காந்தி புத்தி

“முஸ்லீம்கள் மைனாரட்டியாய் இருந்தாலும் காங்கரசில் சேர்ந்து மெஜாரட்டியாகி காங்கரசைக் கைப்பற்றி தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளலாமல்லவா” என்று தோழர் காந்தியார் ஜனாப் சையத் பஷீர் அகம்மது கடிதத்துக்கு பதில் எழுதி இருக்கிறார்.

தோழர் காந்தியாருக்கு பகுத்தறிவு இருக்குமானால் அல்லது நேர்மையாய் எழுதும் குணத்தைக் கைக்கொண்டிருப்பாரானால் இப்படி எழுதி இருக்க மாட்டார்.

ஏனெனில், மைனாரட்டி சமூகமாய் இருக்கும் முஸ்லீம்கள் காங்கரசில் எப்படி மெஜாரிட்டியாகக் கூடும்?

ஏராளமாக முஸ்லீம்கள் காங்கரசில் சேர்ந்தால் மெஜாரிட்டி ஆகிவிடும் என்று சொல்லப்படுமானால் எல்லா இந்துக்களும் அந்த சமயத்தில் களைபிடுங்கவா போய் விடுவார்கள்? முஸ்லீம்கள் ஏராளமாய் காங்கரசில் சேர நினைக்கும்போதே இந்துக்கள் ஏராளமாக காங்கரசில் சேர எண்ணிவிட்டால் முஸ்லீம்கள் கதி என்ன ஆவது?

சட்டசபையில் இந்துக்கள் அதிகமாய் இருக்கும் காரணத்தினால் முஸ்லீம் மதத்துக்கு விரோதம் என்று சொல்லி காரணம் காட்ட எழுந்ததற்கே ஒரு முஸ்லீமின் கதி மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது. இத்தனைக்கும் முஸ்லீம் ஒருவர் மந்திரியாயும் மற்றொருவர் காரியதரிசியாயும் மற்றும் பல பேர் காங்கரஸ் கட்சி சட்டசபை மெம்பராகவும் இருக்கும் போதே – மார்க்கத்தைப் பற்றிய பிரச்சினையிலேயே – வெள்ளைக்காரனுக்கு இன்னமும் சட்டசபை நடவடிக்கைகளில் கொஞ்சம் அதிகாரம் இருக்கும்போதே இப்படி ஆகிவிடுமானால் பூரண சுதந்தரமுள்ள காங்கரசில் ஒரு பக்கம் ஜவஹர்லால், ஒரு பக்கம் காந்திஜி, ஒரு பக்கம் பாய்பரமானந்தர், ஒரு பக்கம் படேல், இவர்களுக்கு நடுவில் சென்னை சூழ்ச்சிப்பட்டர் ஆகியவர்கள் ஆதிக்கமாகிய சர்வாதிகார நாயகத்தில் ஏழை முஸ்லீம்கள் எவ்வளவு பேர்தான் காங்கரசிலிருந் தாலும் என்ன செய்ய முடியும்?

ஜனாப்கள் அப்துல் கலாம்களும் யாகூப் ஹாசன்களும் தாவுத் ஷாக்களும் உபயதுல்லாக்களுமே கழுத்தைப் பிடித்து கல்த்தாக்கொடுத்து தள்ளிவிடமாட்டார்களா?

காங்கரசில் ஒரு முஸ்லீம் வாயை திறக்க முடியுமா? முஸ்லீம்களே, இவைகள் காந்தியாருக்கு தெரியாமல் எழுதியிருப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் மாத்திரம் மடையர்களல்ல, காந்தியாரையும் முட்டாள் என்று நீங்கள் கருதிய குற்றத்துக்கும் ஆளாவீர்கள்.

ஊரார்கள் கண்ணில் மண்ணைப் போட அவர் இப்படி எழுதினாரே ஒழிய முஸ்லீம்களை ஏய்க்கக்கூட அல்ல.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 24.10.1937

You may also like...