிலேயே மு.க.ஸ்டாலின் ஒருவர் மட்டும்தான் பாஜகவின் அரசியலுக்கு கடும் நெருக்கடி தந்து வருகிறார் என்று எதிரிகளே ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்கள்.

நாடாளுமன்றத்தில் ஒன்றிய ஆட்சியை மைனாரிட்டியாக மாற்றி அமைத்த பெருமை தமிழ்நாட்டிற்கு உண்டு; ஒரு இடத்தில் கூட நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறாமல் தடுத்து நிறுத்தினார் மு.க.ஸ்டாலின். அதனால் தான் தொகுதி “மறுவரையறை” சதி தடுத்து நிறுத்தப்பட்டு அதன் பயன் தென்னகம் முழுவதற்கும் கிடைத்தது.

ஆக தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் உரிமை மீட்பராக; வழிகாட்டியாக செயல்பட்டு திராவிட மாடலுக்கு மகுடம் சூட்டினார்.

அரசியல் ரீதியாக எந்த ஒரு குற்றச்சாட்டையும் சுமத்த, முடியாமல் தீய சக்தி என்ற வெற்று முழக்கத்தோடு திரைப்பட பிம்பம் வழியாக கட்டமைக்கப்பட்ட மலிவான எதிர்ப்பு இப்போது வெற்றி பெற்று இருக்கிறது.

அடுத்த ஐந்தாண்டு காலம் தமிழ்நாட்டு மக்களின் கதி என்ன ஆகுமோ? என்று அச்சமாக இருக்கிறது. வளர்ச்சிக்கான திட்டங்கள் சீர்குலைந்து போய்; தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளி விடுமோ? என்பது பற்றி எந்த கவலையும் இல்லாமல் திரைப்பட பிம்பம் என்ற மாய வலையில் சிக்கிய வாக்காளர்கள் திமுக ஆட்சி தொடரவிடாமல் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.

இந்த மக்கள் தீர்ப்பை வரவேற்போம் என்று சொல்வதற்கு நாம் தயாராக இல்லை. இந்த தீர்ப்பை மாற்றி எழுதுவதற்கு மக்களை தயார் செய்வோம்! அதற்கான களத்தை தீவிரப்படுத்துவோம்! தமிழ்நாட்டின் பெருமையாக நிமிர்ந்து நிற்கும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு முன்பை விட இன்னும் தீவிரமான ஆதரவை வழங்க உறுதி ஏற்போம்.

மு.க.ஸ்டாலின் அவர்களே! “லட்சியங்களும் கொள்கைகளும் தான் எனக்கு முக்கியமே தவிர வெற்றி தோல்விகள் மட்டுமல்ல”என்று நீங்கள் இப்போது வெளியிட்டுள்ள அறிக்கை உங்களின் தலைமைப் பண்புக்கு மகுடம் சூட்டி இருக்கிறது.
களத்தில் தோற்கலாம்; போராட்டம் தொடர்கிறது!

பெரியார் முழக்கம் இதழ் 07052026
-விடுதலை இராசேந்திரன், 05.05.2026

மக்­கள் தீர்ப்­பைத் தலை­வ­ணங்கி ஏற்கிறோம் என­வும், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என்­றும், சிறப்­பான எதிர்க்­கட்சியாகச் செயல்படுவோம் என­வும், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் விடுத்துள்ள அறிக்கை வரு­மாறு:

கடந்த ஐந்­தாண்டு காலத்­தில் ஏரா­ளமான திட்டங்­களை உருவாக்கி, தமிழ்­நாட்டு மக்களுக்கு நல்­லாட்­சியை வழங்கினோம். தமிழ்­நாட்டை அனைத்து வகை­யிலும் உயர்த்­தி­னோம். தேர்­தல் களத்­தில் எங்­க­ளது சாத­னை­க­ளைச் சொல்லியே வாக்­கு­களைக் கேட்­டோம். மக்­க­ளுக்குச் செய்து கொடுத்த நலத்­திட்­டங்­கள் தொட­ரு­வ­தற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்­புரை செய்­தோம்.

அனைத்­துத் தரப்பு மக்­க­ளுக்­கும் உண்­மை­யான ஆட்­சி­யைத் தந்­தேன்! திராவிட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட் ட­ணியை ஆத­ரித்து வாக்க­ளித்த தமிழ்­நாட்டு மக்கள் அனை­வ­ருக்­கும் நான் எனது மன­மார்ந்த நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

வாக்­க­ளித்­த­வர்­க­ளுக்கு மட்­டு­மல்ல, வாக்­க­ளிக்க மறந்­த­வர்­க­ளுக்­கும் சேர்த்தே ஆட்சி நடத்­தி­னேன். அனைத்து மக்­க­ளுக்­கும் உண்­மையாக இருந்­தேன். நான் எனது மனச்­சாட்­சிப்­ப­டியே செயல்­பட்­டேன். நான் எனது சக்­தியை மீறி உழைத்தேன். என்­னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயி­ரோடு கலந்­தி­ருக்­கும் தலை­வர் கலை­ஞ­ரின் அன்பு உடன் பி­றப்­புகள் அனை­வ­ருக்­கும் எனது நெஞ்­சார்ந்த நன்றி! எங்­க­ளோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்­கத் தலை­வர்­கள், நிர்­வா­கி­கள், தொண்­டர்­கள் அனை­வ­ருக்­கும் நன்றி!

