காங்கரஸ் மத ஆதிக்கத்துக்கா? அரசியல் ஆதிக்கத்துக்கா?
அந்நியர்களை இந்தியாவிலிருந்து விரட்டி அடித்து விடுகிறோம் என்று வீரம் பேசி மக்களை ஏய்த்து அதிகாரப் பதவி பெற்ற மற்றொரு அந்நியராகிய பார்ப்பனர் அரசியல் ஆதிக்கம் என்பது பிரிட்டிஷ் ஆட்சிக்கு சரணாகதி அடைந்து பார்ப்பன மத ஆதிக்கத்தை பலப்படுத்திக் கொள்ளுவது தான் என்பதை கொஞ்சமும் நெஞ்சும் குடலும் அஞ்சாமல் தைரியமாய் காட்டிக்கொண்டு வருகிறார்கள்.
எவ்வித அதிருப்தியையும் எதிர்ப்பையும் லôயம் செய்யாமல் பொது ஜன அபிப்பிராயத்தை சிறிதும் மதிக்காமல் மாகாண கவர்னரும் சர்க்கார் பெரிய அதிகாரிகளும் பெரிதும் முறையே தம் கைவசத்திலும் தம் இனத்தார் களாகவும் இருக்கிறார்கள் என்கின்ற ஆணவத்தில் “அப்படித்தான் செய்வேன்” “என் இஷ்டம்” “பேசாதே” “உட்கார்” என்கின்ற இராணுவ அதிகார ஆணவத்தில் காரியத்தை நடத்துகிறார்கள்.
இன்று நம் சட்டசபையில் இருக்கும் பார்ப்பனரல்லாத அங்கத்தினர்கள் சொரணை இழந்து சுதந்தரமிழந்து மானம் கெட்டு “வார்த்ததை வாரம்மா வள்ளித்தாயே” என்று சிறிதும் உயிரற்ற நடைப்பிணம் போல் இருந்து கொண்டு ஆரிய ஆட்சிச் சூழ்ச்சிக்கு ஆதரவாய் இருந்து வருகிறார்.
குறிப்பாக சரியான பொருத்தமாக சொல்ல வேண்டுமானால் இன்றைய பார்ப்பன ஆட்சி ஒரு பெரும் ஏதேச்சாதிகார அடக்கு முறை ஆட்சி போலவேதான் காணப்படுகிறது. தப்பாகவோ, சரியாகவோ ஒரு தடவை ஏதாவது ஒரு அபிப்பிராயம் ஆச்சாரியார் அவர்கள் வாயிலிருந்து வந்து விட்டால் அது எப்படிப்பட்ட அக்கிரமமானதும், கேடானதுமாக இருந்தாலும் சற்றும் புனராலோசனை செய்ய முடியாது என்ற ஆணவத்துடனே காரியங்கள் நடத்துகிறார்.
இதைப் பார்க்கின்றபோது பார்ப்பனர் ஆட்சி அவ்வளவு அக்கிரமமும் ஆணவமுமாக நடத்தக் கூடிய பலமுடையதா? அல்லது பார்ப்பனரல்லாத நம் தமிழ் மக்கள் அவ்வளவு கோழைத்தனமும் இழிதன்மையுமுடைய பூச்சித்தன்மை மக்களா? என்றுதான் குழப்பமடைய வேண்டியதாயிருக்கின்றது.
ஏன் என்றால் காங்கரசின் பேரால் இன்று கனம் ஆச்சாரியாருக்கு பின்னால் நின்று கொண்டிருக்கும் உண்மைத் தமிழர்கள் என்றும் பரிசுத்த தமிழ் மக்கள் என்றும் பரம்பரை வீரக்குலத்தில் பிறந்தவர்கள் என்றும் வீரமும் பெருமையும் பேசிக் கொண்டிருக்கும் தோழர்கள் கூ.அ. ராமலிங்கம் செட்டியார், கூ.கீ. தேவர், நாடிமுத்து பிள்ளை, கனம் சுப்பராயன் முதலிய “குல நலமும்” செல்வமும் சிறப்பும் பெற்ற தமிழ் மக்கள் இந்த சர்வாதிகார இராணுவ ஆட்சியை எப்படிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் கேட்க வேண்டி யிருக்கிறது. இவர்களுக்கு சொந்த புத்தி இல்லையா? மான உணர்ச்சி இல்லையா? இந்த சட்டசபை மெம்பர் பதவி இவர்களுக்கு 5 வருஷகாலம் இருப்பதற்குள் இவர்கள் பின் சந்ததிக்கும் வழி வழி வம்சத்திற்கும் பேரவமானமான கெட்ட பெயரும் மாசும் நிலைத்துவிடுமே என்கின்ற அறிவு சிறிதாவது இல்லையா? மாதம் 75 ரூபாய்க் காசு இல்லாமல் பிழைக்க முடியாத கூட்டத்தில் இவர்களும் சேர்ந்தவர்களா? என்று கேட்க வேண்டி இருக்கிறது. ஆச்சாரியார் கொடுங்கோன்மை ஆட்சி செய்கிறார் என்றால் ஆச்சாரியாருக்கு பின்னால் இருந்து தாங்கிக்கொண்டிருக்கும் இந்த அம்மாஞ்சிகள் என்ன செய்கிறார்கள் என்று யாரும் கேட்கமாட்டார்களா?
