பெரியார் வாழ்க்கை வரலாறு

வரலாற்றுச் சுருக்கம் – ஆண்டுவாரியாக

இவர் தான் பெரியார்

தொகுப்பு: தஞ்சை மருதவாணன்

உலகமே ஒருமுகமாகப் பாராட்டிவிட்டது என்று கருதத்தக்க வண்ணம், அனைத்துலகுக்கும் பொதுவான, உச்சமன்றமான உலக நாடுகள் அவை, தனது ஒரு பிரிவான உலக நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் (UNESCO) மூலம், இந்தியத் துணைக் கண்டத்தின் தென்கோடியில் உள்ள தமிழகத்தில் சுழன்றுலவிய இந்த மாமனிதரை மிகச் சரியாக அடையாளங் கண்டு, கீழ்க் கண்டவாறு குறிப்பிட்டது:

“புத்துலகத்தின் தீர்க்கதரிசி! தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமுதாய சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற வழக்கங்கள், ஆதாரமற்ற நடப்புகள் ஆகியவற்றின் கடும் எதிரி.”

இவ்வாறு புகழப்பட்ட அந்தத் தன்மானப் பேரொளியாம், தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பினை, கையேடாகப் பயன்படுத்தத் தக்க வகையில், கால வரிசைப்படியான ஒரு குறு வரலாற்றுப் பிழிவாக வழங்குகின்றோம்.

ஆரியப் பார்ப்பனியம் – வேத, புராண, சாஸ்திரங்களைக் காட்டி பார்ப்பனரல்லாதாரை உடல் உழைப்பாளர்களாக, தற்குறிகளாக அடிமைப்படுத்திய காலத்தில் பெரியார் பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். பார்ப்பன கொடுங்கோல் ஆதிக்கத்தை எதிர்த்து சிங்கமென முழங்கி அவர் காங்கிரசுக்குள் போராடினார்; சுயமரியாதை இயக்கம் கண்டார்; தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை வழி நடத்தினார்; அதன் தலைவரானார். மேட்டுக்குடி உயர் வர்க்கத்தின் பிடிக்குள் இருந்த நீதிக்கட்சியை பாமர மக்களுக்கான இயக்கமாக்கி, அதற்கு ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் சூட்டினார். தமிழ்நாட்டின் வரலாற்றுப் போக்கைத் திருப்பிய ஒரு சரித்திர நாயகனின் வரலாறு – அவரது இளம் பருவத்தில் தொடங்கி இறுதி வரை ஆண்டு வரிசைக் கணக்கில் எடுத்துரைக்கிறது – இந்த வெளியீடு.

1879 முதல் 1918 முடிய

தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், 17.9.1879இல் ஈரோட்டில் வெங்கடப்ப நாயக்கருக்கும், சின்னத் தாயம்மையார் எனும் முத்தம்மாளுக்கும், நான்காவது மகவாகவும், இரண்டாவது மகனாகவும் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் ஈ.வெ.கிருஷ்ணசாமி, பொன்னுத்தாயி அம்மாள், கண்ணம்மாள் ஆகியோர். ஈ.வெ. கிருஷ்ணசாமியின் முதல் மனைவி நாகம்மாளுக்கு, ரங்காராம், தாயாரம்மாள் ஆகியோரும் அவரது இரண்டாவது மனைவி ரங்கநாயகிக்கு மிராண்டா, சம்பத், செல்வராஜ், செல்லா, கஜராஜ் ஆகியோரும் மக்களாவர். பொன்னுத்தாயி அம்மையாருக்கும் அவரது கணவர் கல்யாணசுந்தர நாயக்கருக்கும் (மாப்பிள்ளை நாயக்கர்) அம்மாயி, அப்பையா ஆகிய இருவர் மக்கள். கண்ணம்மாளின் கணவர் பெயர் எஸ்.இராமசாமி நாயக்கர் என்பதாகும். கண்ணம்மாளுக்கு குழந்தை இல்லை. எஸ். இராமசாமி நாயக்கரின் இரண்டாவது மனைவி பொன்னம்மாளுக்கு ராஜாத்தி என்கிற சுப்புலட்சுமி, காந்தி, சரோஜினி, சந்தானம், சாமி ஆகிய அய்ந்து மக்கள்.

பெரியார் தனது தந்தையாரின் சிறிய தாயாரான விதவையின் வீட்டில் சுவீகாரமாகச் சென்று சிறு வயது முதற்கொண்டு, கட்டுப்பாடு அற்று, குறும்பு மிக்கவராக வளர்ந்தார். 6 வயதில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப் பட்டார். 9 வயதில் ஈரோடு முனிசிபல் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பெற்று, இரண்டாண்டுகள் பயின்று, 4ஆவது வகுப்பு தேறினார். இவர் தேறிய செய்தி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கெஜட்டில் வெளியிடப் பட்டது. 10ஆவது வயதில் பள்ளிப் படிப்பை விட்டு நிறுத்தப்பட்டார். 12ஆம் வயதில் தந்தையாரின் மண்டிக்கடை வாணிபத்தில் ஈடுபடுத்தப்பட்டார். 19ஆம் வயதில், 13 வயது நாகம்மையைத் திருமணம் புரிந்தார். இந்த நாகம்மையார், பெரியாரின் தாயார் சின்னத்தாயம்மையாருக்கு ஒன்றுவிட்ட தம்பி, சேலம் தாதம்பட்டி ஹெட் கான்ஸ்டபிள் ரங்கநாயக்கருக்கும், அவர் மனைவி பொன்னுத்தாயி அம்மையாருக்கும் பிறந்த மூன்று மக்களுள் ஒருவர் ஆவார். தேவராஜன், முத்தம்மா ஆகியோர் மீதி இருவர். பெரியாருக்குத் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் கழித்து, ஒரு பெண் குழந்தை பிறந்து அய்ந்து மாதத்திலேயே இறந்து விட்டது. பெரியார் இளமையிலேயே ஆசார அனுஷ்டானங்களுக்கு அப்பாற்பட்டவராகவும், தம் வீட்டுக்கு வரும் புராணீகர்களைக் குறுக்குக் கேள்வி கேட்டுத் துளைக்கும், சிந்தனை வளம் மிக்க குறும்புக்காரராகவும், சாதி வேறுபாடற்ற சமத்துவ எண்ணங் கொண்டவராகவும், நேர்மை, நாணயம், வியாபாரத்தில் திறமை மிக்கவராகவும் விளங்கினார். 21ஆம் வயதில், தனது மண்டிக் கடையில் ஈட்டிய லாபத்தில் தொழிலாளர்களுக்கும் பங்கு கொடுத்தார். தமது 23 ஆம் வயதில், சாதி ஒழிப்பு எண்ணங்கொண்டு, அனைத்து சாதியினர், மதத்தினருடன் சமபந்தி போஜனம் நடத்தினார். அத்துடன் வேளாள வகுப்புப் பெண்ணுக்கும் நாயுடு வகுப்பு ஆணுக்கும் கலப்புத் திருமணம் நடத்தி வைத்தார். தனது 24ஆம் வயதில், தனது தந்தையைப் போல கையெழுத்துப் போட்டார் என்று இவர்மீது ஏற்பட்ட வழக்கில், தானே கையெழுத்து இட்டதாக நீதிமன்றத்தில் உண்மையே பேசி, விடுதலையடைந்து இவரது நேர்மைக்காக அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார். 25ஆம் வயதில், தனது தந்தையார் மறுத்தும், அவருக்குத் தெரியாமல், செல்வக்குமார முதலியார் என்பவரிடம் கடன் வாங்கி, ஈரோடு சிதம்பரம் பூங்காவுக்கு அருகே 30 ஏக்கர் நிலம் வாங்கி, அதைத் தன் தந்தையார் பெயருக்கே சாசனம் எழுதினார். கடன் வாங்கியது “மானத்துக்கு இழுக்கு” என்று தந்தையார் கண்டிக்கவே கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். துறவி வேடம் பூண்டு, பெஜவாடா, காசி, கல்கத்தா, அஸ்ஸன்சூல், பூரி, எல்லூர் முதலிய இடங்களில் சுற்றித் திரிந்து பரந்த அனுபவம் பெற்றார். புரோகிதப் பார்ப்பனர்களின் சுயநலம், கயமை, வைதீகத்தின் பொய்மை ஆகியவற்றை நேரில் கண்டார். பின்னர், எல்லூரிலிருந்து தந்தையாரால் அழைத்து வரப்பட்டார். மண்டிக் கடையை தன் பேரிலேயே நடத்தினார். 28, 29 ஆம் வயதில் காங்கிரஸ் இயக்கத்தில் நாட்டங்கொண்டு மாநாடுகளுக்கு செல்லத் தொடங்கினார். ஈரோட்டில் பிளேக் நோய் பரவியபோது, மீட்புப் பணியாற்றியதுடன், இறந்த சடலங்களை, உறவினர்களே கைவிட்டுச் சென்றபோதும், தன் தோளில் சுமந்து, அப்புறப்படுத்தி அரும்பணியாற்றினார். 30ஆம் வயதில் தனது தங்கையின் மகளுக்கு, உறவினர்களின் எதிர்ப்புக்கிடையில் ‘விதவைத் திருமணம்’ செய்து வைத்தார். 32ஆம் வயதில் தந்தையாரை இழந்தார். பொது வாழ்வில் மிகவும் நாட்டங் கொள்ளலானார்.

பல பெரிய மனிதர்கள், அரசியல்வாதிகள், அறிஞர்களுடன் தொடர்பு கொள்ளலானார். ‘சென்னை மாகாண சங்கம்’ என்ற அமைப்பில் உப தலைவராக இருந்து, அச்சங்கத்தில் பார்ப்பனரல்லாதவர்க்கு 50ரூக்குக் குறைவு இல்லாமல் உத்தியோகத்தில் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். சென்னை ‘நேஷனல் அசோசியேஷனில்’ காரியதரிசியாக இருந்து, பார்ப்பனரல்லாதார்க்கு 50ரூ உத்தியோகத்தில் பங்கு தரப்பட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். 38ஆம் வயதில் (1917இல்) ஈரோடு நகர்மன்றத் தலைவர் ஆனார். நகரசபைத் தலைவராக இருந்தபோது முதன்முதலாக குடிநீர்த் திட்டம் கொண்டு வந்தார். சுகாதார வசதி போன்ற பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றினார். சுமார் 29 கவுரவப் பதவிகளை வகித்து வந்தார். அப்போது சேலத்தில் சி.இராஜகோபாலாச்சாரியார் நகரசபைத் தலைவராக இருந்தார்.

1919

காங்கிரஸ், சமூக சீர்திருத்தத்துக்குப் பாடுபடும் என்றும், வகுப்புரிமைக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாகவும், பதவி உத்தியோகங்களில் 50 சதவீதம் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு ஒதுக்கி  அளிக்கப்படும் எனவும், தேர்தலில் போட்டியிட்டு அரசியலைக் கைப்பற்றும் எண்ணம் காங்கிரசுக்கு இல்லை எனவும் காங்கிரசார் உறுதி கூறியதை நம்பி, சமுதாய சேவைக்கு ஒரு வாய்ப்பு என்று கருதிக் காங்கிரசில் உறுப்பினரானார். ஈரோடு நகர்மன்றத் தலைவர் பதவியை விட்டு விலகினார். அமிர்தசரசில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுத் தமிழகப் பிரதிநிதியாகச் சென்று வந்தார். திருச்சியில் 25ஆவது ‘இராஜீய மாகாண காங்கிரஸ் கான்பரன்சில்’ வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

1920

தாம் பொது நிலையங்களில் வகித்து வந்த ஏறத்தாழ 29 பதவிகளையும் விட்டு விலகினார். காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு உழைத்தார். ஆண்டுக்கு ரூ.20,000 வருமானம் வரக் கூடிய வாணிபத்தையும், தாம் நடத்தி வந்த பஞ்சாலையையும் நிறுத்திவிட்டார். திருநெல்வேலியில் நடைபெற்ற இராஜீய காங்கிரஸ் மாகாண மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். மாநாட்டுத் தலைவர் திரு.எஸ்.சீனிவாச அய்யங்கார், ‘இது பொது நன்மைக்குக் கேடு ஆனதால் ஒழுங்கு தவறானது’ என்று கூறி, அனுமதி மறுத்தார்.

1921

ஈரோட்டில் கள்ளுக்கடை மறியலைத் தலைமை தாங்கி நடத்தினார். காந்தியாரின் நிர்மாணத் திட்டத்தையேற்று ஆடம்பர ஆடையை விட்டுக் கதர் உடுத்தினார். தாயார், மனைவி, தங்கை, குடும்பத்தினர் அனைவரையும் கதர் உடுத்தச் செய்தார். கதர் மூட்டைகளைத் தம் தோளிலேயே சுமந்து சென்று ஊர் ஊராக விற்பனை செய்தார். திருச்செங்கோட்டில் கதர் ஆசிரமத்தைத் திறந்து வைத்தார். மது தரும் மரங்களை வெட்ட வேண்டும் என்று காந்தியார் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க, வடநாட்டில் பல ஈச்ச மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. தென்னாட்டில் இவர் ஒருவரே, சேலம் தாதம்பட்டியில் தமது தோட்டத்திலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தச் செய்தார். நீதிமன்றங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் தனது குடும்பத்துக்கு வரவேண்டிய 50,000 ரூபாய்களை இழந்தார்.

இதில் ரூ.28,000 மதிப்புள்ள பத்திரம் ஒன்றினை தன் பேருக்கு ‘மேடோவர்’ (Made Over) செய்து தரும்படியும், தாம் இலவசமாக வாதாடி வசூல் செய்து தருவதாகவும், பிறகு தொகையை திலகர் சுயராஜ்ஜீய நிதியில் சேர்த்து விடலாம் என்றும் சேலம் திரு.சி.விஜயராகவாச்சாரியார் விடுத்த வேண்டுகோளைக் கொள்கை அடிப்படையில் புறக்கணித்தார். கள்ளுக்கடை மறியலில் கைதாகி 15.11.1921இல் சிறைபிடிக்கப்பட்டு, ஒரு மாதம் தண்டனை அளிக்கப்பட்டு, கையில் விலங்கிடப்பட்டு கோவைச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து அன்னை நாகம்மையாரும் கண்ணம்மாளும் மற்றும் ஆயிரக்கணக்கானோரும், 144 தடையை மீறி மறியலில் ஈடுபட்டனர். எண்ணிக்கை பெருகவே, அரசு பணிந்து தடையை நீக்கியது. தஞ்சையில் நடைபெற்ற 27ஆவது தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தை முன் வைத்தார். அவ்வமயம் திரு. சி.இராஜகோபாலாச்சாரியார் ‘இதனைக் கொள்கையாக வைத்துக் கொள்வோம்; தீர்மான ரூபமாக வேண்டாம்’ என்று தந்திரமாகத் தடுத்தார்.

