மானுடத்தை வாழவிடுங்கள்

நாடார்கள், கவுண்டர்கள், முதலியார், வன்னியர்கள் என்று ஜாதிக்கொரு திருமண சேவை மையங்கள் வந்துவிட்டன. தொலைக்காட்சிகளில் இதற்கான விளம்பரங்கள் வரிசை கட்டி வருகின்றன.
மக்களுக்கான சேவை மையங்கள் இப்போது மறைந்து விட்டன. ஜாதி கடந்த திருமணங்கள் என்றாலே அதை குற்றமாகப் பார்க்கிறது சமூகம். இதே ஜாதி நம்பிக்கையாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினருக்கு சிகிச்சைக்கு இரத்தம் தேவைப்பட்டால் ஜாதி பார்க்க மாட்டார்கள். எந்த வகை இரத்தம் என்று தான் பார்ப்பார்கள். அது தனது ஜாதிக்காரர்கள் வகை இரத்தமாகத் தான் இருக்க வேண்டும் என்று பொங்கி எழ மாட்டார்கள். “எந்த ஜாதியாக இருந்தால் என்ன நல்ல மனசு இருக்கிறதே” என்று மாலை போட்டு பாராட்டுவார்கள்.
தன் வீட்டுப் பெண்ணுக்கு திருமணமாகி மணமுறிவு ஏற்பட்டு இரண்டாவது திருமணத்திற்கு வரன் தேடும்போது மட்டும், ஜாதி தடையில்லை. பையன் நல்லவனாக இருந்தால் போதும் என்று ஜாதி மறுப்புக்கு வந்து விடுவார்கள். இந்தியாவில் ஜாதி அடையாளம் இப்படி தடுமாறுகிறது. இப்போது ‘குடிமகன்’ அடையாளத்திற்கும் நெருக்கடி வந்துவிட்டது. தேர்தலில் ஒரு குடிமகன்(அ) குடிமகள் ஓட்டுரிமை பெறுவதற்கு பல்வேறு தடைகளைத் தாண்ட வேண்டி இருக்கிறது.
ஜாதகப் பொருத்தம் சரியில்லை என்பது போல் ஆதார் சரியில்லை, வாக்காளர் அட்டை சரியில்லை, பிறப்பு சான்றிதழ் கொண்டு வா, இருப்பிட சான்றிதழ் கொண்டு வா, அப்போதுதான் உனக்கு ஓட்டுரிமை கிடைக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. அரசியல் சட்டம் குடிமக்கள் என்பதற்கான அடையாளம் இந்தியாவில் வாழ்ந்தால் போதும் என்று கூறுகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் ஓட்டுரிமைக்குரிய குடிமகனாக இருப்பதற்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் கேட்கிறது. குடிமக்களுக்கான அரசியல் சட்டம் மத அடையாளத்தை வழங்கவில்லை. ஆண், பெண் பேதத்தையும் கூறவில்லை. ஆனால் ஒன்றிய ஆட்சி குடிமக்களாக இருக்க வேண்டும் என்று சொன்னால் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பதை தனது கொள்கையாக்கிக் கொண்டு விட்டது. மனிதர்களுக்கான அடையாளங்களுக்கு இப்படி போராட வேண்டிய நிலையில் உறுப்புகளுக்கான அடையாளங்கள் மதத்தை, சம்பிரதாயங்களை உடைத்து வருகின்றன.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புரட்சி நடந்துள்ளது. கல்லீரல் பாதிக்கப்பட்ட இரு நோயாளிகள் கோவையில் வெவ்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரின் துணைவியாரும் தங்களது கணவர்களுக்கு கல்லீரலை கொடையாக தருவதற்கு முன்வந்தனர். ஆனால் இரத்தப் பிரிவு பொருந்திப் போகவில்லை.
இரண்டு துணைவியாரின் கல்லீரலும் அடுத்த கணவருக்கு பொருந்திப் போனது. இந்த நிலையில் இரண்டு மருத்துவமனைகளும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை ஒரே நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடித்து விட்டன. இரண்டு மருத்துவமனைகளுக்குமான தொடர்புகளையும் ஒரே நேரத்தில் இணைத்து இந்த சிகிச்சை நடந்து முடிந்திருக்கிறது. ஒருவரின் மனைவி இன்னொருவரின் கணவருக்கும், இன்னொருவரின் மனைவி மற்றொருவரின் கணவருக்கும் உறுப்புகளை கொடையாக வழங்கி இருக்கிறார்கள்.
கணவர்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றால் ஜாதி உடைகிறது. அய்யோ! மற்றொரு ஆணுக்கு எனது உடல் உறுப்பா? என்ற கேள்வியும் எழவில்லை. பழமை சம்பிரதாயம் நொறுங்கிப் போகிறது. ஆனால் சமூக உறவுகளில் மட்டும் ஜாதியும், மதமும் ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கின்றன.
திருமணத்துக்கு ஜாதி அடையாளம்,
குடிமகனுக்கு இந்து அடையாளம்,
உயிர்காப்புக்கு மட்டும் மனித அடையாளம்,
மானுடத்தை வாழவிடுங்கள்!
-கோடங்குடி மாரிமுத்து.
பெரியார்முழக்கம்இதழ்24072025

You may also like...