காங்கரஸ் தலைவர்கள் திண்டாட்டம்

நாகூர், பட்டுக்கோட்டை, துறையூர், திருவாரூர் முதலிய இடங்களில் காங்கரஸ் தலைவர்கள் பட்டபாட்டை வேறிடத்து வெளிவரும் செய்திகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். பொதுக் கூட்டங்களில் பேச முன் வருபவர்கள், யார் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயாராகவே இருக்க வேண்டும். கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது தலைவர்கள் எனக் கூறிக்கொள்வோரின் கடமையாகும். மேலும் காங்கரஸே இந்தியாவின் ஏகபிரதிநிதி ஸ்தாபனம் எனப் பெருமையடித்துக்கொள்ளும் காங்கரஸ்வாலாக்கள் காங்கரஸ்காரர் கேள்விகளுக்குத் தான் பதில் சொல்வோம், ஏனையோர் கேள்விகளை லôயம் செய்ய மாட்டோம் எனக் கூறுவது பேடித்தன மட்டுமல்ல போக்கிரித்தனமுமாகும். தோழர் ஈ.வெ.ராமசாமி செல்லுமிடங்களில் எல்லாம் “யார் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். பதில் சொல்ல தயார்” என முதலில் பீடிகை போட்டுக் கொண்டே பேசுகிறார். கேள்வி கேட்பவர்களுக்கு – அவர்கள் எக்கட்சியார் என கவனிக்காமல் – ஆணித்தரமாக பதிலளிக்கிறார். கேள்விகளுக்கு பதிலளிக்க அஞ்சுவதுமில்லை. கேள்விகள் கேட்கப்படுமோ எனத் துடைநடுங்குவதுமில்லை. துறையூர், கரூர், திருச்சி முதலிய இடங்களில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புக் கூட்டங்களில் தோழர்கள் கே.எ.பி. விசுவநாதம், சோமசுந்தர பாரதியார் போன்ற நமது வீரர்களும் “யார் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயார்” எனக் கூறிக்கொண்டே பிரசங்கம் செய்து வந்திருக்கிறார்கள். இந்த ஆண்மையான – நேர்மையான – யோக்கியமான – பொறுப்பான முறையை காங்கரஸ் வாலாக்கள் ஏன் பின்பற்றக்கூடாது? காங்கரஸ்காரர் பிதற்றுவதை யெல்லாம் வேதவாக்கென ஒப்புக்கொள்ள வேண்டும்; எவரும் மறுக்கக் கூடாது என்பதுதான் காங்கரஸ் வாலாக்கள் கருத்தா? அப்படியானால் அது ஹிட்லரிசமல்லவா? பாசிசமல்லவா? அதனாலன்றோ காங்கரசிலே பாசிசமும் ஹிட்லரிசமும் வளர்ந்து வருவதாக மஹாகனம் ÿநிவாச சாஸ்திரியார், ஸர்.கெ.வி. ரெட்டி போன்ற அறிவாளிகள் கூறுகிறார்கள். காந்தி காங்கரஸில் கால் வைத்தது முதல் ஜனநாயகக் கொள்கை ஆழக் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது என முதுகெலும்புடைய காங்கரஸ்காரர் கூறவில்லையா? மேலும் தோழர் சத்தியமூர்த்தியிடம் கேட்ட கேள்விகள் எல்லாம் “காங்கரஸ்” “தினமணி”யில் காங்கரஸ்காரர் கேட்ட கேள்விகள்தான். தோழர் சொக்கலிங்கம் நேர்மையும் பொறுப்புணர்ச்சியுமுடைய ஒரு பத்திரிகாசிரியராயிருந்தால் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குக் கட்டாயம் பதிலளித்திருக்க வேண்டும். கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க ஆற்றலோ ஆண்மையோ இல்லாதவர் பொது மேடையில் பேச முன்வரலாமா? சாத்தனும் சடையனும் தொம்மனும் திம்மனும் உளறிக் கொட்டுவதை யெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு கேட்டுக்கொண்டிருக்கவா தென்னாட்டார் ஜென்மமெடுத்திருக்கிறார்கள். பத்திரிகையில் பொய்யும் புளுகும் அளந்து