1922

கள்ளுக்கடை மறியல் வீறுடன் தொடர்ந்தது. அரசாங்கத்திற்கும் காங்கிரசுக்கும் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பாக ஒப்பந்தப் பேச்சு நடைபெற்றது. இது தொடர்பாக, பம்பாயில் ஒரு மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டு நடவடிக்கை தொடங்கப்படும் முன்பாக, திரு. மாளவியா, திரு.சங்கரன் நாயர் ஆகியோர், ‘கள்ளுக்கடை மறியலை நிறுத்திவிட்டு, வேறு நடவடிக்கை தொடரலாம்’ என காந்தியாரைக் கேட்டுக் கொண்டபோது, காந்தியார், “கள்ளுக்கடை மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை, ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது” என்று நாகம்மையாரையும் கண்ணம்மாளையும் குறிப்பிட்டார் (ஆதாரம்: 19.1.1922 ‘இந்து’). இந்தியாவிலேயே முதன்முதல், தம் வீட்டுப் பெண்களை, பொது வாழ்வில் ஈடுபடுத்தி, மறியலில் கலந்து கொள்ளச் செய்தவர் பெரியார் ஒருவரே! ஈரோட்டில், தன் தந்தையார் சமாதிக்குப் பக்கத்திலுள்ள கட்டிடத்தில் இந்திப் பிரச்சாரப் பள்ளியைத் துவக்கி, இந்திப் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்தார். காங்கிரசு கிளர்ச்சியில், கோவை சிறையில் இருந்தபோது, உடனிருந்த நண்பர் திரு.தங்கப் பெருமாள் பிள்ளையுடன் கலந்து பேசி, ‘சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவத்தை’ நமது நாட்டு மக்களுக்கு உண்டாக்க ‘குடிஅரசு’ என்ற பெயரில் ஓர் ஏட்டைத் துவக்க முடிவு செய்தார். திருப்பூரில் நடைபெற்ற 28ஆவது, தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டில், வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அப்போது நடைபெற்ற விவாதத்தில் சினமுற்று, “மனுதர்ம சாஸ்திரத்தையும், இராமாயணத்தையும் கொளுத்த வேண்டும்!” என்று முழங்கினார். அகில இந்திய சட்ட மறுப்பு கமிட்டி உறுப்பினர்களான மோதிலால் நேரு, டாக்டர் அன்சாரி, டாக்டர் அஜ்மல்கான், சி.ராஜகோபாலாச் சாரியார், வித்தல்பாய் படேல், கஸ்தூரி ரெங்க அய்யங்கார் ஆகியோர் ஈரோட்டில் பெரியார் இல்லத்தில் கூடி விவாதித்தனர்.

1923

தான் கருதிய வண்ணம் ‘குடிஅரசு’ ஏட்டைத் துவக்க 19.1.1923இல் அரசாங்கத்தில் பதிவு செய்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக விளங்கிய பெரியார், சேலம் 29ஆவது தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொணர்ந்தார். அதில் கலகம் ஆகும்போல் தெரியவே, திரு. ஜார்ஜ் ஜோசப்பும், திரு. வரதராஜுலு நாயுடுவும் தீர்மானத்தை நிறுத்தி விட்டார்கள். பின்னர், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற மாநாடுகளிலும் வகுப்புரிமையை வலியுறுத்தினார்.

1924

கேரள நாட்டில் ஈழவர், தீயர், புலையர் முதலானோர்க்கு இழைக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க, வைக்கம் என்ற இடத்தில் உள்ள மகாதேவர் கோயில் முன்பாக போராட்டம் நடத்த 30.3.1924 அன்று அங்குள்ள காங்கிரசார் முடிவு செய்து, நடத்தி வந்த கிளர்ச்சி தொய்வுபடவே, அவர்களது அழைப்புக்கிணங்கி, பெரியார் வைக்கம் சென்று இழிவு ஒழிப்புப் போரில் ஈடுபட்டதுடன், தமது துணைவியார், தங்கையார் ஆகியோரையும் ஈடுபடச் செய்து, கிளர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டினார். 22.4.1924இல் ஒரு மாத தண்டனை பெற்று, ‘அருவிக்குத்தி’ எனும் தீவுச் சிறைக்குப் படகில் அழைத்துச் செல்லப்பட்டார். வழியில், பெரும் காற்றில் படகு அலைக்கழிக்கப்படவே, சட்டத்திற்குக் கட்டுப்படும் பெரியார், தாமே முன்னின்று பாதுகாப்பு தந்து, கரை சேர்த்து, தானே சிறைக்குள் சேர்ந்தார். விடுதலையானதும், மீண்டும் கிளர்ச்சியில் ஈடுபட்டு ‘வைக்கத்தை’ விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டு, அதையும் மீறி கிளர்ச்சி செய்ததால் ஒரு வார காலத்தில் மீண்டும் சிறைபிடிக்கப்பட்டு திருவாங்கூர் மத்திய சிறையில் சுமார் 4 மாத காலம் கடின காவல் கைதியாக வைக்கப்பட்டார்.

பிறகு விடுதலையடைந்து ஈரோட்டுக்கு வந்த அன்றே, ஏழு மாதங்களுக்கு முன்பு கதர்ப் பிரச்சாரம் செய்து வந்தபோது சென்னையில் பேசிய பேச்சினை சாக்காகக் கொண்டு, சென்னை அரசினால் அரச வெறுப்பு, வகுப்பு வெறுப்புக் குற்றஞ்சாட்டி 11.9.1924இல் சிறைபிடிக்கப்பட்டு சென்னையில் சில நாள் காவலில் வைக்கப்பட்டார். இச்சிறைப் பிடிப்பு, பெரியார் மீண்டும் வைக்கம் சென்று மறியல் செய்து தொல்லை கொடுக்காமல் இருக்க, சர். சி.பி. இராமசாமி அய்யர் சட்ட மந்திரியாக இருந்த சென்னை அரசு, இராகவய்யா என்ற பார்ப்பனர் திவானாக இருந்த திருவாங்கூர் அரசுக்குச் செய்த மறைமுக உதவி என்பது பின்னர் வெளியாயிற்று! தீண்டாமை எதிர்ப்புப் போர் வெற்றியடைந்து, பெரியாரை ‘வைக்கம் வீரர்’ என்று திரு.வி.க. புகழலானார். இந்த வைக்கம் போருக்கு ஊக்கம் கொடுக்காததுடன், மறைமுகமாக இடையூறும் விளைத்த சி.இராஜகோபாலாச்சாரியார், காந்தியார் ஆகியோர் பின்னாளில் காந்தியார் தலையீட்டாலேயே, வைக்கம் போர் வெற்றி பெற்றது என்று வெளியுலகுக்குக் காட்டியுள்ளார்கள்.

வ.வே.சு. அய்யர், காங்கிரசின் கொள்கையான தேசியத்தைப் பரப்ப வேண்டி சேர்மாதேவி என்ற இடத்தில், ‘பாலபாரதி தமிழ்க் குருகுலம் பரத்துவாஜ ஆசிரமம்’ என்ற பெயரில் தேசிய வீரர்கள் பயிற்சிக் கூடமொன்றை, காங்கிரஸ் இயக்கத்தின் நிதியையும் தமிழ் மக்களின் நன்கொடையையும் கொண்டு நடத்தி வந்தார். இதில் பார்ப்பனப் பிள்ளைகளுக்கு உப்புமாவும், மற்றவர்களுக்கு பழைய சோறும், தனி இடத்தில் வெளியில் சாப்பாடும், இருவருக்கும் தனித்தனி தண்ணீர்ப் பானைகளில் குடிநீரும், பார்ப்பனர்க்கு வேதபாராயணமும், அல்லாதவர்க்கு தேவாரம், திருவாசகமும்; இப்படியாக வேறுபாடு காட்டப்பட்டது. இக்குருகுலத்திலேயே பயின்ற ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மகன், பார்ப்பனப் பிள்ளைகளுக்கு உள்ள தண்ணீர்ப் பானையில் தண்ணீர் குடித்ததற்காகத் தண்டிக்கப்பட்டான். இது பெரியார் கவனத்துக்கு வந்து, வெகுண்டெழுந்து, அதற்கு காங்கிரஸ் நிதி உதவியை மேற்கொண்டு வழங்க மறுத்ததோடு, மக்கள் மத்தியில் தேசியத்தின் பேரால் பார்ப்பனர் செய்யும் அட்டூழியத்தை விளக்கியதுடன், குருகுலத்தை விரைவில் தானே ஒழியும் நிலைக்கு ஆளாக்கினார்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற 30ஆவது தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் தானே தலைவராக இருந்து வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொணர்ந்தார். திரு. எஸ்.சீனிவாச அய்யங்கார், சென்னையிலிருந்து ஏராளமான ஆட்களைக் கூட்டிவந்துத் தடுத்து, தீர்மானம் தோல்வியுறச் செய்தார். நீதிக்கட்சியின்  அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தைப் பெரியார் ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார்.

1925

திருப்பாதிரிப்புலியூரில் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் எனும் ஞானியார் சுவாமிகளைக் கொண்டு 2.5.1925 அன்று ஈரோட்டில் ‘குடி அரசு’ எனும் வார இதழைத் துவக்கினார். காஞ்சிபுரத்தில் 21, 22.11.1925 தேதிகளில் திரு.வி.க. தலைமையில் நடைபெற்ற 31ஆவது இராஜீய காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானம் கொணர்ந்தார். திரு.வி.க. பார்ப்பனர் சூழ்ச்சிக்கு பயந்து, “பொது நன்மைக்காக இத்தீர்மானத்தை அங்கீகரிக்க முடியாது” என்று கூறி அனுமதி மறுத்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளராக இருந்த பெரியார், “இனி காங்கிரசை ஒழிப்பதே எனது வேலை” என்று துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு, தம் ஆதரவாளர்களுடன் வெளியேறினார். அவர் வெளியேறிய நாளைச் சுயமரியாதை இயக்கத் துவக்க நாளாகக் கொள்ளலாம்.

1926

பெரியார் நடத்திய வைக்கம் போராட்ட எதிரொலியாக 4.2.1916இல் தீண்டப்படாதார் கோயில் நுழைவுக் கிளர்ச்சி சுசீந்திரத்தில் நடைபெற்றது. பெரியார் ஆதரவுக் குரல் கொடுத்தார். ‘தமிழிற்குத் துரோகமும் இந்தியின் இரகசியமும்’ என்ற கட்டுரையை 7.3.1926 ‘குடிஅரசு’ இதழில் எழுதி இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தி புகுத்தப்படுவதால் ஏற்படும் கேட்டினை முன்கூட்டியே எச்சரித்தார். இவ்வாண்டு சென்னை சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில், ஒதுங்கி இருந்து, பார்ப்பனரல்லாதார்  நன்மைக்குப் பாடுபடுவோர் வரட்டும் என்று விரும்பி இருந்தார். பார்ப்பனரல்லாதார் இன எழுச்சியைத் தூண்டி, பார்ப்பனரின் சுயநல புத்தியையும், அடுத்துக் கெடுக்கும் துரோகத்தையும் நாடெங்கும் பிரச்சாரம் செய்தார். மதுரையில் 25, 26.12.1926 தேதிகளில், பார்ப்பனர் அல்லாதார் முதல் மாநாட்டைக் கூட்டினார். இம்மாநாட்டின் தலைவர் சர். ஏ.பி.பாத்ரோ ஆவார். வ.உ.சி., ஜார்ஜ் ஜோசப் போன்ற முக்கியஸ்தர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நாடெங்கும் பார்ப்பனரல்லாதார் மாநாடுகள் நடைபெற்றன.

1927

பெங்களூரில் காந்தியாரைச் சந்தித்து, சாதிக்குக் காரணமான இந்துமத ஒழிப்பு, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு ஆகியவற்றை வற்புறுத்தினார்; காந்தியார் ஏற்கவில்லை. இதற்குப் பின் காந்தியாரிடம் கொண்டிருந்த நம்பிக்கையை விடலானார். இந்தியாவுக்கு அரசியல் உரிமை வழங்குவது குறித்து ஆராய வருகை தந்த ‘சைமன் கமிஷனை’ யாவரும் எதிர்த்த நிலையில் முதன்முதல் வரவேற்றவர் பெரியாரே! செப்டம்பரில் துவக்கப்பட்ட ‘திராவிடன்’ தினசரியின் ஆசிரியராகச் சிலகாலம் இருந்தார். திருக்குறள், புத்தர் கொள்கைகளைப் பரப்பலானார். தமது பேருக்குப் பின்னிருந்த ‘நாயக்கர்’ என்ற சாதிப் பட்டத்தைத் துறந்தார்.

1928

டாக்டர் சுப்பராயன் தலைமையிலான சுயேச்சை மந்திரி சபை, நீதிக்கட்சியின் துணையுடன் அமைந்தது. இவ்வரசு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொண்டது குறித்து பெரியார் மகிழ்ந்தார். இதற்கு மூலகாரணமான  அமைச்சர் திரு.எஸ்.முத்தையா முதலியாரைப் புகழ்ந்தார். 1928 ஜூலை 19ஆம் தேதி முதல் நடைபெற்ற தென்னிந்திய இரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஆதரித்து, தடையை மீறிப் பேசியதற்காக 5.8.1928இல், ஈரோட்டில் சிறைபிடிக்கப்பட்டு, சிறிது காலம் சிறையில் இருந்தார். பின்னர் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. 7.11.1928இல் ‘ரிவோல்ட்’ ஆங்கில ஏட்டைத் துவக்கினார். நீதிக்கட்சித் தலைவர், பனகல் அரசர் சர்.இராமராய நிங்கவாரு மறைந்த அதிர்ச்சியில் மனமுடைந்த பார்ப்பனரல்லாதாரைத் தேற்றினார். ‘கர்ப்பத்தடை’ பற்றி முதன்முதலில் பெரியார் பேசினார்.

