இன்னுமா சந்தேகம்?

காங்கரசுக்காரர்கள் மக்கள் கல்விக்கு குழிதோண்டி விட்டார்கள்

~cmatter

காங்கரஸ்காரர்கள் பதவி ஏற்றது முதல் கொண்டு பாமர மக்களின் கல்வியில் கெட்ட எண்ணம் வைத்து அதை ஒழிப்பதில் மிக்க கவனமாய் வேலை செய்து வருகிறார்கள் என்பது நாளுக்கு நாள் உறுதிப்பட்டு வருகிறது. ஒரு நாட்டு மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டுமானாலும் அவர்கள் நாகரிகம் பெற்று உயர்ந்த நல்வாழ்க்கை நடத்த வேண்டுமானாலும் அரசியல், பொருளியல், தொழிலியல் ஆகிய துறைகளில் தகுந்த ஞானம் பெற வேண்டுமானாலும் அந்நாட்டு மக்களுக்கு முதலில் கல்வி ஏற்பட வேண்டியதே முக்கியமாகும். இந்தியாவானது இன்று அரசியல், சமூக இயல், சுயமரியாதை லட்சியம், சுதந்தர உணர்ச்சி முதலிய துறைகளில் கொண்டிருக்கும் ஆர்வத்திற்கும் அடைந்திருக்கும் நிலைமைக்கும் அது இதுவரை பெற்றிருக்கும் கல்வியே முக்கிய காரணமாகும். அதிலும் பிரிட்டிஷார் ஆட்சி ஏற்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்துவந்த கல்வியைப்பற்றி யார் எவ்வளவு குறை சொன்னாலும் இந்திய மக்கள் யாவரும் தங்களை தாங்களே மக்கள் என்று கருதும் படிப்பாகவும் சுயமரியாதையும் சுதந்தரமும் மனிதனுடைய சரீரமும் ஜீவனும் என்று சிறிதாவது கருதும் படியாகவும் செய்தது பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்து வந்த கல்வியே யாகும்.

~subhead

ராமராஜ்யத்தில் மக்கள் நிலை

~shend

இதன் உண்மை தெரியவேண்டுமானால் இன்று காங்கரஸ்காரர்கள், காந்தியார் பார்ப்பனர்கள் ஆகியவர்கள் எதிர்பார்க்கும் ராமராஜ்யம் அல்லது இந்து மன்னர்கள் ராஜ்யம் நடைபெற்ற காலத்தில் மக்களுக்கு இந்நாட்டில் எவ்வளவு கல்வியும் கற்கும் சுதந்தரமும் இருந்தது என்பதும் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்ட பிறகு இந்திய மக்களுக்கு கல்வியில் எவ்வளவு சுதந்தரமும் கல்வி அறிவும் இருக்கிறது என்பதும் அறிவும் நடுநிலைமையும் உள்ள மனிதன் சிறிது கவனித்துப்பார்த்தாலே கண்ணாடிபோல் விளங்கும். இப்படி நாம் கூறினால் சூழ்ச்சிக்காரர்களும், பார்ப்பனக் கூலிகளும், பாமர மக்களுக்கு ஏற்பட்ட இம்மாதிரி கல்வி, அறிவு, சுதந்தரத்தினால் தங்கள் ஆதிக்கத்தை இழக்க நேரிட்ட பார்ப்பனர்களும் நம்மை தேசத்துரோகி என்றும் அன்னிய ஆட்சியை புகழ்கின்ற அடிமை மனப்பான்மைக்காரர் என்றும் பழித்துக் கூறுவதன் மூலம் பாமர மக்களை ஏமாற்ற முயற்சிக்கட்டும். அதைப்பற்றி நாம் சிறிதும் கவலை கொள்ளவில்லை. ஏனென்றால் மக்கள் உண்மையை அறியும் அறிவு பெற்றுவிட்டால் இக்கூட்டத்தார்களை வட்டி முதலுடன் தண்டிக்கப் போகிறார்கள் என்கின்ற நம்பிக்கை நமக்கு உண்டு. என்றாலும் நாம் மேலே கூறிய நமது அபிப்பிராயத்துக்கு ஆதாரமாக பெரிய பெரிய காங்கரஸ் தலைவர்களுடைய அபிப்பிராயத்தை எடுத்துக்காட்ட ஆசைப்படுகிறோம்.