பாமரமக்களை ஏமாற்றிக் காசு பறிப்பதுபோல் பொதுமேடைகளிலும் உளறி ஏய்க்க வந்தால் தேச மகாஜனங்கள் பாடம் கற்பிக்க முயலத்தான் செய்வார்கள்; முயலத்தான் வேண்டும். இன்றேல் பொதுவாழ்வே சீரழிந்து விடும். பொய்யர்கள் – வேஷதாரிகள் – பேனாமிகள் கை வலுத்துவிடும். காங்கரஸ்காரர் மிரட்டு இனித் தென்னாட்டில் பலிக்காது. காங்கரஸ்காரர் பொய்ப்பிரசாரங்களும் பித்தலாட்டங்களும் அயோக்கியத் தனங்களும் லஞ்ச லாவணங்களும் தேச மகா ஜனங்களைத் தட்டி எழுப்பி விட்டன. காங்கரஸ்காரர் கைப்பற்றிய ஸ்தல ஸ்தாபனங்களில் எல்லாம் லஞ்சம் தாண்டவமாடுவதாக ஒரு அசம்பிளி மெம்பரும் காங்கரஸ் தலைவரெனச் சொல்லிக் கொள்பவருமான தோழர் மட்டப்பாறை வெங்கடராமய்யரே ஒப்புக்கொள்ளும்போது – லஞ்சத்தை ஒழிக்க காங்கரஸ் “தினமணி”யே பகிரங்கமாகக் கிளர்ச்சி செய்யும்போது – தமிழ்நாடு காங்கரஸ் கமிட்டிக் காரியதரிசியும் டில்லி அசம்பிளி சென்னைப் பிரதிநிதியுமான தோழர் சத்தியமூர்த்திமீது காங்கரஸ் “தினமணி”யே கெளரவமான குற்றங்களை வெளிப்படையாகச் சாட்டும் போது தென்னாட்டார் விழிப்படைந்திருப்பது ஆச்சரியமாகுமா? சேலம் “ஹிந்தி ஆதரிப்பு”க் கூட்டத்திலே “ஹிந்தி”க்கு இருந்து வரும் எதிர்ப்பை நேரில் கண்ட பார்லிமெண்டரி காரியதரிசி தோழர் என்.எஸ். வரதாச்சாரியார் ஹிந்திக்கு இருந்து வரும் எதிர்ப்பை கனம் முதன் மந்திரியிடம் தெரிவிப்பதாகச் சொன்னாராம். துறையூரில் “தினமணி” சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஹிந்தி ஆதரிப்புக் கூட்டத்தில் பொதுஜனங்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு திக்குமுக்காடும்படி செய்யவே தோழர் சொக்கலிங்கம் பேந்தப் பேந்த விழித்தாராம். ஜனங்களின் ஆத்திரத்தையும் அதிருப்தியையும் உணர்ந்த காங்கரஸ்வாதியான தோழர் வெங்கடாசலம்பிள்ளை ஹிந்தியை கட்டாயபாடமாக்கக் கூடாதென்று முதன்மந்திரியைக் கேட்டுத் தாமே கிளர்ச்சி செய்யப்போவதாகத் தெரிவித்தாராம். எங்கு பார்த்தாலும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. காங்கரஸ் எம்.எல்.ஏக்கள் பெரும்பாலார் ஹிந்தி கட்டாய பாடத்தை ஆதரிக்கவில்லை. எனினும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு பயந்தும் மாதச் சம்பளம் 75 ரூபாயில் மண் விழுந்து விடுமோ என அஞ்சியும் – பகிரங்கமாக எதிர்த்தால் காங்கரஸ் மானம் பறிபோய் விடுமே – மேற்கொண்டு காங்கரஸ் பேரைச் சொல்லிக் கொண்டு வெளியில் தலைநீட்ட முடியாதே என்று வெட்கப்பட்டும் மெளனமாக இருந்து வருகிறார்கள். ஆனால் துறையூர் கூட்டத்திலே வாய் திறக்க அஞ்சிய தோழர் சொக்கலிங்கத்தின் “தினமணி” பத்திரிகை “ஹிந்திக்கு ஆதரவு” என்ற தலைப்புக் கொடுத்து நேற்று புதன் கிழமை ஒரு நீண்ட தலையங்கம் எழுதி யிருக்கிறது. பொது ஜனங்களின் அபிப்பிராயத்தை மறைத்து இம்மாதிரி தலையங்கங்களின் மூலம் பொய்ப்பிரசாரம் செய்வது யோக்கியப் பொறுப்பாகுமா? ஹிந்தி எதிர்ப்புக்காரர்கள் எல்லாம் சுயமரியாதைக்காரர் என்று கூறிவிட்டால் ஹிந்தி எதிர்ப்பின் சக்தி குறைந்து விடுமென்பது “தினமணி”யின் நினைப்பா? சோமசுந்தர பாரதி, சாமி வேதாசலம், உமாமஹேசுவரம் பிள்ளை, தென்னாடு முழுதுமுள்ள சைவ சித்தாந்த சங்கத்தார், மஹாமஹோபாத்தியாய சுவாமிநாதய்யர், டி.