பொப்பிலி ராஜா அவர்களை ஆணவக்காரர் என்றும் மக்களை மதியாதவரென்றும் கிள்ளுக்கீரை மாதிரி பேசிய இந்த வீரர்களும் சூரர்களும் அவருக்கு மேல் சாதித்து விடுவதாக வாயளந்தவர்களும் வம்பளந்த வர்களும் இன்று நீலக்கண் பூதத்துக்கு தொங்குசலாம் போடுகிறார்களே மானமில்லையா என்றும் கேட்க வேண்டி இருக்கிறது. இவர்களை கனம் ஆச்சாரியார் மதிக்கிறாரா மனிதர்கள் என்றாவது கருதி இருக்கிறாரா என்றும் சந்தேகப்பட வேண்டி இருக்கிறது.
அய்யகோ! சாணியை மிதிக்க அசூயைப் பட்டு எட்டிக் குதித்து மலக்குழியில் விழுந்து அபிக்ஷேகம் செய்து கொண்ட பரிசுத்தவான்களே! தமிழ்மக்கள் வீரத்துக்கும் சுதந்தர உணர்ச்சிக்கும் உங்களை உதாரணம் சொல்லு வதானால் பார்ப்பனர்கள் தமிழர்களை அனுமார் என்றும் சூத்திரர் என்றும் சண்டையில் முதுகுகொடுத்தோடிய சிறைப்படுத்திய அடிமை என்றும் தாசி மகன் என்றும் வைப்பாட்டி மக்கள் என்றும் வேதத்திலும் மனுதர்ம சாஸ்திரத்திலும் கல்லின்மேல் எழுத்துப்போல் எழுதிவைத்துக் கொண்டதை எப்படி ஒழிக்க முடியும்?
தோழர்களே! தேசத்தின் பேரால் தேசமக்களின் பிரதிநிதித்துவத்தின் பேரால் உங்களுடைய தலைவர் என்னும் பேரால் இந்த தன்னரசு ஆட்சியை நடத்துவதை நீங்கள் சம்மதிக்கிறீர்களா என்று அவர்களைக் கேட்க வேண்டி இருக்கிறது.
தமிழுக்கு அத்தாரிட்டி நான் தான் என்றும் தமிழைக் காப்பவன் நான் என்றும் தமிழ்ச் சங்கங்களில் உரிமை கொண்ட தமிழறிஞரே! தோழர் கூ.அ. ராமலிங்கம் செட்டியார் அவர்களே! ஹிந்தி தமிழ் மக்களுக்கு கட்டாய பாடமாக்க வேண்டும் என்று ஒரு பார்ப்பனர் சொல்லும் போதும் முரசடிக்கும் போதும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்க வேண்டியிருக்கிறது.
