உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி பாகுபாடுகள் கனிமொழி எம்பி கேள்வி
ஒன்றிய அரசின் மத்திய பல்கலைக் கழகங்களில் நிலவும் தீண்டாமை உள்ளிட்ட பாகுபாடுகள் குறித்து தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேற்று (21-–07–2025) எழுத்துப் பூர்வமான கேள்விகளை எழுப்பினார்.
“உயர் கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில், யு.ஜி.சி. விதிமுறைகள் 2012 இன் படி ஒன்றிய அரசின் மத்திய பல்கலைக் கழகங்களில் Equal Opportunity Cells எனப்படும் சம வாய்ப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா?
அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் அத்தகைய பிரிவுகளை உருவாக்கிய மத்திய பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை விவரங்கள் என்ன? இல்லையென்றால், சம வாய்ப்புக் குழுக்கள் அமைக்கப்படாததற்கான காரணங்கள் என்ன?
ஒன்றிய அரசின் கல்லூரி-பல்கலைக்கழக வளாகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடு காட்டப் பட்ட சம்பவங்கள் குறித்த தரவுகளை அரசாங்கம் பராமரிக்கிறதா?
அப்படியானால், கடந்த ஐந்து ஆண்டுகளிலும் நடப்பு ஆண்டிலும் ஒன்றிய அரசின் மத்திய பல்கலைக்கழகங்களில் நடந்த இத்தகைய சம்பவங்களின் விவரங்கள், கல்லூரி வாரியாக/பல்கலைக்கழக வாரியாக எத்தனை? தரவுகள் இல்லையென்றால், அதற்கான காரணங்ள் என்ன?
பாகுபாடுகளை எதிர்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அல்லது அரசு வழங்கிய உதவிகள் என்ன?
சாதி அடிப்படையிலான பாகுபாட்டால் எழும் குறைகளை நிவர்த்தி செய்ய ஒன்றிய அரசாங்கம் ஏதேனும் கூடுதல் வழிமுறைகளை வகுக்க, திட்டமிட்டுள்ளதா? அப்படி யானால், அதன் விவரங்கள் மற்றும் இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?”
ஆகிய கேள்விகளை கனிமொழி கருணாநிதி எம்.பி. எழுத்துபூர்வமாக கேட்டிருந்தார்.
ஒன்றிய கல்வி அமைச்சர் பதில்!
இக்கேள்விகளுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் இணையமைச்சரான டாக்டர் சுகந்தா மஜும்தர் அளித்துள்ள பதில் வருமாறு :–
“ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்துக்கு உட்பட்ட 48 மத்திய பல்கலைக் கழகங்களிலும் மாணவர்களிடையே சமத்துவத்தை உறுதிப்படுத்துகிற Equal Opportunity Cells எனப்படுகிற சம வாய்ப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப் பட்ட சட்டங்களின் கீழ் நிறுவப்பட்ட சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்புகளாகும்.
மேலும் அந்தந்த பல்கலைக் கழகங்கள் அவற்றுக்கென உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறை விதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
ஒன்றிய கல்வி அமைச்சகமும், யுஜிசியும் உயர் கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடுக்கவும், பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகின்றன. மத்திய பல்கலைக் கழகங்களில் பாரபட்சம், பாகுபாடு உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி வலைத் தளங்கள் அல்லது புகார் பதிவேடுகள் மூலம் புகார்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகளை நிறுவப்பட்டுள்ளன.
SC/ST/OBC மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களிடமிருந்து பெறப்படும் பாகுபாடு குறித்த புகார்களில், தவறு செய்யும் நபர்கள் மீது உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவர் குறை தீர்க்கும் குழுக்களை (SGRCs) அமைத்தல் மற்றும் குறைதீர்ப்பு அதிகாரிகளை நியமித்தல், சம வாய்ப்பு குழுக்களை நிறுவுதல், மாணவர்களுக்கு கவுன்சிலிங் மையங்கள் மூலம் ஆலோசனை வழங்குதல் ஆகியவை இதில் குறிப் பிடத்தக்கவை ஆகும்.
மேலும் உயர் கல்வி நிறுவனங்களில் ராகிங் மற்றும் பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன”.
இவ்வாறு ஒன்றிய கல்வித் துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெரியார்முழக்கம்இதழ்24072025
