சோற்றுக்கில்லாதார் பிரசாரம்

காங்கரஸ் பிரசாரகர்கள் – தொண்டர்கள் – ஜெயிலுக்குப்போன தியாகிகள் – பாரதமாதாவின் அருந்தவப் புதல்வர்கள் என்கின்ற கூட்டத்தில் பெரும்பான்மையோர் தங்கள் வாழ்கைக்கு வேறு வழியில்லாமலும் வயிற்றுப்பிழைப்புக்குக்கூட யோக்கியமான பிழைப்பு இல்லாமலும் திருட்டு, பித்தலாட்டம், கூட்டிவிடும் தொழில் முதலியவைகளைவிட தேசீய வாழ்க்கை சுலபமானதென்று கருதி சிலரும் அவைகளையும் செய்து பார்த்துவிட்டு அதைவிட தேசீயம் சுலபமென்று கருதிய சிலரும் ஆக பலரும் தேசீயத்தில் வந்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று இதற்கு முன் பல தடவை ஆதார பூர்வமாக எடுத்துக்காட்டி வந்திருக்கிறோம்.

நாளது வரை இது முழுதும் தவறு என்று யாராலும் ஆக்ஷேபிக்கப் படவில்லை. ஆனால் சிலர் இக்கூற்று தங்களை மாத்திரமே நேராய் குறிப்பிடுவதாய் இருக்கிறதே என்று கருதிக்கொண்டு நம் மீது பாய்ந்திருக்கிறார்கள். சிலர் காலிகளை நம்மீது உசுப்படுத்தி விடுவதற்கு ஆக இதை ஒரு சாதனமாய்க் கொண்டு “உத்தமமான தேச பக்தர்களை, தேசிய வீரர்களை, உண்மைத் தியாகிகளை “குடி அரசு” வயிற்றுச் சோற்றுக்கு மார்க்கமற்றவர்கள் என்று எழுதிவிட்டது” என்று மாயக்கூப்பாடு போட்டு வந்திருப்பது நாம் அறிவோம். என்றாலும் 100க்கு 90 தேசபக்தர்கள் – தேசீயத் தியாகிகள் – பாரதமாதாவின் அருந்தவப் புதல்வர்கள் என்கின்ற கூட்டத்தாரின் கொடிவழிப்பட்டியும் அவர்களது “முன் ஜன்மம்” முதல் ஜாதகமும் நம்மிடம் வினாடி பலனோடு இருந்து வருவதால் அவர்கள் நம்மைப் பார்த்து நேரில் குலைப்பதற்கில்லாமல் காணாத இடங்களிலேயே கத்திவிட்டுக் கூப்பாடு போடும்படியாக இருந்து வருகிறது.

நாம் பெரும்பாலும் சொந்த முறையில் உள்ள தவறுதலையோ ஒழுக்கக் கேடுகளையோ இம்மாதிரியான குற்றச்சாட்டுகளுக்கும் வெளி யாக்குவதற்கும் பயன்படுத்திக் கொள்வதற்குப் பின்தங்கியே வந்திருக்கிறோம். பொது வாழ்வில் உள்ள விஷயங்களையும் அப்படிப்பட்டவர்கள் பொது வாழ்வில் நடந்து கொண்ட நடத்தைகளையும் பேசிய பேச்சுக்களையும் அடைந்த கூலியையும் பற்றிய விஷயங்களையே பெரிதும் கையாண்டு வருகிறோம்.

உண்மையிலேயே நமக்கு எப்படிப்பட்ட மனிதனானாலும் சரி, அவன் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசியானாலும் சரி, சொந்தத்தில் சாப்பாட்டுக்கு வகையின்றியோ அல்லது பொது வாழ்வல்லாமல் வேறு வழியில் வயிறு வளர்க்க மார்க்கமோ செளகரியமோ இன்றியோ உள்ள எவரிடத்தும் நமக்கு மரியாதையோ அவர்களது அபிப்பிராயத்தில் நமக்கு மதிப்போ கிடையாது என்பதை பல தடவை எடுத்துக்காட்டியிருக்கிறோம்.