~subhead

தாதாபாய் அபிப்பிராயம்

~shend

காங்கரசுக்கு தந்தை என்றும் சுயராஜ்யம் என்கின்ற வார்த்தையையே புதிதாக உற்பத்தி செய்தவர் என்றும் இன்றும் நாளையும் அதிதீவிர காங்கரஸ் பக்தர்கள் வீடுகளில் பூஜிக்கப்படும் மூர்த்தியாய் இருக்க வேண்டியவர் என்றும் சொல்லப்படும் பெரியாராகிய தாதாபாய் நெளரோஜி அவர்கள் ஒரு காங்கரஸ் மகாநாட்டின் தலைமைப் பேருரையில் கூறியிருப்பதை அப்படியே எடுத்துக் கூறுகிறோம். அதாவது

“நமக்கு இன்று ஒரு புதிய ஞான ஒளியை அளித்து இருப்பதும், அந்தகாரத்திலிருந்து நம்மை வெளியாக்கியிருப்பதும், மக்களுக்காக மன்னனே ஒழிய மன்னனுக்காக மக்கள் இல்லை என்கின்ற சுதந்தர உணர்ச்சியை ஊட்டினதும், கீழ்நாட்டு கொடுங்கோன்மையான ஆட்சியிலிருந்து நம்மை காப்பாற்றி நமக்கு மனித உணர்ச்சி கொடுத்ததும் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் இதுவரை நமக்கு அளிக்கப்பட்டு வந்திருக்கும் கல்வியேயாகும்” என்றும் “இதற்காக நாம் என்றென்றும் ராஜ விஸ்வாசிகளாகவும், ராஜபக்தர்களாகவும் இருக்க வேண்டியது நமது கடமையேயாகும்” என்றும் கூறியிருக்கிறார்.

மற்றொரு காங்கரஸ் மகாநாட்டு தலைவரான பண்டிட் கிஷன் நாராயணதாஸ் அவர்கள் தமது தலைமை உரையில்

“பிரிட்டிஷ் சர்க்கார் நமக்கு அளித்த கல்விமுறை இந்தியர்களுக்குக் கிடைத்த மகத்தான ஒரு பாக்கியமே யாகும்” என்று கூறி இருக்கிறார்.

~subhead

சுரேந்திரநாத் கருத்து

~shend

மற்றொரு காங்கரஸ் மகாநாட்டின் தலைவரான சுரேந்திரநாத் பானர்ஜி அவர்கள் தமது தலைமை உரையில்,

“இந்தியாவுக்கு பிரிட்டனால் மிகச்சிறந்த ஒரு பெரிய நன்மை ஏற்பட்டிருக்கிறது என்றால் அந்த நன்மை அவர்கள் நமக்கு அளித்துவந்த உயர்தர கல்வியேயாகும். அக்கல்வியே நம்முடைய முற்போக்குகளுக் கெல்லாம் ஆணிவேராக இருந்து வருகிறது. அக்கல்வியே இந்திய மக்களின் பிரதான அபிவிருத்திகளின் பீடமாயிருக்கிறது. அது இந்தியர்களின் அபிலாஷைகளை வளர்க்கும் இயல்புடையது. அக்கல்வி நமது எல்லாவித க்ஷேம அபிவிருத்திக்கான மூல சக்தியை வளர்க்கும் தன்மையுடையது. பிரிட்டிஷ் சர்க்காரினால் நமக்குக் கிடைத்திருக்கும் பிரதான நன்மைகளில் அவர்கள் அளித்த உயர்தரக் கல்விமுறையே முதன்மையானதாகும்.”

~subhead

ஸர். சங்கரநாயர் வாக்கு

~shend

அதிதீவிர தேசிய வாதிகளில் ஒருவராய் இருந்த மற்றொரு காங்கரஸ், மகாநாட்டு தலைவரான சர். சங்கரநாயர் தமது தலைமை உரையில்,

“பிரிட்டிஷ் சர்க்கார் நமது க்ஷேம அபிவிருத்திக்கான வழிகளைத் திறந்து விட்டிருப்பது இங்கிலீஷ் கல்வியால்தான். அத்தகைய கல்வி நமது பழங்கால தீமைகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள விழிப்புண்டாக்கவும், சமூக அரசியல், மதச் சீர்திருத்தங்களைப் புனருத்தாரணம் செய்யவும், அவசியமானதாக இருக்கிறது. அத்தகைய சீர்திருத்தங்கள் நமது நாட்டுக்குத் தேவையாயிருப்பதால், இங்கிலீஷ் கல்வி நமக்கு அத்யாவசியமாகிறது.

