கொக்கூருக்கு குதிரை வண்டியில் வந்த பெரியார்
வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ர.பிரகாசு எழுதி வருகிறார். கொக்கூர் என்ற ஊரின் வரலாறு இது..
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் கொக்கூர். 1940-கள் வரை பார்ப்பனிய மேலாதிக்கம் கொடூரமாக கோலோச்சியது, அந்தக் கிராமத்தில். கிருஷ்ணமூர்த்தி ஐயரின் மகன் குஞ்சிதபாதம் குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் மொத்த ஊரும். பார்ப்பனர்களைத் தவிர, வேறு யாரும் மேல் சட்டை அணியக்கூடாது, காலில் செருப்பு போடக்கூடாது, பள்ளிக்கூடம் செல்லக்கூடாது, முக்கிய சாலைகளைப் பயன்படுத்தக் கூடாது.
தோளில் துண்டு, தலைப்பாகை கட்டவும் அனுமதி கிடையாது, ஊர்க்கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது. பார்ப்பனர்களின் வயல்களில்தான் வேலை செய்ய வேண்டும். ஐயர் தரும் மிகச்சொற்ப நெல்லுக்காக, அக்ரஹாரத்துக்கு வெளியே தென்னை மரத் தடுப்புக்குப் பின்னால் வரிசையில் கையைக் கட்டிக்கொண்டு நிற்க வேண்டும். ஐயரின் ஆட்கள் தரும் நெல்லை வாங்கிக்கொண்டு, ஒற்றையடிப்பாதையில் செல்லவேண்டும்.
இந்தக் கட்டுப்பாடுகளை மீற, கொக்கூரில் இருந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த எவருக்கும் துணிவு இல்லை. ஆனால், முதன்முதலாக சில சிறுவர்களுக்கு அந்தத் துணிச்சல் வந்தது.
1950-களில் குத்தாலம், மயிலாடுதுறைப் பகுதிகளில் நடைபெற்ற திராவிடர் கழகக் கூட்டங்களைப் பார்த்து, சிறுவர்களுக்கு அந்தத் துணிச்சல் வந்தது. அதன்பிறகு பழைய `விடுதலை’ இதழ்களை வாங்கி வந்து, ஊருக்கு வெளியே கருவேலாங்காட்டிற்கு எடுத்துச் சென்று வாசித்தனர். அதன்மூலம் அந்தச் சிறுவர்கள் பெரியாரைப் பற்றிக்கொண்டனர்.
ஐயர் குஞ்சிதபாதத்தை எதிர்த்த அந்த சிறுவர்களில் ஒருவர் பெயரும் குஞ்சிதபாதம். முருகையன், சுந்தரேசன், அருணாச்சலம், ராசாங்கம், அப்பராசு ஆகியோர் மற்றவர்கள். 1958-இறுதியில் ஜெயங்கொண்டத்திற்கு வந்திருந்த பெரியாரைத் தங்கள் ஊருக்கு வருமாறு அழைக்கச் சென்றனர் அந்தச் சிறுவர்கள். ஆனால் சிறுவர்கள் என்பதால், பெரியாரைச் சந்திக்க அவர்களை அனுமதிக்கவில்லை. அதைக் கவனித்த பெரியார், சிறுவர்களை வருமாறு அழைத்தார். பெரியாருக்காக வாங்கி வந்த ஒரு கிலோ கறுப்புத் திராட்சையைக் கொடுத்துவிட்டு, தங்கள் ஊரின் பார்ப்பனக் கொடுமையை விவரித்தனர்.
நீங்கள் வந்து பேசினால், எல்லாம் மாறிவிடும் என்று அழைப்பு விடுத்தனர். “சிறுவர்களாக உள்ளீர்களே! உங்களால் கூட்டம் நடத்த முடியுமா?’’ என பெரியார் கேட்க, “தேதியை மட்டும் கொடுங்கள், மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கி றோம்’’ எனக்கூறினர். 1959 மார்ச் 31-இல் வருவதாக பெரியாரும் ஒப்புக்கொண்டார். இந்தத் தகவல் கொக்கூரில் பரவ, “ஐயரை எதிர்த்து, பெரியாரை அழைத்து வருகிறீர்களா?” என ஊரார் கண்டித்தனர். ஆனாலும், இரவு நேரத்தில் கூடிப்பேசி, கூட்டத் திற்கான பணிகளை அந்தச் சிறுவர்கள் தொடங்கினர்.
அன்றைய மாயவரம், நாகைப் பகுதிகளில் திராவிடர் கழகம் வலுவாக இருந்ததால், அவர்களின் உதவி கிடைத்தது. 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள நன்னிலம் வரை சென்று நிதி திரட்டினர். புதூர் ராவணன் என்ற பெரியாரியத் தொண்டர் கொக்கூர் சிறுவர்களுக்கு உறுதுணையாக பல செலவுகளை ஏற்றார். 3 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இடைக்கம் கிராமத்தில் இருந்து இரட்டை சாரட் பூட்டப்பட்ட குதிரை வண்டியில் கொக்கூருக்குப் புறப்பட்டார் பெரியார். வழியெங்கும் தோரணங்கள், வளைவுகள், வாணவேடிக்கைகள், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் என 500 பேர் கூடி வரவேற்க, கம்பீரமாக கொக்கூரில் நுழைந்தார் பெரியார். ஜாதி ஒழிப்பு முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.
பெரியார்முழக்கம்இதழ்31072025
