விநாயகன் ‘அரசியல்’ ஊர்வலம் கழகத் தலைவர் அறிக்கை

விரைவில் வர இருக்கும் விநாயகன் ‘அரசியல்’ ஊர்வலத்தில் விதிமீறல்களைத் தடுப்பதற்கான முயற்சிகளில் கழகத் தோழர்கள் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை !

அன்பார்ந்த தோழர்களே!

“முருகன் முகமூடியோடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களைக் கொள்ளை அடிக்க சிலர் எடுத்த முயற்சி, பல வகைகளிலும், பல தரப்பிலும் நிகழ்ந்த அசைவுகள், நகர்வுகள், எச்சரிக்கை மணிகள் என விழிப்போடு இருந்து நா(வீ)ட்டாரால் தோற்கடிக்கப்பட்டு விட்டது.

ஆனால், ‘மயானக் கொள்ளை’ என்பதைப் போல மக்களையும் உடன் அழைத்துக் கொண்டு, பறைகள் முழங்க, பட்டப்பகலில், ஒலிபெருக்கிகள் அலற ஆண்டுதோறும் நடக்கும் அடுத்த ‘மனங்கள் கொள்ளை’ எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் நாள் பிள்ளையார் சதுர்த்தி என்ற பெயரில் நடக்க உள்ளது. மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் களை, இரசாயன சாயப் பூச்சோடு இப்போதே ஜோராக உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

மூன்று அங்குல விட்டமுள்ள கொடிக்கம்பத்தால், அரசு நிலங்கள், பொது சாலைகள் அநியாயமாய் ஆக்கிரமிக்கப்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பித்துப் போய்விடலாம் என்று உயர்நீதிமன்றமே சமூக அக்கறையோடு முழு வீச்சில் மக்களையும், அரசு நிலங்களையும் காப்பாற்றும் முயற்சியில் கொடிக்கம்பங்களை அகற்றிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், பாதி சாலைகளை ஆக்கிரமித்து பிள்ளையார் சிலைகளை வைக்கவும், இரவு 10 மணி 10 நிமிடம் வரை பொதுக்கூட்டம் நடந்ததால் மக்களின் தூக்கம் கெடுத்த குற்றத்திற்காக அரசியல் கட்சிகள் மீது வழக்குகள் போடும் காவல்துறையின் கண் முன்னே அல்லது காது முன்னே இரவு முழுவதும் ஒலிபெருக்கிகள் அலறிக் கொண்டிருக்கப் போகின்றன.

மக்கள் உரிமைகளைக் காக்கவோ, மீட்கவோ 50 பேர் ஊர்வலம் போவதற்கு உயர்நீதிமன்றம் வரை போய் குறைந்தது 50 நிபந்தனைகளோடு அனுமதி பெறும் நிலையில், எந்த அனுமதியும் பெறாமல் ஆபாச நடனம் ஆடிக்கொண்டு ஊர்வலங்கள் நடக்க உள்ளன.

ஊர்வலத்தில் இரண்டு இரண்டு பேராக சாலையின் இடது ஓரத்தில் 20 வரிசைகள் கடந்தவுடன் பொதுமக்கள் சாலைகளைக் கடக்க வசதியாக 10 அடி இடைவெளி விட்டு அடுத்த 20 பேர்கள் வரவேண்டும் என்றும், ஆராய்ச்சிப் பட்டங்கள் பல பெற்ற ஜோசியக்காரர்கள் 10 மணி 11 நிமிடத்தில் இருந்து 10 மணி 53 நிமிடங்களுக்குள் இந்த சடங்கு நடந்து முடிந்தாகவேண்டும் என கறாராக முகூர்த்த நேரம் குறித்துத் தருவது போல, நீதிபதிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஊர்வலம் தொடங்கி, குறித்துக் கொடுத்த நேரத்துக்குள் ஊர்வலம் முடிந்தாக வேண்டும் என்ற நிபந்தனைகளும் இல்லாமல் அல்லது மதிக்காமல் சட்டத்தைக் காக்க அல்லும் பகலும் அயராது உழைக்கும் காவல்துறையினர் தொந்தி விநாயகருக்கு (காவல்துறையினரின் தொந்தி என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது) கொடுக்கும் பாதுகாப்போடு முழு சாலையையும் அடைத்துக் கொண்டு மணி கணக்கில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்யப் போகிறார்கள்.

