‘டார்வின்’ நேருக்கு நேர் நடந்த விவாதம்! கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(6) -விடுதலை இராசேந்திரன்

உயிர்கள் எப்படி தோன்றின? இந்த கேள்விக்கான பதில்கள் காலத்துக்கு ஏற்றார் போல் மாறிக்கொண்டிருக்கின்றன. இந்த கேள்வி எப்போது உருவானது? மனித மூளை உருவான பிறகுதான். கடவுளை, மதத்தை, ஜாதியை உருவாக்கியது மனித மூளை தான்.

ஆதிசேஷன் என்ற பாம்புதான் பூமியைத் தாங்கிக் கொண்டு இருப்பதாக இந்து புராணங்கள் கூறுகின்றன. நானே கடவுள்; பக்தர்களைக் காக்கவும் வர்ண தர்மத்தை நிலைநாட்டவும் நான் வந்திருக்கிறேன். தர்மம் மீறப்படும்போது நான் அவதாரம் எடுத்து வருவேன். அது சாம்ப வாமி யுகே, யுகே என்று கீதையில் கிருஷ்ண பகவான் கூறுவதாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல கடவுளே மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்று படைத்தார் என்றும் கீதை கூறுகிறது.

இந்த மனிதர்களை வர்ண பாகுபாடுடன் உயிரையும் உடலையும் தந்து பூமிக்கு அனுப் பியவர்கள் கடவுள்கள் தான் என்ற நம்பிக்கை மக்கள் மீது திணிக்கப்பட்டது. உண்மையில் கடவுள் எந்த மனிதரையும் படைக்கவில்லை. அது பரிணாம வளர்ச்சியின் வடிவம் என்று கண்டறிந்தார் சார்லஸ் டார்வின். தந்தையின் கட்டளையை ஏற்று மதகுருவுக்கான கல்வி பயின்றவர், அதில் நாட்டம் அடையவில்லை. ஒரு கப்பலில் ஏறி உலகைச் சுற்றி ஆராய்ந்தார். பரிணாம வளர்ச்சி கருத்தியலை உருவாக்கினார்.

உண்மையில் உயிர் எப்படி தோன்றியது? உயிர் தானாகவே தோன்றியது. மழை நீர் தனக்கு என்று தானாகவே ஒரு பாதையை அமைத்துக் கொண்டு ஓடுவது போல், காற்று பாறைகளை தானாக செதுக்கி கொண்டு போவது போல், இரண்டு மேகங்கள் மோதும் போது மின்னல் பீறிடுவதைப் போல், ஒரு குறிப்பிட்ட சூழல் கூடி வந்தபோது சில ரசாயனங்களின் அதிசய இணைப்பாக அதிசய சங்கமாய் உயிர் உருவானது. அப்படி உருவான நிலையான முதல் உயிர் துகள்தான் ‘ஆர்என்ஏ’ என்பது.

ஆர்என்ஏ என்பது கண்ணுக்கு தெரியாத ஒரு ரசாயன சங்கிலி. அதற்கு தன்னைத்தானே மறுபடியும் பிரதி எடுத்துக் கொள்ளும் அசாத்திய வல்லமை உண்டு. உலகின் முதன் முதலில் தோன்றிய இந்த ஆர்என்ஏ தொடர்ந்து பெருகி பெருகிப் பல தலைமுறைகளை உருவாக்கி காலத்தை வென்ற ஒரு மிக நீண்ட அறுக்க முடியாத சங்கிலித் தொடராய் இன்றும் உயிர் வாழ்கிறது.

அது தலைமுறைக்குத் தலைமுறை தாவுவதால் அதை மரபு என்றும், ரசாயன துகள்கள் என்பதால் அணு என்றும், இரண்டையும் இணைத்து மரபு அணு என்றும் அழைக்கிறோம். இன்று வரை நம்மை தாக்கும் பல வகை கிருமிகள் வெறும் ஒரு ஆர்என்ஏ சுருள் சங்கிலி கொண்டவைதான். உதாரணத்திற்கு இன்று உலகயே அச்சுறுத்தும் வைரஸ்கள் ஒரு ஆர்என்ஏ மரபு கொண்டவைதான்.

உலகம் தோன்றிய புதிதில் உருவான அந்த ஆர்என்ஏ என்னும் சங்கிலி பிறகு கூடுதல் வலிமை பெற்று டிஎன்ஏ என்று மாறியது. அந்த டிஎன்ஏ என்னும் கால சூழலுக்கு ஏற்றார் போல் தன்னைத்தானே பரிணமித்துக் கொண்டே போக பல வகை உயிரினங்கள் தோன்றின. அப்படி தொடர்ந்து பரிணமித்து கொண்டே போனதன் தற்போதைய உச்சந்தான் இப்போது நாமாக இருக்கிறோம்.