ஏனெனில் நாம் இப்படிப் பேசுவது ஒரு பொது உடமை உலகத்தில் இருந்து கொண்டல்ல. அந்த மாதிரி பொது உடமை உலகில் இருந்து இப்படிப் பேசினால் அது தப்பாகலாம். ஆனாலும் அங்கும் எப்படிப் பட்டவனும் ஒரு கட்டுப்பாட்டுக்கும் ஒரு குறிப்பிட்ட வேலைக்கும் பொறுப்பேற்று இருக்க வேண்டுமே ஒழிய வெறும் தேசபக்தி வேஷமும் பொதுநல வேஷமும் போட்டுக்கொண்டு வயிறு வளர்க்கமுடியாது.

நம் உலகம் அப்படிக்கூட இல்லை. இது ஒரு பக்கா தனி உடமை உலகம். தகப்பனுக்கும் மகனுக்கும் புருஷனுக்கும் பெண்ஜாதிக்கும் உள்ள சம்மந்தமே தனி உடமைக் குறிக்கொண்ட போட்டி வாழ்வே அல்லாமல் வேறு அன்பையும் காதலையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. இதற்கு உதாரணம் வேண்டுமானால் பாகம் பிரிந்து கொண்ட பிறகும், ஜீவனாம்சம் பெற்றுக்கொண்ட பிறகும் இவர்களது நடவடிக்கைகளை கவனித்தால் விளங்கும். தனி உடமை வாழ்க்கை என்பதற்கே போட்டி என்று தான் அருத்தம். அதுவும் கட்டுப்பாடு, கொள்கை, சட்டம், விதி எதுவுமில்லாத கைவலுத்த தன்னிச்சைப் போட்டியாகும். சுருக்கமாய், விளக்கமாய் சொல்ல வேண்டு மானால் தனக்கு எவ்வளவு இருந்தாலும் அந்நியர் அறியாமல் எதுவும் செய்து அந்நியனுடையதை அனுபவித்து வாழ்க்கை நடத்தலாம், செல்வம் பெருக்கலாம், போகம் அனுபவிக்கலாம் என்கின்ற போட்டியேயாகும்.

இந்த நிலையில் வயிற்றுப் பிழைப்புக்கு மார்க்கமும் வாழ்க்கைக்கு வசதியும் தாராளமாய் இருப்பதாய்க் கருதப்படுகிற மக்களே யோக்கியமாய் நாணையமாய் நடந்துகொள்ள முடியாமலும் அவசியம் இல்லாமலும் இருக்கும்போது, உண்மையிலேயே அன்னக்காவடியாய் பிச்சை எடுத்தா லொழிய, திருடினாலொழிய, மற்றவர்களை ஏமாற்றி மோசம் செய்து நம்பிக்கைத் துரோகம் செய்தாலொழிய வாழ்வுக்கு வேறு வகையில்லை என்கின்ற நிலையில் உள்ளவர்கள் எப்படி யோக்கியமாய் நாணயமாய் சுதந்தரமாய் நடந்து கொள்ள முடியும்? அல்லது நாம் தான் எப்படி எதிர்பார்க்க முடியும்? அதிலும் சொந்தத்தில் கஞ்சிக்கு உப்பில்லையானாலும் தனது சொந்த உழைப்பில் கெட்டி ஆகாரம் சாப்பிட வழிஇல்லை ஆனாலும் தேசபக்தி வாழ்வென்றால் பாலுக்கு சர்க்கரையும் பலகாரத்துக்கு நெய்யும் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது. சொந்தத்தில் மூட்டை சுமந்தாலும், வயிறு நிரம்ப சாப்பிட முடியாவிட்டாலும் தேசீய வாழ்வென்றால் தன் உடுப்பைச் சுமக்கக்கூட ஆள்தேவையாகி விடுகின்றதுடன் “பிரபுக்களும்” வெட்கப்படும்படியான ஆகாரத்தையே மனசு வேண்டுகிறது. இல்லா விட்டால் நாக்கு சத்தியாக்கிரகம் செய்கிறது.