ஆர். வெங்கடராமசாஸ்திரியார், டாக்டர் ஸி.ஆர். ரெட்டியார், ஸர்.எம். கிருஷ்ணன் நாயர், கா. சுப்பிரமணியம்பிள்ளை, தென்னாட்டுத் தமிழ்ப் பண்டிதர்கள், ஆரிய சமாசத்தார் நாடிமுத்துப்பிள்ளை, டி.எ. ராமலிங்க செட்டியார், டாக்டர் அருண்டேல் முதலியவர்கள் சுயமரியாதைக்காரர்களா? அல்லது ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களா? அவர்கள் எல்லாம் சுயமரியாதைக் கட்சிக்கு எதிரிகளல்லவா? இரண்டொருவரைத் தவிர ஜஸ்டிஸ் கட்சியை எதிர்ப்பவர்களல்லவா? இந்நிலையில் ஹிந்தி எதிர்ப்புக்காரர்கள் எல்லாம் சுயமரியாதைக்காரர், ஜஸ்டிஸ் கட்சிக்காரர் எனக் கூறுவது வடிகட்டின போக்கிரித்தனமல்லவா? மேலும் ஹிந்தியை எந்தத் தமிழ்ப்பண்டிதர்களாவது ஆதரிக்கிறார்களா? பாஷை விஷயத்தில் அபிப்பிராயங்கூற அவர்களை விட வேறு யாருக்குத்தான் அதிக உரிமையுண்டு? மற்றும் “காங்கரஸ் மந்திரிகள் மீது சில சுயநலமுள்ளவர்களுக்குக் கோபமிருந்தால் அதற்காக அகில இந்திய பாஷை கூடாதென்று சொல்வது தமிழருக்கே அவமானத்தை உண்டு பண்ணுகிறது” என “தினமணி” கூறுகிறது. அவமதிப்பை உண்டுபண்ணுவது எந்தத் தமிழருக்கு? ஹிந்திக்காரருக்குப் பிறந்த தமிழருக்கா? தமிழ்ப்பெற்றோருக்குப் பிறந்த தமிழருக்கா? தமிழ்ப் பெற்றோர் பெற்ற தமிழர்கள் எல்லாம் ஹிந்தியை எதிர்க்கத்தான் செய்கிறார்கள். ஹிந்திப் பெற்றோர் பெற்ற தமிழருக்கு அவமானத்தை உண்டுபண்ணுகிறதானால் அந்த இருசாதிப் பேர்வழிகள் உணர்ச்சியை தமிழர் லôயம் செய்ய மாட்டார்கள்; லôயம் செய்யவும் தேவையில்லை.

மேலும் ஹிந்தி எதிர்ப்புக் கோஷ்டியார் நியாயவரம்பை மீறிக்கூட பிரசாரத்தில் இறங்கி யிருப்பதாயும் அவர்கள் போகும் இடங்களில் உங்களுக்கு கொஞ்சமாவது ரோஷமிருந்தால் ஹிந்தியை ஆதரிக்கும் கூட்டம் ஒன்று கூட உங்கள் ஊரில் நடவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறுவதாகவும் அதைக் கேட்டுக்கொண்டு சில சுயமரியாதைக்காரர் காங்கரஸ் கூட்டங்களில் கலாட்டா செய்ய முயற்சிப்பதாகவும் இப்படிச் செய்வது பேச்சுச் சுதந்தரத்தை பலாத்காரமாய்ப் பறிப்பதாகுமென்றும் சுயமரியாதைக்காரர் இம்மாதிரி கலாட்டாவிற்கு இறங்கினால் பொது ஜனங்களுக்குக் கோபம் வந்து அப்புறம் மோசமான நிலைமை ஏற்படும் என்றும் “தினமணி” வெளுத்து வாங்கியிருக்கிறது. “தினமணி” கூறுவது உண்மையெனவே வைத்துக்கொண்டாலும் அது எப்படித் தவறாகும்? காங்கரஸ்காரர் ரோஷமுடையவர்களாயிருந்தால் இந்த கட்சியைப் பூண்டோடு ஒழிக்க வேண்டுமென்று காங்கரஸ்காரர் பிரசாரம் செய்யவில்லையா? தாய் நாட்டு விடுதலை விரோதிகளை தயவு தாட்சண்யமின்றித் தாக்க வேண்டுமென்று காங்கரஸ்காரர் கூறவில்லையா? தாய்நாட்டு விடுதலைக்காக சர்வ தியாகங்களும் செய்ய தேச மகா ஜனங்கள் தயாராக இருக்க வேண்டுமென்று காங்கரஸ்காரர் கூறியதுபோல தமிழ்த் தாயைக் காப்பாற்ற சர்வ தியாகங்களும் செய்ய தமிழர்கள் தயாராக இருக்க வேண்டுமென்று உண்மைத் தமிழர்கள் கூறுவது எவ்வாறு குற்றமாகும்? மற்றும் பொது ஜனங்களுக்கு கோபம் வந்து மோசமான நிலைமை ஏற்படுவது பற்றியும் “தினமணி”யும் “தினமணி” கோஷ்டியாரும் கவலைப்படத் தேவையில்லை. “தினமணி” குறிப்பிடும் “மோசமான நிலைமை” ஏற்பட வேண்டுமென்பது தான் தமிழர்கள் ஆசை. 