இரு மசோதாக்கள் யார் வகுப்புவாதிகள்?
முன்னேற்றத்துக்கு யார் முட்டுக்கட்டை! பார்ப்பனீயத்தின் விளைவு இந்தியாவில் இன்று இரண்டு வகுப்பார்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதில் சிறிது கூட விவகாரமே இருக்காது என்று கருதுகிறோம். அதாவது ஒன்று : பெண் மக்கள். இரண்டு : தீண்டப்படாத மக்கள் என்பவர்கள். இவ்விரு கூட்டத்தாரும் கல்வியில் 100க்கு ஒருவர் இருவர் கூட படித்தவர்கள் இருக்க மாட்டார்கள் என்று சொல்லத்தக்கதாகத்தான் இருக்கிறார்கள். செல்வத்திலோ பெண்களுக்கு சொத்துரிமையே கிடையாது. ஏனெனில் சட்டப்படியே பெண்களது வாழ்க்கை என்பது ஆண்களுக்கு அடிமை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். பெண்கள் கற்று இருப்பதும் சொத்து வைத்திருப்பதும் மிக அருமையாகத்தான் இருக்கும். அதுபோலவே தீண்டப்படாதவர்கள் என்கின்றவர்கள் நிலையும் சமுதாய ஒழுங்குப்படியே மனிதத்தன்மை அற்றவர்கள் ஆவார்கள். அவர்கள் பிறவித் தொழிலாளிகள், செல்வம் சேர்க்க சந்தர்ப்பமும், சமசுதந்திரமும் இல்லாதவர்கள். சட்ட நிர்பந்தத்தினாலல்லாது படிக்கவோ அரசியல் ஸ்தானம் பெறவோ முடியாதவர்கள். இப்படிப்பட்ட இரு சமூகத்தாரையும் பற்றி அரசாங்கம் கவனித்ததல்லாமல் இதுவரை எந்த ஜனத்...