சொந்த வாழ்வில் தன்னுடைய யோக்கியதையால் கிட்ட நெருங்க யோக்கியதை அற்று கைகட்டி வாய் பொத்தி எட்டிநின்று பேச வேண்டிய இழிநிலையில் இருந்தாலும் தேசீய வாழ்வில் மற்றவர்களைப் பள்ளிப் பிள்ளைகளாய் மதித்து அகம்பாவமாய் யாரையும் திரணமாய்க்கருதி பேசத்தக்க யோக்கியதையை அடைய வேண்டியதாகிவிடுகிறது. இப்படியெல்லாம் இருக்கும்போது வயிற்றுப்பிழைப்புக்கு வழியற்றவர்களும் வாழ்க்கைக்கு மார்க்கமற்றவர்களும் ஒழுக்க மற்றவர்களும் இழிமக்களும் “தேசீயத்தில் பிரவேசிப்பதிலோ” “தேசபக்தர்களாவதிலோ” “உத்தமத் தியாகிகளாவதிலோ” “பாரதமாதாவின் அருந்தவப் புதல்வர்களாக ஆகிவிடுவதிலோ” என்ன அதிசயம் இருக்க முடியும்?

~subhead

முதலில் வெளியாக்கியவர்கள்

~shend

இதை முதல் முதல் தைரியமாய் எடுத்துச் சொன்னவர் அதாவது வயிற்றுச் சோற்றுக்கு மார்க்கமற்ற இழி மக்கள் பலர் வயிற்றுப் பிழைப்புக்கு ஆக தேசீயத்தில் பிரவேசித்திருக்கிறார்கள் என்று வீரத்துடன் பேசி வெளியாக்கியவர் சர்.பி. தியாகராயச் செட்டியாரும் பிறகு தோழர் தேசபந்து சித்தரஞ்சன் தாசுமாகும்.

அடுத்தாற்போல் “குடி அரசு” ஆசிரியரும் பின் தோழர் மோதிலால் நேருவும் ஆகும். மற்றும் எத்தனையோ பேர் இருந்தாலும் இவர்களைப் பின்பற்றி சென்ற வாரத்தில் தைரியமாய் எடுத்துச் சொன்னவர் தோழர் சி. ராஜகோபாலாச்சாரியாராகும். அவர் சொன்னதாக “நவசக்தி”யில் காணும் வாக்கியத்தை அப்படியே கீழே தருகிறோம்.

“வங்காள வீரர் தேசபந்து தாஸ் சத்தியாக்கிரகிகளை சோற்றுக்கில்லாதார் எனக் கூறினார். அக்காலத்தில் அவரைக் காய்ந்த சி.ஆர். ஆச்சாரியார் (கனம் ராஜகோபாலாச்சாரியார் ப-ர்) ……சோற்றுக்கில்லா வாலிபர்கள் மக்களிடையே பிரசாரம் செய்கிறார்கள் எனக் கூறுகிறார். சி.ஆர். தாசரைவிட சி.ஆர். ஆச்சாரியார் மிஞ்சி விட்டார்போலும்” என்று 15.10.37 நவசக்தி எழுதி இருக்கிறது.

இப்படி கனம் ஆச்சாரியார் பேசியதை “ஏகாதிபத்திய யந்திரத்தில் ஆச்சாரியார் அகப்பட்டு இங்ஙனம் பேசி இருக்கிறார்” என்று “நவசக்தி” குறை கூறுகிறது.

நாம் அப்படிக் கூறுவதில்லை. இதுவரை அவ்வயிற்றுக்கில்லாத வாலிபர்களின் செய்கை ஆச்சாரியாரை மந்திரியாக்குவதற்கு உதவியாய் இருந்ததால் அப்படிப்பட்ட வயிற்றுக்கில்லாத பல வாலிபர்களை ஆச்சாரியார் தம் தலைவர் என்று கூட கூறியிருப்பது நமக்குத் தெரியும். இன்று அவ்வயிற்றுக்கில்லாத வாலிபரின் வயிற்றுச் சோற்று தேசபக்தி தமக்கு தேவை இல்லை என்பதோடு தம் இனத்தாரிலேயே தமக்கு வேண்டிய பலத்தை சேகரித்துக் கொண்டார். பலரை 5 வருஷ காலத்துக்கும் சேர்த்து ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆகவே இனி அவருக்கு அன்றாடக் கூலி தேசபக்தர் தேவை இல்லை. அதனால் அத்தேசபக்தர்கள் வேறு இடத்திற்கு கூலிக்குப்போகக்கூடும். அப்படிப்போகும்போது அது தம் வியாபாரத்திற்கு போட்டியாக ஆகிவிடலாம். ஆதலால் இப்போதே “அந்தச் சரக்கு மட்டம்” என்பதுபோல் அவர்கள் அதாவது வேறு இடத்துக்கு கூலிக்குப் போய் வேலை செய்கிறவர்களை வயிற்றுக்கு இல்லாத ஆட்கள் என்று சொல்லி விட்டால் அப்படிப்பட்ட ஆட்களின் தொல்லையை ஒருவாறு சமாளிக்கலாம் என்பதே இப்போது அவர்களைத் தைரியமாய் வெளியாக்குவதன் கருத்தாகும்.

