காங்கரசின் ராணுவ ஆட்சி
காங்கரஸ் என்பது பார்ப்பனர்களின் ஸ்தாபனம் என்றும், அதில் உள்ள பார்ப்பனரல்லாதார் சுதந்தரமற்ற அடிமைகள் என்றும், பார்ப்பனர் காங்கரசில் சர்வாதிகார கொடுங்கோன்மை ஆட்சி நடத்துகிறார்கள் என்றும் சுயமரியாதையும், சுதந்தர புத்தியும் உள்ளவனுக்கு காங்கரசில் இடமில்லையென்றும் அதனாலேயே நாம் காங்கரசை விட்டு வெளியேறி காங்கரசின் சூழ்ச்சிகளையும், கேடுகளையும் வெளியாக்கி வருகிறோம் என்றும் பலதடவை எழுதிவந்திருக்கிறோம். பேசியும் வந்திருக்கிறோம். இதை நமதருமை பார்ப்பனரல்லாத தோழர்கள் சிலர் நம்பாமலும் சிலர் அறிந்தும், தங்கள் சுயநலப் பதவிக்கும், வயிறு வளர்ப்புக்கும் ஆக அறியாதவர்கள் போல் நடந்து கொண்டும் இருப்பதல்லாமல் பார்ப்பனர்களுக்கு அடிமைகளாகவும், கையாள்களாகவும் இருந்துகொண்டு பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்துக்கு தொல்லை விளைவித்து வருகிறார்கள்.
படிப்பினை
~shend
ஆனால் காலப்போக்கில் நாளாக நாளாக நாம் சொல்லுவது வெட்ட வெளிச்சம் போல நிஜமாகி பல காங்கரஸ் பார்ப்பனரல்லாதார் புத்தி பெற்று வருகிறார்கள். இந்த புத்தி கற்பிப்பானது மற்றும் சில அறியாத பார்ப்பனரல்லாதாருக்கும் சுயநலத்துக்கு ஆக சமூகத்தை காட்டிக்கொடுத்தாவது வயிறு வளர்க்கலாம், பதவி பெறலாம் என்கின்ற பைத்தியகார பேராசைக்காரருக்கும் ஒரு படிப்பினையாகட்டும் என்றே பார்ப்பனரை நம்பிய பல பார்ப்பனரல்லாதார் காங்கிரசில் பட்ட அவமானத்தையும், கெட்ட பெயரையும் பற்றி இன்று குறிப்பிடுகிறோம்.
~subhead
பார்ப்பனர் தொல்லை
~shend
சென்னை கார்ப்பரேஷனில் பார்ப்பனர்கள் ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாய் சுமார் 20 வருட காலமாய் தொல்லை கொடுத்து வந்தது யாரும் அறிந்ததேயாகும். ஒவ்வொரு வருட கார்ப்பரேஷன் தேர்தலிலும் தோழர் எஸ். சீநிவாசய்யங்காரின் பணம் ஏராளமாகச் செலவழிக்கப்பட்டு கூலிகள் வேட்டையாடப்பட்டாலும், சென்ற வருஷம் வரை காங்கரசுக்கு மெஜாரிட்டி வெற்றி இல்லாமலே இருந்து வந்தது. தோழர் சாமி வெங்கிடாசலம், ஜனாப் அமீத்கான் முதலியவர்கள் சமீபத்தில்தான் காங்கரஸ் மேயராக ஆகி இருந்தாலும் ஜஸ்டிஸ் கட்சியாரின் தயவினாலேயே அப்பதவி பெற அவர்களால் முடிந்ததே ஒழிய காங்கரஸ்காரர் சுதாவில் மேயராக முடியவில்லை.
சென்ற வருஷமும் இவ்வருஷமும் மாத்திரம் காங்கரஸ் மேயர்கள் வேறு கட்சி தயவில்லாமல் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இவ்வருஷங்கூட சென்னையில் பொதுத்தேர்தல் ஆகி இருந்தால் காங்கரசுக்கு கோவிந்தா ஆகியிருந்தாலும் ஆகியிருக்கும். எப்படியானாலும் இவ்வருஷம் மேயர் தேர்தலில் காங்கரஸ் வெற்றி பெற்றதால் நாம் எவ்வித அதிருப்தியும் அடையவில்லை. ஏனெனில் ஒரு ஆதிதிராவிடர் மேயரானது உலக சரித்திரத்தில் இதுவே முதல் தடவை. அதுவும் ஜஸ்டிஸ் கட்சி ஆதிதிராவிடர் – ஜஸ்டிஸ் கொள்கை ஆதிதிராவிடர் – ஜஸ்டிஸ் கட்சியால் பாலூற்றி வளர்க்கப்பட்ட ஒரு ஆதிதிராவிடர் 4 அணா செலவில் மேயராவதற்கு மாத்திரம் காங்கரஸ் பெயரைச் சொல்லிக்கொண்டு மேயரானது நமக்கு உண்மையிலேயே மனதார திருப்தியான விஷயமாகும்.
