வரி குறைப்பு எங்கே?
புரோகிதக் கூட்டத்தார் தேசாபிமானம் என்னும் போர்வையைப் போர்த்துக்கொண்டு பாமர மக்களை ஏமாற்றி பதவியடைவதற்குச் செய்த சூழ்ச்சிகளில் பெரியது சகல துறைகளிலும் வரிகளைக் குறைத்து விடுவதாகக் கூப்பாடு போட்டு மக்களை ஏமாற்றினதாகும். இந்தக் கூப்பாடுகள் நடக்கும் போதே இவை முழுப் புரட்டென்றும் மொத்தத்தில் ஒரு தம்பிடி வரிகூடக் குறைக்க இவர்களால் முடியாதென்றும் இவர்கள் மேலும் மேலும் வரிபோடத் தான் போகிறார்கள் என்றும் நாம் அடிக்கடி சொல்லிவந்தோம். அதுபோலவே இன்றைக்கு புரோகித ஆட்சி ஏற்பட்டு இந்த 2, 3 மாத இடையில் எவ்வளவோ காரியம் செய்துவிட்டதாகப் பறை அடித்தும் அவசரப்பட்டுச் செய்வதாக யாரும் ஆத்திரப் படக்கூடாது என்று பொது மக்களுக்குச் சமாதானம் சொல்லிக் கொண்டு இஷ்டப்படிக்கெல்லாம் ஆடிக் குதித்துக்கொண்டும் அகங்காரமாகவும் ஆணவமாகவும் பேசிக் கொண்டும் திரிகிற இந்தப் புரோகிதக் கூட்ட ஆட்சியானது வரி விஷயத்தில் ஏதாவது காரியம் செய்திருக்கிறதாவென்று பார்த்தால் அந்த விஷயத்தில் ஒரு காசுகூடக் குறைக்கவில்லை என்பதோடு இன்னமும் எந்தெந்தத் துறையில் புது வரி போடலாம் என்றே ஆலோசனை செய்து வருகிறது.
ஸ்தல ஸ்தாபனங்களிலும் இதே மாதிரி பித்தலாட்டம் பேசிப் பதவி பெற்ற இந்த புரோகிதக் கூட்டம் மதராசிலும் மதுரையிலும் மற்றும் இரண்டொரு இடத்திலும் முனிசிபாலிட்டிகளில் புது வரிகள் போட்ட விஷயங்களையும் ஈரோடு முதலான சில முனிசிபாலிட்டிகள் வரி குறைத்து வரவு செலவுத் திட்டத்தை சரிப்படுத்திக் கொடுத்தும் அதை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது மான காரியங்களைக் கவனித்தால் வரி குறைப்புப் பித்தலாட்டத்தை ஒருவாறு உணரலாம்.
ஆனால் தேசத் துரோகிகள் என்று இந்தப் புரோகிதக் கூட்டத்தார் களாலும் அவர்களது கூலிபெற்ற அடிமைகளாலும் சொல்லப்பட்ட ஜஸ்டிஸ் கட்சியார் தைரியமாய் தோல்கேட்டுச் சுங்கங்களை எடுத்துவிட்டதோடு பூமிவரிகளிலும் 100க்கு 12லீ வீதம் குறைத்து விட்டார்கள். அதற்குப் பின் பதவிக்கு வந்த “மகா மகா தேசத் துரோகிகள் கழுதைகள் நாய்கள்” என்றெல்லாம் இந்தப் புரோகிதக் கூட்டத்தாரால் வசவு சொல்லப்பட்ட இடைக்கால மந்திரிகள் 2 மாத காலத்தில் பூமி வரியில் மேலும் 100க்கு 12லீ வீதம் குறைத்து மொத்தத்தில் 100க்கு 25 வீதம் நிரந்தரமாய் குறைத்து வரவு செலவு திட்டத்தையும் சரிக்கட்டிக் கொடுத்து விட்டு விலகிக் கொண்டார்கள்.
இவ்வளவுக்கும் இந்த மேல்படி இருதிறத்து மந்திரிகளும் பதவிக்கு வரும் போதும் தேர்தலுக்கு நிற்கும்போதும் வரி குறைக்கிறோம் என்று சொல்லி வாக்கு கேட்டவர்கள் அல்ல என்பது யாவருக்கும் தெரியும். பதவிக்கு வந்தால் தங்களால் கூடியதைச் செய்வோம் என்று மாத்திரம் சொன்னார்கள்.