டார்வினின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. மற்றொரு கண்டுபிடிப்பையும் அவர் அறிவித்தார். அது என்ன?

“அனைத்திற்குள்ளும் உயிர்வாழ்வதற்கே பெரும் போட்டி நிகழ்கிறது. இந்த “Struggle for existence” எனும் வாழ்வியல் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்றால், எந்தச் சூழலிலும் பிழைக்கும் வல்லமை வேண்டும். இயற்கையில் எதுவுமே நிலையானதல்ல, எல்லாமே காலத்தோடு மாறிக்கொண்டே இருக்கும், இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுத்துத் தானும் அதற்குத் மாறி, “Adopt” செய்துகொண்டே இருந்தால்தான், இயற்கையின் இந்தச் சவால்களை மீறிப் பிழைக்க முடியும். இப்படி இயற்கையோடு இணைந்து மாறிக்கொண்டே இருக்கும் வல்லமை கொண்ட ஜீவராசிகளால் மட்டும்தான் தாமும் பிழைத்து, அதிக எண்ணிக்கையில் தன் இனத்தையும் பரப்பிக்கொள்ள முடியும். இதைத் தான் இயற்கைத் தேர்வு, “Natural selection” என்றார் சார்லஸ் டார்வின். இந்தத் தேர்வில் தேர ஒரே ஒரு விதிதான்: “Survival Of The Fittest”. சூழ்நிலைக்கு ஏற்ப, தன்னைத் தானே மாற்றிக் கொண்டும் எதற்கும் பொருத்திக் கொள்ளும் வல்லமை பெற்றவை மட்டும்தான் பிழைத்துக்கொள்ள முடியும்”.

சூழலை உணராமல் இருப்பது, அதற்கேற்ப மாறாமல் இருப்பது, பொருத்தமாய் மாறாமல் இருப்பது என்று பிழைக்கத் தெரியாமல் தவிக்கும் ஜீவன்களை அப்புறப்படுத்திவிட்டு, போட்டியில் பங்கேற்கும் தயார் நிலையில் இருப்பனவற்றை மட்டும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்கிறது இயற்கை.

கடவுள் மனிதனை உருவாக்கவில்லை என்று மனித பிறப்பிலிருந்து கடவுளை ஒதுக்கி வைத்த டார்வின் கருத்தை மதவாதிகள் கடுமையாக எதிர்த்தார்கள். கிபி 1860 ஆம் வருடம் ஜூன் மாதம் இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வளாகத்தில் மிகப்பெரும் வாதம் ஒன்று நடந்தது. இயற்கை தேர்வின் மூலம் உயிரினங்களின் தோற்றம் என்ற நூலை அப்போது வெளியிட்டிருந்தார் சார்லஸ் டார்வின். பரிணாம தத்துவத்தை 230 பக்கங்களில் அந்த நூலில் அவர் விவரித்து இருந்தார்.

பாதிரியார்கள் டார்வினுக்கு பகிரங்கமாக பொது மேடையில் விவாதிக்க தயாரா? என்று சவால் விட்டார்கள். சவாலை டார்வின் ஆதரவாளர்கள் ஏற்றார்கள். டார்வின் ஆதரவாளர்கள் ஹக்ஸ்லியும், ஹூக்கரும் பாதிரியார்களுடன் நேரடியாக விவாதிக்க பல்கலைகழ்கம் வந்திருந்தனர். டார்வின் கருத்துக்களை எதிர்ப்பதற்கு பிஷப் வில்பர் போர்ஸ் என்ற பாதிரியார் கம்பீரமாக கர்வத்தோடு தலை நிமிர்ந்து வீற்றிருந்தார். அவரைச் சுற்றி அவரது சீடர்கள் சூழ்ந்து நின்றார்கள், விவாதம் தொடங்கியது.

வேத நூலை முத்தமிட்டு சிலுவை ஏந்திய கரங்களுடன் தொண்டையை கனைத்து விட்டு பேச ஆரம்பித்தார் பிஷப்.

