காந்தீயத்தின் தந்திரம்
ஒரு காரியம் ஆகவேண்டுமானால் எத்தகைய இழிவான செய்கை யையும் செய்ய ஆரியர்கள் புராணத்தில் இடம் கொடுத்து இருப்பது புராணமதக்காரர்களுக்கெல்லாம் தெரிந்த விஷயமேயாகும்.
எவ்வளவு பித்தலாட்டம் வேண்டுமானாலும் செய்ய இடங்கொடுக்கும் அம்மதத்தில். உதாரணமாக பெண்களைவிட்டு மயக்கியும், பொய் சொல்லியும் பொய் வேஷங்கள் மாய் மாலங்கள் செய்தும், நீலிக்கண்ணீர் விட்டும் மக்களை ஏமாற்றி இருப்பதற்கு எவ்வளவோ ஆதாரங்கள் இருக்கின்றன என்றாலும் இன்று அரசியலில் செல்வாக்குப் பெற்றிருக்கும் இம்மாதிரியான பொய், புரட்டு, பித்தலாட்டம், ஏமாற்றம், வஞ்சகம் ஆகியவைகளுக்கு புராணங்களை விட இன்று காந்தீயமே பிறப்பிடமாக ஆகிவிட்டது.
காந்தியார் சாதாரண முறையில் – நாணையத்தில் நியாயவாதத்தில் வெற்றி பெற முடியாத – சாதித்துக் கொள்ள முடியாத காரியங்களுக்கெல்லாம் சிறிதும் யோக்கியப் பொறுப்பை லôயம் செய்யாமல் வெறும் தந்திரத்திலேயே காரியங்களை சாதித்துக் கொண்டு வருகிறார்.
உதாரணமாக ஒரு தரம் காந்தியாரின் ஆசிரமத்திலேயே சில ஒழுக்க ஈனமான காரியங்கள் நடந்துவிட்டதை மறைக்க “6 நாள் பட்டினி விரதம்” என்னும் பேரால் பட்டினி கிடந்து மக்களை ஏமாற்றினார்.
மற்றொரு தரம் சிறையில் இருந்து வெளியாவதற்கு ஆக “ஹரிஜன சேவை செய்யத் தனக்குப் பூரண சவுகரியம் கொடுத்து யாரும் எப்போதும் வந்து சிறையில் தன்னைக் கண்டு பேச சவுகரியம் கொடுக்கா விட்டால் சாகும் வரை பட்டினி கிடப்பேன்” என்று சண்டித்தனம் செய்து வெளியாகிவிட்டார்.
மற்றொருதரம் ஆதிதிராவிட மக்களுக்கு சர்க்காரால் வழங்கப் பட்ட தனித்தொகுதி சுதந்தரத்தைப் பாழக்குவதற்காக “தனித் தொகுதி முறையைச் சர்க்கார் மாற்றினாலொழிய சாப்பிட மாட்டேன்” என்று பட்டினி கிடந்து ஆதிதிராவிடர்களை ஏமாற்றி வஞ்சித்து விட்டார்.
பின்னும் ஒரு தரம் குருவாயூர் கோவில் பிரவேசத்துக்கு பாமர மக்களிடம் கையெழுத்து வாங்கி காட்டுவதாக ஒப்புக் கொண்டு ஆட்களை விட்டும் தனது மனைவியாரை விட்டும் கோவில் பிரவேசத்துக்கு ஆதாரமான காரணம் சொல்லாமல் “கையெழுத்துப் போடாவிட்டால் காந்தியார் பட்டினி கிடந்து செத்துப் போவார்” என்று சொல்லியும் காந்தியார் மனைவியாரை தன் முன்தானையை விரித்துக் கொண்டு “மாங்கலிய பிச்சை கொடுங்கள்” என்று கெஞ்சியும் அழுதும் கையெழுத்துப் பெறச் செய்தார்.
(இதையே சத்தியமூர்த்தியார் மனைவியாரும் காப்பியடித்து தேர்தலில் புருஷனுக்கு வெற்றியுண்டாக்கி வைத்தார்)
சமீபத்தில் கூட சென்னையில் ஹிந்திபிரசார சபையில் அதன் தலைவர் ஒரு பார்ப்பனர் சில பெண்களை கற்பழித்து கர்ப்பமாக்கி விட்டதற்கு ஆக காந்தியார் பட்டினி கிடப்பதாக சொல்லி அதையும் மறைத்தார்.
கடசியாக இப்போது பம்பாய் நரிமன் விஷயத்தில் பட்டேல் ஜி நடந்துகொண்ட விஷயம் நாற்றமாய் நாறி இந்தியா பூராவும் காங்கரசின் யோக்கியதை வெளியாய்விட்டதற்கு மெள்ள தந்திரமாக ஒரு கமிட்டி ஏற்படுத்தி அதில் சரியான விசாரணை ஒன்றும் இல்லாமல் தன் இஷ்டப்படி ஒரு தீர்ப்பும் நரிமனிடம் மன்னிப்பு வாங்க ஒரு மன்னிப்புக் கடிதமும் எழுதி காந்தியார் காயலாவாய் இருக்கிறார் இந்தத் தீர்ப்பை ஒப்புக் கொண்டு இந்த மன்னிப்புக் கடிதத்தில் கையெழுத்துப் போடாவிட்டால் காந்தியார் செத்துப் போவார் என்பதாக நரிமனுக்கு பேதிக்கு கொடுத்து மிரட்டி அவரிடம் கையெழுத்து வாங்கியாய் விட்டது.
நரிமன் சங்கதி புராணக்கதையில் உள்ள பத்மாசூரன் கதைபோல் ஆகிவிட்டது. ஆகவே காந்தீயத்தின் இம்மாதிரி பித்தலாட்டம் இனியும் என்ன என்ன செய்யப்போகிறதோ எத்தனை பேர் தலையில் கையை வைக்கப்போகிறதோ தெரியவில்லை. இதற்குத்தான் சத்தியமும், நீதியும் கொண்ட இயக்கம் என்று பேராம்! இவருக்குத்தான் சாந்தமூர்த்தி, சத்தியமூர்த்தி என்றும் பேராம்! எந்த சத்தியமூர்த்தியோ?
குடி அரசு – துணைத் தலையங்கம் – 31.10.1937