உம் அருமை வாழ்க்கைத் துணைவியை இழந்தீர். உம் அருமைச் செல்வமான மகனை இழந்தீர். ஹிந்தி சட்ட சபை மெம்பர் பதவியை துச்சமாய்க் கருதி உமது கருத்தை வெளியிட உமக்கு தைரியமில்லையல்லவா? ஹிந்தி கட்டாயமாகக் கூடாது என்று சொன்னால் உமக்கு என்ன ஆபத்து வந்து விடும்? என்றும் அப்படியே தேவரே! பொப்பிலி அரசரை வைவதற்கு உமது நாக்கு எவ்வளவு சுலபமாகச் சுழன்றது? அதைப் பார்த்த பார்ப்பனர் உமது வீரத்தை எவ்வளவு மெச்சி உமது குறுகக் கத்தரித்த குடுமிக்கு பூச் சுத்தினார்கள்? இன்று உம்மை பாதாளத்தில் அழுத்திவிட்டு உம்மீது போட பாராங்கல்லையும் தூக்கிக்கொண்டு இருக்கின்ற போதும் உமக்கு மான உணர்ச்சியும் சுதந்தர உணர்ச்சியும் வரவில்லையானால் இனி எப்போது தான் அதைப் பார்க்கும் பேறு நமக்கு கிடைக்கப் போகிறது? தோழர்களே! இது என்ன ஊரா, பாழா? கேள்வி கேப்பாடு இல்லாத கத்தரிக்காய்ப் பட்டணமா என்று கூட உங்களால் யோசிக்க முடியவில்லையா? கனம் ஆச்சாரியார் செய்வது, நாளைக்கு பிறகு நீங்கள் யார் முகத்தில் விழிக்கப் போகிறீர்கள்? என்றும் கேட்க வேண்டியிருக்கிறது.
இந்த மந்திரிகள் பதவி இனி எத்தனை நாளைக்கு நிற்கப் போகிறது? ஒரு மயிர்க்கால் அளவுதான் ஒட்டிக்கொண்டிருக்கிறது. எந்த வினாடியில் அறுந்து விழுகப்போகிறதோ தெரியவில்லை. இந்த அற்ப ஆயுளுக்கு இவ்வளவு பெரிய மானத்தை விற்பதா என்று யோசித்துப்பாருங்கள் என்றும் அழுகினதின் மேல் நாய் மலம் இட்டதுபோல் ஹிந்தியை புகுத்தித் தான் தீருவேன் என்றது மாத்திரமல்லாமல் தேசிய கீதம் என்று வந்தே மாதர பாட்டைச் சொல்லி அரசியல் கூட்டத்தில் பிரார்த்தனை செய்வது யோக்கியமா என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? என்றும் அவர்களை கேட்க மனம் துடிக்கிறது.
~subhead
வந்தேமாதரப் பாட்டு
~shend
நிற்க, வந்தேமாதரப் பாட்டு ஆரியர் மதத்தைக் காப்பதாக கூறும் கருத்தடங்கியதே தவிர பொதுவாக தேச ஆட்சியையோ சுதந்தரத்தையோ சமத்துவத்தையோ பொறுத்தது என்று யாராவது சொல்ல முடியுமா?
அப்பாட்டு ஏற்பட்ட சந்தர்ப்பம் எது என்றால் வங்காளத்தில் முஸ்லீம்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ கிளர்ச்சி செய்த போது அதை ஒழிக்க முஸ்லீம்களை நசுக்க மக்களுக்கு முஸ்லீம்கள் மீது விரோதமான உணர்ச்சி ஏற்படும்படியாகப் பாடின பாட்டாகும்.
அதாவது அப்பாட்டு ஆநந்த மடம் என்கின்ற ஒரு நாவலில் வருகிறது. இதைப்பற்றி 4-9-37 “விடுதலை” தலையங்கத்தில் விவரமாய் எழுதப்பட்டிருக்கிறது.
அப்படி இருக்க அப்பாடலை சட்ட சபை கூடும்போதெல்லாம் தினம் தினம் பாடுவது என்றால் அதன் கருத்து என்ன? இந்நாட்டில் பார்ப் பனரல்லாதார் தங்கள் சமூகத்தைக் காப்பாற்றிக் கொள்ள உரிமை கேட்பதற்காக அச்சமூகமே என்றென்றும் மானமும் சுதந்தரமும் இல்லாமல் அடிமைப்பட்டுக் கிடக்க இன்று பார்ப்பனர் சூழ்ச்சி செய்வது போலவே முஸ்லீம்களையும் ஒழிக்கச் செய்யும் சூழ்ச்சி தானே அப்பாட்டை அரசியல் மன்றத்தில் பாட வேண்டும் என்று ஏற்பாடு செய்வது? அப்படி இல்லை என்று யாராவது சொல்லுவதானால் முஸ்லீம்கள் பெரும்பான்மையாய் அப்பாட்டு பாடக்கூடாது என்று கட்டுப்பாடாய் சொல்லும்போதும் காங்கரஸ் தலைவர் தோழர் ஜவஹர்லால் நேரு அவர்கள் முஸ்லீம்கள் விழித்துக்கொண்டதை அறிந்து அப்பாட்டை தேசீயப் பாட்டாகக் கொள்ளக் கூடாது என்று சொன்ன பிறகும் அப்பாட்டை அரசியல் மன்றத்தில் பாடுவதென்றால் இன்றைய அரசியல் மன்றம் அரசியல் மன்றமா? ஆரிய இயல் ஆதிக்க மன்றமா? என்று கேட்கின்றோம்.