ஆனாலும் தோழர் ஆச்சாரியார் பேசியதில் தவறோ, பொய்யோ இல்லை என்று நாம் ஆதாரத்தோடு சொல்லுவோம்.

~subhead

பொதுவுடமை வாதிகள்

~shend

அதாவது ஆச்சாரியார் மனதில் குறிவைத்துப் பேசும் பொது உடமை வாதிகளையே முதலில் எடுத்துக்கொள்ளுவோம். அவர்களுக்கு காங்கரசில் சாப்பாட்டைத்தவிர வேறு என்ன வேலை அங்கு இருக்க முடியும்? ஒருவர், இருவர், பொது உடமை வாதிகள் முட்டாள் தனமாக காங்கரசில் சேர்ந்திருக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும் கதரையும், காந்தியாரையும், கடவுளையும், மதத்தையும், பார்ப்பனர்களையும், முதலாளிகளையும் கண்டித்து, வைது, பேசி விளக்கிய பொது உடமைவாதிகள் காங்கரசில் சேர்ந்து “மகாத்மா காந்திக்கு ஜே” என்று காங்கரஸ் கொடியைப் பிடித்துக் கொண்டு கதர் குல்லாயுடன் மஞ்சள் வர்ணத்தின் மங்களகரத்தைப் பிரசாரம் செய்து கொண்டு ஆச்சாரியார் பின் திரிகிறார்கள் என்றால் இதற்கு காரணம் கனம் சி.ஆர். ஆச்சாரியார் சொன்னதல்லாமல் வேறு என்னமாயிருக்க முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை என்றாலும் வாசகர்கள் தான் யோசித்துப் பார்க்கட்டும்.

தோழர் ஆச்சாரியார் ஒரு சமயம் ஏகாதிபத்திய யந்திரத்தில் அகப்பட்டு இப்படி பேசி இருக்கலாம். ஆனால் சி.ஆர். தாஸ் கூட அப்படித்தானா? மோதிலால் நேருகூட அப்படித்தானா? “குடி அரசு” ஆசிரியரும் அப்படித்தானா? என்பதோடு இதை “நவசக்தி” உண்மையாய் எழுதுகிறதா வேஷத்துக்கு எழுதுகிறதா என்று கேட்கின்றோம்.

முதலாவது “நவசக்தியே” உண்மையில் தொழிலாளர்களுக்கு உழைப்பதானால் உண்மையில் ஏழைகளிடத்தில் பற்று இருக்குமானால் பொது உடமையை விரும்புமானால் நாணயத்தில் சிறிதாவது கவலை இருக்குமானால் ஏகாதிபத்தியத்தை வெறுக்குமானால் “நவசக்தி” க்கு காங்கரசினிடத்தில் என்ன வேலை என்று கேட்கின்றோம். அன்றியும் “நவசக்தி”யிடம் கனம் ஆச்சாரியார் போன்றவர்களுக்குக் கூட அவர் கூறினதைத்தவிர வேறு என்ன மதிப்பு இருக்கும் என்று கேட்கின்றோம்.

எனவே தனி உடமை உலகில் சோற்றுக்கு வழி இருக்கிறவனே 100க்கு 100 பேர் யோக்கியமாய் நடந்து கொள்ள முடியவில்லையானால் சோற்றுக்கு வகையில்லாதவர்களில் 100க்கு எத்தனை பேர் யோக்கியமாய் நடந்து கொள்ளமுடியும்? ஆதலால் அப்படிப்பட்டவர்களுக்கு ஆக “நவசக்தி” சிபார்சு பேசுவதை உண்மையான சிபார்சு என்று நம்மால் கருத முடியவில்லை.