முருக பக்தர்கள் நடத்தும் மாநாடு என ‘இந்து முன்னணி மாநாடு’ நடந்ததையும், அரசியல் பேசக்கூடாது என உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தும் திராவிட இயக்கத்தை ஒழிக்கவும், திராவிட இயக்கத் தலைவர்களை விமர்சித்தும் ஆவணப்படங்கள் ஒளிபரப்பினதும் நம் அனைவருக்கும் தெரியும். அதுபோலவே பிள்ளையார் ஊர்வலத்தையும் சங்கப் பரிவாரங்கள் பொதுக் கோயில்களில் தங்கள் கொடிகளோடு பிள்ளையார் சிலைகளை வைத்தும், ஒவ்வொரு மதவெறி இந்து அமைப்புகளும் தங்கள் அமைப்பின் பெயராலேயே, தங்களுக்கென்று ஒரு நாளினை ஒதுக்கப்பெற்று அது மதவிழா என்பதை மறக்கச் செய்து தங்கள் தங்கள் அமைப்பின் கொள்கைப் பரப்பு ஊர்வலமாக மாற்றி விடுகின்றனர்.

மந்திரிகளின் ஊழல் வழக்குத் தள்ளுபடி செய்தியைப் படித்தவுடன் தாமாக முன்வந்து (Suo moto) வழக்கை நடத்தும் அளவுக்கான நேர்மையான நீதிபதிகள் யாரும் நிபந்தனை மீறல் குறித்து தாமாக முன்வந்து வழக்கு எதையும் பதிந்ததாகத் தெரியவுமில்லை; கேள்விப்படவுமில்லை. அவ்வாறாக கட்சிக் கொடிகள் உடனும் கட்சிப் பதாகைகளுடனும், அரசியல் முழக்கங்களையும் எழுப்பிக் கொண்டும் செல்லும் பிள்ளையார் ஊர்வலங்களை தொலைக்காட்சியில் பார்க்கும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் யாரும் தாமாக முன்வந்து வழக்கு பதிவார்களா என்பதும் நமக்குத் தெரியாது.

அவ்வாறேதான் பெயர் மட்டும்தான் பிள்ளையார் ஊர்வலம்; ஆனால் நடப்பதோ இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத், பாரத இந்து மகா சபா என சமஸ்கர நாமங்களுடன் (ஆயிரம் பெயர்களுடன்) கட்சி ஊர்வலங்களுக்கு, கட்சிகள் பெயராலேயே, நாட்கள் பிரித்துக் கொடுத்தும்தான் காவல்துறை அனுமதியும் வழங்கி வருகிறது.

ஏனெனில் எச்சில் இலை வழக்கில் அறநிலையத் துறையை எதிர்மனுதாரராக சேர்த்து விசாரிக்காததால் இரு நீதிபதிகளடங்கிய ஆயம் வழங்கியத் தீர்ப்பை மாற்றியும் உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையைப் பற்றிய கவலை இல்லாமல், எச்சில் இலையில் உருளலாம் என்ற தீர்ப்பை வழங்கி நீதிமன்ற ஒழுங்குகளை கறாராகப் பின்பற்றுவோர் நமக்கு நீதிபதிகளாக வாய்த்திருக்கிறார்கள். தன் ‘கட்சி’க்காரருக்காக நீதிமன்ற ஆளுகை எல்லையைத் தாண்டிய மனுவைக் கூட, தேவையான எதிர்தரப்பினரைச் சேர்க்காமலும், அவர்கள் கருத்தைக் கேட்காமலும் ‘தலை போகிற’ ஆபத்துக் கருதி விடுமுறை காலத்திலும் தாமதம் இன்றி வழக்கை விரைந்து நடத்தி, உச்சநீதிமன்றத் தீர்ப்பே ஆனாலும் (நெற்றிக் கண்ணைத் திறப்பினும்) தடைவிதித்து நீதி வழங்கும் ‘கொள்கை’ உறுதி கொண்ட நீதிபதிகளும் இருக்கிறார்கள்.

அது போலவே பள்ளிக்கூடங்களில் கையில் கட்டும் வண்ணக் கயிறுகள் கூட ஜாதிய மோதலுக்கும் மத மோதலுக்கும் வழிவகுக்கும் என்பதால் கையில் வண்ண கயிறுகளோடு மாணவர்களை அனுமதிக்கக் கூடாது என அரசு நியமித்த ஆணையம் பரிந்துரைக்கும் நிலையில், தனது மதம் எது? மதத்தில் தமது பிரிவு எது? என்பதை குல்லா அணிந்தால் தெரியவரும் என்பதால் அதனைத் தவிர்த்து விட்டும், சிலுவையை வெளியில் காட்டி அணிந்தால் மதச்சார்பு தெரிந்துவிடும் என்பதால் சட்டைக்குள் மறைத்து வரும் நீதி பதிகளும் உண்டு; தைப் பொங்கலுக்காக மார்கழி இறுதியில் சுவருக்கு சுண்ணாம்படிப்பதைப் போல ‘நீறில்லா நெற்றி பாழ்’ எனும் பழம் நெறியைப் பின்பற்றி திருநீற்றுப் பூச்சோடும், நீதிமன்றம் அகற்றச் சொல்லும் கொடிக்கம்பத்தைப் போல் நடு நெற்றியில் சிவப்பு கம்பத்தை நட்டுக் கொண்டிருக்கும் நீதிபதிகளும் உண்டு.