1929

சுயமரியாதை இயக்க வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த செங்கற்பட்டு, முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டினை 17, 18.2.29 தேதிகளில் நடத்தினார். டபிள்யூ.பி.ஏ. சவுந்திர பாண்டியன் இம்மாநாட்டுக்குத் தலைமையேற்றார். வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், புரட்சிகரமானதுமான 34 தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேறின. 1909இல் மிண்டோ மார்லி சீர்திருத்தமும், 1919இல் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தமும் கொண்டு வந்த பிரிட்டிஷ் அரசு, 1927இல் இந்தியாவுக்கு மேலும் என்னென்ன உரிமைகள் வழங்கலாம் என்பதை நேரில் ஆராய்ந்து வருமாறு ‘சர் ஜான் சைமன்’ என்பவர் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. இந்தக் குழு இந்தியாவிற்கு 1928-29இல் வந்தபோது, இந்தியா முழுவதும் காங்கிரசு கட்சியினர் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், தந்தை பெரியார் மற்றும் பார்ப்பனரல்லாத தலைவர்கள் கூடிய இந்த மாநாட்டில் ‘சைமன் குழு’ பார்ப்பனரல்லாத மக்களுக்கு நன்மை தரும் என்று முடிவு செய்து தீர்மானம் இயற்றினர். பெரியார் மலாயா சுற்றுப் பயணத்திற்காக 15.12.1929இல் நாகையில் கப்பலேறினார். அவருடன் நாகம்மையார், எஸ்.இராமனாதன், அ.பொன்னம்பலனார், சாமி. சிதம்பரனார், சி.நடராசன் ஆகியோர் சென்றனர். 20.12.1929 அன்று பினாங்கு துறைமுகத்தில் பெரியார் அவர்கள் இறங்கிய போது 50,000க்கும் மேற்பட்ட மக்கள் இவரை வரவேற்றனர் தொடர்ந்து பயணம் செய்தார். 23.12.1929இல் ஈப்போவில் தமிழர் சீர்திருத்த மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றினார். 26.12.1929இல் சிங்கப்பூரில் நடைபெற்ற மலாயா இந்திய சங்க மாநாட்டில் விரிவுரை ஆற்றினார்.

1930

மலாயாவில் தொடர்ந்து பயணம் மேற்கொண்டார். சென்ற ஆண்டு இறுதியிலிருந்து 11.1.1930 முடிய 23 நாட்கள் பிரச்சாரம் செய்தார். அவர் பிரச்சாரம் செய்த இடங்கள் வருமாறு: பினாங்கு, கோலாலம்பூர், கைப்பீஸ், மூவாh ஜோகூர்பார், பந்துபகார், மலாக்கா, தம்பின், கோலப்பிறை, கோலாகுபு, தஞ்சமாலிம், சுங்கை குரூட், தெலுங்கன் சா கம்மார், கோலாகஞ்சார், சுங்கப்பட்டாணி முதலிய சுமார் 71 இடங்களில் சுமார் 39 சொற்பொழிவுகளும், 34 வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் உரையாற்றி அங்கு அறிவொளி பரப்பினார். 2.1.1930ல் சிலாங்கூர் என்ற இடத்தில் மாநில மருத்துவச் சங்கத்தைத் தங்கத்தால் செய்த சாவியால் திறந்து வைத்தார்! 11.1.1930இல் பினாங்கில் கப்பலேறிய பெரியார், 16.1.1930இல் நாகை வந்தடைந்தார். பிரயாண காலம் உள்பட மொத்தம் 32 நாள்கள் அவர் பயணம் மேற்கொண்டார். மலாயாவிலிருந்து திரும்பும்போது கப்பலில் முதன்முதல் தாடி வளர்க்க ஆரம்பித்தார்.

சிருங்கேரி சங்கராச்சாரியார், பெரியாரை தமது இடத்துக்கு வரும்படி அழைத்து, பெரியார் தொண்டைப் புகழ்ந்தும் கடிதம் எழுதினார். ஈரோட்டில் எம்.ஆர். ஜெயகர் தலைமையில் 2ஆவது மாகாண சுயமரியாதை மாநாட்டை நடத்தினார். ‘ரிவோல்ட்’ வார இதழ் 55 இதழ்கள் வந்த நிலையில்  நிறுத்தப் பட்டது. நாடெங்கும் உண்மை நாடுவோர் சங்கம், தாராள சிந்தனையாளர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் துவக்கினார். ‘கர்ப்ப ஆட்சி’ என்ற நூலை வெளியிட்டார். காந்தியாரால் தொடங்கப்பட்ட உப்புப் போரை கடுமையாகக் கண்டித்தார். நன்னிலம் சுயமரியாதை மாநாட்டில் இந்தியை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றச் செய்தார் மே மாதம் சேலத்தில் நடைபெற்ற வன்னியர் மாநாட்டில் முதன்முதலாக ‘இந்தியா ஒரு நாடா?’ என்று வினா தொடுத்தார். ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியின்போது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் சென்னை சட்டமன்றத்தில் கொண்டுவந்து தேவதாசி ஒழிப்பு மசோதாவை தீவிரமாக ஆதரித்து, அம்மசோதா நிறைவேற காரணமானார்.

1931

விருதுநகரில் தமிழ் மாகாண 3ஆவது சுயமரியாதை மாநாட்டை திரு.ஆர்.கே.சண்முகம் தலைமையில் நடத்தினார். கதர் திட்டத்தின் பொருந்தாத் தன்மையை விளக்கிப் பிரச்சாரம் செய்தார்.

மேல் நாடுகளில் அரசியல், பொருளாதார, சமூக நிலையை நேரில் கண்டறியவும், சமதர்மக் கொள்கைகள், ரஷ்யாவில் ஆட்சி மூலம் செயல்படுத்தப்படுவதைக் காணவும், வாய்ப்பு நேரிடின், ரஷ்யாவிலேயே தங்கி விடவும் எண்ணங்கொண்டு, உடல்நலிவுற்ற நிலையில், மருத்துவர் அறிவுரையைப் புறக்கணித்து, தனது அய்ரோப்பிய சுற்றுப் பயணத்தைத் துவக்கினார். உடன் சென்றோர் எஸ்.இராமனாதன், ஈரோடு ராமு ஆகியோர்.

13.12.1931இல் ‘அம்போசா’ (AMBOISE) என்ற பிரெஞ்சுக் கப்பலில், சென்னைத் துறைமுகத்திலிருந்து, செல்வ வசதியிருந்தும், உணவுக்கும் உடைக்கும் கதியற்ற ஏழை மக்கள் செல்லும் 4ஆவது டெக்கில், புழுதி நிறைந்த இடத்தில், பாமர மக்களுடன் சென்ற எளிமைப் பாங்கு பலரைக் கண்கலங்கச் செய்தது. கப்பல் 13.12.1931 இரவு புதுவைத் துறைமுகம் வந்து சேர்ந்தது. புதுவையில் நூற்றுக்கணக்கானவர்கள் படகில் ஏறி, 14.12.1931இல் கப்பலில் வரவேற்புப் பத்திரம், மலர் மாலைகள் சூழ அளவளாவினர். கப்பலில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிரெஞ்சு சட்டமன்ற உறுப்பினர் திரு.பெருமாள் தலைமை வகித்து, கப்பல் உயர் அதிகாரிகளுக்கு பெரியார், இராமனாதன் ஆகியோரை அறிமுகப்படுத்தினார். பிறகு பிரான்சு தேசத்தில் உள்ள பல தலைவர்கள், சங்கங்கட்கு பெரியார் அவர்களை அறிமுகப்படுத்தும், அறிமுக பரிந்துரைக் கடிதங்கள் ஒரு தங்கச் சிமிழில் வைத்து அவருக்கு வழங்கப்பட்டது. புதுச்சேரியில் பெரியாருக்கு உடல்நலம் குன்றி, மயக்கம், காய்ச்சல், தலைவலி அதிக தொந்தரவு செய்யவே, 4ஆம் வகுப்பிலிருந்து 3ஆம் வகுப்புக்கு மாற்ற முனைந்து, அதற்கு இந்திய நாணயம் தேவைப்பட்டதால், பாரதிதாசனிடம் இங்கிலீஷ் பவுன்ட் நோட்டைக் கொடுத்து இந்திய நாணயமாக மாற்றிக் கொடுக்கச் சொன்னதற்கு அவரும் ஊரினுள் சென்று இந்திய நாணயங்களையும், சில தின்பண்டங்களையும் ஒரு டாக்டர் வசம் அனுப்பி வைத்தார். பிறகு உடல்நிலை சற்று குணமானதாலும், டாக்டர் சில பக்குவங்கள் சொன்னதாலும், 3 ஆம் வகுப்புக்கு மாறாமல் 4ஆம் வகுப்பிலேயே இருந்து கொண்டார். 16.12.1931 மால 4 மணி அளவில் கொழும்பு சென்றடைந்தார். கொழும்புவில் இறங்கி புத்தர் கோயில் முதலிய இடங்களைச் சுற்றிப் பார்த்தும், பல சுயமரியாதைத் தலைவர்கள் சுயமரியாதைச் சங்கங்களின் வரவேற்பினைப் பெற்றும், திரு. ஷாகுல் அமீது அவர்களின் ‘மீரான் மேன்ஷன்’ பங்களாவில் நடைபெற்ற வழியனுப்பு உபசாரத்தில் ஒரு மணி நேரமும், பல்வேறு சுயமரியாதைச் சங்கங்கள், ஆதி திராவிட சங்கங்கள் சார்பாக கிரின்பாக்கில் உள்ள ‘லே சிஸ்டர் சர்ச்சில்’ நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் 2 மணி நேரமும் சொற்பொழிவு ஆற்றி விட்டு, நள்ளிரவு 12 மணிக்குக் கப்பலை திரும்ப அடைந்தார். 17.12.1931இல் கொழும்பிலிருந்து புறப்பட்டு 24.12.1931 காலையில், ஏடனுக்குப் பக்கத்திலுள்ள ‘ஜீபுட்டி’ என்ற பிரெஞ்சுத் துறைமுகம் வந்தடைந்தார். அங்கு இறங்கி ஊர், நாடு சுற்றிப் பார்த்து அன்று மாலையே புறப்பட்டு செங்கடல் வழியாக 29.12.1931இல் சூயஸ் வந்தடைந்தார். சூயஸ் துறைமுகத்தில் 42,500 டன் எடையுள்ள ‘எம்ப்ரஸ் ஆப் பிரிட்டன்’ (Empress of Britain) என்ற மிகப் பெரிய கப்பலைக் கண்டுகளித்தார். பின்னர், அன்றே புறப்பட்டு சூயஸ் கால்வாய் வழியாக ‘போர்ட் சைட்’ துறைமுகம் அடைந்தார். போர்ட் சைட் பட்டணத்தில் இறங்கி ‘அக்ராப்போல்’ என்ற ஓட்டலில் தங்கினார்.

1932

‘போர்ட் சைட்’டில் ஒரு வாரம் தங்கியிருந்துவிட்டு 5.1.1932 காலை இரயிலில் புறப்பட்டு மதியம் கெய்ரோ வந்தடைந்தார். கெய்ரோவில் 11 நாள்கள் தங்கி நகரின் முக்கிய இடங்களையும், நாட்டு வளங்களையும் பார்த்துக் கொண்டு, 16.1.1932இல் அலக்சாண்டிரியா துறைமுகத்திலிருந்து கப்பலில் கிரீசுக்குப் புறப்பட்டார். 19.1.1932 அன்று கிரீஸ் தலைநகரான ஏதன்சை அடைந்தார். கிரீஸ் நாட்டு இயற்கை வளங்கள், சாக்ரடீஸ், பிளாட்டோ சிலைகள் உள்பட பல புகழ்பெற்ற சின்னங்கள், பல்கலைக் கழகங்கள், பூங்காக்கள் முதலியவற்றைக் கண்டார். இரஷ்யா செல்ல பாஸ்போர்ட்டுக்காக இரண்டு வாரம் காத்திருக்க நேர்ந்தது. அங்குள்ள கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டார். அவர்கள் உதவியினால் 7.2.1932 அன்று பாஸ்போர்ட் கிடைக்கப் பெற்றது. ஏதன்சிலிருந்து CHITCHERINE என்ற கப்பலில் இரஷ்யக் கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் வழி அனுப்ப, புறப்பட்டு 8.2.1932இல் ‘ஸ்மர்ண’ என்ற இடம் அடைந்தார்.  அன்றே புறப்பட்டு 9.2.1932இல் டார்டினஸ் ஜலசந்தியைக் கடந்து 10.2.1932இல் துருக்கியின் தலைநகர்த் துறைமுகமான கான்ஸ்டாண்டிநோபிளை அடைந்தார்.  கான்ஸ்டாண்டி நோபிளில், மக்கள் வாழ்க்கை முறையைக் கண்டறிந்தார். கடைவீதி, ரிவல்யூஷன் சதுக்கம், கமால்பாட்சாவின் உருவச் சிலை ஆகியவை கண்டார். 11.2.1932இல் கான்ஸ்டாண்டிநோபிளை விட்டு கப்பலில் புறப்பட்டு கருங்கடல் வழியாக 12.2.1932இல் ‘ஓடெசா’ (Odessa)) துறைமுகம் வந்தடைந்தார். கடல் உறைந்து விட்டதால் கரைசேர முடியவில்லை. பனிக்கட்டிகளை உடைத்த பின்னே, 4 மணி நேரம் கழித்து கரைசேர முடிந்தது. ‘ஒடெசா’வைச் சுற்றிப் பார்த்துவிட்டு மாஸ்கோவுக்கு இரயிலில் புறப்பட்டார். ‘கீவ்’ ஸ்டேஷனுக்கு 13.2.1932இல் வந்தடைந்தார். வரும் வழியில் எல்லா நதிகளும் உறைந்து கிடந்ததையும் அவற்றின் மீது மனிதர்கள், வண்டிகள், விலங்குகள் சென்றதையும் பார்த்தார்.

