பனகல் அரசரும் திராவிட மாடலும்
நீதிக் கட்சியின் தலைவர்; இரண்டு முறை சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசரின் பிறந்தநாள் இன்று! (09.07.1866)
மகத்தான சாதனைகளை புரிந்தவர். தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சிக்கும் பனகல் அரசரின் ஆட்சிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.அரசு பதிவேடுகளில் `பறையர் பஞ்சமர்’ என்ற இழிசொற்களை நீக்கி ஆதிதிராவிடர் என்று அறிவிக்க ஆணையிட்டவர் பனகல்அரசர். திராவிட மாடல் ஆட்சி ஆதி திராவிட நல விடுதிகளை `சமூக நீதி’ விடுதிகளாக பெயர் மாற்றம் செய்துள்ளது. அவமானச் சொல்லான `காலனி’ என்ற சொல்லை அரசு பதிவேடுகளில் இருந்து நீக்கி இருக்கிறது. மாநிலங்களின் உரிமைக்காக திராவிட மாடல் ஆட்சி குரல் கொடுப்பதைப் போல் பனகல் அரசரும் போராடினார். பிரிட்டிஷ் அரசிடம் இருந்த மருத்துவத் துறையை கடுமையாக எதிர்த்துப் போராடி, மாகாண சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மாநில உரிமைக்கு கொண்டு வந்தவர் பனகல் அரசர்.
முதல் இந்திய மருத்துவக் கல்லூரியை அவர்தான் நிறுவினார். இன்று மும்மொழி வழியாக சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது. அன்று அரசு ஆணைகள் ஏதும் இல்லாமலே, மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று ‘மனுவாத’ அதிகார வர்க்கம் பின்பற்றிய நடைமுறையை முடிவுக்கு கொண்டு வந்தவர் பனகல்அரசர். அன்றைக்கு நீதிக் கட்சியில் இருந்த தமிழறிஞர் கி .ஆ .பெ விசுவநாதம் இதை பனகல் அரசரிடம் பாதிக்கப்பட்ட மாணவரை நேரில் அழைத்துப்போய் சுட்டிக்காட்டிய போது அதிர்ச்சி அடைந்தார் பனகல். அரசாணை ஏதும் இல்லாமல் நடைமுறைப்படுத்திய இந்த வர்ணாசிரமத்தை அதிகாரிகளை நேரில்அழைத்து எச்சரித்து நிறுத்தச் செய்தார். எனவே அதற்கு அரசாணை எதுவும் இல்லை என்பதே வரலாறு.
கடுமையான எதிர்ப்புகளை சந்தித்த அறநிலையத்துறை மசோதாவை இரண்டு முறை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டியிருந்தது. மசோதாவுக்கு இன்றைய ஆளுநர் ரவியைப் போல அன்றைய வைஸ்ராய் ரீடிங் ஒப்புதல் தர மறுத்தார். அன்றைய மாகாண ஆளுநர் வெலிங்டன் இடம் தொடர்ந்து பேசி அழுத்தம் தந்து வைஸ்ராயை ஒப்புதல் தர வைத்தார்பனகல். மாகாண சட்டமன்ற தலைவரை ஆளுநரே நேரடியாக நியமித்ததை எதிர்த்து போராடி சட்டமன்றத்தில் தேர்தல் வழியாக தேர்ந்தெடுக்கச் செய்தார். அறநிலையத்துறை சட்டத்தைக் கொண்டு வருவதற்கு தனக்கு உதவியாக சட்ட நிபுணர் கோபால்சாமி அய்யங்காரை நியமித்துக் கொண்டார். அறநிலையத்துறை முதல் தலைவராக நீதிபதி சதாசிவம் அய்யரை நியமித்தார்.
மனுவாதிகளிடமிருந்து வந்த எதிர்ப்பை அதே மனுவாதிகளை வைத்து முறியடித்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார் நீதிக் கட்சியின் இந்த சாதனையை ஆதரித்து நாடு முழுதும் பிரச்சாரம் செய்தார்.
சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு தேர்வாணையம், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குக் குழு என்று சமூக நீதிக்கு பாதை போட்டவர் அவர்தான்!
திருச்சி தேசியக் கல்லூரி ‘தேசத்தந்தை ‘காந்திக்கு வரவேற்பு பத்திரத்தை சமஸ்கிருதத்தில் வாசித்தது. அதே கூட்டத்தில் காந்தி அதை கண்டித்தார். அதேபோல் முதல்வர் பனகல் அரசருக்கும் சமஸ்கிருதத்தில் வரவேற்பு பத்திரம் வாசித்தபோது அதைக் கண்டித்து சமஸ்கிருதத்திலே பதில் அளித்து பேசியவர் பனகல்அரசர் . அவமதிக்க நினைத்த மனுவாதிகள் அதிர்ந்து போனார்கள்.
நீதிக் கட்சியில் பனகல் அரசர் சந்தித்த அதே மனுவாத சக்திகளின் எதிர்ப்புகளே இப்போது திராவிட மாடல் ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. திராவிடம் வெல்லும்!
விடுதலை இராசேந்திரன்
முகநூல் பதிவு 10.07.2025
