பண்ணையார்களை பணியவைத்த கொரடாச்சேரி
முரசொலியில் பெரியார் மண் தொடரில் ர.பிரகாசு எழுதி வரும் கட்டுரை தொடரில் நாகை மாவட்டம் கொரடாச்சேரி என்ற ஊரின் வரலாறு இது. எல்லா சாலைகளும் ரோமாபுரியை நோக்கி’ என்பதுபோல, திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் ‘எல்லா சாலைகளும் பெரியாரை நோக்கி’த்தான். இங்குள்ள கண்கொடுத்தவனிதம் கிராமம், இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான இணைப்புச் சங்கிலி. அந்த ஊரில், எந்தத் திசையில் சென்றாலும், தந்தை பெரியார் சிலையாக இருப்பார். மொத்தம் 7 சிலைகள் உள்ளன.
கருப்புச்சட்டை சகிதமாய் எவரேனும் இன்றும் தென்படுவர். அங்கு அந்தக் கருப்புச் சட்டைகள் உருவான காலகட்டம் 1950. நேரடியாகப் பெரியாரின் பேச்சைக் கேட்டோ, எழுத்தைப் படித்தோ கருப்புச்சட்டை அணிந்தவர்கள் அல்ல அவர்கள். ஆனால், தாங்கள் சந்தித்த அடக்குமுறைக்கு எதிரான ஆயுதமாகக் கருப்புச்சட்டையைக் கருதினர். அந்த ஆயுதத்தை அவர்கள் ஏந்த பாலமாக இருந்தது திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம்.
கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள கண்கொடுத்தவனிதம், பருத்தியூர், விடையபுரம், வடபாதி, தென்பாதி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் கீழப்பண்ணை, மேலப்பண்ணை, நாயுடுப் பண்ணை என சில பண்ணைகள் வசம் இருந்தன. கம்யூனிஸ்ட் அமைப்புகள் அங்கு வேரூன்றி இருந்ததால், கூலி உயர்வுக்கான போராட்டங்கள், பேச்சுவார்த்தைகளுக்கு பஞ்சமில்லை. ஆனால், கூலி மட்டுமே அங்கு பிரச்சினையாக இல்லை. செருப்பு போடக்கூடாது, துண்டு போடக்கூடாது, மேல் சட்டை அணியக்கூடாது, படிக்கச் செல்லக்கூடாது என தீண்டாமைக் கொடுமைகளும் உச்சத்தில் இருந்தன. தேநீர்க் குவளைகளில் கூட இருந்த பாகுபாடு அவர்களின் சுயமரியாதையைச் சீண்டிக்கொண்டிருந்த வேளையில்தான், ‘திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம்’ டெல்டா மாவட்டங்களில் காட்டுத்தீ போல பரவிக் கொண்டிருந்தது. பண்ணை அடிமைத்தனத்தோடு சேர்த்து சாதியத்தின் இருப்பையும் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தது அந்த காட்டுத் தீ. அது, கொரடாச்சேரி விவசாயத் தொழிலாளர்களையும் ஈர்த்தது. ச.மாரிமுத்து, மாணிக்கம், கிட்டு, அய்யாசாமி, ஒளிச்செங்கோ என பத்துக்கும் மேற்பட்ட களப் போராளிகளை அப்பகுதிகளில் உருவாக்கியது. இவர்களின் செயல்பாடுகள் பண்ணையார்களுக்குப் பெரும் நெருக்கடியாக உருவானது. பண்ணையார்கள் பெரியாரை நோக்கி ஓடினர். பேச்சுவார்த்தையில் பண்ணையார்கள் பணிந்ததோடு மட்டுமின்றி, பெரியாரை வைத்து பயிற்சிப்பள்ளி நடத்த குடும்பமாய் ஒத்துழைக்கும் அளவுக்கு நிலைமை தலைகீழாய் மாறியது.
1970, 1980, 1990-களில் கொரடாச்சேரி திராவிடர் கழகத்தின் கோட்டையாக திகழ்ந்தது. வீட்டுக்கு ஒருவர் திராவிடர் கழக உறுப்பினராக இருந்தனர். பெரியார் பிறந்த நாள் அங்கு அறிவிக்கப்படாத உள்ளூர் விடுமுறை. 1990-களுக்கு முன்புவரை அங்கு ஊராட்சி மன்றத் தலைவர்கள் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களே. இன்றும் பருத்தியூர், விடையபுரம், கண்கொடுத்தவனிதம் திராவிடர் கழகக் கோட்டைகள்தான். இருபதுக்கும் மேற்பட்ட ஊர்களில் உயிர்ப்போடு இருக்கிறது திராவிடர் கழகம். “கொரடாச்சேரி ஒன்றியத்தில் பெரியார் கொள்கைகள் நல்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பகுதிகளில் மக்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலைகள் உயர்ந்துள்ளன. சாதிய உணர்வு மேலோங்கவில்லை. இவற்றை நாம் `பெரியாரால் பிழைத்த கிராமங்கள்’ என்றும் சொல்லலாம். கருப்புச்சட்டைகளின் களச் செயல்பாடுகள் உருவாக்கிய மாற்றங்களை அங்கே பார்க்க முடியும்.”
தகவல்-சுந்தரபுத்தன், பத்திரிகையாளர்.
பெரியார் முழக்கம் 17072025இதழ்