14.2.1932இல் இரஷ்ய துறைமுகம் வந்தடைந்தார். வந்திறங்கியதும், சோவியத் அரசாங்கம் தனது விருந்தினராகப் பெரியாரைக் கருதுகின்றது என்று  அவருக்கு அறிவிக்கப்பட்டது. ‘நவா மாஸ்கோ’ என்ற ((New Moscow) ஓட்டலில் தங்கினார். ‘ஜீனா பிலிகினா’ என்ற (Zina Pilikina) என்ற புத்தி கூர்மையும், பரிவும் உள்ள ஒரு பெண் மொழி பெயர்ப்பாளரை பெரியார் குழுவினர்க்கு  அளித்து, பல்வேறு இடங்களைப் பார்க்க உதவினர். அவர்கள் உதவியுடன், ‘மத எதிர்ப்பு மியூசியம்’ Anti-Religions Museum) கண்டார். பார்வையாளர் புத்தகத்தில் தனது கருத்துரையை எழுதினார். பின்னர், மத எதிர்ப்புப் பிரச்சார அலுவலகம் (Anti-Religious Propaganda Office) சென்று தம்மை ஓர் உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டார். அங்கிருந்த பார்வையாளர் புத்தகத்தில் தனது கருத்தை எழுதினார். 18.2.1932 ஓய்வு நாளாக இருந்த போதிலும், அதிகாரிகள் பெரியார் அவர்களுக்காக வருகை தந்த ‘ஹலாட்டா’ என்ற மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் ‘லெனின்’ மியூசியத்தைக் காணச் செய்தனர். மியூசியத்தில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில் பெரியார் தனது கருத்தை எழுதினார். பின்னர், விவசாய இலாகா மியூசியம் (Home of Peasants) கண்டு களித்ததுடன் பார்வையாளர் புத்தகத்திலும் குறிப்பெழுதினார். 20.2.1932இல் ‘ஜெனரல் கிச்சன்’ என்னும் பொது உண்டிச் சாலையைப் பார்வையிட்டார். இங்கு, பார்வையாளர் புத்தகத்தில் குறிப்பெழுதியதுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

சில நாள்களில், சோவியத் யூனியனின் ஜனாதிபதி ‘காலினின்’ (Mikhail Ivanovich Kalinin, The President of USSR) அவர்களால் வரவேற்கப்பட்டு, அவருடன் பல மணி நேரம் உரையாடினார். காலினின் அவர்கள் காட்டிய பரிவு, எளிமை, தான் கூறியதை தனிக் கவனத்துடன் கேட்ட தன்மை ஆகியவை பெரியாரை மிகவும் கவர்ந்தன. சோவியத் யூனியனின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் ஜனாதிபதி காலினின் ஒரு சாதாரண விவசாயினுடைய மகன் என்று அறிந்து வியந்தார். சோவியத் யூனியனை, நன்கு சுற்றிக் காண விரும்பிய அவருக்கு, தகுந்த ஏற்பாடுகள் செய்து தரப்பட்டன. அவர், மாஸ்கோ, லெனின் கிராட், Baku, Tblici, Sochi, Dnieprostroy, Zaporozhye, Rostov, the Trans-cau casian Republics, Abkhazhia மற்றும் பல முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்த்தார். ஒவ்வோர் இடமாகச் சுற்றிச் சுழன்றார். ஒவ்வொரு நாளும் சில மணி நேரமே உறங்கினார். தொழிற்சாலைகள்,  கூட்டுப் பண்ணைகள், பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், அறிவியல் வல்லுனர்கள், தத்துவவாதிகள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவியல் அறிஞர்கள் என்று பலதரப்பட்டவர்களையும் கண்டு உரையாடினார். மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் (Red Square) மே தின விழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் கொடி பிடித்து அணி வகுத்துச் செல்லும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு களித்தார். பின்னர் மே தினப் பொதுக் கூட்டத்தில் பேசுமாறு அழைக்கப்பட்டார். அக்கூட்டத்தில் அவர், ‘இந்தியாவின் கீழ்நிலையையும், வறுமையுடனும், உரிமையற்றும் வாழும் இந்திய மக்களின் நிலையையும்’ எடுத்து விளம்பினார். பல ஆயிரக்கணக்கான மக்கள் அவர் சொற்பொழிவைக் கூர்ந்து கேட்டனர். அவர்களில் சிலரின் கண்களில் கண்ணீரைக் கண்டார். இரஷ்யாவில் 14 வயதுச் சிறுவன் ஒருவன் பெரியாரைப் பார்த்து, “உங்கள் நாட்டில் ‘மகராஜ்’ (பார்ப்பனர்), பறையர் (சூத்திரர்) இருக்கிறார்களாமே! அவர்கள் எப்படி இருக்க முடியும்?” என்று கேட்டுத் திகைக்க வைத்தான். பார்ப்பனரின் தன்மை பற்றி அவனுக்குப் பெரியார் விளக்கினார்.

ஸ்டாலின் முன்னிலையில் நடந்த மே தின விழாவிலும் கலந்து கொண்டார். “இந்தியாவிலிருந்து வந்த நாத்திகத் தலைவர்” என அவையோருக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். ஸ்டாலின் அளித்த மரியாதையை ஏற்றார். 29.5.1932இல் ஸ்டாலினைக் காண பெரியார் ஒப்புதல் பெற்றிருந்தார். மூன்று மாதங்கள் சோவியத் யூனியனில் தங்கியது, “ஒரு முழு வாழ்வாகவே” அவருக்குத் தோன்றியது. அங்கிருந்து பிரிந்து வர மனதில்லை; சோவியத் யூனியன் குடிமகனாக வேண்டி அரசாங்கத்திடம் விண்ணப்பித்துக் கொண்டார். அதில் அவர் வெற்றி பெறவில்லை. இதற்கிடையில், திரு. எஸ்.இராமனாதனின் நடவடிக்கை சோவியத் அரசின் கண்காணிப்புக்கு உள்பட நேர்ந்ததால், 19.5.1932இல் சோவியத் யூனியனை விட்டு வெளியேறினார்.

பின்னர், 1932 அக்டோபர் முதல் வாரம் வரை இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார். இங்கிலாந்தில், பல தொழிலாளர் தலைவர்களைச் சந்தித்தார். கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் சக்லத்வாலாவைக் கண்டு உரையாடினார். அவரிடம் பெற்ற சோவியத் யூனியன் அய்ந்தாண்டுத் திட்டத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். பிரிட்டிஷ் தொழிற் கட்சித் தலைவர் லான்ஸ்பரியைச் சந்தித்தார். 20.6.1932 அன்று இங்கிலாந்து மேக்ஸ்பரோ லேக்பார்க்கில், வேலையில்லா தொழிலாளர் ஊர்வலக் கொண்டாட்ட தினத்தில் 50,000 தொழிலாளர் இடையே லான்ஸ்பரி முன்னிலையில் சொற்பொழிவு ஆற்றினார். பிரிட்டிஷ் தொழிற் கட்சி அரசாங்கம், இந்தியாவில் கடைபிடிக்கும் தொழிலாளர் விரோதப் போக்கையும், முதலாளித்துவத்துக்கு ஆதரவு நல்கும் நிலையையும், அக் கூட்டத்தில் கண்டித்தார். ஜெர்மனியில், பெரியார் பல நாள் தங்கியிருந்து, பல சமதர்ம சங்கங்களுக்குச் சென்றார். அரசாங்கத்துடன் கலந்து பழகினார். அப்போது ஹிட்லர் ஆட்சிக்கு வராத நேரம். பல நிர்வாண சங்கங்களுக்கும் சென்று அவர்களுடன் கலந்து பழகினார். ஸ்பெயின் நாட்டுத் தலைநகரம் ‘மாட்ரிட்டில்’ பல தினங்கள் தங்கி, பல சமதர்மத் தலைவர்களுடன் உரையாடி யதுடன், அந்நாட்டின் பொது இயக்கங்களை அறிந்து கொண்டார். பாரசி லோனாவில் உள்ள கொலம்பஸ் உருவச் சிலையைக் கண்டு களித்தார். சுற்றுப் பயணத்தில் உடன் வந்த தோழர் எஸ். இராமனாதன், மேலும் பல நாடுகளைச் சுற்றிப் பார்க்க விரும்பாததால், ‘மார்சேல்ஸ்’ பட்டணத்தில் தங்கி விட்டார்.

பெரியார், 17.10.1932இல் ‘ஹரூனா மாரு’ என்ற ஜப்பானியக் கப்பலில் கொழும்பு துறைமுகம் வந்தடைந்தார். இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த  நாகம்மையார், மாயவரம் சி.நடராஜன், அ.ராகவன் ஆகியோர் கொழும்பு வியாபாரி ஹமீது மற்றும் பல சங்கங்களைச் சேர்ந்தவர்கள் ஸ்டீம் போட்டில் கப்பலுக்குச் சென்று வரவேற்று அழைத்து வந்தனர். இலங்கை சட்டசபை நடவடிக்கைகளை 18.10.1932இல் கண்டார். 19.10.1932இல் சட்டசபை மண்டபத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டு நண்பர்களுடன் புத்தமத விஷயம், சிங்கள சமூக விஷயம் ஆகியவற்றைப் பற்றி உரையாடினார். 20.10.1932இல், பர்ஷியன் ஓட்டலில் நடந்த வரவேற்பு விருந்தில், இலங்கை தொழில் இலாகா மந்திரி திரு. பெரி. சுந்தரம், பெரியாரைப் பாராட்டி உரை பகன்றார். 21.10.1932இல் சிங்கள வாலிபர்களுடன் அளவளாவி, அவர்கள் இல்லம் சென்று, உரையாடி சந்தேகம் தெரிவித்தார். அன்று மாலை ஒரு சினிமா காட்சி கண்டார். காட்சி முடிவில், வரவேற்புப் பத்திரம் வாசித்தளிக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பெரியார் பேசினார். 22.10.1932 முற்பகல், முகமதிய பேராசிரியர்களுடன், சுயமரியாதை இயக்கம் பற்றி கலந்துரையாடினார். அன்று இரவு திருநெல்வேலி ஜில்லா ஆதி திராவிடச் சங்கம் திரு.எஸ்.முத்தையா தலைமையில் அளித்த வரவேற்பை ஏற்று உரை நிகழ்த்தினார். 23.10.1932இல், திரு. சி.கே. குஞ்சிராமன் தலைமையில் எல்பின்ஸ்டன் பிக்சர் பாலசில் நடைபெற்ற வரவேற்பில் பெரியாருக்கு தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்புக்குப் பதில் அளித்து, 2000 பேர் கொண்ட கூட்டத்தில் நீண்ட நேரம் பெரியார் சொற்பொழிவு நிகழ்த்தினார். அன்று மாலையே, கொழும்பு கடற்கரைக்குப் பக்கமுள்ள கால்போஸ் மைதானத்தில், டாக்டர் முத்தையா தலைமையில் 10,000 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் 2 மணி நேரத்துக்கும்  மேலாக கருத்துரை ஆற்றினார்.

24.10.1932இல் கொழும்பில் தங்கியிருந்தார். 25.10.1932 முதல் 27.10.1932 வரை கண்டியில் தங்கி, மாத்தளை, உக்களை முதலிய இடங்களுக்குச் சென்று தொழிலாளர், கூலிகள் நிலையை விசாரித்து, அறிந்து கொண்டார். 28.10.1932இல் கண்டியில், அட்வகேட் என்.குமாரசாமி தலைமையில் நடைபெற்ற வரவேற்பில் கலந்து கொண்டார். 29.10.1932இல் ஹட்டன், இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் திரு. நடேச அய்யர் அழைப்புக்கு இணங்கிச் சென்று, வரவேற்பில் கலந்து கொண்டு, 3000 பேர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் சொற்பொழிவு ஆற்றினார். 30.10.32 இல் கொடிகாமம், 31.10.32இல் பருத்தித் துறை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, தங்கியிருந்து, 3.11.1932இல் கொழும்பு சேர்ந்து, ‘மீரான் மேன்ஷனில்’ 6.11.1932 வரை இருந்துவிட்டு, கொழும்புவை விட்டுப் புறப்பட்டு 8.11.1932இல் தூத்துக்குடி வந்து சேர்ந்தார்.

அன்று மாலை தூத்துக்குடியில் நடைபெற்ற மாபெரும் வரவேற்புப் பொதுக் கூட்டத்தில் சொற்பொழிவு ஆற்றினார். 9.11.1932இல் தூத்துக்குடியிலிருந்து இரயிலில் புறப்பட்டு, அன்று மாலை, மதுரை அடைந்து, அங்கு நடைபெற்ற பெரும் வரவேற்புக் கூட்டத்தில் முழக்கமிட்டார். 10.11.1932 காலை மதுரையிலிருந்து இரயிலில் புறப்பட்டு திருச்சி வந்து, நண்பர்களுடன் அளவளாவி, அன்று இரவு 11 மணிக்கு இரயிலில் புறப்பட்டு 11.11.1932 விடியற்காலை 4 மணிக்கு ஈரோடு சேர்ந்தார். தனது பயணத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தவரை வேட்டி சட்டையுடன் இருந்தார். பின்னர், கம்பளியால் ஆன முழுக்கால் சட்டை, முழு நீள ஓவர்கோட், பெரிய தலைப்பாகை ஆகியவற்றுடன் இருந்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் முடிந்தவுடன் தனது முதல் அறிக்கையில் ‘தோழர்’ என விளியுங்கள் என்று தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சமதர்மப் பிரச்சாரத்தை தீவிரமாகச் செய்தார். பெரியார் தனது அய்ரோப்பிய சுற்றுப்பயணத்தைத் துவங்கு முன்பே, 4.10.1931இல் ‘மார்க்ஸ், ஏங்கல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கை’யையும், 11.12.1931இல் ‘லெனினும் மதமும்’ எனும் நூலையும் வெளியிட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

1933

நாகம்மையார், ஏப்ரலில் தீராத நோய்க்கு ஆளாகி, ஈரோடு மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பயனின்றி 11.5.1933இல் மறைந்தார். ‘நாகம்மாள் மறைவு’ என்ற தலைப்பில், பெரியார் சாகா இலக்கியம் எனக் கருதத்தக்க ஓர் அரிய தலையங்கத்தை ‘குடிஅரசில்’ எழுதினார். நாகம்மையார் மறைந்த அடுத்த சில நாள்களில் 14.5.1933 திருச்சி சென்று அங்கு ஒரு கிறிஸ்துவ கலப்புத் திருமணத்தை, 144 தடையை மீறி, நடத்திக் கைதாகி, பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கும் பின்னர் வாபஸ் பெறப்பட்டது. ‘திராவிடன்’ இதழ் கடன் தொடர்பாக 2.6.1933இல் ஈரோட்டில் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் வைக்கப்பட்டு, மலேரியா, இரத்தசோகை, காலராவாகி, ஒரு மாதத்தில் விடுதலை செய்யப்பட்டு, 6.7.1933இல் ஈரோடு சேர்ந்தார். 20.11.33ல் ‘புரட்சி’ வார ஏடு துவக்கினார்.

