ஆதிதிராவிடர் நல ஆணையத்திடம் நேரில் வழங்கப்பட்டது! தமிழ்நாட்டுக் கிராமங்களில் நிலவும் தீண்டாமைகள் பட்டியல் தயாரித்தது கழகம்

சேலத்தில் 2023, ஏப்ரல் 29,30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாட்டில், வைக்கம் நூற்றாண்டை முன்னிட்டு ஜாதி – தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்கட்டமாகத் தேநீர்க் கடைகளில் நிலவும் இரட்டைக்குவளை முறை, வைக்கத்தைப் போலவே தாழ்த்தப்பட்ட மக்கள் பொது வீதிகளில் நடமாடும் உரிமைகளைத் தடுத்தல், கோயில் நுழைவு அனுமதி மறுப்பு என்று ஜாதி தீண்டாமைகள் நிகழும் கிராமங்களைக் கண்டறிந்து, அதன் பட்டியலைக் கழகத் தலைமைக்குச் செயல்வீரர்கள் அனுப்ப வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் திண்டுக்கல், கோவை, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, திருப்பூர், ஈரோடு தெற்கு, ஈரோடு வடக்கு உள்ளிட்ட மாவட்டங்களில் ஜாதித் தீண்டாமைக் கணக்கெடுப்புப் பணிகளைக் கழகச் செயல்வீரர்கள் மேற்கொண்டனர்.
கணக்கெடுப்புப் பணிகளுக்கு என்று பிரத்யேகமாக படிவங்களைத் தயாரித்து களத்தில் இறங்கினர் கழகச் செயல்வீரர்கள். தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகக் கிராமம், கிராமமாகச் சென்றும், பல்வேறு ஊர்களில் தங்கியும் இந்தக் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமைகள் இன்றும் பல்வேறு விதங்களில் தொடர்வதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
இந்தக் கணக்கெடுப்புப் பணிகளின் போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடி திருத்த அனுமதி மறுக்கப்படுவதையும், கோயில்களில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதையும் மக்கள் வேதனையுடன் பதிவு செய்தனர். மேலும் பழனி அய்யம்பாளையத்தில் உள்ள சத்துணவுக் கூடத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் தனித்தனியாக அமர வைத்து உணவுப் பரிமாறப்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவலும் நமக்குக் கிடைத்தது.
கோவை பொத்தியாம்பாளையத்தில் உள்ள பொது சுடுகாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் சடலங்களைப் புதைக்க அனுமதி மறுக்கப்படுவதால் சுமார் 1.5 கி.மீ தூரம் சென்று ஒரு ஓடைப்பள்ளத்தில் புதைக்கும் அவலநிலை இன்றும் தொடர்வதாக அப்பகுதி மக்கள் கூறினார்கள். கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உணவகங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுடன் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுப்பு – இரட்டைக்குவளை முறை – முடி திருத்த அனுமதி மறுப்பு – கோயிலில் நுழைய அனுமதி மறுப்பு உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகள் அதிகமாக இருப்பதைக் கோவை மாவட்டச் செயல்வீரர்களால் எடுக்கப்பட்ட பட்டியலின் மூலம் அறிய முடிந்தது.

இதில் முதல்கட்டமாகத் திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் எடுக்கப்பட்ட பட்டியலைத் தலைமைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத் துணைத் தலைவர் புனித பாண்டியன் அவர்களிடம் 30.08.2024 அன்று கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் வழங்கி, இத்தகைய தீண்டாமைக் கொடுமைகளைக் களைந்திட அரசு முனைய வேண்டுமென்று வலியுறுத்தினார்.
இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் உமாபதி, கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், தென் சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், வட சென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், சிகாமணி, இராஜன், தினகரன், சூர்யா, அழகிரி, அன்னூர் விஷ்ணு உள்ளிட்ட கழகத் தோழர்கள் உடனிருந்தனர்.
(மற்ற மாவட்டங்களில் இருந்தும் பட்டியலை விரைந்து அனுப்பிடுவீர்)

பெரியார் முழக்கம் 05.09.2024 இதழ்

You may also like...