ஆனால் இன்றைய புரோகித சரணாகதி மந்திரிகளோ அப்படிக்கு இல்லாமல் சகல துறைகளிலும் அதாவது காடுகளில் மாடு மேய்க்க வரி இல்லை, ரயில் சவாரி செய்ய வரி இல்லை, பூமிக்கு தண்ணீர் பாய்ச்ச வரி இல்லை, கல்விக்கு சம்பளமில்லை என்றும் இன்னும் இம்மாதிரி எவ்வளவோ அளப்புகள் வாய்க்கு வந்தபடி எல்லாம் அளந்தும் பேசி மக்களை ஏய்த்து பதவிக்கு வந்தவர்கள் இன்று மூலை முடுக்குகளில் இருட்டறைகளில் உட்கார்ந்து கொண்டு புது வரிகள் போட யோசனை செய்கிறார்கள். ஒரு புது வரியும் போட்டாய் விட்டது.
அதாவது ஜவுளிக்கடைக்காரர்களுக்கு (மில் ஜவுளி துணி விற்பவர் களுக்கு) வரி போட்டாய் விட்டது. இனி புகையிலை வரி போட புள்ளி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வளவு மாத்திரமல்லாமல் பூமிவரியையும் வேறுவகையில் அதிகப்படுத்தப் போகிறார்கள். தஞ்சாவூர் ஜில்லா மிராசுதாரர்கள் இது தெரிந்து இப்போதே அழுக ஆரம்பித்து விட்டார்கள். வரி அதிகமென்றும் தாங்க முடியாதென்றும் கூப்பாடு அதிகமாய்ப் போட்டவர்கள் அந்த ஜில்லாக்காரர்களே ஆகும்.
ஜஸ்டிஸ் மந்திரிகள் மீதும் இடைக்கால மந்திரிகள் மீதும் வரி குறைக்க வில்லை என்று அதிகக் குறை கூறினவர்களும் அந்த (தஞ்சை) ஜில்லாக் காரர்களேயாகும். இன்று அந்த ஜில்லாக்காரர்களே முதல் முதலில் அழ ஆரம்பித்திருப்பதைப் பார்த்து உண்மையிலேயே நாம் சிரிப்போமே தவிர சிறிதும் சங்கடப்படப் போவதில்லை.
புரோகித மந்திரிகள் புதிதாகப் போடக் கருதி இருக்கும் பூமி வரி என்ன என்றால் பூமி வைத்திருக்கின்றவர்களுக்கு வெள்ளாமையின் மீது அதாவது விளைந்த பலனின் பொருமானத்தின் மீது வருமானவரி மாதிரி புது வரி விதிப்பது என்பதாகும். இந்த வரித் தொகையைக் கொண்டு சேலம் ஜில்லாவில் மதுவிலக்கு செய்ததால் சர்க்காருக்கு குறைந்துபோன 25 லக்ஷ ரூபாய் வருமானத்துக்கு பிரதி செய்ய இந்த வரி போடப்படுகிறதாம். இன்னும் இதுபோல் பல வரிகள் போட்டுத் தான் இனிமேலும் “மது விலக்கு” செய்யும் நஷ்டத்து வரவு செலவை சரிக்கட்ட வேண்டிய யோக்கியதையில் இன்றைய புரோகித மந்திரிகள் நிலை இருக்கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த மந்திரிகளால் வரிச்சுமை ஒரு காசு அளவுகூட குறையாது என்பதை நாம் பந்தயங்கட்டிக் கூறுவோம்.
சம்பளக் குறைப்பு புரட்டு
சம்பள வகையிலும் ஏதோ குறைக்கப் போவதாகச் சொன்னதும் இப்போது பெரிய பித்தலாட்டமாகி விட்டது.
இன்று கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் புரோகிதக் கூட்ட உத்தியோகஸ்தர்கள் சம்பளங்களை கண்டிப்பாய் இந்த புரோகித மந்திரிகள் குறைக்கமாட்டார்கள். ஏனெனில் பெரிய உத்தியோகம் பார்ப்பவர்கள் பெரிதும் புரோகித வர்க்கத்தாரே ஆவார்கள். ஒரு சமயம் இனி புதிதாக வேலைக்கு வரும் உத்தியோகஸ்தர்கள் சம்பளம் ஏதாவது குறைக்க திட்டம் போடலாம். ஏனெனில் ஜாதி விகிதப்படி உத்தியோகம் வினியோகிக்க வேண்டியிருப்பதால் இனி புரோகிதரல்லாதார் கூட்டமும் உத்தியோகத்துக்கு வரலாம். அவர்களுக்கு சரி சம்பளம் கொடுக்க புரோகிதர்களுக்கு மனம் தாளாது. ஆகையால் அதில் ஏதாவது கை வைக்கக்கூடும். “மயிரைச் சுட்டால் கரி ஆகுமா” என்ற பழமொழிப்படி அப்படி செய்தாலும் பிரமாத மீதி எதுவும் ஏற்பட்டு விடப் போவதில்லை.