எனது அர­சி­யல் பொது­வாழ்­வில் அதி­கப்­ப­டி­யான வெற்றியையும் பார்த்­துள்­ளேன்; தோல்­வி­க­ளை­யும் சந்­தித்­துள்­ளேன். இலட்சியமும் கொள்கையும்தான் முக்­கி­யம் எனச் செயல்படுபவன்! எனவே இலட்­சி­ய­மும் கொள்­கை­யும்­தான் முக்­கி­யமே தவிர, வெற்றி தோல்­வி­கள் மட்­டு­மல்ல என்று செயல்­ப­டக் கூடி­யவன் நான்.

அத­னால் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் அர­சி­யல் பயணம் தொய்­வில்­லா­மல் தொட­ரும். இது­வரை மக்­க­ளுக்­கா­கச் சிறப்பான ஆளும்­கட்­சி­யா­கச் செயல்­பட்ட தி.மு.க. – இனி சிறப்­பான எதிர்க்­கட்­சி­யா­கச் செயல்­ப­டும் என்று முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்­துள்ள அறிக்­கை­யில் குறிப்பிட்­டுள்­ளார்.
பெரியார் முழக்கம் இதழ் 07052026

தேர்தல் களத்தில் முழுவீச்சுடன் களமிறங்கி செயல்பட கழகம் முடிவுசெய்துள்ளது “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்! திமுக ஆட்சியை உறுதி செய்வோம்!” என்றத் தலைப்பில் 1000 பரப்புரைக் கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் 15.02.2026 ஞாயிறு அன்று சேலம் மேட்டூரில் பிற்பகல் 3:30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார்.
தலைமைக் குழு கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு, இணையதளச் செயல்பாடுகள், முழக்கம் சந்தா சேர்ப்பு, மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கலந்தாய்வு, கோவையில் நடைபெற்ற தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் தாக்கங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
தலைமைக் குழுவில் கலந்து கொண்ட கழகத் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளை விரிவாக எடுத்துக் கூறினார்கள். அனைவரின் கருத்துக்களை விவாதித்து நிறைவாக கீழ்கண்ட முடிவுகள் தலைமைக் குழுவில் எடுக்கப்பட்டன.

