சுயஜாதிப் பற்று ஜாதி எதிர்ப்பு அல்ல!

திரிபுவனம் காவல் நிலையத்தில் நடந்த சித்திரவதை படுகொலையை சகித்துக் கொள்ள முடியவில்லை. காவல்துறையின் அடக்குமுறை கலாச்சாரம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.

அதே நேரத்தில் இப்படி ஒரு படுகொலை நடந்திருக்கிறது என்ற செய்தி வந்தவுடன் தமிழ்நாடு முதல்வர் அவசரமாக அதிகாரிகளைக் கூட்டி ஆலோசித்து குற்றத்தில் தொடர்புடைய ஐந்து காவல்துறையினர் மீது சஸ்பெண்ட் என்ற பெயரளவிலான நடவடிக்கையை எடுக்காமல், கொலைக் குற்றத்தின் கீழ்கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட காவல்துறை அதிகாரியும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்குப் பிறகும் இதில் அரசை குற்றம் சாட்டுவதற்கு ஏதேனும் ‘சந்து பொந்து ‘இருக்கிறதா? என்று தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை அதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. காவல் மரணம், போதை மருந்து, பெண்கள் பாதுகாப்புப் பிரச்சனைகளில் தவறு செய்யும் காவல்துறையானாலும் அரசியல்வாதியாக ஆனாலும் சமூக விரோதியானாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.

மற்றொரு நிகழ்வையும் சுட்டிக்காட்ட வேண்டும். நாயுடு சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண்ணும் ஆசாரி சமூகத்தைச் சார்ந்த ஒரு இளைஞரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். வசதி படைத்த பெண்ணின் தந்தை இந்த இணையர்களை பிரிப்பதற்கு கட்டப்பஞ்சாயத்து நடத்தும் அதிகார செல்வாக்கு உள்ள நபர்களை‌ நாடினார். இதில் புரட்சிப் பாரதம் கட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன் மற்றும் காவல் துறை அதிகாரி கூடுதல் டிஜிபி ஜெயராம் ஆகியோருக்கு தொடர்பு இருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டது.

நீதிமன்றத்தில் இதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. உயர் நீதிமன்றம் இருவரையும் கைது செய்ய உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் வழியாக இருவரும் பிணை விடுதலை பெற்றுள்ளனர். காவல்துறை வாகனத்தில் மணமகனின் தம்பி கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார் என்பதை காவல்துறை அதிகாரியே ஒப்புக் கொண்டுள்ளார்.

இவ்வளவுக்கும் பிறகு இருவரையும் கைது செய்ததற்காக தமிழ்நாடு அரசைக் கண்டித்து எழுதுகிறார்கள். ஆதிக்க ஜாதியின் அடியாட்களாக கட்டப்பஞ்சாயத்து செய்வதைக் கண்டித்து ஜாதி எதிர்ப்பு அமைப்புகள் எந்த கண்டன குரலையும் எழுப்பவில்லையே என்ற வருத்தம் நமக்கு ஏற்படுகிறது.

மாறாக ஜாதியற்றவர்களின் குரலாக அடையாளப்படுத்தி அமைப்பு நடத்துகிறவர்கள் இந்த கைதைக் கண்டித்து எழுதுகிறார்கள். காவல்துறை அதிகாரி ஆனாலும் சட்டமன்ற உறுப்பினரானாலும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துபவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் போது அதை ஆதரிக்க வேண்டியவர்கள் அரசை குற்றம் கூறுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.

ஒடுக்கப்பட்ட சுயஜாதி மக்களின் உரிமைக்குப் போராடுவது ஜாதி எதிர்ப்புதான் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் ஜாதி மறுப்பு இணையர்களைப் பிரிக்க ஜாதி ஆதிக்கவாதிகளுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்பவரை ஆதரிப்பது ஜாதி எதிர்ப்பு அல்ல. அதுசுயஜாதியின் மீதான கண்மூடித்தனமான பற்று. சுயஜாதி உரிமை, சுயஜாதிப் பற்றாக மாறினால், அது ஜாதி தான்; ஜாதி எதிர்ப்பு அல்ல!.
பெரியார் முழக்கம் 10072025இதழ்

You may also like...