மதப் பண்டிகைகளை மறுக்கும் மேலமெஞ்ஞானபுரம்!
வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ர.பிரகாஷ் எழுதி வருகிறார். மேலமெஞ்ஞானபுரம் என்ற ஊரின் வரலாறு இது..
1967, தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த ஆண்டு. தமிழ்நாட்டு இளைஞர்களைத் தன்னகத்தே வாரி அணைத்து வைத்திருந்த தி.மு.கழகத்தின் சூழலுக்குத் தப்பாமல், தங்களையும் இணைத்திருந்த உடன்பிறப்புகள் சீ.தங்கத்துரை, சீ.டேவிட் செல்லத்துரை. தென்காசியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள மேலமெஞ்ஞானபுரம் இவர்களின் சொந்த ஊர். மாணவப் பருவத்திலேயே மதத்தைக் கடந்து, பகுத்தறிவுக் கொள்கைகளின் மீது நாட்டம் கொண்டிருந்தனர். தி.மு.க. கூட்டங்களில் பங்கேற்பதும், தேர்தல் பிரச்சார நாடகங்களில் நடிப்பதும், சுவரெழுத்துப் பிரச்சாரம் செய்வதும் இவர்களின் பணி.
கழகம் ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில், சட்டமன்ற உறுப்பினர் ஆலடி அருணா அவர்களின் பரிந்துரையால் தங்கத்துரைக்கு மின்சார வாரியத்தில் வேலை. தி.மு.க. உருவாகி அப்போது 20 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், பெரியாரின் மீதான பற்றை தொண்டர்கள் விட்டுவிடவில்லை. கீழப்பாவூர் வழக்கறிஞர் வை.பாண்டிவளவன், பாவூர் நாவலர், இலக்குவனார். சு.இராமச்சந்திரன் என அன்றைய தி.மு.கழக உடன்பிறப்புகள் சிலர் கொண்டிருந்த தீவிர பெரியாரிய பற்று, தங்கத்துரையையும் ஈர்த்தது. பெரியாரை வாசிக்கத் தொடங்கினார்.
திராவிடர் கழகத்தில் இருந்து தி.மு.கழகத்திற்குப் பாதையைத் திருப்பியோர் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோர் உண்டு. ஆனால், தி.மு.கழகத்தில் இருந்து தாய்க்கழகமான திராவிடர் கழகத்திற்கு சென்றோர் வெகுசிலர்தான். அந்த வெகுசிலர் என்ற வரலாற்றில் தன்னையும் இணைத்ததுடன், தன் சகோதரர் டேவிட் செல்லத்துரையையும் இணைத்தார் தங்கத்துரை. சொந்த ஊரில் கடும் எதிர்ப்புகளையும் மீறி, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஒழிப்புக் கருத்துக்களைப் பரப்பத் தொடங்கினார் டேவிட் செல்லத்துரை.
மேலமெஞ்ஞான புரத்தில் மொத்தமுள்ள 400 குடும்பங்களில் சுமார் 300 குடும்பங்கள் கிறிஸ்தவர்கள், 100 குடும்பங்கள் இந்துக்கள். அதனால், கிறிஸ்தவத்தில் நிலவும் மூடநம்பிக்கை களுக்கு எதிராகப் பேசுவதற்கு முக்கியத்துவம் தந்தனர்.
1978 பிப்ரவரி 12-ஆம் நாள் பல்வேறு எதிர்ப்பு களுக்கிடையில், சுயமரி யாதைத் திருமணம் செய்துகொண்டார் டேவிட் செல்லத்துரை. அந்த ஊர் தேவாலயத்திற்குச் செல்லாமல் நடந்த முதல் திருமணம் அதுதான். 1988-இல் தங்கத்துரையும் தென்காசிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, மேலமெஞ்ஞானபுரத்திலேயே வசிக்கத் தொடங்கினார். இயக்கப் பிரச்சாரம் செய்வதோடு மட்டுமின்றி, ஊர் பிரச்னைகளிலும் தலையிடுவது என சகோதரர்கள் இருவரும் காட்டிய முனைப்பால், எதிர்ப்பு கள் குறையத் தொடங்கின. சுமார் 15 குடும்பங்கள் இவர்க ளோடு கைகோர்த்தனர். பகுத்தறி வாளர் கழகத்தை அப்பகுதியில் தோற்றுவித்தனர்.