சனாதன தர்மத்தை இழித்துப் பேசியதால், அமைச்சரின், நாடாளுமன்ற உறுப்பினரின் தகுதி நீக்க வழக்கில் இவ்வழக்கில் தகுதி நீக்கத்திற்கான விதிகள் ஏதும் இல்லை எனக் கூறி ஐந்து பக்கங்களில் தீர்ப்பளித்தாலும் சனாதான தர்மம் குறித்து குப்புசாமி சாஸ்திரி கூட்டத்தாரிடம் விளக்கம் பெற்று மக்கள் மீதுள்ள அக்கறையால் அவர்களுக்கு விளக்க (குழப்ப) வேண்டும் என்ற பேராவலோடு ஒரு நூறு பக்கங்களைத் தீர்ப்பில் சேர்த்து தெளிவுபடுத்தும் ஆர்வம் மிக்க நீதிபதிகளும் உண்டு. விதிமீறல் நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த வகையறாக்களிடம் வழக்கு சென்றால் என்ன தீர்ப்பு வருமோ என்ற பதற்றம் நமக்கும் உண்டு.

எனவே ‘வருமுன் காப்போம்’ என்ற எண்ணத்தோடு ஏன் இவ்வாறு செய்யலாகாது எனும் எண்ணத்தோடு கீழ்கண்டவற்றைக் கழகத் தோழர்களின் செயல்பாட்டுக் கெனவும், ஒத்த சிந்தனை கொண்டோரின் பரிசீலனைக்காகவும் முன் வைக்கிறோம். ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஒத்த கருத்துள்ளோர் கூடி, தேவையெனில் அரசின் விதிமுறைகளை செயல்படுத்தும் நல்ல நோக்கத்தோடு நேரடி தலையீடு செய்யலாமா? செய்யலாம் எனில் எந்த முறைகளில்? என்பது குறித்து விவாதிக்கலாம்.

பின்குறிப்பு: (கழகத் தோழர்களுக்கு)
ஆகஸ்ட் 27 தான் பிள்ளையார் ஊர்வலம் என்றாலும், இப்போதிருந்தே நடவடிக்கைகளைத் தொடங்கலாம் எனக் கருதுகிறேன்.குறிப்பாக பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்சில் சிலைகளை உற்பத்தி செய்யும் இடங்களை அடையாளம் கண்டு உடனடியாக Speed Post (அ) Registered Post with Acknowledgement due வழியாக மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டால் உடனடியாக அச்சிலைகளை அவர்களே வந்து எடுத்துச் சென்று விடுவார்கள். இது கடந்த ஆண்டுகளில் பல மாவட்டங்களில் நடந்துள்ளது. அதோடு (கழக முகநூல் பக்கத்தின்) இணைப்பில் பதியப்பட்டுள்ள விண்ணப்பங்களையும் உரிய அதிகாரிகளுக்கு இப்போதே அனுப்பி வைக்கலாம்.

புகார் கடிதங்களை முடிந்தவரை ஒப்புகையுடன் பதிவஞ்சலில் அனுப்புவது நல்லது. குறிப்பாக மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு அளிக்கப்படும் புகார்களைக் கட்டாயமாக பதிவு அஞ்சலில் ஒப்பகையுடன் அனுப்பிப் பெறுவது நல்லது. அதேபோல அனுப்பப்பட்ட புகார்களின் நகல்களையும், பெற்றுக் கொண்டதற்காக பெறப்படும் ஒப்புகை சீட்டுகளையும் பத்திரமாக வைத்திருப்பதும் கட்டாயம். பின்னர் தேவைப்பட்டால் வழக்கு தொடர்வவதற்கு அவை பயன்படும். விதிமீறல்களோடு செய்யப்படும் ( அதாவது பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகள், இரசாயன வண்ணப்பூச்சுள்ள சிலைகள்) சிலைகளை தொடக்கத்திலேயே அகற்றி விடுவது என்பது ஊர்வலத்தில் அதிக சிலைகள் எடுத்து வருவதைத் தடுக்கும்; குறைக்கும்.”

– *கொளத்தூர் மணி,*
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்
01.07.25.

 

 

You may also like...