~subhead

மாளவியா சாட்சியம்

~shend

மற்றும் 3, 4 காங்கரஸ் மகாநாட்டு தலைமை வகித்தவரும் இன்றும் சுயராஜ்யத்தை கண்ணால் பார்த்துவிட்டு சாவதற்காக காந்திருப்பவரும், காந்தியார் முதல், சத்தியமூர்த்தி ஈறாக, தேசாபிமானி என்றும் பரிசுத்த தேச பக்தர் என்றும் அழைக்கப்படுகிறவருமான பண்டித மாளவியா அவர்கள் தமது தலைமை உரையில்,

“பிரிட்டிஷ் சர்க்கார் கல்வி சம்மந்தமாக இந்தியாவுக்குச் செய்திருக்கும் நன்மைகளையெல்லாம் நாம் நன்றியறிதலோடு அங்கீகரித்துக் கொள்ளுகிறோம். பிரதமக் கல்வி, நடுத்தரக் கல்வி, சர்வகலா சங்கக் கல்வி ஆகிய அனைத்தும் நமது பாராட்டுதலுக்கும் நன்றியறிதலுக்கும் உரியவையேயாகும்.

(இந்த வாக்கியங்களைப் பிரத்தியக்ஷத்தில் ஆங்கிலத்தில் பார்க்க ஆசைப்படுகிறவர்கள் தோழர் ஜி.ஏ. நடேசன் (இன்றைய சென்னை ஷெரீப்) அவர்களால் பிரசுரிக்கப்பட்டிருக்கும் “காங்கரஸ் மகாநாட்டுத் தலைவர்கள் பிரசங்கம்” என்கின்ற புஸ்தகத்தை வாங்கிப் படித்துப் பார்த்துத் தங்கள் ஆசையைத் தீர்த்துக் கொள்ளுவார்களாக)

~subhead

கதையை வளர்ப்பானேன்?

~shend

இதைப்பற்றி நாம் இப்போது ஒன்றும் பேச வரவில்லை. ஏனெனில் காங்கரஸ்காரர்களே இந்த பிரிட்டிஷ் ராஜாங்கத்துக்கு மாத்திரமல்லாமல் அவர்களது சந்ததிக்கும் ராஜவிஸ்வாசிகளாய் இருப்பதாகப் பிரமாணம் செய்து சர்க்கார் ஏற்படுத்தியிருக்கும் பிச்சையை அல்லது ராஜபக்திப் பிரமாணத்துக்கு கூலியான உத்தியோகங்களையும், பதவிகளையும் பெற்றுக் கொண்டிருக்கிறபோது அதை நாம் ஒரு தரம் எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் தாதாபாய் நெளரோஜியார் முதல் மாளவியா பண்டிதர் ஈறாக உள்ள பெரியார்கள் குறிப்பிட்ட அப்படிப்பட்ட ஒரு கல்வியானது அந்தக் காலத்தில் ஒரு கூட்டத்தாருக்கு மாத்திரம் சொந்தமாக இருந்ததும் ராஜவிசுவாசம், ராஜ பக்திகாட்டுவதில் கிடைக்கும் கூலியான உத்தியோகம், பதவி, பட்டம் முதலியவைகளும் ஒரு கூட்டத்தாருக்கே சொந்தமாகவும் ஏக போக உரிமையாகவும் இருந்ததும் போய் இன்று அவை எல்லா ஜாதிக்கும், எல்லா வகுப்புக்கும் புரியும்படியான நிலைமை ஏற்பட்டவுடன் ஏகபோக உரிமை கொண்டாடும் பார்ப்பனீய சுயநல கூட்டத்தார் இன்று அதைக் குற்றம் சொல்ல வந்துவிட்டார்கள் என்பது மாத்திரமல்லாமல் அதை அடியோடு ஒழித்து பழங்கால காட்டு மிராண்டித்தன ஆட்சிக்கு மக்களைக் கொண்டுபோவதற்கு வேண்டிய சூழ்ச்சிகள் செய்யவும் அதற்கு பிரிட்டிஷ் ஆதிக்கத்தை துணைப்படுத்திக் கொள்ளுவதற்காக ராஜ விசுவாசமும் ராஜபக்தியும் பாடி சரணாகதி அடையவும் முனைந்து விட்டார்கள்.

~subhead

முஸ்லீம் லீக், அல்லாதார் சங்கம் தோன்றியதேன்?