~subhead
சிவஷண்முகம் காங்கரஸ் மேயரா?
~shend
ஆதிதிராவிடர்கள் விஷயத்தில் காங்கிரசு கொள்கையைப் பற்றி அதிகக் கட்டுப்பாடு செய்வதில்லை என்கிற காரணத்தாலும் இந்தத்தடவை கண்டிப்பாக மேயர் பதவி ஒரு ஆதிதிராவிடருக்கே கொடுத்தாக வேண்டும் என்று ஜஸ்டிஸ்காரர்கள் ஒரு ஏற்பாடு ஆதியிலேயே செய்து வைத்து விட்டதினாலும் காங்கரசில் பெயருக்குக்கூட தகுதியான ஒரு ஆதிதிராவிடர் இல்லாததினாலும் தோழர் சிவஷண்முகம் அவர்களாவது கிடைத்தால் போதுமென்று காங்கரசுக்காரர்கள் கருதி மேயர் வேலை கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து கையெழுத்து வாங்கி மேயராக்கி பெயருக்கு காங்கரஸ் மேயர் என்ற பெயர் மாத்திரம் பெற்றுக்கொண்டார்கள்.
~subhead
வகுப்புவாத வெற்றி
~shend
எப்படி ஆனாலும் சரி, நம் காலத்தில் இரண்டு ஆதிதிராவிடர்களை மந்திரிகளாகவும் ஒரு ஆதிதிராவிடரை மேயராகவும் பதவியில் பார்த்துவிட்டோம். இவைகளை தகுதியின் காரணம் மாத்திரமே என்றல்லாமல் நாம் செய்து வந்த வகுப்புவாதத்தினாலேயே காங்கரசும் காந்தியும் ஜவஹர்லாலும் பார்ப்பனர்களும் தோழர் சத்தியமூர்த்தியும் கனம் ஆச்சாரியாரும் “நாங்கள் பட்டினி கிடந்தோ தூக்குப்போட்டுக்கொண்டோ வங்காளக்குடாக்கடலில் விழுந்தோ செத்தாலும் சாவோமே ஒழிய- வெள்ளைக்கார ஆட்சியில் இருந்தாலும் இருப்போமே ஒழிய வகுப்புவாதத்தை மாத்திரம் ஒப்புக்கொள்ளமாட்டோம்” என்று சபதம் கூறி இந்தியா பூராவும் சகல விதத்திலும் எதிர்த்து வந்த- வருகிற வகுப்புவாதத்தினாலேயே பார்த்துவிட்டோம்.
~subhead
நஷ்டம் இல்லை
~shend
ஆகவே ஜஸ்டிஸ் கட்சி 500 கெஜமல்ல, இனி 5000 கெஜ ஆழத்தில் “புதைக்கப்பட்டுவிட்டது” என்றாலும் நமக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை என்றும் அதனால் கெட்டுப்போகும் படியான காரியம் ஒன்றும் இல்லை என்றும் சொல்லுவோம். ஆனால் இதற்கு நன்றி விசுவாசமாக தோழர் சிவஷண்முகமும் கனம் முனிசாமியும் நடந்துகொள்வார்களா என்று சிலர் ஐயுறலாம். அதைப்பற்றி நமக்கு கவலையில்லை. நன்றி விசுவாசம் என்பது பலனடைந்தவர்களுடைய கடமையே ஒழிய உதவி செய்தவர்கள் எதிர் பார்க்கக்கூடிய காரியமல்ல. எதிர்பார்ப்பதும் சிறுமைக் குணமேயாகும். இரண்டாவது தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களுக்கு நாம் ஆரம்பம் முதலே சொல்லி வந்திருப்பது என்னவென்றால் நன்றி விசுவாசம் காட்டக்கூடிய சவுகரியமான நிலையில் அவர்கள் இல்லையென்றும் எப்படியாவது தங்களுக்கு காரியமானால் போதும் என்கின்ற கொள்கையே இன்னும் கொஞ்ச நாளைக்கு இருக்க வேண்டும் என்றும் சொல்லி வந்திருக்கிறோம். இப்போது நடைமுறையில் சொல்லப்படும் நன்றி விசுவாசம் என்பதும் ஒரு முதலாளித்தன்மையேயாகும். விவகாரம் வரும்போது அவற்றைப் பற்றி விவகரிப்போம். ஆகவே காணாதன – எண்ணாதன – காணவும் எண்ணவும் முடியாதன கண்டோம் என்று மகிழ்ச்சி அடைந்து ஆசி கூறுகிறோம்.
