காசாவில் இனப்படுகொலை

ஒவ்வொரு நாளும் காசாவில் இருந்து வரும் செய்திகள் உள்ளத்தை உலுக்குகிறது. இந்த படுகொலை எப்போது முடிவுக்கு வரும்? மனிதம் செத்துவிட்டதா? என்ற கேள்விகள் துளைத்தெடுக்கின்றன. நடப்பது இனப்படுகொலைதான் என்று நார்வேயில் உள்ள சர்வதேச நீதிமன்றம் அறிவித்துவிட்டது. தென்னாப்பிரிக்கா நாடு தொடர்ந்த இந்த வழக்கில் இந்த முடிவுக்கு வருவதற்கு சர்வதேச நீதிமன்றம் நீண்ட காலம் எடுத்துக் கொண்டது. 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீன போராளி குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து, இஸ்ரேலினுடைய தாக்குதல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதுவரை 51,821 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் ஆவார்.

சடலங்களை அடக்கம் செய்வதற்குக் கூட இடமில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. யுத்தம் தொடங்கியபோதே காசாவில் வாழ்ந்த மக்கள் 23 லட்சம் பேர். இதில் 90% பேர் இருப்பிடங்களை பலமுறை மாற்றிக்கொண்டு உயிர் வாழ்கின்ற கட்டாயத்திற்கு உள்ளானார்கள். 46 சதுர கிலோமீட்டர் பகுதிக்குள் இவர்கள் முடக்கப்பட்டுள்ளார்கள். ஒரு சதுர கிலோமீட்டரில் 43,438 பேர் குவிக்கப்பட்டுள்ளார்கள். உணவு, உடல் நலம், மருத்துவம் அனைத்தும் சீரழிந்து விட்டது என்று அய்.நா. அமைப்புகள் கூறுகின்றன. பாலஸ்தீனியர்களின் உயிர் வாழ்க்கை திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது.

பரிதவிக்கும் மக்களுக்கு நிவாரண உதவிகள் தடுக்கப்படுகின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் உணவு, தண்ணீர் வழங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டது. காசா மக்களின் மனித மாண்பு பறிக்கப்பட்டு விட்டது என்று அய்.நா. கூறுகிறது.

வெளிநாட்டு ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் வழியாக நிதி உதவி பெறுவதற்கும் தடை. அண்மையில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 30 நாடுகள் இணைந்து இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற படுகொலைகளை அழுத்தமாக கண்டித்துள்ளன. அடிப்படை தேவைகளுக்கான மனிதாபிமான உதவிகளை தடுக்கிறது என்றும், இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் இஸ்ரேல் காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனர்கள் முற்றாக அப்புறப்படுத்துகிறார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இஸ்ரேல் நாட்டில் இருந்தே இரண்டு மனித உரிமை அமைப்புகள் காசாவில் நடப்பது இனப்படுகொலை என்று இஸ்ரேல் அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் இந்த எதிர்ப்புகளுக்கு இஸ்ரேல் செவி சாய்க்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கி தீவிர ஆதரவளிக்கும் ஜெர்மனியும் அமெரிக்காவும் இந்த கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டன.

பாலஸ்தீனர்களின் காசாவை தங்களின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதே நோக்கம் என்று இஸ்ரேல் தலைவர்கள் வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர். இஸ்ரேல் நாட்டின் இரண்டு முன்னாள் பிரதமர்கள் எகட் ஒல்மார்ட் (Ehud Olmert), ஏர்லேப்பிட் (Yair Lapid) காசா இப்போது சித்திரவதை முகாம் என்று பெருமைப்படுகிறார்கள். காசாவில் கடும் பஞ்சம் உருவாகும்போது மக்களே தங்களுக்குள் மோதிக் கொள்வார்கள் அப்போது பிரச்சினை முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் நாளேடு (Jean Dreze) வெளிப்படையாகவே எழுதுகிறது.

இஸ்ரேல் தாக்குதல் தொடங்கிய நாளிலிருந்து இருந்து அய்.நா. பொதுச் சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக 10 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் 7 தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா, 3 தீர்மானங்களுக்கு வாக்கெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கி இஸ்ரேலுக்கு மறைமுக ஆதரவை தெரிவித்தது.

காசாவில் நடக்கும் இனப்படுகொலயை நிறுத்த வலியுறுத்தி கடந்த ஜூன் மாதம் கொண்டுவரப்பட்ட அய்.நா.வின் முக்கியமான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது மிகப்பெரிய துரோகமாகும்.

பாலஸ்தீனியத்துக்கு ஆதரவாக ஈரான் இருப்பதால் அந்த நாட்டின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியது. இதை கண்டித்து சர்வதேச கூட்டமைப்பு (Shanghai Cooperation Organisation) கண்டன அறிக்கை வெளியிட்டது. இதில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது. இதன் மூலம் வெளிப்படையாக தனது இஸ்ரேல் ஆதரவை அது வெளிக்காட்டி காட்டிக் கொண்டது.

நேரு காலத்திலிருந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாடுகளையே இந்தியா எடுத்து வந்தது. பாஜக படிப்படியாக இதில் நடுநிலைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, இப்போது இஸ்ரேல் பக்கம் சாய்ந்து விட்டது.

இந்தியா-பாகிஸ்தான், காம்போடியா-தாய்லாந்து யுத்தங்களை எல்லாம் நிறுத்திவிட்டதாக தம்பட்டம் அடிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், காசா இனப்படுகொலைக்கு எதிராக ஏன் குரல் கொடுக்கவில்லை. இதில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதற்கான காரணம் இசுலாமிய வெறுப்பு அல்லாமல் வேறு என்ன?

தேசங்களும், நாடுகளும் மக்களைக் காப்பாற்றுவதற்காக இல்லாமல் தங்களுடைய அதிகாரங்களைக் காப்பாற்றுவதற்காக துடித்துக் கொண்டிருக்கின்றன என்பதே காசாவின் இனப்படுகொலை உணர்த்துகிறது.
பெரியார்முழக்கம்இதழ்31072025

You may also like...