மூளையின் உற்பத்தியே கடவுள் உணர்ச்சி கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(7) -விடுதலை இராசேந்திரன்
விபத்துகளும் மரணங்களும் கடவுள் விதிப்படிதான் நிகழ்கின்றன என்று மதவாதிகள் கூறுகிறார்கள். அஹமதாபாத் விமான விபத்தில் 241 பேர் இறந்தார்கள். விபத்துக்களை எவராலும் தடுக்க முடியாது; எல்லாம் விதிவசம் என்று கூறினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஆனால் மக்கள் அமித் ஷாவின் இந்த கருத்தை நம்புவதற்குத் தயாராக இல்லை.
விமானத்தின் கருப்புப் பெட்டியை உடைத்து பார்த்தால் அங்கே “விதியோ கடவுளோ இல்லை”. விமான விபத்துக்குக் காரணம் எரிபொருள் நிறுத்தப்பட்டது தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எரிபொருளை நிறுத்தியது யார் என்ற அழுத்தமான சந்தேகமே இப்போது எழுந்துள்ளது. கடவுள் தான் காரணம் என்று சொன்னால் மக்கள் நம்புவார்களா? நிச்சயம் நம்பமாட்டார்கள், இங்கே கடவுள் மறுப்பு வந்து விடுகிறது.
கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட மன்னர்கள் ஆட்சி இப்போது இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி வந்துவிட்ட பிறகு கடவுள் ஓரங்கட்டப்பட்டு விட்டார்.
“நீங்கள் என்ன சொன்னாலும் கோயிலுக்குப் போனால் ஒரு ஃபீலிங் வருது பாருங்க.. அதுதான் கடவுள்” என்பதே பொதுவாக நம்பிக்கையாளர்கள் கூறும் கருத்து. அது என்ன பீலிங்? அது உடலுக்கு வெளியிலிருந்து கடவுளால் திணிக்கப்படும் உணர்வா? நிச்சயமாக இல்லை. இந்த ‘பீலிங்’ , ‘ஆன்மீக உணர்வு’ அனைத்துமே மூளையின் செயல்பாடுகள் என்பதே அறிவியல்.
மனிதனின் பேச்சுத்திறன், கேட்கும் திறன், நினைவாற்றலைக் கட்டுப்படுத்துதல் அனைத்தும் மூளை என்ற பொருளில் நிகழும் செயல்பாடுகள் தான். மூளையில் இதைக் கட்டுப்படுத்தும் பகுதிக்கு (temporal lobe) டெம்பரல் லோப் என்று பெயர். காதுக்கு அருகே இது அமைந்துள்ளது. மூளையின் இந்த பகுதி பாதிப்புக்கு உள்ளாகும் போது வித்தியாசமான அனுபவங்கள் ஏற்படுகின்றன அதைத்தான் `ஆன்மீக உணர்வுகள்’ என்கிறார்கள் என்பதை கண்டறிந்தார், கனடா நாட்டின் நரம்பியல் ஆய்வாளர் டாக்டர் பெர்சிங்கர்.
“கடவுள் எனக்கு உத்திரவிட்டார்; ஏதோ ஒரு ஒளிவட்டம் எனக்கு மனதில் தோன்றியது” என்று பலரும் கூறுவது மூளையில் ஏற்படும் பாதிப்புகளே என்று அறிவியல் பூர்வமாக அவர் நிரூபித்தார்.
உலகப் புகழ் பெற்ற கலிபோர்னியா பல்கலைகழக நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் வி.எஸ் இராமச்சந்திரன் மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கப்படுபவர் மட்டும்தான் இத்தகைய இறையருள் கிட்டும் என்பதில்லை. தொடர்ந்து ஆன்மீக சிந்தனையால் தாக்கப்படுபவர்களுக்கு இத்தகைய உள்காயம் ஏற்படக்கூடும் என்கிறார்.
மூளையின் பகுதியைப் போல உணர்ச்சிகளையும் உணவு சார் நினைவுகளையும் ஆளும் பகுதி மூளையில் இருக்கிறது. இதன் பெயர் cerbrum. இந்த இரண்டு பகுதிகளும் இணைந்து செயல்படும்போது ஏற்கனவே கடவுள் நம்பிக்கையில் உள்ளவர்களுக்கு உணர்ச்சிகள் பீறிட்டு எழுகின்றன என்ற ஆய்வை நிறுவினார் நரம்பியல் விஞ்ஞானி வி.எஸ் ராமச்சந்திரன்.
நான் என்ற உணர்வு மறைந்து பிரபஞ்சம் அல்லது கடவுளோடு இணைகிறேன் என்ற ஆன்மீகப் பார்வை கடவுளிடமிருந்து வரவில்லை அது ‘பேரியட்டல் லோப்’ parietal lobe என்ற பகுதியின் செயல்பாட்டில் இருந்து தான் வருகிறது என்று அறிவியல் ரீதியாக அவர் நிரூபித்தார். மதத் தலைவர்களிடம் இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தன.