2026 தேர்தல் நிலைப்பாடு
தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய பாய்ச்சலோடு சமூக மேம்பாட்டு கண்ணோட்டத்தோடு தொலைநோக்குப் பார்வையுடன் இந்திய ஒன்றியத்திற்கே முன்மாதிரியாக வழிகாட்டியாக இருக்கும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து அவற்றை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருவதோடு மட்டும் அல்லாமல், இந்திய ஒன்றியத்தையே ஒற்றைப் பண்பாடு, கலாச்சாரம், மொழி என அனைத்து நிலைகளிலும் பாசிசத் தன்மையைப் புகுத்தி ஆர்.எஸ்.எஸ்-ன் கனவான இந்து ராஷ்டிரமாக மாற்றத் துடிக்கும் பாஜக அரசிற்கு எதிராக தேர்தல் அரசியல் களத்திலும், தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகளை, அடிப்படை தத்துவங்களைப் பற்றுறுதியுடன் கடைபிடித்து கருத்தியல் தளத்திலும் இந்துத்துவ பாசிச சக்திகளுக்கு எதிராக ஒன்றியத்திலேயே வலிமையான கட்சியாக விளங்கி பெரும்பான்மையான மக்கள் துணையோடு ஆட்சி புரியும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசுக்கு வரும் 2026 தேர்தலில் முழு ஆதரவு அளிப்பது என தலைமைக் குழுவில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இதனை ஒட்டி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 1000 தெருமுனை கூட்டங்கள் மற்றும் துண்டறிக்கைகள் வாயிலாக இக்கருத்துகளை மக்கள் மன்றத்தின் முன் எடுத்துச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இணையதள செயல்பாடுகள்
நவீன விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய மாற்றங்களினால் கருத்துப் பரப்பல் மூலம் கருத்துருவாக்கம் செய்வதிலும், செய்திகளைப் பரவலாக மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதிலும் இணையதளம் இன்றியமையாத ஒரு முக்கிய இடத்தை எட்டி இருக்கிறது என்பதால் இணையதள செயல்பாடுகளை இன்னும் வீச்சுடன் முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. அதற்கான செயல்பாடுகளாக புதிய புதிய யுக்திகளோடு வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப மாற்றத்தின் அடிப்படையில் இணையதளத்தில் ஆர்வமுள்ள கழகத் தோழர்களை ஒருங்கிணைத்து அந்தப் பணிகளைத் தீவிரப்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
மாவட்டக் கழக நிர்வாகிகள் சந்திப்பு
தலைமைக் குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகளை அந்தந்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று சந்தித்து மாவட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவது,அதன் மூலம் இயக்கப் பணிகளை இன்னும் வேகமாக முன்னெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
டிசம்பர் 29 கோவை ஆர்ப்பாட்டத்தின் தாக்கங்கள்:
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதைக் கண்டறிந்து அதனை ஆவணப்படுத்தி சான்றுகள் ஆவணங்களுடன் தலைமைக்கு அனுப்பும்படி கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடைபிடிக்கப்படும் தீண்டாமை வடிவங்கள் குறித்து கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் அனுப்பிய செய்திகள், காணொளிகள் அடிப்படையில் தீண்டாமை கடைபிடிக்கப்படும் அந்தந்த பகுதிகளில் அரசின் நடவடிக்கைகளை வலியுறுத்தி டிச-29 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு அதன் தாக்கங்கள் குறித்து தலைமைக் குழுவில் விவாதிக்கப்பட்டது. மிகப்பெரிய எழுச்சியுடன் நடைபெற்ற அந்தப் போராட்டத்திற்கு பிறகு தீண்டாமை வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு அச்சத்துடன் இருந்த நிலை மாறி அவர்கள் வெளியில் வந்து தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சொல்வதற்கு இந்த ஆர்ப்பாட்டம் அவர்களுக்கு மன வலிமையை கொடுத்து இருக்கிறது என்கின்ற செய்தியை தோழர்கள் பகிர்ந்து கொண்டார்கள். ஏற்கனவே இதற்கு முன்பு கழகத்தின் சார்பில் ஜாதித் தீண்டாமைக்கு எதிராக இரட்டைக் குவளை உடைப்புப் போராட்டம் நடத்திய பகுதிகளில் இன்றளவும் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இல்லாத நிலையை தோழர்கள் குறிப்பிட்டார்கள். அந்த வகையில் டிசம்பர் 29, 2025 கோவை போராட்டம் காரணமாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்ட தேநீர்க் கடை மூடப்பட்டதையும் மக்கள் பயத்தை தயக்கத்தை உடைத்து தங்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து வெளியில் வந்து பேசுவதற்கு கழகத்தின் போராட்டம் தூண்டுகோலாக அமைந்திருப்பது நல்லதொரு முன்னேற்றமாக இருந்ததை தோழர்கள் குறிப்பிட்டனர். இன்னும் தொடர்ந்து பரப்புரைகள், போராட்டங்கள் வாயிலாக தீண்டாமைக்கு எதிராக கழகம் தொடர்ந்து களத்தில் பணியாற்றும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

முழக்கம் சந்தா சேர்க்கை

கழகத்தின் வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம் இதழின் சந்தாக்களை அதிகப்படுத்து குறித்தும் முழக்கம் சந்தாதாரர்களுக்கு மிகச் சரியாக சென்று சேர்வதை உறுதிப்படுத்த மாவட்டக் கழக நிர்வாகிகளிடம் ஆலோசிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் புரட்சிப் பெரியார் முழக்கம் இடம்பெறுவதற்கு தமிழ்நாடு அரசு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருப்பதும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நூலகங்களில் முழக்கம் இடம்பெறுவதையும் குறிப்பிட்டு மேலும் அந்தந்த மாவட்ட கழக பகுதிகளில் உள்ள அரசு நூலகங்களில் பெரியார் முழக்கம் இதழ் இடம் பெறுவதை உறுதி செய்து அவ்வாறு இடம் பெறவில்லை எனில் மாவட்டக் கழக நிர்வாகிகள் நூலக பொறுப்பாளர்களை சந்தித்து முழக்கம் நூலகங்களில் இடம்பெற ஆவண செய்யும்படி கேட்டுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
புதிய தலைமைக் குழு உறுப்பினராக வேலூர் சிவா இணைக்கப்பட்டுள்ளார்.
நிறைவாக கழகப் பொதுச்செயலாளர் தலைவர் அவர்களின் ஆலோசனைகளுடன் தலைமைக் குழு நிறைவடைந்தது. இத்தலைமைக் குழுக் கூட்டத்தில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, சமூக வலைதளப் பொறுப்பாளர் பரிமளராசன், அன்பு தனசேகரன், சென்னை உமாபதி, மேட்டூர் சக்திவேல், கோவிந்தராஜ், காவலாண்டியூர் ஈஸ்வரன், மயிலாடுதுறை இளையராஜா, அய்யனார், சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல்குமார், பேராவூரணி திருவேங்கடம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ்19022026