100க்கு 3 கொண்ட பார்ப்பனர்களும் அவர்கள் வால்பிடிக்கும் சில பேனாமிகளும் தென்னாட்டுப் பொது ஜனங்கள் ஆகமாட்டார்கள். ஆகவே மோசமான நிலைமை ஏற்படுமே என “தினமணி” நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம். மோசமான நிலைமை ஏற்பட்டால்தான் பார்ப்பனத் திமிரும் பேனாமிகள் கபட நாடகமும் சுயநலமும் ஒழியும். அவைகளை ஒழிக்கத் தமிழர்கள் கங்கனம் கட்டிக்கொண்டு விட்டார்கள். 28ந் தேதி ஹிந்தி தினக் கொண்டாட்டத்தைப் பற்றி மற்றப் பத்திரிகைகள் எழுதாமலிருக்கையில் “தினமணி” மட்டும் பொய்த்தலையங்கம் எழுதக் காரணம் என்ன? பொதுப் பணத்திலிருந்து மாதம் தோறும் 75 ரூபாய் தண்டம் பெறும் பாபத்துக்காக “தினமணி” ஆசிரியர் இம்மாதிரி மனச்சாட்சியை விற்கலாமா?

இந்த சந்தர்ப்பத்தில் தமிழர்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறோம். ஹிந்திக்கு இருந்து வரும் எதிர்ப்பை மந்திரிகள் உட்பட சகல காங்கரஸ்வாதிகளும் உணர்ந்து விட்டார்கள். மேலே எடுத்துக் காட்டியுள்ளபடி மஹாகனம் ÿநிவாச சாஸ்திரியார், ஸர்.எம். கிருஷ்ணன் நாயர், டி.ஆர். வெங்கடராம சாஸ்திரியார், சாரநாத அய்யங்கார், டாக்டர் ஸி.ஆர். ரெட்டி, டாக்டர் அருண்டேல் முதலிய அறிவாளிகள் அபிப்பிராயம் நற்பயன் பயக்கத்தவறா எனவும் காங்கரஸ்காரர் தெரிந்து கொண்டு விட்டனர். ஆகவே பொய்ப் பிரசாரம் செய்து தேச மகாஜனங்களை மயக்க – ஏய்க்க மும்முரமான வேலைகளை அவர்கள் இனிமேல் செய்யத்தான் செய்வார்கள். எனவே நம்மவர்கள் இனி சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதுவரையில் அரும்பாடுபட்டுத் தமிழர்கள் உள்ளத்து அரும்புவித்த ஹிந்தி எதிர்ப்புணர்ச்சி மழுங்கிப் போகாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். முஸ்லிம் லீக், ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதைக் கட்சி அன்பர்கள் நாள் தவறாமல் பொதுக் கூட்டங்கள் நடத்தி தீவிரமாகக் கிளர்ச்சி செய்ய வேண்டும். காங்கரஸ் பொய்ப்பிரசாரத்தினால் தமிழர்கள் ஏமாந்து பேகாமல் தடுக்க வேண்டும். ஹிந்திக்கு இருந்து வரும் எதிர்ப்பை முதன் மந்திரியிடம் தெரிவிப்பதாகவும் கிளர்ச்சி செய்வதாகவும் இரண்டு காங்கரஸ்காரர் பொதுக் கூட்டத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது நமது வெற்றியின் முதற்படி. இன்னும் தீவிரமாக வேலை செய்தால் பூரண வெற்றி கிடைப்பது நிச்சயம். ஆகவே தோழர்களே! சகோதரர்களே! முன் வைத்த காலைப் பின் வாங்காமல் நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் மேலும் மேலும் கிளர்ச்சி செய்ய வரிந்துகட்டிக்கொண்டு முன் வருவீர்களாக! வெற்றி நமதே! நிச்சயம்! வாழ்க தமிழ்! வீழ்க ஹிந்தி! ஒழிக பார்ப்பனத் திமிர்! அழிக ஆரியர் கூலிகள்.

– “விடுதலை”

குடி அரசு – மறுபிரசுரம் – 05.12.1937

You may also like...