மந்திரிகள் “சம்பளம் குறைத்துக்கொண்ட” சூழ்ச்சியும் முன் இருந்த இடைக்கால மந்திரிகள் ஆட்சி மந்திரிசபை செலவைவிட ஜஸ்டிஸ் கட்சி மந்திரி சபை செலவைவிட அதிகமாகத்தான் ஆகிவிட்டதே தவிர அதிலும் சிறிதும் பலன் ஏற்பட்டு விடவில்லை. ஒரு ஜில்லாவுக்கு இரண்டு ஜில்லா போர்டு இருப்பது செலவு அதிகம் என்று சொல்லி ஒன்றுபடுத்த போகிறவர்கள் மந்திரி சபையை ஆதியில் 2 மந்திரிகள் இருந்ததை 7 ஆக்கி அப்புறம் 6 ஆக்கி இப்போது 10 ஆக்கி அந்த பத்து பேருக்கும் 10 காரியதரிசிகள் ஏற்படுத்தி அவர்களுக்கும் சம்பளம், படி, மோட்டார்கள் பிரயாணச் செலவுகள் ஆகிய தாம் தூம் செலவுகள் ஏற்படுத்திவிட்டதோடு சட்டசபை மெம்பர்களுக்கு சம்பளம் ஏற்படுத்தவும் ஆன காரியங்கள் செய்த பிறகு எப்படி சிக்கனமும் பண மீதியும் ஆகிவிடும் என்பது நமக்கு விளங்கவில்லை.
இன்றைய புரோகித கூட்ட மந்திரிகள் நினைப்பெல்லாம் எப்படி இப்பதவிகளில் மானமற்று மரியாதை அற்று அட்டைபோல் ஒட்டிக் கொண்டிருந்து புரோகித ஆதிக்கத்துக்கு நிலையான ஆட்சியை பலப்படுத்திக் கொள்ளலாமென்று கருதிக் கொண்டு இருக்கின்றார்களே ஒழிய ஜனங்களைப் பற்றியோ நாட்டு முற்போக்கைப் பற்றியோ சிறிதும் கவலை இருப்பதாக ஒரு விதத்திலும் காட்டிக்கொள்ளவே இல்லை.
அதிகாரத்துக்கு வந்து வராததற்கு முன் ஹிந்தியை கட்டாயமாகப் படித்து பார்ப்பானுக்கு பிறவி அடிமையாய் வைப்பாட்டி மகனாய் இருக்கும் மனப்பான்மையைப் பெறு என்றுதான் ஆக்கினை பிறப்பிக்க முயற்சி நடக்கின்றதே தவிர பாமர மக்களுக்கு என்ன நன்மை செய்வது என்பதில் சிறிதும் கவலையைக் காணோம்.