ஈழத் தமிழரின் அரசியல் உரிமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியதை வரவேற்கிறோம்! தமிழின அழிப்புக்கு ஈடுசெய் நீதியாக அரசியல் தீர்வு அமைய வேண்டும்! ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிக்கை

கடந்த சனவரி 11 -ஆம் நாள் ஈழத் தமிழரின் அரசியல் உரிமைகளைப் பாதுகாத்திட தூதரக உறவுகளைப் பயன்படுத்தி உடனடியாக சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதை ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வரவேற்கிறது. அதுபோலவே, ’தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் முன்னெடுத்து வரும் அயலக தமிழர் மாநாடு பாராட்டுக்குரியது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் பிரதிநிதிகளை அழைத்து பண்பாடு, கலை, இலக்கியம், வணிகம், தொழில் வளர்ச்சி ஆகியவை குறித்துப் பேசுவது தமிழர்கள் கூட்டுப் பலத்துடன் உயர்வதற்கு உதவும் என்ற வகையில் இம்முயற்சி தொடர வேண்டும். தமிழீழத் தாயகத்தில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியது ஈழத் தமிழர்களின் பக்கம் தமிழ்நாடு நிற்கிறது என்ற நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னான இந்த 16 ஆண்டுகளில் இலங்கை தீவின் வடக்கு கிழக்கை தாயகமாக கொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள் கட்டமைப்பு வகைப்பட்ட இனஅழிப்புக்கு ( Structural Genocide) ஆளாகிவருகின்றனர்.

நிலப்பறிப்பு, பெளத்த விகாரைகளை நிறுவி பண்பாட்டுத் திணிப்பு, சிங்களக் குடியேற்றங்கள், படைக் குவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் திட்டமிட்டு செயல்படுத்தப் படுகின்றன. அத்தகைய ஓர் கட்டமைப்பு வகைப்பட்ட இனஅழிப்பின் பகுதியாகத்தான் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை கொண்டு வருவதன் மூலம் ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தப் பார்க்கின்றது சிங்கள பெளத்தப் பேரினவாதம். தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற அடிப்படையில் ஒற்றையாட்சி அரசமைப்பு மாற்றப்பட்டு கூட்டாட்சி ஏற்பாடு தமிழர்களுக்கு உறுதிசெய்யப்பட வேண்டும். அது மட்டுமின்றி, முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு பன்னாட்டு சட்டநெறிகளின்படி ஈடுசெய் நீதியாக (Remedial Justice) தமிழர்களின் இறைமை மீட்டளிக்கப்பட வேண்டும்.

கடிதத்தில் குறிப்பிட்டது போல் ஈழத் தமிழர்கள் இனஅழிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பது தமிழர்களின் கூற்று மட்டுமல்ல, நம்மைத் தாண்டி பலரும் அதை அறிந்தேற்று வருகின்றனர். எடுத்துக்காட்டாக, 2011 ஆம் ஆண்டு அய்.நா. அமைத்த மூவல்லுநர் குழு 40,000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று அறிக்கை தந்துள்ளது. மேலும் 2014 ஆம் ஆண்டு அய்.நா. உள்ளக ஆய்வறிக்கை 70,000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று சொல்லியுள்ளது. கனடா மே 18 ஆம் நாளை தமிழின அழிப்பு நாளாக ஏற்றுள்ளது. அண்மையில் ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் தமிழர்கள் இனவழிப்புக்கு உள்ளாகி இருப்பதை அறிந்தேற்றுள்ளது.

மேலும் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனஅழிப்பு குற்றங்களுக்குப் பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் பொதுவாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு எப்போதும் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை துச்சமாக மதித்து சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு துணை செய்தே வந்துள்ளது. எனவே, தமிழ்நாட்டு சட்டப்பேரவை தீர்மானத்தை நினைவுபடுத்தி, இனஅழிப்பையும் கருத்தில் கொண்டு ஈடுசெய் நீதியாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறோம். மேலும், இனஅழிப்புக்கு நீதியும் அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பும் கோரும் தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானத்தை பன்னாட்டு அரங்கிற்கு கொண்டு செல்வதற்கு தனித்தும் இந்திய அரசின் வழியாகவும் தொடர்ந்து முயல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு அரசு ஈழத் தமிழரின் அரசியல் தீர்வுக்காகவும் இனஅழிப்புக்கு நீதி பெறவும் தொடர்ச்சியாக இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்
கொளத்தூர் மணி, தலைமை ஒருங்கிணைப்பாளர்,
ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

பெரியார் முழக்கம் இதழ் 22012026