செயற்கை உயிர் வந்து விட்டது கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(8) – விடுதலை இராசேந்திரன்
‘இது இறைவன் கொடுத்த உடல்’ என்ற நம்பிக்கையை பொது சமூகம் ஒரளவு புறக்கணித்து விட்டது என்றே கூறலாம். குழந்தை பிறப்புக்கு இறைவனே காரணம் என்ற கூற்று வாழ்வியலில் முறியடிக்கப்பட்டு விட்டது. குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தை அரசாங்கங்கள் செயல்படுத்தி வருகின்றன. அதில் வெற்றியும் பெற்று விட்டன. கருத்தடைச் சாதனங்களை கடவுள் நம்பிக்கையாளர்களே பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.
குழந்தை இல்லாதவர்கள் பரிகார பூஜைகளை மட்டுமே நடத்தி வந்தனர். இப்போது கருத்தரிப்பு மருத்துவ மய்யங்கள் ஊருக்கு ஊர் வந்துவிட்டன. சினை முட்டை, விந்துக்களை இணைத்து அறிவியல் முறையில் கருவை உருவாக்குகிறார்கள். கருவை சுமக்க வாடகை பெண்களும் வந்து விட்டனர்.
கருத்தடைத் திட்டத்தை பெரியார் தீவிரமாக ஆதரித்தார். ‘கர்ப ஆட்சி’ என்ற நூலையும் அவரே வெளியிட்டார். குடும்ப வருமானம், சிக்கன வாழ்க்கை என்று குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை பொருளியல் பார்வையில் பலரும் அணுகினார்கள். ஆனால் பெரியார் பார்வை இதில் மாறுபட்டது. பெண்ணடிமைக்கு முக்கிய பங்கு வகிப்பது குழந்தைப் பேறு தான் என்பதை அவர் உணர்ந்தார். கருப்பை என்ற ஒன்றே பெண்களுக்கு வேண்டாம்! என்ற எல்லைக்கு பெரியார் சென்றார். பெண் விடுதலை கண்ணோட்டத்தில் பெரியார் இதை சிந்தித்தார். பெண் விடுதலை வரலாற்றில் இப்படி ஒரு புரட்சிக் குரலைக் கொடுத்த தலைவர் பெரியார் தான் என்று பெண் விடுதலை சிந்தனையாளர்கள் கொண்டாடுகிறார்கள்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனைகளை நோக்கி வரத் தொடங்கி விட்டார்கள். அது இறைவனின் கொடை என்ற கருத்தியலில் இருந்து வெளியே வந்து விட்டார்கள். மனித உடல் – நெருப்பு, காற்று, நீர், பூமி, வானம் எனும் பஞ்ச பூதங்கள் ஒருங்கிணைப்பால் உருவானது என்றும் உயிர் பிரிந்து மரணம் நிகழும்போது இந்த அய்ந்தும் தனித்தனியே பிரிந்து விடுகிறது என்றும் ஒரு கூற்று நம்பப்படுகிறது. நீண்டகால இந்த நம்பிக்கை அறிவியலுக்கு உடன்பட்டதா? இல்லை.
பிரான்ஸ் நாட்டின் இரசாயனத்துறை ஆராய்ச்சியாளர் அன்டோனி லெவோய்சியர்(Antoine Lavoisier) நிரூபித்த அறிவியல் ஆய்வின்படி நெருப்பு எரிதல் என்பது ஒரு இரசாயன நிகழ்வு. காற்று என்பது வாயுக்களின் (Gases) கலவை. நீர் என்பது, அய்ட்ரஜன் மற்றும் ஆக்சிஜனைக் கொண்டது. எனவே நெருப்பு, காற்று, நீர் தனி தனித் படிமங்கள் அல்ல. அதேபோல பூமியும், வானமும் தனியான படிமங்கள் (Elements) அல்ல.
அறிவியல் கலைக் களஞ்சியம் ‘படிமம்’ என்றால் (Elements) என்னவென்று விளக்குகிறது?. ஒரே வகையான அளவைக் கொண்டதே படிமம். பிரபஞ்சத்தில் அடிப்படையே படிமங்கள் தான். அதை மேலும் எளிமையாகப் பிளக்க முடியாது. உலகில் 109 படிமங்கள் உள்ளன. அதில் 91 இயற்கையாகக் கிடைப்பவை. 18 செயற்கையாக உருவானவை. பூமியில் உயிர் வாழும் அனைத்தும் ‘கார்பன்’ எனும் படிமத்தைத் தான் அடிப்படையாகக் கொண்டவை. உயிர் அணுக்கள் செயல்பாட்டுக்கு கார்பன்தான் அடிப்படையானது. பூமியில் நிறைந்திருக்கும் மற்றொரு படிவம் ஆக்சிஜன். காற்று, நீர், மலைகளிலும் ஆக்சிஜன் உண்டு. ஆனால் ‘பஞ்சபூதம்’ என்று நம்பப்படும் உயிர் வாழ்தலுக்கான அடிப்படையில் கார்பன் இடம் பெறவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். கார்பன் இயங்காவிட்டால் உயிரணுக்கள் இல்லை. அதேபோல் உடல் எலும்புகளுக்கு வலிவூட்டுவது ‘கால்சியம்’.