பொதுவாக, `இந்துக் கடவுள் களை மட்டும் இல்லை என்பது, இந்து மத மூடநம்பிக்கைகள் மீது மட்டும் விமர்சனம் வைப்பது’ என்பது திராவிட இயக்கத்தின் மீது சங் பரிவார்கள் திரும்பத் திரும்ப வைக்கும் விமர்சனம். எந்தப் பகுதிகளில் எந்த மதத்தினர் அதிகம் வசிக்கிறார்களோ, அந்தப் பகுதிகளில் அந்த மதத்தில் இருந்து திராவிட இயக்கத்தை நோக்கிப் பயணித்தவர்கள், அவரவர் மதங்களில் உள்ள மூடநம்பிக்கைகள், ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள் என்பதுதான் வரலாறு. அந்த வரலாற்றுக்கு நிகழ்காலச் சான்றாக இன்றும் திகழ்கிறது மேலமெஞ்ஞானபுரம்.
மேல மெஞ்ஞானபுரத்தில், 1988-இல் பகுத்தறிவாளர் கழகம் உருவானதில் இருந்தே, வாரந்தோறும் தவறாமல் குடும்ப சந்திப்புகளை நடத்தி, அதில் தந்தை பெரியாரின் சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்புக் கருத்துகளைப் பேசி வந்துள்ளனர். திருக்குறளைப் பரப்பினர்.
தேவாலயத்திற்கோ, கோயிலுக்கோ செல்வதைத் தவிர்த்தனர். கிறிஸ்தவத்தில் Vacation Bible school (VBS) என கோடைகாலத்தில், குழந்தைகள் மத்தியில் அந்த மார்க்கத்தைப் பரப்பும் வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். மேலமெஞ்ஞானபுரத்திலும் இப்படி நடத்தப்பட்ட VBS வகுப்புகளுக்கு நேரெதிராக, பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் வி.ஆர்.எஸ். (VRS) வகுப்புகளை 1989-இல் தொடங்கினர். அதாவது `விடுமுறை கால பகுத்தறிவுப் பள்ளி’ Vocational rationalist school. பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை அழைத்து வந்து, 10 நாட்களுக்கு பகுத்தறிவுக் கொள்கைகளை ஊட்டி, அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது இந்த வகுப்பின் நோக்கம். 36 ஆண்டுகளாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன இந்த வி.ஆர்.எஸ். VRS வகுப்புகள்.
எந்த மதப் பண்டிகையையும் இவர்கள் கொண்டாடுவதில்லை. தங்கள் குடும்பங்களில் சுயமரியாதைத் திருமணங்களையே நடத்துகின்றனர். இன்றுவரை 20 சுயமரியாதைத் திருமணங்கள் அங்கு நடைபெற்றுள்ளன. அதில் 5 திருமணங்களை திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களே தலைமையேற்று நடத்தி வைத்துள்ளார்.
குறிப்பாக, அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த ஒரு தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணுக்கும், பிற்படுத்தப்பட்ட ஆணுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் ஊர்வலமாக மணமக்களை அழைத்து வந்து திருமணத்தை நடத்தினர். அந்த திருமணத்தில், இரு சமுதாயத்தைச் சேர்ந்த உறவினர்களும் கலந்துகொண்டார்கள். இந்தத் திருமணங்களில் பெண்கள் யாரும் தாலி அணிவதில்லை, அவர்கள் குடும்பங்களில் பூப்பு நன்னீராட்டு விழா கிடையாது. சோதிடம், ஜாதகம், நேர்த்திக்கடன் போன்ற மூட நம்பிக்கைகள் எதையும் பின்பற்றுவதில்லை. தமிழ்ப்பெயர் மட்டுமே வைக்கிறார்கள்.
பெரியாரின் பிறந்த நாளும், பொங்கல் விழாவும் மட்டும்தான் அவர்களுக்கான கொண்டாட்டம். மரணத்திலும் மதச் சடங்குகள் பின்பற்றப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், இறந்தோரை அடக்கம் செய்வதே அரிதுதான். காரணம், உடற்கொடை பதிவு செய்து, உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கி விடுவதே அவர்களின் வழக்கம்.
மேலமெஞ்ஞானபுரத்தில் இருவராகத் தொடங்கிய இந்த இயக்கம், இன்று ஐம்பதுக்கும் மேற்பட்டோரை இயக்கமாக்கி யிருக்கிறது. சிலர் மருத்துவர்களாக வும், சிலர் பொறியாளர்களாகவும், பலர் பட்டதாரிகளாகவும் இருக்கிறார்கள். மெய் என்றால் உண்மை, ஞானம் என்றால் அறிவு பெயருக்கு அர்த்தம் சேர்த்திருக்கிறது மேலமெஞ்ஞானபுரம்.
பெரியார்முழக்கம்இதழ்24072025