~subhead
மனு ஆட்சி
~shend
மற்றபடி கார்ப்பரேஷனில் உள்ள பார்ப்பனரல்லாதார்கள் விஷயத்தில் பார்ப்பனர்கள் நடந்துகொள்ளும் மனு ஆட்சியானது மனம் பதறக்கூடியதாகவே இருந்து வருகிறது.
கார்ப்பரேஷனில் உள்ள பார்ப்பனரல்லாதார் பார்ப்பனக் கொடுமையையும் பார்ப்பன சூழ்ச்சியையும் பார்ப்பன வகுப்புவாதத்தையும் கண்டு மனந்தாளாமல் தங்களுக்குள் முன்பின் இருந்த பல மனத்தாங்கல் களையும் அபிப்பிராய பேதங்களையும் ஒத்தி வைத்துக்கொண்டு இப்போது ஒன்று சேர ஆரம்பித்த உடனே பார்ப்பனர்கள் இவர்களை எப்படி பிரிப்பது அல்லது அழிப்பது என்று சதியாலோசனை செய்து வெற்றியும் பெற்று விட்டார்கள்.
விவரம் என்னவென்றால் கார்ப்பரேஷனில் காங்கரஸ்காரர்கள் என்பவர்கள் 40 பேர்கள், அதில் பார்ப்பனர்கள் 12 பேர்கள், பார்ப்பனரல்லாதார் 28 பேர்கள். இப்படி இருந்தும் பார்ப்பனரல்லாதாருக்குள் ஒற்றுமையும் கட்டுப்பாடும் இல்லாததால் ஒரு அய்யங்கார் பார்ப்பனர் கார்ப்பரேஷன் காங்கரஸ் கட்சிக்கு தலைவராக சூழ்ச்சி செய்துகொண்டார். அது மாத்திரமல்லாமல் பார்ப்பனர்களின் நலத்துக்கு தக்கபடி இந்தப் பார்ப்பனரல்லாதார்களை மேலும் பயன்படுத்திக்கொண்டு வந்ததோடு பார்ப்பனர்கள் இவர்களை குரங்கு போல் ஆட்டியும் வந்திருக்கிறார்கள்.
~subhead
சூழ்ச்சி
~shend
கார்ப்பரேஷனில் உத்தியோகஸ்தர்கள் நியமிக்க வேண்டிய சமயங்களில் எல்லாம் பார்ப்பனர்களையே நியமிக்க செய்யப்படும் சூழ்ச்சிகளிலும் பார்ப்பனர்கள் இவர்களைக் கொண்டு வெற்றி பெற்றும் வந்தார்கள். கடைசியாக பார்ப்பனரல்லாதார் மெம்பர்களில் சிலருக்கு எப்படியோ சுயமரியாதை உணர்ச்சிவந்து பார்ப்பன சூழ்ச்சியையும் பார்ப்பன ஆதிக்க சர்வாதிகாரக் கொடுமையையும் உணர ஆரம்பித்த உடனே பார்ப்பனர்கள் அதை மட்டம் தட்டிவிட ஆரம்பித்துவிட்டார்கள். இது விஷயங்களைப் பற்றி சென்ற வாரம் “குடி அரசி”ல் எழுதி இருந்தபடி கார்ப்பரேஷன் கல்வி அதிகாரி நியமன தேர்தலில் பார்ப்பனரல்லாதார் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்று பார்ப்பனர்கள் கண்டுகொண்டதோடல்லாமல் நாம் குறிப்பிட்டபடியே பார்ப்பனரல்லாதார் கார்ப்பரேஷன் காங்கரஸ் கட்சித்தலைவர் விஷயத்திலும் தோழர் பாஷ்யம் அய்யங்கார் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து அவரை விலக்கிவிட்டு தோழர் சாமி வெங்கிடாசலத்தையோ அல்லது தோழர் விநாயக முதலியாரையோ தலைவராக்கக் கூடும் என்று கருதி திடீரென்று அடக்கு முறையை கையாண்டு பல மெம்பர்களை காங்கரசில் இருந்து விலக்கியும் பலரை கீழ்ப்படிந்து சொன்னபடி நடக்கும்படி செய்தும் அடக்கிவிட்டார்கள்.
