சமுகநீதி விடுதிகள்
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் விடுதிகளாக அழைக்கப்பட்டு வந்தன.
`சமூகநீதி விடுதிகள்’ என்றே அழைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது பாராட்டி வரவேற்கத்தக்க அறிவிப்பாகும். விடுதிகளில் தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டு செயல்பட்டு வரும் சில விடுதிகளும் உள்ளன. அந்த விடுதிகள் அந்தத் தலைவரின் பெயர்களோடு சமூகநீதி விடுதி என்று சேர்த்து அழைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்கள் ஜாதி அடையாளத்தை அறிவிக்கும் கயிறுகளைக் கட்டிக்கொண்டு பள்ளிக்கு வரக்கூடாது என்று இந்த ஆண்டு பள்ளி திறப்புக்கு முன் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டும். பள்ளிகளில் மாணவர்களிடையே ஏற்படும் ஜாதி மோதல்களைத் தடுப்பது குறித்து ஆராய நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு ஆணையத்தை தமிழ்நாடு அரசு நியமித்தது. ஆணையம் மிக சிறப்பான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியது.
அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் ஜாதிப் பெயர்கள் முன்னொட்டும், பின்னொட்டும் இருக்கக் கூடாது என்பது அந்த பரிந்துரைகளில் ஒன்றாகும். அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார். ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வித் தர மேம்பாட்டுக்காக இந்த விடுதிகள் உருவாக்கப்பட்டன. அண்மையில் சென்னை சைதையில் பழமை வாய்ந்த எம்.சி ராஜா ஆதிதிராவிட விடுதியை மிக நவீன மாளிகையாக்கி தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
பார்ப்பனர்கள் அல்லாத மாணவர்கள் சென்னையில் தங்குவதற்கு அந்த காலத்தில் இடம் கிடைப்பது இல்லை. ஜாதி பார்வையில் தங்கும் இடங்கள் மறுக்கப்பட்டன. உணவு விடுதிகளிலும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அந்த நிலையில் திராவிடர் சங்கத்தை முதன் முதலில் நிறுவிய நீதிக்கட்சித் தலைவர் டாக்டர் நடேசன் 1916 இல் பார்ப்பனர்கள் அல்லாத மாணவர்களுக்கான விடுதி ஒன்றை உருவாக்கி, அதற்கு `திராவிடர் இல்லம்’ என்று பெயர் சூட்டினார்.
திருவல்லிக்கேணி அக்பர் சாயுபு வீதியில் துவக்கப்பட்ட அந்த இல்லம் சென்னைக்கு படிக்க வந்த பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு புகலிடமாக விளங்கியது. இதே போல் ‘சேரி’ என்ற அடையாளத்தைத் குறிக்கும் ‘காலனி’ என்ற பெயரும் அரசு பதிவுகளில் இருந்து தமிழ்நாடு அரசு நீக்கி உள்ளது. தொலைக்காட்சியில் `நீயா நானா’ நிகழ்ச்சியில் பேசிய ஒரு பெண் தங்களை `காலனிக்காரர்கள்’என்று அடையாளப்படுத்துவதை வேதனையுடன் சுட்டிக்காட்டினார். அடுத்த இரண்டு நாட்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
ஜாதி சங்கங்கள் இளைஞர்களிடையே ஜாதி உணர்வுகளை தூண்டி விடுகின்றன. போதை பழக்க வழக்கங்களுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருவதும் அதைவிடக் கொடுமையான இந்த ஜாதி போதையில் சிக்க விடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல; சமூகத்துக்கும் உண்டு. சமூக நீதியின் வரலாறு, ஜாதி எதிர்ப்பு, பெண்களை மதித்தல், அவர்களின் சம உரிமைகளை அங்கீகரித்தல், மூடத்தனத்தை எதிர்க்கும் அறிவியல் கருத்துக்களை பள்ளி பாடங்களில் இணைக்க வேண்டியது அவசியம். திராவிட மாடல் ஆட்சியால் தான் இதைச் செய்ய முடியும்.
சமூக நீதியின் இறுதி இலக்கு ஜாதி அடையாளங்களை அழித்து சம உரிமைகளை உருவாக்குவது தான். தங்களுக்கு இட ஒதுக்கீடுகள் வேண்டாம்; ‘ஜாதியற்றவர்கள்’ என்ற அரசாணை வேண்டும் என்று நீதிமன்றத்தில் வந்த ஒரு வழக்கிற்கு ஆதரவாக அண்மையில் நீதிமன்றம் தீர்ப்பளித்து. ஜாதியற்றவர் சான்றிதழ் வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இட ஒதுக்கீடு உரிமைகளுக்கு இப்போது ஜாதி சான்றிதழ்களை பெற்று வருகிறோம். இந்த இட ஒதுக்கீடு உரிமை வேகம் வேகமாக அமல்படுத்தப்படும் போதுதான் ‘ஜாதியற்றவர்கள்’ என்ற சான்றிதழ் சமுதாயத்துக்கு கிடைக்கும்.
உச்ச நீதிமன்றத்தில் கூட பணியாளர்களுக்கு சுதந்திரத்திற்குப் பிறகு இப்போதுதான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு உரிமைக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதுவும் சமூக நீதியில் நம்பிக்கை உள்ள கவாய் தலைமை நீதிபதியாக வந்ததற்குப் பிறகுதான் இது சாத்தியமாயிற்று. சமூக நீதிக்கான திட்டங்கள் அனைத்து துறைகளிலும் விரிவுப்படுத்த வேண்டும்.
பெரியார் முழக்கம் 10072025இதழ்