இதை அறிந்தேதான் பார்ப்பான் ஆட்சி எப்போதும் கூடவே கூடாதென்று ஆதியிலேயே வெகுகாலத்துக்கு முன்னமேயே ஒளவை பிராட்டியார் பாடி இருக்கிறார். அதாவது நாட்டை ஆட்சி புரிய எந்தக் கூட்டத்தார் தகுதியுடையவர்கள் என்று ஒரு அரசர் கேட்ட கேள்விக்கு ஒளவையார் “நூல் எனிலோ கோல் சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம் கோல் எனிலோ குடி அனைத்தும் கொள்ளை போம். நாலாவான், மந்திரியு மாவான் வழிக்குத் துணையாவான். அந்த அரசே அரசு” என்று பாடி இருக்கிறார். ஆகவே நூல் என்னும் பூணூல்காரர்களாகிய புரோகிதர்கள் ஆட்சி நீதியாய் இருக்காதென்றும் பாரபக்ஷமாகவே தங்கள் ஆதிக்கத்துக்கு ஏற்றதாகவே இருக்குமென்றும் நன்றாகச் சொல்லியிருக்கிறார். இதை உத்தேசித்து 3, 4 வருஷங்களுக்கு முன்னமேயே நாம் புரோகித ஆட்சி கொடுங்கோன்மையாக இருக்குமென்றும், நம் அபிப்பிராயத்தைச் சொல்லக்கூட வசதி அளிக்கச் சம்மதிக்காத அவ்வளவு தன்னிச்சையான கடும் ஆட்சியாக இருக்குமென்றும் இந்த ஆட்சியைவிட கடும் புலி வாழும் காடே மேன்மையாய் இருக்கும் என்று கூறியும் எழுதியும் வந்திருக்கிறோம். இப்போது இந்தக் கடுமையான புரோகிதக் கூட்டத்தோடு அதை விட கடுமையான வியாபாரக் கொள்ளைக் கூட்டத்தாரும் சேர்ந்துவிடப் போகிறார்கள். ஏனெனில் பார்ப்பானுக்கு அடுத்தாப்போல் வியாபாரிக்குத் தான் சிறிது தந்திர புத்தி உண்டு. அவன் ஏராளமாக புரோகிதனுக்கு லஞ்ச லாவணம் கொடுத்து தானும் நன்றாய் கொள்ளை அடிப்பதற்கு அனுகூலம் செய்து கொள்வானே தவிர நாட்டையோ மக்களையோ கவனிக்க மாட்டான். அதனாலேயே மில் முதலாளி, பெரிய லேவாதேவிக்காரன், பெருத்த வியாபாரி ஆகியவர்கள் இந்த புரோகித ஆட்சிக்கு அடிமையாய் இருக்கிறார்கள். ஆகவே இவ்வாட்சியினால் கஷ்டப்படப் போகிறவர்கள் பூமியை உடையவர்களும் சிறு குடியானவர்களும் மத்திய தொழிலாளர் கூட்டமும் ஏழைகளுமேயாகும். இவர்களுக்கு அனுகூலமான ஒரு காரியமும் இந்த மந்திரிகளால் நடக்கப் போவதில்லை. இன்னமும் தெளிவாகச் சொல்லப் போனால் சர்வாதிகார வெள்ளைக்காரர்கள் ஆட்சியே இதைவிட மேலான ஆட்சி என்கின்ற உணர்ச்சி தான் அறிவுள்ள மக்களுக்கு கூடிய சீக்கிரம் தோன்றி விடும் என்றே கருதுகிறோம். ஆகையால் எப்படியாவது இப்புரோகித ஆட்சியை கவிழ்க்க வேண்டியது உண்மையான மனிதாபிமானமும் ஜீவகாருண்யமும் உடைய ஒவ்வொரு அறிவாளியினுடையவும் கடமையாகும்.
இவ்வாட்சி எப்படியும் சீக்கிரத்தில் கவிழ்ந்துவிடும் என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை. ஏனெனில் பொது ஜனங்களுக்கு புத்தியில்லாவிட்டாலும் சர்க்காருக்காவது புத்தி வந்து தனது பிரஜைகளை இக்கொடுங்கோன்மை ஆட்சிக்கு உட்படுத்தக்கூடாது என்று கருதி சீக்கிரத்தில் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளிவிடுவார்கள் என்றே கருதுகிறோம். ஆதலால் பொது மக்கள் இப்புரோகித ஆட்சிக்கு கீழ்படியாமலும் இது நிலைத்திருக்க உதவி செய்யாமலும் இதை ஒழிக்க ஒவ்வொருவரும் தயாராகி நமது அதிருப்தியையும் இவ்வாட்சியால் நாம் அடையும் சங்கடத்தையும் பிரிட்டிஷ் சர்க்கார் அறியும்படி செய்யவேண்டியது மிகவும் அவசியமாகும்.
நமது முஸ்லீம் தோழர்களும் இப்புரோகித ஆட்சி தங்களுக்கு வேண்டாம் என்றும் இவர் செய்யும் கொடுமை சர்க்காரார் இடம் கொடுக்கக் கூடாதென்றும் வெளிப்படையாய் தெரிவிக்க வேண்டுகிறோம். மற்றும் கதர் பிரசாரமும் ஹிந்தி கட்டாயமும் மிகமிக கண்டிப்பாய் வன்மையாய் எதிர்க்கப்பட வேண்டியவையாகும். அவற்றுள் அவ்வளவு கொடுமையும் விஷமும் புகுந்திருக்கிறதை மக்கள் உணர வேண்டும்.
குடி அரசு – தலையங்கம் – 19.09.1937