~shend

காங்கரசில் அக்காலத்தில் இருந்துவந்த இப்படிப்பட்ட பார்ப்பனீய ஏகபோக உரிமையைக் குலைக்கவே, காங்கரஸ் ஏற்பட்ட சிறிது நாள்களுக்குள்ளாக முஸ்லீம் லீக்கும் பார்ப்பனரல்லாதார் சங்கமும் ஏற்பட்டன. இவை ஏற்பட்ட பிறகே மேற்கண்ட காங்கரஸ் ஸ்தாபனங்களும், காங்கரஸ் தலைவர்களும் புகழ்ந்து பாராட்டிக்கூறிய கல்வியை முஸ்லீம்களும் பார்ப்பனரல்லாதார்களும் அனுபவிக்கத்தக்க முயற்சிகள் செய்யப்பட்டன. அம்முயற்சிகளுக்குப் பிறகே, இன்று முஸ்லீம்களுக்குள்ளும், பார்ப்பனரல்லாதார்களுக்குள்ளும், இவ்வளவு அளவுக்காவது கல்வி, அறிவு “ஞான உதயம்” “அந்தகார நீக்கம்” ஆகியவை ஏற்பட்டு எல்லா வகுப்பிலும் மந்திரிகள், கவர்னர்கள், நிர்வாக சபை அங்கத்தினர்கள், ஹைகோர்ட் ஜட்ஜúகள், கலெக்டர்கள் மற்ற நிர்வாக சிப்பந்திகள் கொஞ்சம் விகிதாச்சாரமாவது ஏற்பட முடிந்தது. இதற்காக முஸ்லீம் தலைவர்களும், பார்ப்பனரல்லாத தலைவர்களும் பட்டபாடுகளை அறிந்தவர்கள் அச்சமூகங்களில் கலப்படமில்லாமல் பிறந்தவர்கள் – நன்றி செலுத்த கடமைப்பட்டவராவார்கள்.

~subhead

பழைய நிலைமை

~shend

விவரமாக விளக்க வேண்டுமானால் பார்ப்பனரல்லாதார் அரசியல் நிர்வாகத்தை லட்சியம் செய்யாமல் எதற்கும் பார்ப்பனர்களையே நம்பி மெளடீகத்தனமாக இருந்து விட்டகாலத்தில் கல்வி என்பது பார்ப்பனர்களுக்குள் மாத்திரமே 100-க்கு – 100 ஆகவும் மற்ற சமூகங்களில் 100-க்கு 2, 3, 5 வீதங்களுக்குள்ளாகவும் சில வகுப்புகளுக்கு அடியோடு இல்லாமலும் இருந்துவந்தது என்பது அக்கால புள்ளி விவரங்களில் இருந்தே அறியலாம். அதற்கு காரணம் சர்க்கார் கல்விக்கு போதிய பணம் ஒதுக்காமையும், கல்வி இலாகாவில் எல்லோருக்கும் இடம் இல்லாமையும் மனு ஆட்சி தத்துவமான முறைக்கு கல்வி திட்டம் ஒப்படைக்கப்படடு “சூத்திரன் படிக்கக்கூடாது! என்பதும் “சூத்திரனுக்கு கல்வி கற்பிக்கக் கூடாது” என்பதுமான கொள்கை மிக்க செல்வாக்கில் உச்சம் பெற்று இருந்ததினாலும் பார்ப்பனர் தவிர மற்றவர்கள் எல்லாம் சூத்திரர், சண்டாளர், மிலேச்சர் என்கின்ற கருத்து கேட்பாரற்று அனுபவத்தில் இருந்து வந்ததுமேயாகும்.

~subhead

ஜஸ்டிஸ் கட்சி தோன்றிய பின்

~shend

ஆனால் முஸ்லீம் லீக்கும் பார்ப்பனரல்லாதார் இயக்கமுமாகியவை ஏற்பட்டு சிறிது ஞான ஒளியும், சுதந்தர உணர்ச்சியும், சுயமரியாதை லட்சியமும் ஏற்பட்டபிறகு அரசியலில் கல்வி விஷயத்திலேயே முதல் முதல் மாறுதல் ஏற்படலாயிற்று. அதாவது 1920-ம் வருஷத்துக்கு முன்பு கல்விக்காக சென்னை மாகாணத்தில் 1க்கு (1,40,00,000) ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் மாத்திரம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜஸ்டிஸ் கட்சி யென்னும் பார்ப்பனரல்லாதார் மந்திரிபதவி அடைய நேர்ந்து கல்வி இலாக்காவில் ஆதிக்கம் பெற்ற பிறகு இன்று கல்வி இலாக்காவுக்கு வருஷம் 1-க்கு (225,00,000) இரண்டு கோடியே இருபத்தி ஐந்து லட்ச ரூபாய் ஒதுக்கிவைத்து அதற்கேற்றாற்போல் பள்ளிக்கூடங்களையும் கலாசாலைகளையும் சர்வ கலாசாலைகளையும் ஒன்றுக்கு இரண்டாக மூன்றாக அதிகப்படுத்தி “சண்டாளர்”கள் “மிலேச்சர்”கள் “சூத்திரர்”கள் ஆகிய மக்கள் யாவரும் இலவசமாகவும் கட்டாயமாகவும் படிக்க வேண்டும் என்கின்ற திட்டம் ஏற்படுத்தி அமுலுக்கும் கொண்டுவந்து விட்டுவிட்டார்கள். இதோடு மேற்படி 225,00,000 ரூ. கல்வி மான்யந் தவிர ஸ்தல ஸ்தாபனங்களிலும் கல்விக்காக சுமார் 50 லட்ச ரூபாய் போல் வரிகளும் போடச்செய்து இருக்கிறார்கள். இதன் பயனாகவே ஒவ்வொரு வகுப்புக்கும் அதாவது ஈன ஜாதி, சண்டாள ஜாதி, பரம்பரை விவசார ஜாதி, பரம்பரை திருட்டு ஜாதி என்று சொல்லக்கூடிய மக்களுக்கெல்லாம் சுதந்தர உணர்ச்சியும் சுயமரியாதை லட்சியமும் ஏற்பட்டு அநேக வகுப்பு சங்கங்களும் ஏற்பட்டு முற்போக்குக்கு உழைக்க முன் வரலாயின.