~subhead

ஆச்சாரியார் ஞாபகப்படுத்திப் பார்க்கட்டும்

~shend

அது எப்படியோ இருக்கட்டும். மந்திரிகளில் சோற்றுக்கு வகை யில்லாதவர்கள் எத்தனைபேர் என்பதையும் பிழைப்புக்கு உண்மையிலேயே வேறு மார்க்கமில்லாதவர்கள் எத்தனை பேர்கள் என்பதையும் தனக்கு பின்னால் வால் பிடித்துத் திரிபவர்களில் சோற்றுக்கு வழியில்லாதவர்கள் எத்தனைபேர் என்பதையும் கனம் ஆச்சாரியார் சற்று ஞாபகப்படுத்தி பார்த்திருப்பாரேயானால் தனக்கு எதிராய் இருப்பவர்களில் காணப்படும் சோற்றுக்கு வழியில்லாதவர்களைப் பற்றி மாத்திரம் குறிப்பிட்டு வருத்தம் காட்டி இருக்கமாட்டார்.

ஏழைகள் இயக்கம் என்பதும், தரித்திரர்கள் இயக்கம் என்பதும், சோற்றுக்கு வகையில்லாதார் இயக்கம் என்றுதானே அருத்தம்? அதில் சோற்றுக்கு இருக்கிறவர்களும் மேலும் மேலும் சம்பாதிக்க ஆசை யுள்ளவர்களும் தலைவர்களாக இருந்தால் அவ்வியக்கக் கொள்கைகள் பொய்யாகவும், நிஜமாகவும் சோற்றுக்கு வகையில்லாதாருக்கு சவுகரியமாகவும் அசெளகரியமாகவும் தானே இருக்க முடியும்? என்றாலும் அதில் பெரிதும் அப்படிப்பட்ட சோற்றுக்கு வழியில்லாத ஆட்களுக்குத் தானே இடமிருக்க முடியும்? அதை எடுத்துக்காட்டுவதில் என்ன பிரயோஜனம் இருக்க முடியும் என்று சிலர் கேட்கலாம். அதுவும் சரிதான். ஆனாலும் அப்படிப்பட்ட இயக்கத்திலோ அல்லது அப்படிப்பட்ட ஆட்களாலோ பிரதிகூலபலன் அடைகிறவர்கள் அதை எடுத்துக்காட்டாமலிருக்க வேண்டு மென்பது மாத்திரம் நியாயமாயிருக்க முடியுமா? என்பதுதான் அக்கேள்விக்கு நமது பதிலாகும்.

~subhead

மூர்த்தியார்

~shend

நிற்க, தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் தேசபக்தி பிரசாரத்துக்கு ஆரம்பித்தபோது அவருக்கு சாப்பாட்டுக்கு மார்க்கம் என்றைய தினம் இருந்தது? அவர் அந்நிலையில் போட்ட கூப்பாடு கொஞ்சமா? இதே கனம் ஆச்சாரியார் ஊர் ஊராய் பணமுடிப்பு கொடுக்கச் செய்து அவரை சாப்பாட்டுக்கு இல்லாத நிலையிலேயே பெரிய தேசபக்தராக ஆக்கவில்லையா? இன்றும் தோழர் சத்திய மூர்த்தியார் வேறு எவ்வித சொந்த தொழில் வருவாய் இல்லாமலே பெரிய தேசபக்தராகவே இருக்கிறார். கனம் ஆச்சாரியார் வாயாலும் தேசபக்தர் என்றும் தலைவர் என்றும் அழைக்கப்படுகிறார். காரணம் என்னவென்றால் தோழர் சத்தியமூர்த்தி அய்யரின் வயிற்றுப் பிழைப்பு கூப்பாடு கனம் ஆச்சாரியாரை முதல் மந்திரியாக்கிற்று; ஹிட்லர் ஆக்கிற்று. இனியும் அப்பதவி நிலைக்கும் படியாகவே இன்றும் தோழர் சத்தியமூர்த்தியார் கூப்பாடு இருந்து வருகிறது. அதாவது:-

~subhead

சமஷ்டி பித்தலாட்டம்

~shend

“சமஷ்டி ஏற்படப்போவது உறுதி. அது நம் எதிர்ப்புகளை லôயம் செய்யாமல் நம்மீது சுமத்தப்படுகிறது என்றாலும் நாம் அதை தள்ளி விடக்கூடாது. அதையும் ஏற்று நடத்துவோம்” என்று சொல்லுகிறார் மூர்த்தியார்.