எலும்புகள் வலுவின்றி மனிதர்களோ, மிருகங்களோ இயங்கவே முடியாது. பிரபஞ்சம் உருவானதற்கு அடிப்படையாக இருந்தது ஹைட்ரஜன். அது 90 சதவீதம் பரவி நிற்கிறது. ஹைட்ரஜன் சுவையோ, மணமோ, வண்ணமோ இல்லாத வாயு. அமிலங்களுக்கு அமிலத் தன்மையைத் தருவதே ஹைட்ரஜன் தான். இப்படி உயிர் வாழ்தலுக்கு கார்பன், கால்சியம் உள்ளிட்ட பல படிமங்கள் கூறுகள் தேவைப்படுகின்றன. இது தான் அறிவியல். ‘பஞ்சபூதம்’ மட்டுமே உயிர் வாழ்தலை உறுதி செய்கிறது என்பது, அறிவியலுக்கு எதிரான நம்பிக்கைகள். ஆன்மீகத்தை – அறிவியலோடு இணைத்து கடவுள் படைப்போடு முடிச்சுப் போடும் பேச்சுகள் அறிவியலுக்கு எதிரானதாகும்!
“சமூகத்தில் உயிரைப் படைத்தது கடவுள்தான்; அதற்காக கடவுளை நம்புகிறேன்; கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்” என்ற நம்பிக்கை மூளை என்ற பொருளுக்குள் திணிக்கப்பட்டுள்ளன. அதற்கும் அறிவியல் இப்போது விடை கண்டு விட்டது. ஆனால் உயிரை கொடுத்தது கடவுளா? என்ற கேள்விக்கு அறிவியல் விடை தந்துள்ளது. உயிர் எப்படி உருவானது என்பது குறித்து இத்தொடரில் ஏற்கனவே விளக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட சூழல் ஒன்று கூடி வரும் போது சில ரசாயனங்கள் இணைந்து வரும் போது ‘உயிர்’ என்ற பொருள் தோன்றியது என்று அறிவியல் கூறுகிறது. உயிரை உருவாக்கியது கடவுள் அல்ல என்பதற்கு இது அறிவியல் தந்த விடை. இப்போது உயிரை மனிதர்களாலே உருவாக்க முடியும் என்று அறிவியல் நிருபித்து கடவுளுக்கு விடை கொடுத்து விட்டது.
அமெரிக்காவின் கிரேக் வென்டர் என்ற விஞ்ஞானி சோதனைக் கூடத்தில் மே, 20, 2010 அன்று உருவாக்கியிருக்கும் புதியதொரு நுண்ணுயிரின் பெயர் சிந்தடிகா(Synthetica). செயற்கையாக உருவாக்கப்பட்ட உயிர் என்ற பொருள்படும் வகையில் சூட்டப்பட்ட பெயர். சடப்பொருள் வேறு, உயிர் பொருள் வேறு; உடல் வேறு, ஆன்மா வேறு என்று கூறி வரும் மதக் கோட்பாடுகள் மற்றும் பல கருத்து முதல்வாத கோட்பாடுகள் அனைத்தின் முகத்திலும் பூசப்பட்டிருக்கும் கரி – சிந்தடிகா.
ஒரு நுண்ணுயிரி (பாக்டீரியா) டி.என்.ஏவை (மரபணுவை) வேதியல் மூலக்கூறுகளாக செயற்கையாக உருவாக்கினார்கள். செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த டி.என்.ஏவை (மரபணுவை) வேறு ஒரு நுண்ணுயிருக்குள் (பாக்டீரியாவுக்குள்) செலுத்தினார்கள். அதற்காக இந்த நுண்ணுயிரின் (பாக்டீரியாவின்) டி.என்.ஏக்களை அகற்றி வெறும் கூடாக வைத்திருந்தனர். அந்த கூட்டுக்குள் செயற்கையாக உருவாக்கப்பட்ட டி.என்.ஏ(மரபணு) செலுத்தப்பட்ட போது புதிய நுண்ணுயிர் ‘உயிர்’ பெற்றது. அதாவது வேதியல் மூலக்கூறு வழியாக ‘உயிர்’ உருவாக்கப்பட்டது.