~subhead

புரோகித ஆட்சியின் நோக்கம்

~shend

இன்று எப்படியோ அரசியல் ஆதிக்கத்துக்கு வந்து விட்ட புரோகித – சரணாகதி பார்ப்பனீய – மனு ஆட்சியானது பட்டத்துக்கு வந்தவுடன் இந்த – இப்படிப்பட்ட கல்வியில் மண்ணைப்போட்டு மக்களின் சுதந்திர – சுயமரியாதை உணர்ச்சியை நசுக்கவே முயற்சி செய்யப்படுகின்றது. காந்தியார் – சத்தியமூர்த்தியார் – ஆச்சாரியார் கூட்டம் ஆகியவர்களின் ஆசைப்படி இந்தியாவில் பழைய மனு ராமராஜ்யம் ஏற்படுத்தப்பட வேண்டுமானால் முதலாவதாகச் செய்ய வேண்டிய காரியம் பிரிட்டிஷார் ஆட்சியில் முஸ்லீம் லீக் பார்ப்பனரல்லாதார் இயக்க முயற்சியினால் மக்களுக்குள் புகுத்தப்பட்டிருக்கும் தாதாபாய் – மாளவியா முதலிய பெரியார்களால் புகுத்தப்பட்டு இருக்கும் கல்வி அறிவை பாழ்படுத்திவிட வேண்டும் என்பதே. அதை அனுசரித்தே இன்று இந்த புரோகித ஆட்சி மந்திரிகள் காரியங்கள் செய்து வருகிறார்கள். இவற்றைப் பற்றி நாம் பல தடவை எடுத்து காட்டி வந்திருக்கிறோம். சென்ற வாரத்திலும் “நம் நாட்டுக்கு கட்டாய இலவசக்கல்வி வேண்டியதில்லை” என்று சில ஜில்லா போர்டுகளுக்கு நம் புரோகித மந்திரி உத்திரவு போட்டு விட்டதைப் பற்றி தெரிவித்து இருந்தோம்.

~subhead

அழிவு வேலை ஆரம்பம்

~shend

இவ்வாரம் சில சர்வகலாசாலைகளை மூடும்படியும் சில மத்தியதரப் பாடசாலைகளை எடுத்துவிடும்படியும் போடப்பட்டிருக்கும் உத்திரவுகளைப் பற்றியும் சில உயர்தரப் பாடசாலைகளை ஒழிக்க செய்யப்பட்டு வரும் சூழ்ச்சிகளைப் பற்றியும் பொது மக்களுக்கு விளக்கிக்காட்ட ஆசைப்படுகிறோம். அதாவது கோயமுத்தூர் பாரெஸ்டு காலேஜ் (வன பரிபாலன கல்வி சர்வகாலசாலையை) மூடிவிடுவது என்று உத்திரவு போட்டாய்விட்டது. மற்றும் கிராமாந்திரங்களில் இருந்து வரும் மத்தியதர ஆங்கில பாடசாலை களையும் உயர்தர ஆங்கில பாடசாலைகளையும் அதாவது செகண்டரி ஸ்கூல் என்பவைகளையும் எடுத்துவிடத்தக்க தன்மையில் 60 பிள்ளைகளுக்கு குறைந்த மத்திய தர ஆங்கில பள்ளிக்கூடங்களும் “60 பிள்ளைகளுக்கு குறைந்த உயர்தர ஆங்கில பள்ளிக்கூடங்களும் எடுக்கப்பட்டு விடவேண்டும்” என்று உத்திரவுகள் போடப்பட்டாய்விட்டது. அதோடு கூடவே சர்க்கார் அனுமதி பெற்று பொதுஜனங்கள் நிர்வாகத்தில் நடக்கும் பள்ளிக் கூடங்களையும் ஒழிப்பதற்கும் கால் நட்டாய் விட்டது. அதாவது “சரியானபடி நிர்வாகம் நடைபெறாத ஹைஸ்கூல்கள் எடுக்கப்பட்டு விடும்” என்று உத்திரவு போட்டாய் விட்டது. இனி ஸ்தல ஸ்தாபன பள்ளிக் கூடங்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் கிராண்டுகளை ஒழிப்பதற்கும் சூழ்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது.