இப்படிச் சொல்லுவது கனம் ஆச்சாரியாரின் மந்திரி பதவியை நிலைக்க வைக்குமாதலால் ஆச்சாரியார் கண்ணுக்கு மூர்த்தியார் இன்னும் பெரிய தேசபக்தராய் காணப்படுகிறார். அவர் போன்ற மற்றவர்கள் அதற்கு எதிராய் கூப்பாடு போடுவது ஆச்சாரியாருக்கு தலைமாட்டுக் கொள்ளியாய் இருப்பதால் “வயிற்றுக்கு இல்லாதவர்கள் கூப்பாடு” என்கிறார்.

“நவசக்தி” தானாகட்டும் ஆச்சாரியார் பதவிக்கு ஆபத்து வரும் படியாக பேசவோ எழுதவோ முன்வரட்டும். உடனே ஆச்சாரியாருக்கு “நவசக்தி”யைப்பற்றி இருக்கும் உண்மையான எண்ணம் வெளியாய் விடும்.

ஆச்சாரியார் தேசபக்திதானாகட்டும் எப்படிப்பட்ட தென்று பார்ப்போ மானால் தமக்கு மந்திரி வேலை கிடைக்கும்படியான நிலைமைக்கு சர்க்கார் இடம் கொடுத்துவருவதால்தான் “நானே சர்க்கார் ஆகிவிட்டேன், ஆதலால் சர்க்காரை யாரும் கண்டிக்கக் கூடாது” என்கிறார்.

“எப்படிப்பட்ட அரசாங்கத்துக்கும் இ.ஐ.ஈ. இருந்துதானாக வேண்டும்” என்கிறார்.

“வெள்ளைக்காரர்கள் எல்லாம் மேலான பிறவி (அதாவது அவர்கள் சட்டியில் வைத்திருக்கும் குரோட்டன் (பூச்செடி மாதிரி) என்று சொல்லி அதிகச் சம்பளம் கொடுக்க வேண்டும்” என்கிறார்.

“நீதி இலாக்காவையும் நிர்வாக இலாகாவையும் பிரிக்கக் கூடாது” என்கிறார்.

“கவர்னர் துரை மகா உத்தமர்” என்று சொல்லி கைகூப்பி கும்பிடுகிறார்.

தனக்கு மந்திரி பதவி கிடைக்காதிருக்குமானால்

“சர்க்காரை ஒழிக்க வேண்டும்.”

“வெள்ளையர்கள் சுரண்டுகிறவர்கள்.”

“ஐ.சி.எஸ். வர்க்க ஆட்சி கொடுமையானது.”

“சம்பளக் கொள்ளையை ஒழிக்க வேண்டும்.”

“சி.ஐ.டி.யை அழித்தே விட வேண்டும்.”

“பிரிட்டிஷ் ஆட்சியில் இருப்பது அவமானம்.”

“நீதி, நிருவாகம் இரண்டும் ஒரு கையில் இருப்பது கொடுங்கோன்மை.”

“கவர்னருக்கு மூளை கிடையாது” என்றெல்லாம் கூப்பாடு போடுவார்; போட்டுமிருக்கிறார். ஆகவே தனக்கு அனுகூலமாய் இருக்கும் போது ஒரு மாதிரியும் பிரதிகூலமாய் இருக்கும்போது ஒரு மாதிரியுமா? எப்படியாவது ஒரு சமயத்திலாவது உண்மை பேசுவதைப் பாராட்ட வேண்டியதே தவிர ஆச்சாரியார் பேசுவதை எப்படி குற்றம் என்று சொல்ல முடியும்?

குடி அரசு – தலையங்கம் – 17.10.1937

You may also like...