வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்குத் துணைநிற்போம்!

கழகத் தலைவர் அறிக்கை!

“பாஜக ஆட்சியில் நீதித்துறை தனது தன்னாட்சியை இழந்து வருவதோடு ஆளுகின்ற அரசின் ஓர் உறுப்பாக தொடர்ந்து மாறி வருகிறது.ஆர்எஸ்எஸ் சார்பு நீதிபதிகள் வெகுவாகப் பதவியில் அமர்த்தும் போக்கும் கூடுதலாகியுள்ளது. நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் அவர்களை விமர்சித்து உச்ச நீதிமன்றத்திற்கு ஆதாரங்களுடன் கொண்டு சென்றதற்காக,மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும் வழக்குரைஞருமான தோழர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடுக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ஜி.ஆர்.சாமிநாதன். மேலும் தோழர் வாஞ்சிநாதன் பேசியதற்கு உரிய பதிலளிக்க வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளார்.

மதுரையைக் குறிவைத்து இந்து பார்ப்பனியக் கூட்டம் ஒரு கலவரத் திட்டத்துடன் மதுரையின் மத நல்லிணக்க மரபை சிதைக்க களமிறங்கியுள்ளது. இந்நிலையில் மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ, ஜனநாயக , மதச்சார்பின்மை மரபுகளைக் காக்கத் தொடர்ந்து தோழரும் வழக்குரைஞருமான வாஞ்சிநாதன் போராடி வருகிறார்.

வைதீக, சநாதன காலமல்ல இது. சீசருடைய மனைவி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் என்பது நீதிபதிகளுக்கு அதிகம் பொருந்தும் ஒரு சொலவடையாகும். ஒரு ஜனநாயக நாட்டில் நீதிபதிகளும் நீதிமன்றமும் மக்கள் மன்றத்தின் விமர்சனத்திற்கும் திறனாய்வுக்கும் உட்பட்டது தான். திறனாய்வை உள்வாங்கி தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள முயலாமல், தோழர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைக் கொண்டு மிரட்ட எண்ணும் போக்கு ஜனநாயக மரபுகளைக் கேலி செய்யும் தன்மையதாகும். மக்களுடைய உரிமைகளுக்காகப் போராடும் தோழர் வாஞ்சிநாதனுக்குத் துணைநிற்போம்!”

(இணைப்புக் கடிதம் : அரசியல் சட்டத்தை மீறி செயல்படும் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அனுப்பிய புகார் என இணையதளத்தில் பரவி இருப்பது)

-“கொளத்தூர் மணி,”
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம், 30.07.25
பெரியார்முழக்கம்இதழ்31072025

You may also like...