ஜவஹர்லாலும் சமஷ்டியும்
கல்கத்தாவில் வெத்திவேட்டு வீரரான தோழர் பண்டித ஜவஹர்லால் தலைமையில் கூடிய காங்கரஸ் காரியக் கமிட்டியில் “சமஷ்டித் திட்டத்தை சாத்தியமான எல்லா வழிகளிலும் எதிர்ப்பதென்றும், தேசம் தனது அபிப் பிராயத்தை அறிவித்திருந்தும் இத்திட்டத்தை ஆரம்பிக்க முயல்வது இந்திய மகாஜனங்களை அறை கூவியழைப்பதாக இருக்கிறதென்றும் எனவே அதைத் தடுக்க வேண்டிய மாகாண ஸ்தல காங்கரஸ் கமிட்டிகளும், மாகாண மந்திரிகளும் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் மற்றொரு காங்கரஸ் தலைவரான தோழர் சத்தியமூர்த்தியாரோ
“சமஷ்டித் திட்டமானது எந்தவிதமான கெடுதியுடையதானாலும் அதை ஏற்று நடத்தவேண்டும்”
என்று கூறுகிறார். இதில் யாருடைய வார்த்தை நிறைவேறுமென்றால் தோழர் சத்தியமூர்த்தியார் வார்த்தை தான் நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை.
ஏனெனில் முன்பு பதவி ஏற்புப் பிரச்சினை வந்தபோது தோழர் ஜவஹர்லால் அவர்கள் “என் உயிர் போகும்வரை பதவி ஏற்பதை எதிர்த்தே தீர்வேன்” என்றார்.
ஆனால் தோழர் சத்தியமூர்த்தியாரோ
“என் உயிர் போகும் வரை பதவி ஏற்க வேண்டும் என்று வாதாடியே தீர்வேன்” என்று கூறினார். அதன்படியே பதவி ஏற்றுமாகிவிட்டது. ஆனால் தோழர் ஜவஹர்லால் உயிர் இன்னும் இருந்து கொண்டுதானிருக்கிறது.
அதுபோலவே இந்த சமஷ்டி விஷயத்திலும் தோழர் சத்திய மூர்த்தியாரே வெற்றி பெறுவார் என்பது நிச்சயம்.
ஆனால் தோழர் ஜவஹர்லாலோ எதையும் சிறுபிள்ளைதனமாக உளறிவிட்டு தோல்வியடைவார் என்பது உலகறிந்த விஷயம்.
குடி அரசு – கட்டுரை – 31.10.1937