~subhead
இராணுவ ஆட்சி
~shend
அதாவது காங்கரஸ் மெம்பர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று கலாட்டா செய்து லஞ்சத்தை விசாரிக்க என்று கமிட்டி நியமித்து அதுவும் ரகசியத்தில் விசாரணை என்று ஏதோ விசாரணை செய்ததாக பேர் செய்து கடைசியில் லஞ்சம் வாங்கினார்கள் என்று சொன்னால் கிரிமினல் கேசு ஆகிவிடும் என்று பயந்து ஏதேதோ முட்டாள்தனமாக காரணங்களைக்காட்டி அதாவது பதவியைத் தன் சொந்த நலனுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள் என்றும் பதவியை துஷ்பிரயோஜனப்படுத்திக் கொண்டார்கள் என்றும் மற்றும் புரியாத காரணங்களையும் காட்டி தண்டித்துவிட்டதாகச் சொல்லி சின்னாபின்னப் படுத்தி விட்டார்கள். இந்த நடத்தைக்கும் விசாரணைக்கும் தண்டனைக்கும் பெயர் சொல்ல வேண்டுமானால் இதை ஒரு ராணுவ ஆட்சி என்றுதான் சொல்ல வேண்டும்.
~subhead
இப்போது கட்டுப்பாடு எங்கு போயிற்று?
~shend
இனி எப்படியானாலும் தோழர் சாமிவெங்கிடாசலம் தலைவராக வரமுடியாது. அதோடு அவரும் ஏதாவது மூச்சு விட்டால் அவரையும் காங்கரஸ் கட்சியில் இருந்து தள்ளவோ ராஜிநாமா செய்யும்படி கேட்கவோ தண்டிக்கவோ தகுந்த குற்றத்தை சாட்டிவிடுவார்கள் என்கின்ற பயத்தில் அவரும் (சாமியும்) அடங்கிவிடுவார் போலவே தெரிகிறது. இது எப்படியோ ஆகி தொலையட்டும். நமக்கும் இதைப்பற்றி கவலை இல்லை காங்கரஸ் மெம்பர்கள் கார்ப்பரேஷனில் கண்டிராக்ட்டு எடுத்து இருக்கிறார் என்றும் தோழர் சாமி அவர்கள் சிமிட்டுக் கண்டிராக்ட் எடுத்திருக்கிறார் என்றும் ஆதாரத்தோடு நாம் எடுத்துக்காட்டின காலத்தில் இந்த காங்கிரஸ் கட்டுப்பாடு எங்கு போயிற்று? அப்போது இந்தப் பார்ப்பனர்கள் வேண்டுமென்றே விட்டுக்கொடுத்துவிட்டு அவரை சர்.ஆர்.கே. ஷண்முகத்துக்கு விரோதமாய் பயன்படுத்திக்கொண்டு இப்போது அவர் ஒரு பார்ப்பனருக்கு எதிராய் பதவிக்கு ஆசைப்படுவார் என்று தெரிந்தவுடன் அவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கைப் பூச்சாண்டி காட்டப்படுகிறது.
~subhead
சத்தியமூர்த்தி கதை என்ன?
~shend
மற்றும் தோழர் சத்தியமூர்த்தியார் விஷயத்தில் புள்ளி விவரங்களுடன் பல ஒழுங்கீனமான புகார்கள் சொல்லப்படுகின்றன. வெகு நாளாகவே சொல்லப்பட்டும் வருகின்றன. அதற்கு ஆதாரமாக தோழர் சத்தியமூர்த்தியார் வீடு வாசல், நகை, மோட்டார் கார், பாங்கியில் இருக்கும் பணம் முதலியவைகளும் தக்க ருஜúவாக இருக்கின்றன. இவற்றை விசாரிக்க யாதொரு விதமான கமிட்டியும் போடப்படவில்லை. எவ்விதமான ரகசிய விசாரணையோ ஊழல்கள் ஒழிக்கும் காரியமோ செய்யப்படவும் இல்லை என்றால் லஞ்சம், ஒழுக்க ஈனம், கட்சிக்கு கெட்ட பெயர் என்பனவெல்லாம் பார்ப்பனரல்லாதாரை தனிப்பட்ட ஆளை குரோத புத்தியுடன் சூழ்ச்சித் தன்மையுடன் ஒழிப்பதற்கு செய்யப்படும் காரியமாய் இருக்கிறதே தவிர ஒழுக்கத்துக்கென்றோ நாணையத்துக்கு என்றோ பொது ஜன நன்மைக்கு என்றோ செய்யப்படும் காரியமாய் இல்லை என்பதற்கு ஆக்ஷேபணையே இல்லை.
