தமிழர்கட்கு “அறிவிலிகள்” பட்டம்
“ஆனந்த விகடன்” ஆசிரியர் நற்சாட்சிப் பத்திரம்
– ஊர் வம்பு
சேலம் ஜில்லாவில் மதுவிலக்குப் பிரசாரம் செய்ய பிரதம மந்திரி ஆச்சாரியாருடன் “ஆனந்த விகடன்” ஆசிரியர் தோழர் ரா.கிருஷ்ணமூர்த்தியும் அழைக்கப்பட்டிருந்தாராம். ஓமலூர் பொதுக்கூட்டத்தில் பிரதம மந்திரி ஆச்சாரியார் ஹிந்தியை எதிர்ப்பவர்கட்குப் புத்தியில்லை. அவர்கள் எல்லோரும் அறிவிலிகள் என்று பேசினாராம். அதே கூட்டத்தில் பிரதம மந்திரி ஆச்சாரியார் பேசிய பிறகு “ஆனந்த விகடன்” ஆசிரியர் தோழர் ரா.கிருஷ்ணமூர்த்தியும் காங்கரஸ் மந்திரிகளின் ஆட்சி முறையைப் புகழ்ந்து புகழ்மாலை பாடிவிட்டு ஹிந்தியைப்பற்றி பேச ஆரம்பித்து, தமிழர் கட்கு ஒரு நற்சாட்சிப் பத்திரம் வழங்கியிருக்கின்றார். பிரதம மந்திரி ஆச்சாரியாரின் ஆணவமும் அகம்பாவமும் நிறைந்த சர்வாதிகாரப் பேச்சைப் பின்பற்றியே “ஆனந்தவிகடன்” ஆசிரியரும் வாய்க்கொழுப்பாகப் பேசத் துணிந்துவிட்டார். தோலைக் கடித்து துருத்தியைக் கடித்து, ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மனிதரையே கடிக்கத் தொடங்கிய கதையை மெய்ப்பிக்கின்றார் “ஆனந்த விகடன்” ஆசிரியர். “தினமணி” அக்டோபர் 6-ந் தேதி பத்திரிகையில் 4-ம் பக்கத்தில் 4-வது கலத்தில் “ஹிந்தி வந்தே தீரும்” என்ற தலைப்பில் “ஆனந்த விகடன்” ஆசிரியர் தோழர் ரா. கிருஷ்ணமூர்த்தி பேசியதாக வெளிவந்திருக்கும் செய்தியாவது:-
“ஹிந்தியைக் கட்டாய பாடமாக்குவதால் தமிழுக்கு ஆபத்து வந்து விடுமென்று சிலர் (தமிழர்கள்) கூக்குரல் போடுவதைப்பற்றி பிரதம மந்திரி இக்கூட்டத்தில் பிரஸ்தாபித்தார்”.
“இது வரையில் (தமிழர்களுக்கு) இவர்களுக்கு கொஞ்சம் அறிவு இருக்கிறதென்று நினைத்தேன். ஆனால் அவர்கள் அறிவிலிகள் என்பது இப்பொழுது நன்றாகத் தெரிகிறது”.
“அவர்கள் பத்திரிகைகளில் எவ்வளவு எழுதினாலும், எத்தனை தந்திகள் அனுப்பினாலும் ஹிந்தி கட்டாயபாடமாக ஏற்பட்டுத்தான் தீரும். அதைப்பற்றி சந்தேகமே இல்லை” என்று சொல்லியிருக்கிறார்.
இது ஹிந்தியைக் கட்டாய பாடமாக வைக்கக்கூடாது என்று எதிர்த்துக் கிளர்ச்சி செய்யும் தமிழர்கட்கு “ஆனந்த விகடன்” ஆசிரியர் வழங்கும் நற்சாட்சிப் பத்திரம். பிரதம மந்திரி ஆச்சாரியார் பேச்சுக்கு பக்க பலமளிப்பதாக எண்ணம்போலும். தமிழ் நாட்டில் வந்து குடிபுகுந்த ஆரியக் கூட்டத்தார் அன்று தமிழர்களை சூத்திரர்கள் என்று சாஸ்திரம் எழுதிவைத் தார்களோ அன்று “வேசி மகன்” என்றும் “அடிமை” என்றும் ஆணவமாக அதற்குப் பொருளும் எழுதிவைத்தார்கள். இன்று, தேசியத்தின் பெயராலும் காந்தி, கதர், காங்கரஸ் பெயராலும் பொது மக்களை வஞ்சிக்கும் இந்த ஆரியக் கூட்டம் தமிழர்களை அறிவிலிகள் என்று அதேபோல் வாய்க்கொழுப்பாக பேசுவதற்கு துணிந்து விட்டது. ஆச்சாரியார் பிரதம மந்திரியார் என்ற மமதையில் பேசுகின்றார். தோழர் ரா. கிருஷ்ணமூர்த்தி “ஆனந்த விகடன்” ஆசிரியர் என்ற அகம்பாவத்தில் பேசுகின்றார்.