ஏன் ஆத்திரப்படுகிறார்கள்? “நீங்கள் நம்பும் கடவுள் நம்பிக்கையோடு தொடர்பு கொள்ளும் ஆண்டனா என்று இதை நீங்கள் ஏன் கருதக்கூடாது?” என்று அவர் கேள்வி கேட்டார். காட் ஹெல்மெட் (God Helmet) ஒன்றை அவர் தயாரித்தார்.
காட் ஹெல்மெட் கடவுள் தலைக்கவசம்! இதுதான் அவரது தயாரிப்பின் பெயர். மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கவசம், இதனை அணிந்திருப்பவரின் மூளையில் உள்ள டெம்பரல் லோப் பகுதியைக் குறி வைத்து காந்தப்புலங்களை உருவாக்க வல்லது. எவ்வித நரம்பியல் நோயும் இல்லாத நூற்றுக்கணக்கான மனிதர்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு தனியறையில் இந்தக் ‘கவச’ சோதனைக்கு உட்படுத்தப் பட்டனர். பல்வேறு நாடுகளையும் மதங்களையும் சார்ந்த அந்த நபர்கள் இந்த மூன்று நிமிடச் சோதனையின்போது தத்தம் கலாச்சாரத்துக்கு ஏற்ப, தாங்கள் ஏசுவையோ புத்தனையோ கண்டதாகக் கூறினர்.
டேவிட்சன் என்ற விஞ்ஞானி, சிறித்தவ ஜெபக் கூட்டங்களில், ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று உளறத் தொடங்கும் பெண்களின் மூளைகளை ஸ்கேன் (MRI Scan) செய்தார். அத்தருணத்தில் அவர்களது மூளையுடைய முன்பகுதி ஏறத்தாழ செயலிழந்திருப்பதைக் கண்டார். தன் மீதான சுயகட்டுப்பாட்டை மனிதனுக்கு வழங்கும் மூளையின் முன்பகுதி செயலிழப்பதால், மொழி பிறழ்ந்து வரும் இந்த உளறலைத்தான். `அந்நிய மொழி’ என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர்.
தியானத்தில் ஈடுபடும்போது, `தான்’ என்ற உணர்வு மறைந்து பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து விடுவதாகக் கூறும் புத்த பிக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையின் மீது மட்டுமே மூளை ஒன்று குவிக்கப்படும்போது, திசை மற்றும் வெளி குறித்த பிரக்ஞையை வழங்குகின்ற ‘பாரிடல் லோப்’ செயலிழப்பதையும், அதன் காரணமாகவே இவர்கள் இத்தகைய பிரமைக்கு ஆளாவதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டினர்.
இவையன்றி, பட்டினி கிடத்தல் (விரதம்), இரத்தச் சர்க்கரையின் அளவு அலைபாய்தல், திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உச்சரிக்கும் மந்திர உச்சாடனங்கள், ஒரே விதமான அசைவு கொண்ட நடனம் ஆகியவையும் ‘மனித சக்திக்கு அப்பாற்பட்டவை’ என்று சொல்லப்படும் அனுபவத்தைத் தரவல்லவை. மிக உயர்ந்த சிகரங்களுக்கு (அமர்நாத்) செல்லும்போது மூளைக்கு பிராணவாயு செல்வது குறைவதும், கஞ்சாவும், வேகமாகப் பக்கவாட்டில் சுழலும் குடைராட்டினமும் கூட ‘ஆன்மீக அனுபவங்களை’த் தூண்டக்கூடும் என்கிறது நரம்பியல் விஞ்ஞானம்.
மூளையின் உட்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியிலிருந்து வெளியாகும் டைமெதில் டிரிப்டாமைன் என்ற வேதிப்பொருள் தான் இது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குகிறது என்று `ஆன்மீக மூலக்கூறு’ என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் ரிக் ஸ்டிராஸ்மேன். மொத்தத்தில் பக்தர்கள் துரும்பில் தேடிய இறைவனை நரம்பில் கண்டுபிடித்ததுடன், ‘இறை நரம்பியல்’ (Neuro Theology) என்றொரு துறையையும் உருவாக்கிவிட்டது அறிவியல்.
எனினும், தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூக்கத்தை வரவழைப்பது போல கடவுள் மாத்திரை சாப்பிட்டுக் கடவுளை வரவழைக்கலாம் என்றோ, பேதி மாத்திரை போன்றதொரு மாத்திரையால் மூளையிலிருந்து சுமுகமாகக் கடவுளை வெளியேற்றி விடலாம் என்றோ அறிவியல் கூறவில்லை. மனித மூளையின் உள்ளே தோன்றும் மாயத்தோற்றங்களோ, விவரிக்கமுடியாத ‘பரவச உணர்வுகளோ’, வெளியே கடவுள் ஒன்று இருப்பதற்கான சான்றுகள் இல்லை என்பதையே இந்த ஆய்வுகள் நிறுவுகின்றன.
(தொடரும்…)
பெரியார் முழக்கம் 17072025இதழ்