~subhead
துரோகிகளுக்குப் பரிசா?
~shend
இதுவரை செய்யப்பட்ட எவ்வளவோ அடக்கு முறைகளிலும் எவ்வளவோ அடங்காப்பிடாரி லிஸ்டில் சேர்க்கப்பட்டவர்களிலும் பார்ப்பனரல்லாதார் பெயர்கள் மாத்திரம் அடிபட்டிருக்கிறது. அது மாத்திரமல்லாமல் காங்கரசுக்கு விரோதமாய் வெளிப்படையாய் கட்டுப்பாட்டை மீறி காங்கரசுக்கு துரோகமும் கெட்ட பெயரும் செய்து காங்கரஸ் பதவியை தன் சுயநலத்துக்கு ஆக துஷ்பிரயோகம் செய்தார்கள் என்றவர்களுக்கெல்லாம் பார்ப்பனர் என்கின்ற காரணத்துக்கு ஆக சட்டசபை நியமனமும் மந்திரி வேலையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் பார்ப்பனரல்லாதார் என்கின்ற காரணத்துக்கு ஆக பலர் மீது கெட்டபெயர் சுமத்தி வெளியிலனுப்பப்பட்டு வருகிறது.
இப்போது சென்னை கார்ப்பரேஷனில் நடத்தப்பட்ட அடக்குமுறையால் இனி தோழர் பாஷ்யம் அய்யங்கார் தலைமைப் பதவியானது எவ்வித ஆபத்தும் இல்லாமல் செய்து கொள்ளப்பட்டு விட்டது. சாமியும் வால்காட்ட முடியாமல் செய்யப்பட்டுவிட்டார். தோழர் சிவசைலம் பிள்ளை கல்வி அதிகாரியாக ஆக்கப்பட்ட விஷயமும் கவிழ்க்கப்பட்ட ஒரு பார்ப்பனர் அப்பதவிக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டாலும் செய்யப்படலாம்.
~subhead
வேறு உதாரணம் வேண்டுமா?
~shend
ஆகவே பார்ப்பன ஆட்சி எப்படிப்பட்டது என்பதற்கு இனி என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கின்றோம். ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பார்ப்பனர்களால் ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டவர்கள் தோழர்கள் வரதராஜலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார், சக்கரை செட்டியார், சிங்காரவேலு செட்டியார், ஆரியா, சிதம்பரம்பிள்ளை, ஆதிநாராயண செட்டியார், ராமசாமி முதலியவர்கள் ஆவார்கள் என்பது வயது வந்த பெரிய ஆட்களுக்கு எல்லாம் நன்கு தெரியும். சிதம்பரம் பிள்ளை ஆதிநாராயண செட்டியார் வெறும் ஆட்களாய் செத்தார்கள். சமீபத்தில் செத்த ஆதிநாராயண செட்டியாருக்கு அனுதாபத் தீர்மானங்கள் கூட சரியாய் இல்லை. சிதம்பரம் பிள்ளை குடும்பத்தின் கதி சொல்லவே தேவை இல்லை. வரதராஜúலு அழிக்கப்பட்டார், சக்கரை ஒழிக்கப்பட்டார், கல்யாணசுந்தரம் நடைபிணமானார். சிங்காரவேலு சீந்துவாரற்றவராக்கப்பட்டார். ஆரியா விலாசம் தெரியவில்லை. ராமசாமி வெறும் கூப்பாடுடன் சரி என்கின்ற நிலைமையில்தான் ஆக்கப்பட்டுவிட்டார். அதுபோலவே அவர்களுக்கு பின்னும் பார்ப்பனர்கள் பயன்படுத்திக்கொள்ளும் ஆட்களும் அதே கதியைத்தான் அடைந்து வருகிறார்கள். இதில் அதிசயமென்ன இருக்கக்கூடும்?
~subhead
நமது கேள்வி
~shend
ஆகவே சமூகத்தைக் காட்டிக்கொடுத்து சொந்த இனத்துக்கு துரோகம் செய்து எதிரிகளை தஞ்சமடைந்து வயிறு வளர்த்தவர்களோ, பதவி பெற்றவர்களோ, வாழ நினைத்தவர்களோ இது மாத்திரமல்லாமல் இன்னும் எவ்வளவு இழிநிலைக்குப் போனாலும் அதைப்பற்றி கவலைப்படுவது முட்டாள்தனம் என்பதோடு இனியாவது மற்றவர்களுக்கு புத்திவர இந்த சம்பவங்கள் பயன்படுமா என்பதே நமது கேள்வி.
குடி அரசு – தலையங்கம் – 14.11.1937