ஆரியர்கள் (பார்ப்பனர்கள்) வாழ்க்கையை உயர்த்தவும் ஆரியர்கள் நாகரிகத்தைப் புகட்டவும் பாடுபடுகின்றார்கள். ஆரியர்கள் ஆதிக்கம் சமூகம், அரசியல், பொருளாதாரம். நாடகம், சினிமா, பரத நாட்டியம், சங்கீதம் ஆகிய எல்லாத் துறைகளிலும் உயர்த்துவதற்கு உழைக்கின்றார்கள். தமிழர்கள் வாழ்க்கையைச் சிதைக்கவும் தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆதிக்கம் செலுத்திவரவும் அன்று முதல் இன்று வரை முயன்று வருகிறார்கள். ஆரியர்கள் சூழ்ச்சி நிறைந்த காங்கரசையும் அவர்களால் நடத்தப்படும் “ஆனந்த விகடன்” போன்ற ஆரியப் பத்திரிகைகளையும் தமிழர்கள் ஆதரித்து உதவி புரிந்ததற்குப் பிரதிபலன் “”ஹிந்தியை எதிர்ப்பவர்கள் – தமிழர்கள் அறிவிலிகள்” என்று ஆனந்த விகடன் ஆசிரியர் இன்று அகம்பாவமாகவும் வாய்க்கொழுப்பாகவும் பேசுகிறார்.
ஆரியர்களின் சூழ்ச்சியும் நயவஞ்சகமும் உண்ட வீட்டிற்கே தீங்கு பயக்கும் துரோகச் செயலும், தான் உழையாமல் பிறர் உழைப்பைத் திருடி ஆடம்பரமாக வாழும் பித்தலாட்டச் செயல்களையும் தமிழர்கள் வீணாக நம்பிக் கெட்டுப்போனார்கள். இன்று தமிழர்கள் அறிவிலிகள் என்று “ஆனந்த விகடன்” ஆசிரியர் கூறும் நிலைக்கு ஆளானார்கள். தமிழர்கட்கு உண்மை வீரம் ஆண்மையிருந்தால் இந்த “ஆனந்த விகடன்” ஆசிரியர் பேசிய அகம்பாவப் பேச்சை வன்மையாகக் கண்டித்து மன்னிப்புக் கேட்கச் செய்ய வேண்டும். இவர்களைத் தூண்டிவிட்டு தமிழர்களை வாய்க் கொழுப்பாகப் பேசும்படி செய்யும் பிரதம மந்திரி ஆச்சாரியார் பதவியும் ஆதிக்கமும் வீழ்த்தப்பட வேண்டும். ஆச்சாரியார் ஆரியர்கள் ஆதிக்கத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபடுகின்றார். இவைகட்காகவேதான் “ஆனந்த விகடன்” “தினமணி” “மித்திரன்” “ஹிந்து” பத்திரிகைகள் உயிர் வாழ்கின்றன. பொது மக்களின் பொருள்களை போட்டிப் பரிசுகள் என்ற பெயரால் கொள்ளை யடிக்கும் தேசீய விகடப் பத்திரிகைகள் முதலில் தங்களை சீர்திருத்திக் கொள்ளுவதில்லை. உயர்ந்த மதுபானங்களை அருந்தும் கதர் வேட பக்தர்களும், குதிரைப் பந்தயங்களிலும், சூதாட்டங்களிலும் பொது மக்களை ஏமாற்றி வஞ்சித்த பொருளை இழப்பதிலும் தாசிகள் மையலில் தடுமாறி அலைவதிலும் தேர்ச்சி பெற்ற தேசபக்தர்களும் காந்தியின் பெயரைக் கூறிக் கொண்டு பொது மக்களை ஏமாற்றவும் தமிழர்களை இழிவுபடுத்திக் கூறவும் துணிந்து விட்டார்கள்.
தமிழர்களை அறிவிலிகள் என்று கூறும் “ஆனந்த விகடன்” ஆசிரியருக்குத் தமிழர்கள் நல்ல புத்தி புகட்ட வேண்டும். இனி (ஆரியர்கள் ஆதிக்கத்திற்காகப் பாடுபடும்) “ஆனந்த விகடன்” பத்திரிகையைப் படித்து அறிவிலிகளான தமிழர்கள் இனிமேலும் படித்து அறிவிலிகள் ஆகப் போகிறார்களா? அல்லது அதை பஹிஷ்கரித்து அறிவாளிகள் ஆகப் போகிறார்களா? என்பதுதான் இப்பொழுது அறிவாளிகளான தமிழர்கள் முன்நிற்கும் பிரச்சினை. “ஆனந்த விகடன்” பத்திரிகையை ஆதரிப்பதும் அவர்கள் போட்டிப் பரிசுகளில் பொருள் இழப்பதும் இனி தமிழர்கள் அழிவுக்கே காரணமாகும் என்பதை இனியாவது உணருவார்களா? தமிழர்கள் “ஆனந்த விகடன்” படிப்பது தற்கொலை செய்து கொள்வதற் கொப்பாகி விட்டது என்பது இப்போது ருஜúவாயிற்று.
குடி அரசு – கட்டுரை – 10.10.1937