ரிப்பன் மண்டபத்து மகான்கள்
சென்னை கார்ப்பரேஷன் மாளிகைக்கு ரிப்பன் மண்டபம் என்று பெயர்! நல்ல பிரம்மாண்டமான அழகிய வெள்ளைக் கட்டிடம்! அதிலே “கவுன்சிலர்களாக” இருக்கும் மகான்களில் முக்கால் வாசிப்பேர் காங்கரஸ்காரர்கள். அந்த மகான்களுக்குத் தலைவர் சத்தியமூர்த்தி. அவருடைய கீர்த்தி கண்டோர் கைகொட்டி நகைக்கும்படி இருக்கிறது. “தினமணி”க்கு ஸ்பெஷல் வேலை, மூர்த்தியின் கீர்த்தியை நாடறியச் செய்வதுதான். இந்த மகான்களில் 3 பேருக்கு “ஊழல்” மெடல் கொடுத்தாகி விட்டது. “திரிசங்கு சுவர்க்கத்திலே” பாபம் திண்டாடுகிறார்கள். ஒரு அம்மையார், ஓடோடிப் போய்விட்டார்! நாணமோ, பயமோ, கஷ்டமோ, கசப்போ யாரறிவார்! மற்றொரு மகான் தோழர் பக்தவத்சலமோ முடுக்கிக்கொண்டு போய்விட்டார். மற்றொரு மகான் தோழர் சக்கரை செட்டியார், காங்கரசின் “தாக்கீதை” சட்டை செய்யாது ஜம்மென்று வாழ்ந்து வருகிறார். கட்சித் தலைவரோ, பந்து மித்திரர்களுக்கு வேலைவாங்கிக் கொடுப்பதிலேயே கண்ணுங் கருத்துமாக இருந்து வருகிறார். இந்த மகான்களின் நிர்வாகத்தையோ, “இந்து” பத்திரிகையும் கேலி செய்கிறது. அவ்வளவு மோசம்.
- உத்தியோக நியமனத்தில் பார்ப்பனீயம் தாண்டவமாடுகிறது.
- சலூன்காரர்களுக்கு புதிய வரி போட்டாகி விட்டது.
- ஆதிதிராவிட சேரிகள் அழிக்கப்பட்டு ஏழைகள் வீடின்றி தவிக்கின்றனர்.
- சர்க்காரிடமிருந்து வாங்கிய கடனை வகையாகச் செலவழிக்கவில்லை.
- புதிய கடனுக்கு மனுபோட்டு இருக்கிறது. இதை “தினமணி” ஆட்சேபிக்கிறது. இவ்வளவு மோசமான ஆட்சி நடத்தும் மகான்கள், ரிப்பன் மண்டபத்திலே இருக்கின்றனர். அவர்களை உள்ளே அனுப்பிய “பாபத்தை” எப்படிப் போக்குவது? சமீபத்தில் வரப்போகும் தேர்தலில் இத்தகைய “மகான்கள்” ரிப்பன் மண்டபத்தினுள்ளே நுழைய முடியாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், கார்ப்பரேஷன் மானம் காப்பாற்றப்படும். தமிழ் நாடு பூராவும், இன்றைய “மகான்கள்” ஆட்சியைக்கண்டு, கேலிசெய்து சிரிக்கிறது. சென்னை நகரவாசிகள் என்ன செய்யப்போகிறார்கள்?
குடி அரசு – துணைத் தலையங்கம் – 12.12.1937