கோயில்களைப் பள்ளிகளாக மாற்றிய பூந்தோட்டம்!‌

வரலாற்று பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த சமூக புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரை தொடரை முரசொலியில் ர.பிரகாசு எழுதி வருகிறார். இது பூந்தோட்டத்தில் நடந்த புரட்சி! “எங்கள் ஊரில் முன்பு கோயில் இருந்தது. பெரியார் ஒருமுறை எங்கள் ஊருக்கு வந்தார். ‘இந்த ஊர்ல இத்தன கோயில் இருக்கே? எத்தனை பள்ளிக்கூடம் இருக்கு? எவ்வளவு தற்குறியாவும், கைநாட்டுப் பசங்களாகவும் திரியறீங்க? பொம்பளங்கள, புள்ளை பெக்குற மெஷினாட்டம் வச்சிருக்கீங்க! பெண்களைப் படிக்க வச்சிங்கன்னா மொத்த சமுதாயத்தையும் காப்பாத்துவாங்க’ என்று பேசினார். உடனே கோயில்கள் எல்லாம் பள்ளிகளாக மாறிவிட்டன. இப்போது வீட்டுக்கு ஒரு குழந்தையை ஆசிரியருக்குப் படிக்க வைக்கிறோம். அதுவும் பெண் குழந்தையை” என்று கூறியுள்ளார்.

தினமணியின் மகளிர் மலர் ஒன்றில் ஒருமுறை மனோரமா அளித்த நேர்காணலில் சொன்ன தகவல் இது. மனோரமா சொன்ன அந்த ஊர், கடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்கு அருகே உள்ள பூந்தோட்டம் கிராமம். மனோரமா கூறியதுபோல, 1945-ஆம் ஆண்டில் பெரியாரும், அண்ணாவும் பூந்தோட்டம் கிராமத்திற்குச் சென்றுள்ளனர். அதுகுறித்து, ‘பூந்தோட்டத்தில் ஒரு நாள்’ என அண்ணா `திராவிட நாடு’ இதழில் பதிவு செய்துள்ளார். மீண்டும் 1956, 57-இல் சுயமரியாதைத் திருமணங்களை நடத்திவைக்க பூந்தோட்டம் கிராமத்திற்கு பெரியார் சென்றார். அப்போது அந்த ஊரில் எல்லா வீடுகளிலும் பெரியார் படம் இருந்தது. 1960-களில் 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அங்கு உருவாகிவிட்டனர். அவ்வூரின் மக்கள்தொகையே இன்றும் சராசரியாக 500 பேர்தான். இப்போதும் அங்கு கோயில் இல்லை, சுயமரியாதைத் திருமணங்கள் தொடர்ந்து நடக்கின்றன. கல்விக்கு முக்கியத்துவம் தருவதும் இப்போதும் தொடர்கின்றது.

இது குறித்து வழக்கறிஞர் பாண்டியராஜன் (கடலூர் மாவட்டச் செயலாளர், அம்பேத்கர் நூற்றாண்டு இயக்கம்) கூறியதாவது… “நான் 8-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் ஊரில் குளங்களைத் தூர்வாரினார்கள். அப்போது உள்ளே கடவுள் சிலைகள் இருந்தன. ஆர்வமாக நாங்கள் விசாரித்தபோது, பெரியார் தாக்கத்தால் கோயில்களை அகற்றியபோது, சிலைகளை ஊர் மக்களே குளங்களில் வீசியது தெரியவந்தது. எங்கள் தலைமை ஆசிரியருக்கே பெரியார்தான் இங்கு வந்து சுயமரியாதைத் திருமணம் செய்துவைத்தார். பெரியாரால்தான் எங்கள் ஊர் கல்வியில் முன்னேறியது. அவருடைய தாக்கம் இன்னும் எங்கள் ஊரில் இருக்கிறது’’.

பேராசிரியர். பூ.சி இளங்கோவன் சிதம்பரம் மாவட்டத் தலைவர் கூறுகையில் “எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாடகக் குழுவில் இருந்த கலைமாமணி பி.எஸ்.தட்சிணாமூர்த்தி குழுவில் நடிக்கவே மனோரமா இங்கு வந்தார். பெரியார், அண்ணா மட்டுமல்ல கலைஞர், பேராசிரியர், நாவலர், மதியழகன் போன்றோரும் ‘பூந்தோட்டம்’ வந்துள்ளனர். இப்போது 3-வது தலைமுறை மாறிவிட்டது, அதற்கேற்ப மாற்றங்களும் ஏற்பட்டுவிட்டன. ஆனால், பெரியாரின் சுவடுகள் இன்னும் தொடர்கிறன்றன.’’
பெரியார் முழக்கம் 10072025இதழ்

You may also like...