28, 29.12.1933இல் ஈரோட்டில் தனது வீட்டில் சுயமரியாதைத் தொண்டர்களைக் கூட்டி, ‘சமதர்மத் திட்டத்தை’ வெளியிட்டார். இது ‘ஈரோடு சமதர்மத் திட்டம்’ எனப்படும். சுயமரியாதை இயக்கத்தில் சமதர்மப் பிரிவு ஒன்றைத் துவக்கினார். நாடெங்கும் சுயமரியாதை சமதர்ம சங்கங்களைத் தோற்றுவித்தார். ‘அரசியலுக்குப் போகின்றார் பெரியார்’ என்னும் சக தோழர்கள் சிலரின் எதிர்ப்புக் குரலையும், ‘பொதுவுடைமை’ பேசுகின்றார் என்று சீறிப் பாய்ந்த அரசின் அடக்குமுறையையும் பெரியார் சந்திக்க வேண்டியிருந்தது. 29.12.33இல் ‘இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?’ என்று ‘குடிஅரசில்’ தலையங்கம் எழுதியதற்காக 124ஆ அரசு வெறுப்புக் குற்றத்தின் கீழ் 30.12.1933இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு நடைபெற்றது.

1934

இவ்வழக்கு தொடர்பாக 12.1.1934இல் கோவை ஜில்லா கலெக்டர்

திரு. ஜீ.டபுள்யூ. வெல்ஸ், அய்.சி.எஸ். முன், வரலாற்றுப் புகழ் மிக்க ஸ்டேட்மெண்ட் ஒன்றைத் தாக்கல் செய்தார். வழக்கு முடிவில் பெரியாருக்கு 9 மாத தண்டனை, 300 ரூபாய் அபராதம்; அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஒரு மாத தண்டனை என்று விதிக்கப்பட்டது. தங்கை கண்ணம்மாளும் தண்டனைக்குள்ளானார். கோவைச் சிறை, இராஜ மகேந்திரபுரம் சிறை ஆகியவற்றில் தண்டனை அனுபவித்தார். கோவைச் சிறையில் இராஜகோபாலாச்சாரியாரும் இருந்தார். இருவரும் மீண்டும் ஒன்றுபட்டுப் பணியாற்ற, ஒரு பொதுத் திட்டத்தைத் தீட்டி, அது காந்தியாருக்கு அனுப்பப்பட்டது. இத் திட்டத்தில் ‘எண்ணிக்கைக்குத் தகுந்தபடி, அரசியல் பிரதிநிதித்துவம், உத்தியோகம் கொடுக்கப்பட வேண்டும்’ என்று இருப்பதால் காந்தியார் மறுத்துவிட்டதாக பின்னர் இராஜகோபாலாச்சாரியார் பெரியாரிடம் கூறிவிட்டார். அரசின் அடக்குமுறைக்கு ஆளாகி ‘புரட்சி’ நிறுத்தப்பட்டு, 15.3.1934 முதல் ‘பகுத்தறிவு’ தினசரி துவக்கப்பட்டு, அவ்விதழும் மே மாதம் முடிவுற்றது. பெரியார் சிறையினின்று 20.5.1934இல் விடுதலையானார். ‘பகுத்தறிவு’ வார ஏடு 26.8.1934இல் துவக்கப்பட்டது. இவ்வார ஏட்டில் முதன்முதலாக பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தைப் புகுத்தினார். சமதர்மத் திட்டத்தை காங்கிரசுக்கும் நீதிக்கட்சிக்கும் அனுப்பினார். ஜெயப்பிரகாஷ் நாராயணன் பெரியாரை ஈரோட்டில் சந்தித்துப் பேசினார். நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியுற்றது. பெரியார் நீதிக்கட்சி யினரைத் தேற்றினார்.

1935

‘ஈ.வெ.ரா. வேலைத் திட்டத்தை’ நீதிக்கட்சி ஏற்றுக் கொள்ள, பெரியார் நீதிக்கட்சியை ஆதரித்தார். ‘பகுத்தறிவு’ வார ஏடு 6.1.1935இல் நிறுத்தப்பட்டு, பின்னர் மாத ஏடாக வெளி வந்தது. 1.6.1935இல் ‘விடுதலை’ பத்திரிகை வாரம் இரு முறை ஏடாக அரையணா விலையில் வரத் துவங்கியது.

1936

பெரியார் அன்னையார் சின்னத்தாய் அம்மையார், 28.7.1936 இரவு 12 மணியளவில் மறைந்தார். அம்மையார் இறப்பதற்கு 4 மணி நேரம் முன்னதாக அம்மையாரிடம் அனுமதி பெற்று, இரவு ஜோலார்பேட்டை கூட்டத்திற்குச் சென்று சொற்பொழிவு ஆற்றிவிட்டு, இறந்தவுடன் காலை 9 மணிக்கு பெரியார் வந்து சேர்ந்தார். நீதிக்கட்சியை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் செய்தார். ‘சர்வ கட்சிப் பார்ப்பனரல்லாதார் ஒன்றுகூட ஈ.வெ.ரா. சொல்லும் வழியே சிறந்தது’ என்று வ.உ.சி., பெரியாரைப் பாராட்டினார்.

1937

ஜனவரியில் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி தோற்றது. காங்கிரசு வென்றது. பெரியார் சோர்வடையவில்லை. பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் மேலும் முனைப்புடன் செயல்பட வாய்ப்பு என்றே கருதி நீதிக்கட்சியினரைத் தேற்றினார். திரு.சி.இராஜகோபலாச்சாரியார் முதலமைச்சர் ஆனார்.

1938

31.1.1938 ‘குடிஅரசு’ இதழில் குழந்தைப் பேற்றுக்கும் ஆண்-பெண் சேர்க்கைக்கும் இனி எதிர்காலத்தில் தொடர்பிருக்காது என்று முதன்முதல் கூறி, ‘சோதனைக் குழாய்க்’ குழந்தைப் பற்றியக் கருத்தை தெரிவித்தார். முதலமைச்சரான ஆச்சாரியார் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். பெரியார் வெகுண்டெழுந்து மக்களைத் திரட்டி இந்தி எதிர்ப்புப் போரை நடத்தினார். நாடெங்கும் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் நடைபெற்றன. 21.4.1938 அரசு ஆணை மூலம் இந்தி புகுத்தல் நடைமுறைக்கு வந்தது. 4.6.1938 முதல் இந்திப் போர் துவங்கி, இந்து தியாலஜிகல் உயர்நிலைப் பள்ளி முன்பும், முதலமைச்சர் வீட்டு முன்பும் மறியல் நடைபெற்றது. தினமும் நூற்றுக்கணக்கானவர் கைதாயினர். திருச்சியிலிருந்து திரு. அய்.குமாரசாமிப்  பிள்ளை தலைமையில், இந்தி எதிர்ப்புப் படையை 1.8.1938இல் பெரியார் துவக்கி வைத்தார். இப்படைக்கு அஞ்சாநெஞ்சன் அழகிரி தளபதி ஆவார். இந்தி எதிர்ப்புப் படை 11.9.1938இல் சென்னை அடைந்தது. அன்று திருவல்லிக்கேணி கடற்கரையில் 70,000 பேர் திரண்ட கூட்டத்தில் ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ என்று பெரியார் முழங்கினார். இம்முழக்கம், பெரியாரின் உள்ளத்தில் திடீரென்று உதித்தது அன்று. இந்திய அரசியல் அமைப்பில், தமிழர் நலன் தனியாகப் பாதுகாக்கப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. எந்நாளும், பார்ப்பனரும் வடவருமே ஆதிக்கம் செலுத்தி வருவர். தமிழ்நாட்டில் ஆட்சி தமிழர் கைக்கு வருவதுதான் இதற்கான பரிகாரம் எனும் கருத்து இவருக்கு 1930 முதலே உள்ளத்தில் உருவாகி வந்தது.

13.11.1938இல் சென்னையில், திருமதி. நீலாம்பிகை அம்மையார் தலைமையில் கூடிய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் ‘பெரியார்’ என்ற பட்டம் அளிக்கப் பெற்றார். 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெரியார் என்று அழைக்கப்பட்டு வந்தாலும் இம்மாநாட்டிலிருந்து, பெரியார் என்று பெருவழக்காக அழைக்கப்பட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 26.11.1938இல் கைது செய்யப்பட்ட பெரியார் மீது வழக்கு 5, 6.12.1938 நாள்களில் சென்னை ஜார்ஜ் டவுன் போலீஸ் கோர்ட்டில் 4ஆவது நீதிபதி திரு. மாதவராவ் முன்னிலையில் நடந்தது.

“இவர் செய்த குற்றம் இரண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் ஆண்டு கடுங்காவல், ஒவ்வோராயிரம் அபராதம்; அபராதம் செலுத்தத் தவறினால், மேலும் ஆறு, ஆறு மாதம் தண்டனை” என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இரண்டு தண்டனைகளையும் தனித்தனியே அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. பின்னர், அரசாங்கத்தால் கடுங்காவல், வெறுங்காவல் தண்டனையாக மாற்றப்பட்டது. பெரியார் 6.12.1938இல் சிறைத் தண்டனை பெற்று சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையில், டிசம்பர் 29இல் கூடிய நீதிக்கட்சியின் 14ஆவது மாநாட்டில், பெரியார் சிறையில் இருக்கும் போதே, நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரியாரால் சிறையில் எழுதப்பட்ட உரையை திரு. ஏ.டி.பன்னீர்செல்வம் மாநாட்டில் படித்தார்.

1939

சென்னை பேசின் பிரிட்ஜ் சிறையிலிருந்து பெரியார் கோவைக்கு மாற்றப் பெற்று, பின்னர் 16.2.1939இல் பெல்லாரி சிறைக்கு மாற்றம் பெற்றார். பிறகு, மே மாதம் முதல் வாரம் மருத்துவ சிகிச்சைக்கென சென்னை கொண்டு வரப்பெற்று, 12.5.1939இல் மீண்டும் கோவைச் சிறைக்கு மாற்றப் பெற்றார். இவர் உடல்நிலை கண்டு அரசு அச்சங்கொண்டு 22.5.1939இல் விடுதலை செய்தது. சிறையில் இவர் எடை 190 பவுண்டிலிருந்து 160 பவுண்டாக குறைந்தது. சிறை மீண்ட பின் ‘திராவிட நாடு திராவிடருக்கே’  என்ற குரலை எழுப்பினார். கொடைக்கானல் சென்று ஒரு வாரம் ஓய்வு எடுத்தார். இவரது “வயிற்றுப் போக்கைக் கண்டு ‘காலராவோ’ என்று அரசு பயந்து விடுதலை செய்தது” என்று பெரியார் பின்னர் கூறினார். ஆந்திரர்களுக்குத் தனி மாகாணம் கொடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று வற்புறுத்தினார். இந்தி எதிர்ப்பு வீரர்கள் அனைவரும் விடுதலை ஆயினர்.

1940

5.1.1940இல் வடநாட்டுச் சுற்றுப்பயணத்தைத் துவக்கினார். 8.1.1940இல் பம்பாயில் ஜின்னாவை அவர் இல்லத்தில் சந்தித்து, தனிநாடு தத்துவத்தை வலியுறுத்தினார். அம்பேத்கரும் உடனிருந்தார். ஏப்ரலில் கவர்னர் ஜெனரலும், 11.11.1940இல் திரு. சி. இராஜகோபாலாச்சாரியாரும் பெரியாரைச் சந்தித்து, சென்னை மாகாண ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வற்புறுத்தியும் மறுத்துவிட்டார். இந்தியை நீக்கக் கோரி அரசுக்குப் பல எச்சரிக்கைகளை விடுத்தார். 21.2.1940இல் கவர்னர் ஆணையால் கட்டாய இந்தி நீக்கப்பட்டது. கட்டாய இந்தியை ஒழித்த பெரியாரை ஜின்னா 26.2.1940இல் பாராட்டினார். திரு. ஏ.டி.பன்னீர் செல்வம் மறைவுக்கு வருந்தினார்.

1941

லெனினுடன் இருந்து பணியாற்றிய திரு. எம்.என்.ராய், தனது மனைவி எல்லென்ராயுடன் சென்னை வந்து பெரியாரின் விருந்தினராகத் தங்கினார். ‘காங்கிரஸ் எதிர்ப்பு முன்னணி உருவாக்கி, காங்கிரஸ் அல்லாத மந்திரி சபையை முதன்முதலில் சென்னையில் அமைத்து வழிகாட்ட வேண்டும்’ என்று பெரியாரைக் கேட்டுக் கொண்டார். இரயில்வே நிலையத்திலுள்ள உணவு விடுதிகளில் ‘பிராமணாள், இதராள்’ என்றிருப்பதைக் கண்டித்து, இரயில்வே நிர்வாகத்தின் நல்லெண்ணத்துடன் 20.3.1941இல் அது ஒழிவதற்கு காரணமாக விளங்கினார்.

1942

‘குடிஅரசு’ நிறுத்தப்பட்டதால், அச்சகத்திலிருந்த சில எழுத்துகள், அலமாரிகள், பெட்டிகள் முதலிய அச்சகத் தேவைப் பொருள்களை பெரியார் கொடுத்து உதவ, 8.3.42 முதல் அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழ் வெளிவரத் துவங்கியது. ‘திராவிட நாடு’ கொள்கையை பெரியார் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். இரண்டாம் முறை கவர்னர் ஜெனரலும், கவர்னரும் வேண்டியும், மந்திரிசபை அமைக்க மறுத்தார். திரு. சி. இராஜ கோபாலாச்சாரியார், காங்கிரசிலிருந்து விலகி பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவளித்தார். பெரியார் வீட்டுக்கு, ஈரோட்டுக்கு வந்து திராவிட நாடு பிரிவினைக்கு ஆதரவு தருவதாகச் சொன்னார். ஈரோடு இரயில்வே ஸ்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும்போது “இராமசாமி நாயக்கர் கேட்கும் திராவிடஸ்தானை, திராவிட மக்கள் கேட்டால் பிரித்துக் கொடுத்துவிட வேண்டியதுதான்” என்றார்.