~subhead

முனிசிபல் பள்ளிகளுக்கு ஆபத்து

~shend

அதாவது கட்டாய இலவசக்கல்வி அமுலில் இருக்கும் முனிசிபாலிட்டி களில் கல்வி வரி என்று ஒரு வரி போட்டு அதன் மூலம் வசூலாகும் தொகைக்கு சமமாக சர்க்காரில் கிராண்டு கொடுக்கப்பட்டு வந்து அத்தொகைகளின் உதவியினால் முனிசிபாலிட்டிகளில் கட்டாய இலவசக் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. இப்போது அந்த கல்வி வரியை சரி பகுதி போல் குறைத்துவிட சில முனிசிபாலிட்டிகளுக்கு அனுமதி அளித்திருக்கிறதாகத் தெரிய வருகிறது. அந்தப்படி பொதுஜன வரி ஒரு முனிசிபாலிட்டியில் வருஷம் 10,000 ரூ. குறைக்கப்பட்டால் சர்க்கார் கிராண்டு 10000 ரூ. குறைத்துக்கொள்ள சர்க்காருக்கு செளகரிய மேற்பட்டுவிடும். அதனால் குறைந்த பக்ஷம் பகுதி அளவு விகிதாச்சாரம் கல்வியை குறைத்து விடமுடியும். உதாரணமாக ஈரோடு முனிசிபாலிட்டியார் தங்களுடைய வரும்படியைக் கருதி வீட்டு வரியில் 100க்கு 2 ரூபாய் வீதம் குறைத்துக்கொள்ள வரவு செலவு கணக்குகளை சரிக்கட்டிக்கொடுத்து சர்க்காரை அனுமதி கேட்டார்கள். அதற்கு பதிலாக சர்க்கார் சொத்து வரியை குறைக்க முடியாதென்றும் கல்வி வரியை குறைத்துக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்து இருக்கிறார்கள். இந்தப்படி குறைத்தால் ஈரோடு முனிசிபாலிட்டிக்கு சர்க்கார் கிராண்டு உள்பட 12,500 ரூபாய் கல்விக்கு செலவழிக்கப் பணம் இல்லாமல் செய்யப்பட்டுவிடும். அதனால் எவ்வளவு கல்வி குறைந்து விடும் என்பதை எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.

~subhead

தர்மபுரிக் கதை

~shend

மற்றும் தர்மபுரி ஜில்லா போர்டில் 13,500 ரூபாய் போர்டு ஒதுக்கிவைத்துக் கொண்டு இலவசக் கல்விக்கு அனுமதி கேட்டும் புரோகித சர்க்கார் மறுத்து விட்டதுடன் இப்போது காங்கரஸ்காரர்களால் அதன் தலைவர் மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு விட்டது. ஆகவே இன்றைய புரோகித ஆட்சியில் நம்மக்கள் கல்வி அழிபடுவதற்கு வேண்டிய காரியங்கள் வெகு கவனத்துடன் செய்யப்படு கின்றன என்பதற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்?

இக்கொடுமைக்கு சமாதானம் கேட்டால் “சேலத்தில் கள்ளு நிறுத்தும் முயற்சியால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய இம்மாதிரி செய்ய வேண்டி யிருக்கிறது” என்று பதில் சொல்லப்படுகிறது.

இது ஒரு புறமிருக்க மற்றொருபுறம் அதாவது கல்வியின் அளவும், செலவும் குறைக்கப்படுவது மாத்திரமல்லாமல் கல்விதிட்டத்தையும் தலை கீழாகமாற்றி பிள்ளைகளுக்கு விஷய ஞானப்படிப்பு சொல்லிக்கொடுப்பதற்கு பதிலாக தங்கள் தங்கள் கையினால் தொழில் செய்து வெறும் ஜீவனம் மாத்திரம் நடத்தி விட்டு மிருகங்கள், பூச்சி, புழுக்கள் போல் செத்து மடியும் படியான மிருகத்தன்மை தொழில் முறை கற்றுக்கொடுப்பதையே பள்ளிக்கூட படிப்பாகச் செய்யத்தக்க திட்டம் போடப்பட்டு வருகிறது. இது அமலுக்கு வருகிறது. காலதாமதமாகுமானால் அதற்குள் புராண உணர்ச்சியை மக்களுக்குள் புகுத்த ஹிந்தி கட்டாய பாடமாக ஆக்குவதற்கு திட்டமும் பலாத்கார முயற்சியும் வெகு வேகமாக நடைபெறுகிறது.