23.9.37ந் தேதி சென்னை அரசியல் மன்றமாகிய சட்ட சபையில் சபை ஆரம்பமான உடன் அந்த வந்தே மாதரப் பாட்டைப் பாடும்போது முஸ்லீமான தோழர் லால்ஜான் சாயபு அவர்கள் இப்பாட்டு தேசியப் பாட்டாகுமா என்று ஒரு ஒழுங்குப் பிரச்சினை கிளப்பியதற்கு ஆக அவருடைய கதி மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டிய அளவுக்கு வந்து விட்டது. கடசியாக தோழர் மாஜி மேயர் அமீத்கான் சாயபு அவர்கள் உதவிக்கு வந்த உடன் தோழர் ராஜகோபாலாச்சாரியார் தந்திரமாய் அடக்கி “மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை. ஒழுங்குப்பிரச்சினையை வாபீஸ் வாங்கிக் கொண்டால் போதும்” என்று சொல்ல, கடசியாக தோழர் லால்ஜான் சாயபு பாடு “உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும்” என்ற நிலைக்கு வந்து அப்பிரச்சினையை வாபீஸ் வாங்கிக் கொண்டு “நான் தப்பித்தேன் எங்கள் அப்பன் தப்பித்தார்” என்று ஓடி விட்டார். ஆகவே பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்து ஆடுகின்றது என்பதற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்? வந்தேமாதரப் பாட்டை தமிழர்கள் கேட்பதும் அது பாடும் போது எழுந்து நிற்பதும் ஒரு பெரிய மானக்கேடான காரியமாகும். சட்ட சபையில் உள்ள தமிழர்தான் ஒரு சமயம் மனுதர்மத்துக்கு இசையக் கூடிய யோக்கியதையை அடைந்து விட்டார்களோ என்றாலும் முஸ்லீம் வீரர்களும் கிறிஸ்தவ சூரர்களும் எப்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அப்பாட்டு பாடும்போது எப்படி எழுந்து நிற்கிறார்கள் என்பதும் நமக்கு சிறிதும் விளங்கவில்லை. சிற்சில சமயங்களில் “குடி அரசு” மதக் கொள்கை பற்றியும் தெய்வக்கொள்கை பற்றியும் எழுதும்போதும் சுயமரியாதை இயக்கத்தில் பேசும் போதும் சில முஸ்லீம்களுக்கும் சில கிறிஸ்தவர் களுக்கும் பொத்துக் கொண்டு வந்துவிடுகிறது மத அபிமானம்.
இன்று பார்ப்பனர்கள் இவர்களது மத அஸ்திவாரத்தில் கையை வைத்து ஆட்டி “எழுந்து நில்” “தலை வணங்கு” “இல்லாவிட்டால் வெளியில் போனதற்கு மன்னிப்புக் கேள்” என்று உதைக்கும் போது எங்கும் எதுவும் பொத்துக்கொள்ளாத மாதிரியில் அவர்களது தோல் அவ்வளவு மந்தமாகி விடுகிறது. மதத்துக்கு ஆக உயிர் விடுவதும் மதமே பிரதானம் என்பதும் இச்சமயத்தில் இக்கூட்டத்தாருக்கு எங்கு போய்விடுகிறது?
உண்மையிலேயே இந்த நாட்டை மாத்திரமல்லாமல் இந்த உலகத்தையே இப்படிப் பிரித்து வைத்து மனிதனுக்கு மனிதனை வைரியாக்கி மக்களை என்றும் திருப்தியில்லாமலும் கவலையுடனும் தொல்லை யடையச் செய்வதற்குக் காரணம் இவ்வளவு மதங்கள் இருப்பது தான் என்பது நமது அபிப்பிராயம்.
