விநாயகன் அரசியல் ஊர்வலத்தை கட்டுப்படுத்துக! கழக சார்பில் காவல்துறையில் மனு!
விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் கலவரத்தைத் தூண்டும் சங் பரிவார அமைப்புகளைக் கட்டுப்படுத்தவும், அனுமதி இல்லாத இடங்களில் சிலைகளை வைத்து மத மோதல்களைத் தூண்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் நடக்கும் அத்துமீறல் மற்றும் விதிமீறல்களைத் தடுக்கக் கோரியும், சிலைத் தயாரிப்பு – ஒலி பெருக்கி பயன்படுத்துதல் உள்ளிட்ட அரசு வகுத்த வழிகாட்டு நெறிகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும், அதை அரசு கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நீதி மன்றங்களை மதிக்காமல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு பேராபத்துகளை விளைவிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சியை இவர்கள் நடத்தி வருகிறார்கள்.
நீதிமன்ற ஆணைகள், தமிழ்நாடு அரசின் ஆணைகளை அமுல்படுத்தி கடமையாற்ற வேண்டிய காவல்துறை மற்றும் மாநில, மாவட்ட அரசு அதிகாரிகள் தொடர்ந்து தங்கள் கடமையை செய்ய வலியுறுத்தி மனுக்களை நீதிமன்ற ஆணை நகல்களுடன் இணைத்து கோரிக்கை மனு சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை உள்ளிட்ட இடங்களில் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் தோழர் டேவிட், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வெற்றிமுருகன், சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ், தோழர் பாலாஜி ஆகியோர் இணைந்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
சென்னை: மாவட்டக் கழகம் சார்பாக காவல் துறை தலைமை இயக்குனரிடம் மனு அளித் தனர். தலைமை நிலைச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், திருவல்லிக்கேணி பகுதி தலைவர் கோபி, திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் சூர்யா, அசோக் ஆகியவர்கள் உடன் சென்றனர்.
ஈரோடு தெற்கு: மாவட்டக் கழகம் சார்பாக ஈரோடு மாவட்ட போக்குவரத்து அலுவலகம், இந்து அறநிலையத்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சி, நகராட்சி அலுவலர் களுக்கு கழகத்தின் சார்பில் பதிவுத் தபால் அனுப்பபட்டது.
பெரியார் முழக்கம் 17072025இதழ்