1943

சோதனைக் குழாய்க் குழந்தை உருவாக்கப்படும் என்ற கருத்தை உலகுக்கு மீண்டும் அறிவித்தார். பெரியார் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேச்சை அண்ணா குறிப்பெடுத்து அதனைத் தெளிவுபட எழுதிப் பெரியாரிடம் ஒப்புதல் பெற்று, ‘திராவிட நாடு’ இதழில் 21.3.1943, 28.3.1943 தேதிகளில் ‘இனிவரும் உலகம்’ என்ற தலைப்பில் வெளியிட்டார். க. அரசியல் மணி (மணியம்மையார்) பெரியாரிடம் தொண்டு செய்ய வந்தார். 28.3.1943இல் அழகிரி மறைந்ததற்குப் பெரியார் வருந்தினார்.

1944

27.8.1944இல் சேலத்தில் கூடிய நீதிக்கட்சி மாநாட்டுக்குத் தலைமை ஏற்று தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரை ‘திராவிடர் கழகம்’ என்று அதிகாரபூர்வமாக மாற்றினார். 29.9.1944இல் திருச்சியில் இந்து மகாசபைத் தலைவர் மூஞ்சேயைச் சந்தித்தார். 13.12.1944இல் சி.டி.நாயகம் மறைவுக்கு வருந்தினார். 24.12.1944இல் வடநாட்டுப் பயணம் மேற்கொண்டார். 27.12.1944இல் கல்கத்தாவில் நடைபெற்ற எம்.என்.ராய் அவர்களின், இராடிகல் டிமாக்ரடிக் கட்சி மாநாட்டில், எம்.எம். ராய் அவர்களால் “எனது நாத்திக ஆசான்” என்று புகழப்பட்டார்.

1945

1.1.1945இல் வடநாட்டுப் பயணம் முடித்துத் தமிழகம் வந்தார். பிப்ரவரியில் பெரியார் நாக்கில் கொப்புளங்கள் உண்டாயின. செயற்கைப் பல் உரசி உரசிப் புண்ணாகிவிட்டது. தமையனாரின் சித்த வைத்தியம் பயனளிக்கவில்லை. புற்றுநோய் அறிகுறி தென்பட்டது. சென்னை பொது மருத்துவமனையில் 16.3.1945 முதல் 10 நாள்கள் கதிரியக்கச் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமானார். பிறகு, பல்செட்டை விட்டு ஈறுகளால் தின்னப் பழகிக் கொண்டார். 28.5.1945இல் கோகலே ஹாலில் திரு. சி.இராஜகோபாலாச் சாரியார், “தமிழர்கள் மட்டுமே தேசத்தை ஆளலாம் என்ற தைரியம் இராமசாமி நாயக்கருக்கு இருக்கிறது; அது தவறில்லை. அயர்லாந்து நம் மாகாணத்தில் 4இல் 1 பங்கு டிவேலரா சுயராஜ்யம் நடத்தவில்லையா? தைரியம் இருந்தால் நடத்தலாம்” என்றார். 29.9.1945, 30.9.1945இல் திருச்சியில் திராவிடர் கழக மாகாண மாநாடு நடத்தினார். கருஞ்சட்டைத் தொண்டர் படை என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

1946

திராவிடர் கழகக் கொடி உருவாக்கப்பட்டு 27.4.1946இல் பெரியாரால் அங்கீகரிக்கப்பட்டது. 11.5.1946இல் மதுரை வைகை ஆற்று மணற்பரப்பில் நடைபெற்ற கருஞ்சட்டைப் படை மாநாட்டுப் பந்தல் பார்ப்பனர் தூண்டுதலால் எரிக்கப்பட்டது. கொதித்தெழுந்த கருஞ்சட்டைப் படையை அமைதிப்படுத்தினார். 9.12.1946இல் ஏற்பட்ட அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்ட முறையை கடுமையாக எதிர்த்தார்.

1947

2.3.1948இல் கருஞ்சட்டைப் படையை தடை செய்து, அடக்கு முறையை சென்னை அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டது. 8, 9.5.1948இல் தூத்துக்குடியில் புகழ் பெற்ற திராவிடர் கழக மாகாண மாநாட்டை நடத்தினார். 20.6.1948 முதல் மறைமுகமாக மீண்டும் இந்தி, கல்வி அமைச்சர் அவினாசிங்கம் அவர்களால் திணிக்கப்பட்டது. 10.8.1948 முதல் இரண்டாம் இந்திப்போர் துவங்கியது. சென்னை வரும் இராஜகோபாலாச்சாரியாருக்குக் கருப்புக்கொடி காட்ட முடிவு செய்ததையொட்டி 22.8.1948ல் கைது செய்யப்பட்டு 27.8.1948இல் விடுதலையானார். பெரியார் குடந்தையில், தடை உத்தரவை மீறியதால் 18.12.1948இல் நள்ளிரவு 2.15 மணிக்குக் கைதாகி, வேனில் திருச்சி கொண்டு செல்லப்பட்டு சப் ஜெயிலில் வைத்திருந்து, தஞ்சைக்கு கொண்டு வந்து, சப்ஜெயிலில்  வைத்திருந்து பின் அய்யம்பேட்டை இரயில் நிலையத்தில் இறக்கி, சென்னை  செல்லும் இரயிலில் ஏற்றி அலைக்கழித்து, பின்னர் இரண்டு நாளில் விடுதலை செய்தனர். 28.12.1948இல் இரண்டாம் இந்திப் போர் முடிவுற்றது. திருக்குறள் மாநாடு நடத்தி பாமரர்க்கும் அந்நூலை அறிமுகப்படுத்தினார். ‘பிராமணன்’ என்று அழையாதீர். பார்ப்பான் என்றே அழையுங்கள் என்று அறிவுறுத்தினார். “ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் நாள் திராவிடப் பிரிவினை நாள் கொண்டாடுக!” என்றார்.

1949

உடுமலைப்பேட்டையில் 144 தடையை மீறி, 16.4.1949இல் கைதானார். பல முறை பெரியாரை நீதிமன்றம் வரச்சொல்லி, வழக்கைத் தள்ளிப்போட்டு 2.8.1949இல் வழக்கை வாபஸ் பெற்றனர். 14.5.1949 அன்று கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜகோபாலாச்சாரியார், திருவண்ணாமலைக்கு இரமணாஸ்ரமத்தில் பாதாளலிங்கக் குகை திறப்பு விழாவுக்கு வருகை தந்தபோது, அவர் தங்கியிருந்த இரயில் சிறப்புப் பெட்டியில் (சலூன்) காலை 6.49 முதல் 7.17 வரை அவரைச் சந்தித்துப் பேசினார். இயக்கத்துக்குப் பாதுகாப்புக் கருதி 9.7.1949 மாலை 9.30 மணி அளவில் சென்னை மாவட்ட திருமண பதிவாளர் முன், தியாகராயர் நகர் சி.டி.நாயகம் இல்லத்தில், மணியம்மையாரைத் திருமணம் புரிந்து கொண்டார். இதைக் காரணமாகக் கூறி, அண்ணா கழகத்திலிருந்து பிரிந்து, ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற தனி அமைப்பைக் கண்டார். இந்திய அரசியல் சட்டம் 26.11.1949ல் நிறைவேற்றப்பட்டதை பெரியார் வன்மையாகக் கண்டித்தார்.

1950

26.1.1950 குடியரசு நாளை துக்க நாளாகக் கொண்டாடக் கோரினார். 4.2.1950 ஈ.வெ.கிருஷ்ணசாமி மறைவுக்குப் பெரியார் வருந்தினார். பிற்படுத்தப்பட்டோருக்கு வகுப்புரிமை செல்லாது என்று 28.7.1950இல் சென்னை உயர்நீதிமன்றமும், செப்டம்பரில் உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது கண்டு கொதித்தெழுந்து, நாடெங்கும் வகுப்புரிமை நாள் கொண்டாட அறிவுறுத்தினார். “பொன்மொழிகள்” என்ற நூலுக்காக பெரியாரும், “ஆரிய மாயை” என்ற நூலுக்காக அண்ணாவும் ஒரே சட்டப் பிரிவின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு, ஒரே நாளில், திருச்சி நீதிமன்றத்தில் 500 ரூபாய் அபராதமும், செலுத்தத் தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டு, இருவரும் 18.9.1950இல் திருச்சி சிறையில், பக்கத்து அறைகளில் சிறை வைக்கப்பட்டனர். 28.9.1950 அன்று காலை 10 மணிக்கு இருவரும் ஒரு சேர விடுதலை செய்யப்பட்டனர். 3.12.1950இல் திருச்சியில் வகுப்புரிமை மாநாடு நடத்தி, பார்ப்பனரல்லாதாரை ஒன்று திரட்டி, போராடச் செய்தார். ‘அரசியல் சட்டம் ஒழிக’ என்று நாடெங்கும் முழங்கச் செய்தார். மத்திய அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்புக் குரல் கொடுக்கச் சொன்னார். வடநாட்டுத் துணிக் கடையின் முன் மறியல் நடத்திடச் செய்தார்.

1951

26.1.1951இல் சென்னையில் வடநாட்டுச் சுரண்டலை எதிர்த்து மறியல் செய்யவிருந்ததையொட்டி, கைது செய்யப்பட்டு அன்றே விடுதலை செய்யப்பட்டார். அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சங்கத் தலைவரும், செயலாளரும் வடநாட்டிலிருந்து சென்னை வந்து 3.2.1951இல் பெரியாரைச் சந்தித்து ஆலோசனை நடத்திச் சென்றனர். பெரியாரின் வகுப்புரிமைப் போர் வெற்றி பெற்றது. இந்திய அரசியல் அமைப்பின் விதி 15இல், 4ஆவது உட்பிரிவை புதிதாகச் சேர்த்து திருத்திய முறையில் வகுப்புரிமை வழங்கும் வகையில், முதன்முறையாக திருத்தப்பட்டது. இந்தத் திருத்தம் ஏற்பட மூலக் காரணர் பெரியாரே! 30.10.1951 கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ.டாங்கே திருச்சியில் பெரியாரைச் சந்தித்து உரையாடினார்.

1952

முதல் இந்தியப் பொதுத் தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைய பெரியார் மூலக் காரணமாக விளங்கினார். எனினும், காங்கிரசே அரசு அமைத்தது. திரு. இராஜகோபாலாச்சாரியார் 11.4.1952இல் ‘கொல்லைப்புற வழியில்’ (சட்டமன்றத்துக்கு போட்டியிடாமல் மேலவை நியமனம் பெற்று) முதலமைச்சரானார். அவர் 6000 பள்ளிகளில் அரை நேர படிப்பும் மீதி அரை நேரம் அவரவர் சாதித் தொழிலைச் செய்வதும் போதுமானது என்ற குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். பெரியார் வெகுண்டெழுந்தார்! மக்கள் கொதித் தெழுந்தனர்! 1.8.1952இல் திருச்சி ஜங்ஷன் இரயில் நிலையப் பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளைத் தார் கொண்டு பெரியார் அழித்தார். திராவிட நிறுவனங்களே வேண்டும் என்று, திராவிட விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்கள், தென்பகுதி இரயில்வே யூனியன் போன்றவற்றைத் துவக்கினார். ‘தொழிலாளிகளுக்கு இலாபத்தில் மட்டும் பங்கு கொடுத்தால் போதாது; முதலிலும் பங்கு இருக்க வேண்டும்’ என்ற கருத்தைத் தெரிவித்தார்.

1953

1.2.1953இல் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் சென்னை தமிழ்நாட்டுக்கே சொந்தமானது என முழங்கினார். நாடெங்கும் கணபதி ‘கடவுள்’ உருவப் பொம்மையை 27.5.1953 மாலை 6.30 மணிக்கு புத்தர் விழாக் கொண்டாடி பொதுக் கூட்டத்தில் உடைக்கும்படி அறிவுறுத்தினார். அவ்வாறே தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான மண் பொம்மைகள் உடைந்து நொறுங்கின. இரண்டாம் முறையாக 1.8.1953இல் இரயில் நிலைய பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் கிளர்ச்சியை நடத்தினார். ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டம் எதிர்ப்புக்குப் பின்னும் ஒழிந்தபாடில்லை. சுயமரியாதைத் திருமணம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் 31.8.1953இல் தீர்ப்பளித்தது கண்டு பெரியார் வெகுண்டார். 10, 11.10.1953இல் சேலம் ஆத்தூரில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில், கழக ஆண், பெண் அனைவரும் சட்டத்துக்கு உட்பட்ட கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என அறிவித்தார்.

1954

மூன்றாம் முறையாக ஆகஸ்டு 1-ந் தேதி நடைபெற வேண்டிய இந்திப் பெயர் பலகை அழிப்புக் கிளர்ச்சியை, காமராசர்  போட்டியிட்ட குடியாத்தம் இடைத் தேர்தல் காரணமாக 8.1.1954 அன்று நடத்துமாறு அறிவித்தார். குலக்கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு வலுத்தது. நாகையில் 27, 28.3.1954 தேதிகளில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில், தீர்மானித்தபடி ஆச்சாரியார் குலக் கல்வித் திட்ட எதிர்ப்புப் படை ஒன்று மறுநாள் நீடாமங்கலம் அ. ஆறுமுகம் தலைமையில் புறப்பட்டுச் சென்னை நோக்கிச் சென்றது. இப்படை சென்னை அடையுமுன்பே ஆத்தூர் ‘கத்தி’ தீர்மானங்கண்டு பயந்து, சி. இராஜகோபாலாச்சாரியார் உடல்நலமில்லை என்று 30.3.1954இல் முதலமைச்சர் பொறுப்பிலிருந்து வெளியேறினார். காமராசர், பெரியார் ஆதரவுடன் 13.4.1954இல் முதலமைச்சர் ஆனார். 18.4.1954இல் காமராசர் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார்.