“மக்களே பரம பிதாவின் பெயரால் உங்களை வேண்டுகிறேன் சாத்தானின் அவதாரமான சார்லஸ் டார்வின் நீங்கள் எல்லாம் குரங்கிலிருந்து தோன்றியவர்கள் என கூசாமல் கூறியிருக்கிறான். பாலூட்டி சீராட்டி வளர்த்த உங்கள் பாட்டன்மார்களும் முப்பாட்டன்மார்களும் குரங்குகளா? இதை ஏற்கப் போகிறீர்களா? எனது கேள்விக்கு இங்கு அமர்ந்திருக்கும் குரங்கின் சீடர்கள் என்ன பதில் தருவார்கள்? இவர்கள் குரங்கிலிருந்து உதித்ததாக சொல்வது தான் பாட்டி வழியா? பாட்டன் வழியா? என்ற கேலியுடன் டார்வின் ஆராய்ச்சியை கடுமையாக எதிர்த்தார்”.

டார்வின் சீடர் ஹக்லி நெற்றியடி தந்து பதில் கூறினார். அறிவியல் பூர்வமாக அவர் அனைத்து மறுப்புகளையும் எடுத்து வைத்தார். கூடியிருந்த மக்கள் இந்த அறிவியல் கருத்துக்களை உணர்ந்து நியாயமாக ஏற்க வைப்பதில் அவர் வெற்றி பெற்றார் அறிவியலுடன் மதத்துக்கு விவாதம் வரலாற்றில் தொடங்கியது.

அதன் பிறகும் டார்வின் எதிர்ப்பு குறையவில்லை. குரங்குகளை கண்ட இடமெல்லாம் மதவாதிகள் கல்லால் அடித்துத் துரத்தினார்கள். இங்கிலாந்தின் தேவாலயங்களில் கருப்பு உடை தரித்த பாதிரியார்கள் டார்வின் புத்தகத்தை தங்கள் காலில் போட்டு மிதித்தார்கள். இறைவனின் புனித கொள்கையை சாத்தானாகிய டார்வின் இடமிருந்து காப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். ஆனால் வரலாற்றுப் போக்கில் டார்வின் அறிவியல் கருத்தை மதவாதிகளால் மறுக்க முடியவில்லை.

1860 இல் இப்படி கடுமையாக எதிர்த்தவர்கள் 1996 இல் கீழே இறங்கி வந்தார்கள். வாடிக்கன் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு அன்றைய போப் ஜான் பால் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் கடவுள் மனிதனை பிடித்து வைத்து உருவாக்கவில்லை, படிப்படியாக பரிணம வளர்ச்சி மூலம் மனிதனை தேவன் உருவாக்கினான் என்று கீழே இறங்கி வந்தார்கள். காலில் போட்டு மிதித்த சாத்தானின் கருத்தை 137 ஆண்டுகள் கழித்து சிறிது ஏற்கிறோம் என்ற நிலைக்கு அவர்கள் கீழே இறங்கினார்கள். அறிவியல் வென்றது! மதம் தோற்றது.

எல்லா வாதங்களிலும் தோற்ற பிறகு ஒரு பக்தன் முன்வைக்கும் கடைசி இரண்டு வாதங்கள் இருக்கின்றன். “நீங்க நம்பினா; நம்புங்க நம்பாட்டி போங்க, அந்த கோயிலுக்குப் போனா எனக்குள்ள ஒரு ஃபீலிங் வருது பாருங்க, அதாங்க கடவுள்! என்ன வேணா சொல்லுங்க, நமக்கு மேல ஏதோ ஒரு பவர் இல்லாம இந்த உலகம் உருவாகியிருக்க முடியுமா? ஒன்று உள்ளே, இன்னொன்று வெளியே” என்பதே அவர்வாதம்.

புறவய உலகத்தின் ‘தோற்றம்’ குறித்த புதிரையும், அகவயமாக மனித மூளையில் தோன்றும் ‘உணர்வு’ குறித்த புதிரையும் விடுவிக்கும் முயற்சியில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது அறிவியல். மதவாதிகளின் மொழியில் சொல்வதென்றால் ‘பிரம்ம ரகசியத்தையும்’ ‘ஆன்ம ரகசியத்தையும்’ ‘கண்டு’, பிறகு அதனை `விண்டு’ உலகத்திற்குச் சொல்லவும் முனைந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
(உதவிய நூல்கள்: மருதையன் – இளநம்பி எழுதிய மதமும் அறிவியலும் நூலிலிருந்து, மருத்துவர் ஷாலினி எழுதிய கொஞ்சம் டார்வின், கொஞ்சம் டாக்கின்ஸ் நூலிலிருந்து)
-தொடரும்…
பெரியார் முழக்கம் 10072025இதழ்

You may also like...