இவை – இவ்வளவு மதங்களும் ஒன்று பட்டு பகுத்தறிவுக்கு ஏற்றதாயும் சிறிதும் மூட நம்பிக்கைக்கு இடம் கொடாததாயும் மக்களை அன்பு நிலையில் அந்நியோன்யமாய் சகல துறையிலும் சமத்துவமாகவும் மானத்துடனும் நடத்துவதாகவும் உள்ள ஒரு மதமோ கொள்கையோ ஒன்று இருந்தால் அதை நாம் ஆக்ஷேபிக்கப் போவதில்லை. அதில் கடவுள் இருந்தாலும் சரி, கல் இருந்தாலும் சரி, அப்படி இல்லாத வரை அதற்கு மாறான சகல மதங்களையும் கொள்கைகளையும் ஒழிக்க வேண்டுமென்பது தான் நமதபிப்பிராயம். ஆனால் கொஞ்சமாவது சுதந்தர உணர்ச்சியோ சமத்துவ உணர்ச்சியோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இருப்பதாய்ச் சொல்லிக் கொள்ளும் மதங்களைக்கூட சிறிதும் தலையெடுக்க விடாமல் அழுத்தி அடியோடு முட்டாள்தனமானதும் சூழ்ச்சி நிரம்பியதும் சிறிதும் சம நோக்குக்கு இடமில்லாததுமான ஒரு மதம் ஆதிக்கம் செலுத்த ஆட்டம் போடுமானால் மற்ற மக்களுக்கு வீரமோ மானமோ இருக்கின்றதா என்று தான் கேட்க வேண்டி இருக்கிறது.
பெரும்பாலான கிறிஸ்தவர்கள் சமீபத்தில் இந்துக்களாய் இருந்து காரியத்துக்கு கிறிஸ்தவர்கள் ஆனதால் அவர்களுக்கு மதம் வேஷத்துக்கும் உத்தியோகம் கேட்பதற்கும் ஆகிய காரியத்துக்குத்தான் அதிகம் வேண்டி யிருக்கும். அப்படிப்பட்டவர்கள் சமயம் நேர்ந்த போது மதத்தைவிட தேசம் பெரிது என்று சொல்லி தப்பித்துக்கொள்வார்கள். ஓட்டு வேண்டியபோது தேசத்தைவிட மதம் பெரிது என்று அடக்குமுறைக்கு விண்ணப்பம் போடுவார்கள். ஆனால் முஸ்லீம்கள் மதத்துக்காக வாழ்கின்றோம் என்றும் தங்கள் மதமே உண்மையான பகுத்தறிவு மதம் என்றும் கூப்பாடு போடு கிறவர்கள். விக்கிரக வணக்கப் பாட்டுக்கு – முஸ்லீம் சமூக உணர்ச்சிக்கும் சமூக வாழ்வுக்கும் விரோதமான பாட்டுக்கு எப்படி எழுந்து நின்று காது கொடுத்து தலை வணங்குகிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.
ஆகவே பொது ஜனங்கள் பார்ப்பனரல்லாத தமிழ் மக்களும் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் ஹிந்தி எதிர்ப்புக்கும் வந்தேமாதரப் பாட்டு பிரார்த்தனை பஹிஷ்காரத்துக்கும் தொண்டாற்றி துணை புரிந்து வெற்றி பெற முயல வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
அப்படிச் செய்ய நமக்கு உரிமை உண்டு என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஏனெனில் ஆரியக்கடவுள்கள் கோவில்களில் தமிழர் களின் பிரார்த்தனையை தமிழ் பாட்டுகளில் சொல்லும்போது அதாவது தேவாரம் முதலியவை பாடும்போது பார்ப்பனர்கள் அதன் கருத்தைக்கூட கவனியாமல் சூத்திர பாஷையை காதில் கேட்பதே பாவம் என்று கருதி அவற்றைத் தடுக்க கோர்ட்டுகளுக்குப் போய் நியாயம் பெற ஆசைப்படும் போது தங்களது பாஷையை மற்றவர்களுக்கு கட்டாயமாக புகுத்தவும் மற்றவர்கள் பாஷை, மற்றவர்கள் மத ஆதிக்கப் பாட்டு ஆகிய பிரார்த் தனைக்கு எழுந்து நின்று தலை வணங்கவும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் மற்றவர் களுக்குள்ள மான உணர்ச்சியை காட்டிக்கொள்ளுவதில் ஒன்றும் பாவம் இல்லை.
குடி அரசு – தலையங்கம் – 26.09.1937