நவம்பரில் பர்மா, மலாயா சுற்றுப் பயணத்தைத் துவக்கினார். மணியம்மையார் உடன் சென்றார். 23.11.1954இல் எஸ்.எஸ்.ஜலகோபால் கப்பலில் சென்னை துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டு, 5 நாள் கழித்து இரங்கூன் துறைமுகத்தில் 28.11.1954இல் இறங்கினார். பல்லாயிரவர் வரவேற்றனர். 30.11.1954இல் பர்மா விடுதலை வீரர் ‘அவுங்கான்’ கல்லறைக்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 3.12.1954இல் இரங்கூனில் நடைபெற்ற உலக பவுத்தர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். 5.12.1954ல் அங்கு அம்பேத்கரைச் சந்தித்து உரையாடினார். புத்தமதத்தில் சேர விரும்பிய அம்பேத்கருக்கு பெரியார் சில ஆலோசனைகளை வழங்கினார். 8.12.1954 அன்று ஒரு நாள் ‘மோல் மீனுக்கு’ விமானத்தில் சென்று அங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பர்மன், பர்மா ஸ்டார், தொண்டன் ஆகிய இதழ்கள் சிறப்பாக பெரியார்  பேச்சை வெளியிட்டன. பர்மாவில் அவுங்கான் படத்திறப்பு, நபிகள் நாயகம் விழா, இந்திய தேசிய இராணுவ வீரர்கள் கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இரங்கூனிலிருந்து 11.12.1954இல் ‘சங்கோலியா’ என்ற கப்பலில் புறப்பட்டு 14.12.1954 காலை 11 மணியளவில் பினாங்கு துறைமுகம் வந்தடைந்தார். அங்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. 16.12.1954இல் கோலாப்பிறை செயிண்ட் மார்க் பள்ளித் திடலில் பல்லாயிரவர் முன் கருத்து மழைப் பொழிந்தார். பினாங்கு ‘சேவிகா’ இதழ் இதனைச் சிறப்பாக வெளியிட்டது. 17.12.1954 முதல் 27.12.1954 வரை அலோர் ஸ்டார், கோலக்கஞ்சார், ஈப்போ, தெலுக் அன்கன்தப்பா, கம்மார், கஞ்சமாலிம், கோலாலம்பூர், சிரம்பான், போர்ட்டிகன், மாலாக்கா, மூவார் ஆகிய இடங்களில் கருத்துப் பொழிவு ஆற்றினார். 28.12.1954 முதல் 8.1.1955 வரை சிங்கப்பூரில் பெரியார் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

1955

9.1.1955 காலை 11 மணிக்கு எஸ்.எஸ்.ராஜூலா கப்பலில் புறப்பட்டு 17.1.1955 காலை 7 மணிக்கு சென்னைத் துறைமுகம் வந்து சேர்ந்தார். அன்று 50,000 பேர் குழுமிய கூட்டத்தில் பெரியாருக்குப் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தித் திணிப்பை எதிர்த்தும், இந்தியக் கூட்டாட்சியில் தமிழர்கள் இருக்க விருப்பமில்லை என்பதை உணர்த்தவும் 17.7.1955இல் திருச்சியில் கூடிய மாநாட்டில், 1.8.55 அன்று நாடெங்கும் இந்திய தேசியக் கொடியை எரிக்க வேண்டும் என்ற தமது போராட்ட அறிவிப்பை வெளியிட்டார். அப்போது சென்னை வந்த நேரு, காமராசரைப் பார்த்து, ‘நீங்களும் இராமசாமி நாயக்கரும் கட்டிப் புரளுவதாகச் சொல்கிறார்கள்! அப்படி இருக்க உங்கள் ஆட்சியில் அவர் இப்படிக் கிளர்ச்சி செய்கிறாரே!’ என்று கிண்டல் செய்தார். அதற்குக் காமராசர், ‘இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று பலமுறை வாக்குறுதி கொடுத்தும், மீறி நடப்பதால் வந்தது இது! இதற்கு நீங்கள்தான் காரணம்’ என்று குறிப்பிட்டார். பின்னர் காமராசர் மத்திய மாநில அரசு சார்பாக, இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று 30.7.1955இல் ஒரு உறுதிமொழி கொடுத்தார். உறுதிமொழியை வெளியிடுமுன் காமராசர், பெரியாரிடம் காண்பிக்கச் செய்து, அதில் பெரியார் சில திருத்தங்கள் செய்து, பிறகு, உறுதிமொழி வெளியிடப்பட்டது. 31.7.1955இல், கிளர்ச்சியை பெரியார் ஒத்தி வைத்தார். மேற்கு வங்காளத்தின் சமூகத் தொண்டரான ஹரேந்திநாத் கோலே 9.12.1955இல் சென்னையில் பெரியாரைச் சந்தித்து அளவளாவினார்.

1956

நாடெங்கும் 1.8.1956 அன்று “இராமன்” படத்தைக் கொளுத்தச் செய்தார். இராமன் பட எரிப்புக் கிளர்ச்சி தொடர்பாக 1.8.1956 காலையே பெரியார் கைது செய்யப்பட்டு, போலீஸ் கமிஷனர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு அன்று மாலை விடுவிக்கப்பட்டார். மொழிவாரி மாகாணம் பிரிவதை பெரியார் ஆதரித்தார். மொழிவாரி மாகாண பிரிவினைக்குப் பின் திராவிட நாடு கொள்கையைப் புறக்கணித்து, தனித் தமிழ்நாடு கொள்கையை வலியுறுத்தினார். 1953இல் ஆந்திர மாநிலம் பிரிந்ததைத் தொடர்ந்து மொழி வழி மாநிலங்கள் இனி பிரியத் தொடங்கிவிடுமே என்று அஞ்சி அன்றைய மத்திய அரசாங்கம், தமிழ், கன்னடம், மலையாளம் மூன்றையும் உள்ளடக்கி தட்சிணப் பிரதேசம் என்ற ஓர் அமைப்பை உருவாக்க முயற்சித்தது. இந்த ‘தட்சிணப் பிரதேசம்’ முயற்சியை எதிர்த்து, ஒழியச் செய்தார். 4.11.1956இல் திருச்சி கலெக்டர் மலையப்பன் பற்றிய தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளைக் கண்டித்துப் பேசினார்.

1957

வினோபா அழைப்பின் பேரில், 8.1.1957இல் திருச்சி தேசியக் கல்லூரியில் அவரைச் சந்தித்து காலை 10.45 முதல் இரண்டு மணி நேரம் அவருடன் உரையாடினார். திருச்சி கலெக்டர் மலையப்பன் மீது நீதிபதிகள் அளித்த தீர்ப்பு தொடர்பாக பெரியார் மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் 23.4.1957இல் நீதிமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘பார்ப்பான் வாழும் நாடு, கடும்புலிகள் வாழும் காடு’ என்னும் ஸ்டேட்மெண்டைத் தாக்கல் செய்தார். திராவிடர் கழக மத்திய கமிட்டியில் ஆகஸ்ட்டில் காந்தி கண்டன தீர்மானம் நிறைவேற்றச் செய்தார். உணவு விடுதிகளில் ‘பிராமணாள்’ என்ற பெயரை நீக்கும் கிளர்ச்சியில் வெற்றி பெற்றார். 3.11.1957இல் தஞ்சையில் எடைக்கு எடை வெள்ளி அளிக்கும் விழாவில் சாதிக்குப் பாதுகாப்பாக இருக்கும் அரசியல் சட்டத்தை 26.11.1957இல் நாடெங்கும் கொளுத்தும் போராட்டத்தை அறிவித்தார். குளித்தலை, பசுபதிபாளையம், திருச்சி ஆகிய இடங்களில் பேசிய பேச்சுக்கள் வன்முறையைத் தூண்டுவதாகக் காரணங்காட்டியும் மற்றும் சட்ட எரிப்பு தொடர்பாகவும் 6.11.1957இல் திருச்சியில் கைது செய்யப்பட்டு வழக்கு தொடர்ந்து உடனே விடுதலை செய்யப்பட்டார். 25.11.1957இல் சட்ட எரிப்புக்கு முதல் நாள் திருச்சியில் மீண்டும் கைது செய்யப்பட்டு திருச்சியில் 3 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். 9.12.1957 திருச்சி வந்த நேரு, பெரியாரைச் சாடினார். அரசியல் சட்டத்தைக் கொளுத்துவது முட்டாள்தனம் என்றார். அரசியல் சட்டம் பிடிக்காதவர்கள் மூட்டை முடிச்சுடன் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்றார். அதன்பின் அதே ஆண்டில் நேரு, சென்னை வந்தபோது, ‘முட்டாள் நேருவே! திரும்பிப் போ!’ என்று தமிழ் மக்கள் திரண்டு எழுந்து கண்டனப் போராட்டங்களை நடத்தி அவரைத் திணற அடித்தனர். 14.12.1957 அன்று வழக்கு விசாரணைக்கு வந்து மூன்று பேச்சுகளுக்கும் தனித்தனியே 6 மாதத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கும்படி தீர்ப்பளிக்கப்பட்டு, சிறை ஏகினார். திருச்சி சிறையிலிருந்து சென்னைச் சிறைக்கு மாற்றப்பட்டார். 26.11.1957 சட்ட எரிப்பில், நாடெங்கும் 10,000 பேர் இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள சாதியைப் பாதுகாக்கும் பிரிவைக் கொளுத்தினர். பல ஆயிரம் பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.

1958

சிறைக்குள்ளே இரண்டு தோழர்கள் மாண்டனர். விடுதலையானவுடன், உடல் நலிவுற்று 20 பேர் மாண்டனர். 23.1.1958இல் கைதியாக மருத்துவமனையில் இருந்த பெரியாரை, டாக்டர் இராம் மனோகர் லோகியா அரசு அனுமதியுடன் சந்தித்து உரையாடினார். சிறையில் இருந்தவாறே நேரு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். 22.2.1958இல் அது தள்ளுபடி ஆயிற்று. 13.5.1958இல் சென்னை மத்திய சிறையிலிருந்து விடுதலை ஆனார். 8 மாத காலமாக தொடர்ந்து 1010 தோழர்கள் சிறை சென்ற (5.5.1957 முதல்) சென்னை முரளி ‘பிராமணாள்’ கபே முன் நடத்திய ‘பிராமணாள்’ அழிப்புக் கிளர்ச்சி வெற்றி அடைந்தது. சங்கராச்சாரியார் ஆலோசனையுடன், ‘முரளி அய்டியல் ஓட்டல்’ என்று 22.3.1958இல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1.2.1959இல் வடநாட்டுப் பயணம் மேற்கொண்டார். சிகந்திராபாத், ஜான்சி, நாகபுரி, ஜபல்பூர் வழியே கான்பூர் சென்று பின் லக்னோ, டில்லி சென்றார். ரிபப்ளிகன் கட்சிக் கூட்டங்கள், பல்கலைக்கழக யூனியன் ஆகியவற்றில் சிறப்புரையாற்றினார். கான்பூரில் அவருக்கு நிகழ்ந்த வரவேற்பில், கீழ்க்கண்ட ஒலி முழக்கம் எழுப்பப்பட்டது. ‘லாவு புருஷ பெரியார் ஜிந்தாபாத்!’ (இரும்பு மனிதர் பெரியார் வாழ்க!), ‘ஆரியோ பாரத்சோடோ நஹிந் துமாரே பாப்கா!’ (ஆரியர்களே! இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்! இது உங்கள் அப்பன் நாடல்ல!), ‘பொம்மன் ஷாகி நஹிங் சலேகி!’ (பார்ப்பான் ஜம்பம் இனி பலிக்காது). 17.2.1959இல் பம்பாயிலிருந்து கிளம்பி 28.2.1959இல் சென்னை அடைந்தார். எழும்பூரில், ‘டிராம்ஷெட்’ என்ற இடத்தை தமிழ் மக்கள் அளித்த 1ஙூ இலட்ச ரூபாயைக் கொண்டு வாங்கினார். அதுவே பெரியார் திடல் இராதா மன்றமாயிற்று.

1960

சாதி ஒழிப்புக்கு ஒரே வழி நாட்டுப் பிரிவினைதான் என அறிவித்து தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப் படத்தை 5.6.1960 அன்று நாடெங்கும் கொளுத்தக் கோரினார். பல்லாயிரவர் தேசப் படத்தைக் கொளுத்தி சிறை ஏகினர். பெரியார் 5.6.1960 காலை 10.30 மணிக்குக் கைதாகி 2 நாள்கள் சிறையில் இருந்தார்.

1961

8.10.1961 அன்று சிதம்பரத்தில் கோலாகலமான கொண்டாட்ட விழாவில் ‘நடமாடும் இல்லம்’ என வர்ணிக்கத்தக்க கார் ஒன்று கழகத் தோழர்களால் பரிசளிக்கப் பெற்றார். காங்கிரசில் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க காமராசர் கையைப் பலப்படுத்தும் பணியை மேற்கொண்டார்.

1962

பச்சைத் தமிழர் காமராசருக்குப் பொதுத் தேர்தலில், உடல்நலம் குன்றிய நிலையிலும் கடுமையாக உழைத்து, ஆதரவு திரட்டி வெற்றி தேடித் தந்தார். இந்தியவிலேயே மிகச் சிறிய மந்திரி சபையை காமராசர் 15.3.1962இல் அமைத்தார்.

1963

முதலமைச்சர் பொறுப்பை விட்டு விலகத் தீர்மானித்த காமராசருக்கு, தனது எதிர்ப்பைத் தெரிவித்து, அவர் விலகுவது தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும், காமராசருக்கும் தற்கொலையாக முடியும் என முன்கூட்டியே தந்தி மூலம் அறிவித்தார். 17.9.1963இல் பெரியார் திடலில் ‘இராதா மன்றம்’ திறப்பு விழாவை நடத்தினார்.

1964

26.1.1964இல் பம்பாய் ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ இதழுக்கு பேட்டி அளித்து, ‘கடவுள் எண்ணம், மூடநம்பிக்கை, சுயநலம், நாணயக் கேடு அற்ற ஒரு நிலையை நாடு அடைய வேண்டும்’ என்றார். நில உச்சவரம்புச் சட்டம் செல்லாது என சுப்ரீம் கோர்ட் 29.3.1964இல் அளித்த தீர்ப்பை எதிர்த்து நாடெங்கும் 19.4.1964 அன்று சுப்ரீம் கோர்ட் கண்டன நாள் நடத்தச் செய்தார். திருச்சியில் 15.6.1964 முதல் 20 நாள்கள் சுயமரியாதைப் பயிற்சி வகுப்பு நடத்தி உரையாற்றினார். 7.5.1964 அன்று கடவுள் புராண பித்தலாட்டங்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் பொருட்டு 50 பேர் கொண்ட பகுத்தறிவுப் படை ஒன்றைத் திரட்டினார். படையின் இலட்சியச் சொல், “அறிவு, ஒழுக்கம், நாணயம்” என்றார்.