~subhead

பார்ப்பன ஆசிரியர்கள் போக்கு

~shend

சமீபத்தில் சென்னையில் நடந்த தலைமை ஆசிரியர்கள் மகாநாட்டில் இக்கல்வி சூழ்ச்சிகள் சம்மந்தமாய் நடந்த காரியங்கள் பார்ப்பன பத்திரிகைகளிலேயே வெளிவந்திருக்கின்றன. மொத்தத்தில் இன்றைய ஆங்கில பள்ளிக்கூட உபாத்தியாயர்கள் 100க்கு 90 பேர் பார்ப்பனர்கள். அவர்களிலும் தலைமை உபாத்தியாயர்கள் 100க்கு 99 பேர் பார்ப்பனர்கள். அவர்களிலும் 100க்கு 99 தொண்ணூற்று ஒன்பதே முக்காலே மூன்று வீசம் பேர்கள் வைதீகப் பார்ப்பனர்கள். (மனுதர்ம வர்ணாச்சிரமிகள்) ஆகவே இப்படிப்பட்ட இவர்கள் இம்மாதிரியான மனுதர்ம கல்வித் திட்டத்துக்கு வரவேற்பளிப்பார் என்பதில் ஆக்ஷேபணை என்ன இருக்க முடியும்? இவர்களது மகாநாட்டில் வரவேற்புத்தலைவரான தோழர் பி.ஏ. சுப்பிரமணியம் அய்யர் என்பவர் காந்தியார் கல்வித்திட்டத்தின் “பெருமை”யைப்பற்றி பேசும்போது காந்தியார் திட்டப்படி “ஏழு வருஷகாலம் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் இருந்து விட்டுப் போனால் கிராம வாழ்க்கையில் பிரியமும் எளியவாழ்க்கை ஆவலும் கைகால்களைக் கொண்டு உழைப்பதில் ஆசையும் பாரம்பரிய பெருமைக்கு (பழமைக்கு) வணக்கமும் நமது (சாஸ்திர புராணங்களாகிய) பழைய கலைகளை வளர்ப்பதற்கு ஆர்வமும் ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கியமான கருத்து” என்று நன்றாக பச்சையாக காந்தியார் கல்வித்திட்டம் வருணாச்சிரம புனருத்தாரணம் தான் என்று சொல்லிவிட்டார். இதை”மித்திரன்” முதலிய பார்ப்பன பத்திரிகைகள் ஆதரித்தும் தலையங்கங்கள் எழுதி விட்டன.

~subhead

கல்வி மந்திரி முரண்

~shend

ஆனால் மகாநாட்டைத் திறந்த கல்வி மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்கள் தனது திறப்புரைப் பேச்சில் அதை சிறிது கண்டித்து பேசி இருக்கிறார். அதாவது “தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்கின்ற (காந்தியாரின்) கல்வி திட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்று பேசி இருக்கிறார். இதற்காக வேறு ஏதோ சாக்குக்காட்டிக் கொண்டு “சுதேசமித்திரன்” இவரைக் கண்டித்து இருக்கிறது. மகாநாட்டுக்கு தலைமை வகித்த தோழர் வர்க்கி அவர்கள் தமது தலைமை உரையில் “மேல்நாட்டுக் கல்வி முறையில் உள்ள சிறந்த அம்சங்களையும் மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்” என்பதாகவும்.

“விடுதலை, சமத்துவம் முதலிய உணர்ச்சியை எல்லாம் நமக்கு மேனாட்டு தத்துவம் மூலமாக ஏற்பட்டதாகும்” என்றும் பேசி இருக்கிறார். இவற்றைப் பார்க்கும்போது கல்வி விஷயத்தில் பார்ப்பன உணர்ச்சி வருணாச்சிரமத்துக்கு போவதும் மற்றவர்கள் உணர்ச்சி சமத்துவத்துக்கு போவதும் நன்றாய் விளங்குகிறது.