சிந்தடிகா என்பது இயற்கை தனது இயக்கத்தின் போக்கில் தானே படைத்த புதியதொரு உயிரல்ல; ஏற்கெனவே இருக்கின்ற ஒரு உயிரின் மரபணுவை பிரதி எடுத்து குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட டாலி ஆட்டினைப் போன்ற நகலும் அல்ல. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி அல்லது தக்காளியைப் போன்றதும் அல்ல. இயற்கை படைத்த கூட்டுக்குள் நுழைக்கப்பட்டிருக்கும் செயற்கை என்று இதைச் சொல்லலாம். உயிரற்ற சடப் பொருளிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உயிர் அறிவியலால் உருவானது. கடவுள் என்ற சக்தியிடமிருந்து விரதம் இருந்து, பூஜை நடத்தி, தவம் செய்து பெறப்பட்டது அல்ல! வேதத்தில் இதற்கான மந்திரங்களும் இல்லை. சிற்பி வடித்த கல் சிலைக்கு உயிர் கொடுத்து கடவுளாக்கும் சக்தி வேத மந்திரத்துக்கு உண்டு என்ற ஏமாற்று கருத்தை இப்போதும் சமூகம் நம்புகிறது. மந்திர சக்தியால் உயிர் கொடுக்கப்பட்ட அந்த கடவுளை தரிசிக்கக் கூடும் பக்தர்கள் கூட்டத்திலேயே நெரிசலில் சிக்கி மரணம் அடைகிறார்கள்.
சிலைக்கு உயிர் கொடுக்கும் வேத மந்திரங்கள் இந்த மனிதர்களுக்கு உயிர் கொடுக்காதா? பகுத்தறிவாளர்கள் இந்த கேள்வியை கேட்டால் மதத்தைப் புண்படுத்துகிறார்கள் என்று கூறுகிறார்கள். நீதிமன்றம் போய் வழக்குத் தொடுக்கிறார்கள் இப்படிப்பட்ட மரணங்கள் நிகழும் போது கடவுளை இதிலிருந்து ஒதுக்கிவிட்டு சட்டஒழுங்கு , காவல்துறை அரசியல் என்ற பிரச்சனைகளை கடவுளுக்கு பதிலாக புகுத்தி விடுகிறார்கள்.
இந்த அறிவியல் கண்டுபிடிப்பான செயற்கை உயிர், அதாவது செயற்கையான ஒரு மரபணு தொகுப்பு உருவாக்கப்படுகிறது. அதற்காக அதன் வேதியல் சேர்க்கை முறை கண்டறியப்படுகிறது, இப்படி உருவாக்கப்பட்ட மரபணு தொகுப்பு வேறு ஒரு செல்லுக்குள் செலுத்தப்படுகிறது. அந்த மரபணு தொகுப்பை ஏற்றுக்கொண்டு செயல்படு என்று செல்லுக்கு கட்டளையிட்டு ஏற்க வைக்கும் உயிரியல் மொழியை அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டு அது செயல்படுத்த வைக்கப்படுகிறது. அந்த மொழி சமஸ்கிருதம் என்ற செத்த மொழி அல்ல! கணினி வடிவாக உருவாக்கப்பட்ட அறிவியல் மொழி. இந்த செயற்கை உயிரை உருவாக்கிய “நவீன பிரம்மா” அமெரிக்க விஞ்ஞானி கிரேட் வெண்டர். அவரது குழுவினரும் இணைந்து நடத்திய அறிவியல் புரட்சி.
உயிரைச் செய்றகையாக உருவாக்கும் ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகின்றன. ஒரேகானில் உள்ள ரீட் கல்லூரியின் தத்துவத்துறைப் பேராசிரியரும், முற்றிலும் இரசாயனப் பொருட்களிலிருந்தே செயற்கை உயிரை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் புரோட்டோ லைஃப் என்ற இத்தாலிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் பெடோ, கடவுளின் ஏரியா என்று கருதப்படும் பகுதிக்குள் நாம் நுழைந்திருக்கிறோம். உயிர் என்பது மிகவும் வலிமையானது. நாம் நினைப்பதைச் செய்யும்படி ஒரு உயிரைப் படைக்கமுடியுமானால், எல்லா விதமான நல்ல காரியங்களையும் செய்யலாம். ‘கடவுளின் வேலையை நாம் மேற்கொள்வதில் தவறில்லை என்கிறார்.
உதவிய நூல்கள்:
ரேடிக்கல் ஹீயுமானிஸ்ட் ஜன. 2023-லிருந்து
மதமும் அறிவியலும், மருதையன் – இளநம்பி
பெரியார்முழக்கம்இதழ்24072025
