“விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல நீதித்துறை”

நீதித்துறை மீதான விமர்சனங்கள் வைக்கப்படும்போதெல்லாம் நீதிமன்ற அவமதிப்பு என்கிற “பூச்சாண்டி” காட்டப்படுவது வழக்கமாகி வருகிறது.

நீதிமன்றங்களும், தீர்ப்புகளும், நீதிபதிகளின் நடவடிக்கைகளும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையா என்றால் இல்லை…!

அரசமைப்பு சட்ட சரத்து 19 (1) (a) படி இந்திய குடிமக்களுக்கு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை வழங்குகிறது. இதன் பொருள், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தனது கருத்துக்களை எந்த தடையும் இன்றி வெளிப்படுத்தவும், சுதந்திரமாகப் பேசவும் உரிமை உண்டு. ஆனால், இந்த உரிமை வரம்புகள் இல்லாமல் இல்லை. சில குறிப்பிட்ட காரணங்களுக்காக இந்த உரிமை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படலாம்.

அதாவது சரத்து 19 (2) படி இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளிநாட்டு நாடுகளுடனான நட்புறவு, பொது ஒழுங்கு, கண்ணியம் அல்லது ஒழுக்கம் அல்லது நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு அல்லது குற்றத்தைத் தூண்டுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக பேச்சு மற்றும் கருத்துரிமை கட்டுப்படுத்தப்படலாம். இதில் நீதிமன்ற அவமதிப்பு என்பதைத்தான் நீதிபதி திரு.ஜி.ஆர் சுவாமிநாதன் கையில் எடுத்திருக்கிறார்.

சரி…நீதிமன்ற அவமதிப்புச் சட்டம், 1971 சொல்வதைப் பார்ப்போமே.
நீதிமன்ற அவமதிப்புச் சட்டம்,1971, பிரிவு 4 சொல்வது:

சட்டப்பிரிவு 7-ன் அடிப்படையில், நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நியாயமான மற்றும் துல்லியமான அறிக்கையை வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பாகாது.

சட்டப்பிரிவு 7-ன் படி, நீதிமன்றத்தின் செயல்பாடுகள் அல்லது அதன் எந்தவொரு நிலையையும் பற்றிய நியாயமான மற்றும் துல்லியமான அறிக்கையை வெளியிடுவது, நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகாது.

அதாவது, நீதிமன்ற நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் நோக்கில், உண்மையான மற்றும் துல்லியமான தகவல்களை வெளியிட்டால், அது நீதிமன்ற அவமதிப்பு என்று கருதப்படாது.

சாதாரணமாக, நீதிமன்ற அவமதிப்பு என்பது நீதிமன்றத்தின் செயல்பாடுகளை அவமதிப்பது அல்லது நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் இருப்பது போன்ற செயல்களைக் குறிக்கும். ஆனால், சட்டப்பிரிவு 7, நீதிமன்ற நடவடிக்கைகளின் அறிக்கைகளை வெளியிடுவதில் உள்ள நியாயமான எல்லைகளை வரையறுக்கிறது.

எனவே, நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நியாயமான மற்றும் துல்லியமான அறிக்கையை வெளியிடுவது, நீதிமன்ற அவமதிப்பாகாது.

சட்டப்பிரிவு 5 சொல்வது: சட்டத்தின் முன், ஒரு வழக்கு முடிவடைந்துவிட்ட பிறகு, அதன் நியாயங்களைப் பற்றிய நியாயமான விமர்சனத்தை வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படாது.

சட்டத்தின்படி, ஒரு நபர் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்டு, முடிவு செய்யப்பட்ட ஒரு வழக்கின் அம்சங்களைப் பற்றி நியாயமான கருத்தைத் தெரிவித்தால், அது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகாது.

சுருக்கமாக, ஒரு வழக்கு முடிவடைந்த பிறகு, அதன் தீர்ப்பைப் பற்றி ஒரு நியாயமான விமர்சனம் வைப்பது நீதிமன்ற அவமதிப்பு அல்ல. மேலும், பிரசாந்த் பூசன் வழக்கிலும், அருந்ததி ராய் வழக்கிலும் நீதித்துறையின் மீதான விமர்சனங்கள் அனுமதிக்கவேப்பட்டிருக்கின்றன. நீதிபதி.திரு.ஜி.ஆர் சுவாமிநாதன் அவர்களினின் மீதான விமர்சனத்திற்கு ஆதாரத்துடன் உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றதற்காக வழக்குரைஞர் தோழர்.வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடுக்கக் கூடாது என்று நீதிபதி.திரு.ஜி.ஆர் சுவாமிநாதன் கேள்வி எழுப்பியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு வழக்குரைஞர் தோழர்.வாஞ்சிநாதன் எழுத்துப் பூர்வமாக கேட்கப்பட்டால் பதில் தருவதாக சொல்லியிருக்கிறார்.

இப்படி சட்டமே அனுமதித்த உரிமையில் நீதிபதி.திரு.ஜி.ஆர் சுவாமிநாதன் கைவைப்பது சட்டத்திற்கு புறம்பான ஒன்றே. நீதிக்கான சமர் செய்யும் வழக்குரைஞர் தோழர்.வாஞ்சிநாதன் அவர்களுக்கு துணை நிற்போம்.
-பேரன்பு
(தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர்)
பெரியார்முழக்கம்இதழ்31072025

You may also like...