ஆகவே இன்றைய புரோகித ஆட்சி மற்ற மக்கள் கல்வியை குலைப்பதற்காகச் செய்யப்பட்டு வரும் சூழ்ச்சி பட்டவர்த்தனமாய் வெளியாகிவிட்டதால் இதை இனி அரை நிமிஷமும் மக்கள் பொறுத்துக் கொண்டிருப்பது பெரிய ஆபத்துக்கு இடமாகும் என்பதோடு அளப்பரிய முட்டாள்தனமுமாகும். ஆதலால் பார்ப்பனரல்லாத மக்களும், முஸ்லீம்களும் உடனே தகுந்த கிளர்ச்சி செய்ய முன்வரவேண்டும் என்பது நமது அபிப்பிராயமாகும்.

இது ஒருபுறமிருக்க இப்புரோகிதக் கொடுமை ஆட்சியில் பிரிட்டிஷ் சர்க்காரின் கடமை என்ன என்று அறிய ஆசைப்படுகிறோம்.

~subhead

கவர்னர் மெளனமாயிருப்பதேன்?

~shend

கல்வி விஷயத்தில் அதாவது புரோகிதக் கூட்டத்தின் பிரதிநிதியும் தலைவருமான தோழர் கனம் ஆச்சாரியார் ஹிந்தியை கட்டாயமாகப் புகுத்தப் போகிறேன் என்று சபதமிட்டு முன் வந்த காலம் முதல் இதுவரை பட்டணங்கள் நகரங்கள் கிராமங்கள் சந்து பொந்துகள் எல்லாம் ஆண், பெண் அடங்கலும் “ஹிந்தி கூடாது” என்று ஒரே கூப்பாடும் அழுகையும் முறையீடுகளும் செய்த வண்ணமாயிருக்க, பிரிட்டிஷ் சர்க்காரின் மாகாணப் பிரதிநிதியான மேன்மை தங்கிய கவர்னர்பிரபு அவர்கள் வாய் மூடி மவுனமாய் இருப்பதற்கு என்ன காரணம் என்பது நமக்கு விளங்கவில்லை. பார்ப்பனர்களை கைக்குள் போட்டுக் கொண்டு அவர்களால் நாம் நசுங்கும்படியாவதை பொறுத்துக்கொண்டு இருந்து விட்டால் இவர்களைக் கொண்டு தங்களுக்கு ஆகவேண்டிய காரியங்களில் எள்ளத்தனை குறைவில்லாமல் காரியம் நடத்திக்கொள்ளலாம் என்று கருதுகிறாரா, அல்லது சமீபகாலத்துக்குள் உலக யுத்தம் ஒன்று ஏற்படும்போலிருக்கிறதே அந்த யுத்த முடிவில், இந்தியா ஜப்பானுக்கோ, ஜர்மனிக்கோ, இத்தாலிக்கோ போய்விடுமோ அல்லது ராஜி கீஜி ஏற்பட்டால் ஐரோப்பிய வல்லரசுகளுக்கு ஆளுக்கொரு துறைமுகம் மாகாணம் வீதமோ போய்விடக்கூடிய நிலை ஏற்பட்டால் அப்போது சென்னை யார் பங்குக்கு போக நேரிடுமோ என்று கருதி நமக்கு ஏன் இந்தத் தொல்லை என்று சும்மா இருக்கிறாரா என்பது விளங்கவில்லை. ஜஸ்டிஸ் ஆட்சியின் போது பார்ப்பன வக்கீல்கள் அல்லது அவர்களது ஒரு கூலிப்பத்திரிகை போட்ட கூப்பாடுகளுக்கெல்லாம் அவ்வப்போது சமாதானம் சொல்லி அறிக்கைகள் வெளியிட்டு அவர்களுக்கு ஆதரவளித்து வந்த சென்னை கவர்னர் அவர்கள் இவ்வளவு பெரிய கூப்பாடுகளுக்கு – முறையீடுகளுக்கு இவ்வளவு அலட்சியமாய் அல்லது பாராமுகமாய் இருக்கக் காரணம் என்ன என்று கவலைப்பட வேண்டியிருக்கிறது. ஆகவே சீக்கிரத்தில் கவர்னர் பிரபு இந்த புரோகித ஆட்சி தன்னரசுக் கொடுங்கோன்மையில் பிரவேசித்து ஏதாவது தக்கது செய்து மக்களின் கல்விக்கு ஆபத்து இல்லாமல் ஒரு காப்பு ஏற்படுத்தாத வரை நாட்டில் பெரும் கிளர்ச்சியும் சமாதானக் குறைவும் கவர்னர் பிரபுவுக்கு சாந்தியற்ற தன்மையும் ஏற்படவேண்டி நேரிடுமோவென்று நாம் உண்மையிலேயே பயப்படுகிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 26.12.1937

You may also like...