1965

இந்தி எதிர்ப்பு என்ற பேரால் பார்ப்பனர்கள், பத்திரிகைக்காரர்கள் தூண்டுதலால் நடந்த கலவரம், வன்முறைச் செயல்களைக் கண்டித்தார். ஏப்ரலில் நாடெங்கும் இராமாயணம் எரிக்கப்படச் செய்தார். ஜூன், ஜூலையில் திருச்சி மாவட்ட வட்டத் தலைநகர்களில் சுயமரியாதைப் பயிற்சி வகுப்புகள் நடத்தினார். பெரியார் அவர்களால் ரூ.5 இலட்சம் நன்கொடையளிக்கப்பட்டு, கட்டி முடிக்கப்பட்ட பெரியார் ஈ.வெ.ரா. அரசினர் கலைக் கல்லூரியை 24.8.1965 அன்று முதலமைச்சர்  பக்தவத்சலம் திறந்தார்.

1966

மே மாதத்தில் விழுப்புரத்தில் சுயமரியாதைப் பயிற்சி வகுப்பு நடத்தினார். 25.5.1966இல் பெரியாரின் கட்டளைப்படி சங்கராச்சாரியைப் புறக்கணிக்க அவர் சென்ற இடமெல்லாம் கருப்புக் கொடி காட்டச் செய்தார். ஆகஸ்டில் நாடெங்கும் இராமாயணம் கொளுத்தப்படச் செய்தார். 7.11.1966இல் டில்லியில் பசுவதை தடுப்பு என்ற பேரால் காமராசர் வீட்டுக்கு தீ வைக்க முயன்ற, பார்ப்பனக் கூட்டத்தின் செயலைக் கண்டித்து, ‘சீக்கியர்போல் கத்தி வைத்துக் கொள்ளுங்கள்! காமராசருக்குப் பாதுகாப்பு கொடுங்கள்!” என்று 14.11.1966இல் அறிவித்தார். 26.11.1966இல் காமராசர் கொலை முயற்சி கண்டன நாள் கொண்டாடக் கோரினார். ‘காமராசர் கொலை முயற்சி சரித்திரம்’ என்ற நூலை வெளியிடப் போவதாக அறிவித்தார். (பிறகு அந்த நூல் வெளியிடப்பட்டது)

1967

‘பொதுத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற தோல்வி, தனது தோல்வி’ என அறிக்கை விட்டார். அண்ணா, பார்ப்பனர் சூழ்ச்சிக்கு ஆட்படாமல், மார்ச் மாதம் பெரியாரைச் சந்தித்தார். பெரியார் ஆதரவு நல்கினார். தஞ்சை மாவட்டம் விடயபுரத்தில் 24.5.1967 முதல் சுயமரியாதைப் பயிற்சி வகுப்பு நடத்தினார். இவ்வகுப்பில் 24, 25.5.67 தேதிகளில் பெரியார் உரையாற்றினார். இப்பயிற்சி வகுப்பில் பெரியாரால் உருவாக்கப்பட்டதே ‘கடவுள் இல்லை; இல்லவே இல்லை…’ என்ற புகழ் பெற்ற கடவுள் மறுப்பு வாசகம். இந்த கடவுள் மறுப்பு வாசகத்தை ஒவ்வொரு கழக நிகழ்ச்சியிலும், தொடக்கத்தில் முழங்க வேண்டும் என்று 14.6.1967இல் ‘விடுதலை’யில் அறிக்கை விடுத்தார். திருச்சியில் 17.9.1967இல் தந்தை பெரியார் சிலையை காமராசர் திறந்தார். சட்ட அமைச்சர் எஸ்.மாதவன் 28.11.1967 காலை 11.30 மணிக்கு, சுயமரியாதை திருமண மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அது சட்டமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சிவசேனைக் கொடுமையை எதிர்த்து, மக்களைத் திரட்டி 1.10.1967இல் பெரிய ஊர்வலம் ஒன்றை நடத்தினார். பெரியார் அளித்த ஒரு இலட்சம் நன்கொடையுடன், திருச்சி தலைமை அரசினர் மருத்துவமனையில் கட்டப் பெற்ற ‘பெரியார் மணியம்மை’ குழந்தைகள் விடுதியை 19.12.1967இல் அண்ணா திறந்து வைத்தார்.

1968

சுயமரியாதைத் திருமணச் சட்டத்திற்கு 17.1.1968இல் குடியரசுத் தலைவர் அங்கீகாரம் அளித்தார். தமிழ்நாட்டுக்குப் பூரண சுதந்திரம் கோரி 14.4.1968இல் நாடெங்கும் ‘டில்லி ஆதிக்கக் கண்டன நாள்’ கொண்டாடச் செய்தார். 6.10.1968இல் கரூரில் ‘நகரும் குடில்’ எனத்தகும் புதிய வேன் ஒன்று அன்பாக அளிக்கப் பெற்றார். வடநாட்டுப் பயணம் துவக்கினார். 7.10.1968இல் சென்னையை விட்டுப் புறப்பட்டு 9.10.1968இல் செகந்திராபாத்தில் தங்கி, அங்கு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். 12, 13.10.1968 தேதிகளில் இலக்னோவில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாநாட்டில் உரையாற்றினார். அங்கு பேசும்போது, ‘சாதி ஒழிய வேண்டு மானால் டெல்லி ஆட்சியிலிருந்து நாட்டைப் பிரிக்க வேண்டும்’ என முழக்கமிட்டார். பின்னர் திரும்பும் வழியில் அய்தராபாத்தில் 2 நாள்கள் தங்கியிருந்து விட்டு 20.10.68இல் சென்னை திரும்பினார்.

1969

3.2.1969 நள்ளிரவு 12.12 மணிக்கு அண்ணா மறைந்தார். பெரியார் வருந்தி, “நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. இது 4 கோடி மக்களையும் பொருத்த பரிகாரம் காண முடியாத துக்க சம்பவமாகும்” என்று அறிக்கை விட்டார். உடல்நலம் பெரிதும் குன்றினார். 31.7.1969இல் வேலூர் மருத்துவமனையில் சிறுநீர்ப்பையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 29.7.1969 முதல் 19.8.1969 வரை வேலூர் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை செய்து கொண்டார். இன இழிவை நீக்க கோயில் கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி பற்றி 21.10.1969இல் மன்னார்குடி மாவட்டக் கமிட்டிக் கூட்டத்தில் அறிவித்தார். 16.11.1969இல் திருச்சி மத்தியக் கமிட்டியில் ‘26.1.70 கிளர்ச்சி நாள்’ என்று அறிவித்தார். தஞ்சை, தருமபுரியில் பெரியார் சிலைகள் திறக்கப்பட்டன.

1970

14.1.1970இல் ‘உண்மை’ இதழைத் துவக்கினார். அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி வேண்டுகோளுக்கு இணங்கி, குடந்தை மாநாட்டில் 18.1.1970இல் கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சியை ஒத்தி வைத்தார். 22.1.1970இல் சட்டநாதன் தலைமையிலான பிற்பட்டோர் குழுவினர் தந்தை பெரியாரைச் சந்தித்து அரிய ஆலோசனைகளைப் பெற்றனர். 27.6.1970இல் உலக நாடுகள் அவையைச் சேர்ந்த கல்வி, அறிவியல், பண்பாட்டுக் கழகத்தாரால் (UNESCO) சென்னை இராஜாஜி மண்டபத்தில் நடந்த விழாவில், தந்தை பெரியார் அவர்களுக்கு ‘விருது’ வழங்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சர் திரிகுணசென் தலைமையில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, இவ்விருதை வழங்கினார். யுனெஸ்கோ விருது வாசகமாவது: ((citation)

“Periyar, the Prophet of the New Age; the Socrates of South East Asia; Father of the social reform movement; and arch enemy of ignorance; Superstitions, meaningless customs and baseless manners” – UNESCO

சேலம், திண்டுக்கல்லில் தந்தை பெரியார் சிலைகள் திறக்கப் பட்டன.

1971

‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்னும் சட்டம் தி.மு.க. ஆட்சியில் 12.1.1971இல் சட்டமன்றத்தில் நிறைவேறியது. 23.1.1971இல் சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டைக் கூட்டினார். அங்கு இராமன் பொம்மை செருப்பாலும் விளக்குமாற்றாலும் அடிக்கப்பட்டது. மீண்டும் தேர்தலில் தி.மு.க. வென்றது. பெரியார் பாராட்டினார். தி.மு.க. ஆட்சி 19.6.1971இல் மதுவிலக்கை ஒழித்ததைப் பாராட்டினார். 15.7.1971இல் தஞ்சையில் திறந்தவெளிச் சிறைச் சாலையைப் பார்வையிட்டு கைதிகளிடையேயும், அன்று மாலை தஞ்சை மருத்துவக் கல்லூரியிலும் அறிவுரை பகன்றார். செப்டம்பர் 1ஆம் நாள் ‘மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ என்ற ஆங்கில இதழைத் துவக்கினார். ஈரோட்டில் தந்தை பெரியார் சிலை திறக்கப்பட்டது. சேலத்தில் 4.11.1971இல் வெள்ளிச் சிம்மாசனம் அளிக்கப் பெற்றார்.

1972

வேளாங்கண்ணியில் 10.3.1972 முதல் 15.3.1972 முடிய சுயமரியாதைப் பிரச்சாரப் பயிற்சி வகுப்பு நடத்தினார். 14, 15.3.1972 தேதிகளில் பயிற்சி வகுப்பில் அறிவுரை ஆற்றினார். தர்மபுரி மாவட்டம் தாதம்பட்டியில் 9.5.1972 முதல் 14.5.1972 வரை சுயமரியாதைப் பிரச்சார பயிற்சி வகுப்பு நடத்தியதுடன், அங்கேயே தங்கி அறிவுரை ஆற்றினார். ‘தமிழ்நாடு அர்ச்சகர் சட்டம் செல்லாது’ என்று சுப்ரீம் கோர்ட் 14.3.1972இல் தீர்ப்பு அளித்தது. மறுநாள் 15.3.1972இல் நாகையில் நடைபெற்ற கூட்டத்தில் போர்க்குரல் எழுப்பினார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்முன் கோயில் புறக்கணிப்புக் கிளர்ச்சி நடத்த முடிவு செய்தார். பின்னர் அதை தள்ளி வைத்தார். கடலூரில் 13.8.1972இல் பெரியார் சிலை திறக்கப்பட்டது. டில்லி அரசின் தாமிரப் பத்திர விருதை இந்திரா காந்தி வழங்க, அதனை அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி மூலம் 3.1.1972இல் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழக விலங்கியல் துறையின் தலைவர், அறிஞர் டாக்டர் ஜீ.சுந்தர்ராஜுலு அவர்கள் 1970இல் இத்தாலிக்கும், யுகோஸ்லாவியாவிற்கும் இடையே உள்ள, ஆட்ரியாட்டிக் கடலில் ‘அவர் லேடீஸ் அய்லண்டில்’ ‘கணுக்காலிகளின் மூதாதை’ என்று கருதப்படும் வளைய உடல் கொண்ட புழுக்களை புதிதாகக் கண்டுபிடித்தார். சமூகத்திற்கு பெரியார் அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற பணிக்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் இப்புதிய கண்டுபிடிப்புக்கு ‘லோபோ போடஸ் பெரியார்’ (LOBO PODUS PERIYAR) என்று பெயரிட்டார். இப்புழுவிற்கு இதுவே உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகளால் பயன்படுத்தப்படும் விலங்கியல் பெயராகும்.

1973

உச்சநீதிமன்றத்தில் பார்ப்பனர் தொடுத்த வழக்கால் ‘அர்ச்சகர்ச் சட்டத்’ தோல்வியானது, பெரியார் நெஞ்சில் முள்ளாகவே உறுத்திக் கொண்டிருந்தது. 17.9.1973இல் கடைசிப் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அறிவுரை யாற்றினார். 30.9.1973இல் மதுரையில் எழுச்சி மிக்க கருஞ்சட்டைப் படை மாநாடு நடத்தினார். 15.11.1973இல் ‘நமது அரசியல்வாதிகள் பெரிதும் மானமும் அறிவுமற்ற முண்டங்களே!’ என்று கடுமையாகச் சாடி ‘விடுதலை’யில் தலையங்கம் தீட்டினார். 19.11.1973இல் மதுரைப் பொதுக் கூட்டத்தில், சாதி வெறியர்கள் கலாட்டா செய்து, கலவரம் விளைவிக்க முயன்றனர். அதனைச் சிறிதும் பொருட்படுத்தாமல் 45 நிமிடம் பேசிவிட்டே மேடையை விட்டு இறங்கினார். 18.11.1973 முதல் 28.11.1973 வரை தமிழகமெங்கும் கடும் குளிரில் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 29.11.1973 அன்று நாடாளுமன்றத் தில், உள்துறை அமைச்சர் உமாசங்கர் தீட்சித், “பெரியார், தாம் விரைவில் இறந்து விடுவோம் என்று கருதுவதால், பிரிவினைக் கொள்கையைத் தீவிரப் படுத்துகின்றார்” என்றார். 2.12.1973 அன்று திருச்சியில், “உலகத்தில் பிறந்த மனிதன் என்றைக்காவது ஒரு நாள் சாகப் போகின்றான்; அவ்வுயிர் ஒரு நல்ல காரியத்துக்காக போகட்டுமே!” என்றார் பெரியார். 8, 9.12.1973 தேதிகளில் சென்னையில் “தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு” மாநாடுகள் நடத்தினார். அதில் 26.1.1974 அன்று கர்ப்பக்கிரக நுழைவு கிளர்ச்சி நடத்த முடிவு செய்தார்.

19.12.1973இல் சென்னை தியாகராய நகர் சிந்தனையாளர் மன்றம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், தனது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார். உடல்நலம் இன்றி 20.12.1973 பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 21.12.1973 பிற்பகல் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 23.12.1973 மாலை கவலைக்கிடமான நிலையை அடைந்து, இரவு 11 மணிக்குப் பிறகு நினைவு இழந்த பெரியார், 24.12.1973 காலை 7.40 மணிக்கு இயற்கை எய்தினார். உடல் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, 24.12.1973 பிற்பகல் 4 மணி முதல் 25.12.1973 பிற்பகல் 3 மணி வரை இராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டது. அன்று பிற்பகல் 3.10 மணிக்கு அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் புறப்பட்டு 4.45 மணிக்கு பெரியார் திடலை அடைந்தது. மாலை 5.05 மணிக்கு தந்தை  பெரியாரின் உடல், “நெஞ்சில் தைத்த முள் எடுக்கப்படாமலேயே” புதை குழியில் இறக்கப்பட்டது. அவர் எழுதி நிறுத்திய தன்மான வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தைத் தமிழகம் இன்னும் எழுதி கொண்டு இருக்கிறது.