முஸ்லீம் லீக்கும் முஸ்லீம்களும்

தலைவரவர்களே! தோழர்களே! இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதையும் இதில் பேச சந்தர்ப்பம் பெற்றதையும் உண்மையிலேயே ஒரு பெருமையாய் கருதுகிறேன்.

முஸ்லீம்லீக்கும் முஸ்லீம்களும் என்னும் விஷயமாய் பேசுவேன் என்று தலைவரவர்கள் சொன்னார்.

உங்களுக்குத் தெரியாத விஷயம் நான் ஒன்றும் சொல்லிவிடப் போவதில்லை. ஆனாலும் என் அபிப்பிராயத்தைச் சொல்ல ஆசைப்படுகிறேன்.

முஸ்லீம்லீக் என்பது முஸ்லீம் சமூக நன்மைக்கு மாத்திரம் ஏற்பட்டது என்று நான் கருதுவதில்லை. முஸ்லீம் லீக்கானது இந்திய மக்களில் அரசியல், கல்வி முதலிய துறைகளில் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் எல்லாவற்றினுடையவும் நன்மைக்கு ஏற்பட்டதென்றே நான் கருதுகிறேன்.

முஸ்லீம்களுக்குள் கொஞ்சமாவது கட்டுப்பாடும் ஒற்றுமையும் சுயமரியாதை உணர்ச்சியும் இருப்பதால்தான் முஸ்லீம்கள் லீக் என்கின்ற ஒரு ஸ்தாபனம் இதுவரை உயிருடன் இருந்து வருகிறது. மற்றபடி தென்னாட்டில் உள்ள பார்ப்பனரல்லாத சமூகம் போல் கட்டுப்பாடும் சமூக கவலையும் சுயமரியாதையும் இல்லாமல் சுயநலத்துக்கு எதுவும் செய்து எதிரியை தஞ்சமடைந்து வயிறு வளர்த்து காலம் கழித்து வரும் சமூகமாய் இருந்தால் முஸ்லீம்களின் கதி அதோ கதியாக ஆகியிருக்கும். உண்மையைச் சொல்லவேண்டுமானால் ஆதியில் காங்கரசு பெரிதும் முஸ்லீம்களுக்கு எதிராகவே ஆரம்பிக்கப் பட்டதாகும். இந்து மதம் என்றால் எப்படி முஸ்லீம்களுக்கு எதிரானது என்று சொல்லப்படுகிறதோ அதேபோல் காங்கரசும் என்பதை உணரவேண்டும்.

காங்கரசுக்குப் பிறகே இந்தியாவில் முஸ்லீம்களின் நிலைமை தாழ்வடைந்தது என்று சொல்லலாம். முஸ்லீம் தலைவர்கள் நல்ல சமயத்தில் காங்கரசின் இரகசியம் தெரிந்து தங்கள் சமூகத்துக்கு என்று உழைக்காதிருந் திருப்பார்களேயானால் – லீக்கை ஏற்படுத்தாமல் இருந்திருப்பார்களேயானால் இன்று முஸ்லீம்கள் இந்தியாவில் வெளிப்படையாய் தீண்டப்படாதவர்களாகவே ஆகி இருப்பார்கள். முஸ்லீம்களைப் பற்றி ஹிந்து மதம் கொண்டுள்ள அபிப்பிராயம் உங்களில் பலருக்கு இப்போது தெரியாது.

இந்தியாவில் இன்று முஸ்லீம்கள் தீண்டத்தக்க சமூகமாய் கருதப்படுவதற்கு முஸ்லீம்லீக்கே காரணமென்பதை நீங்கள் ஒவ்வொரு வரும் மனதில் இருத்த வேண்டும். முஸ்லிம்லீக்கு செய்த வேலையே இன்று ஜனாப்கள் யாகூப்ஹாசன் சேட்டும் தாவுத்ஷாவும் உபயதுல்லாவும் தேசபக்தர்களாக முடிந்தது. இல்லாவிட்டால் தேசபக்திக்கும் முஸ்லீம் களுக்கும் வெகுதூரமாய் இருந்திருக்கும்.

ஆனந்தமடம் என்கின்ற கதையை படித்துப் பார்த்தீர்களேயானால் இந்து முஸ்லீம் சம்மந்தமோ ஒற்றுமையோ எப்படிப்பட்டது என்பது விளங்கும்.

இந்து வேதம் என்பதில் எப்படி அதன் ஒவ்வொரு வாக்கியமும் பார்ப்பனரல்லாதார்களை அழிக்க, அவர்களை அடிமைகொள்ள பார்ப்பனர்கள் கடவுள் ஸ்தோத்திரம் பண்ணும் பொருள் கொண்டதாய் இருக்குமோ அதுபோல் தான் தேசபக்தி குறிப்பாக வங்காளம் பஞ்சாப் தேசியமும் வந்தேமாதரமும் அவற்றின் ஒவ்வொரு வாக்கியமும் முஸ்லீம் களை எப்படி ஒழிப்பது, எப்படி அடிமை கொள்ளுவது என்கின்ற கருத்தைக் கொண்டதாகவே இருக்கும். இது விஷயங்களை உங்கள் வடநாட்டு பத்திரிகைகள் தெள்ளத் தெளிய எடுத்துக்காட்டி விட்டன. வங்காளப் பிரிவினை கிளர்ச்சியின் ரகசியமென்ன என்பதையும் சுதேசி கலகம் என்பதையும் பற்றிய ஆரம்ப உண்மைகளை கவனித்தீர் களேயானால் நான் சொல்வதின் உண்மையை அறிவீர்கள். அரசாங்கத்தார் கூடுமானவரை உங்கள் விஷயத்தில் நல்லெண்ணமும் கவலையும் கொண்டே வந்திருக்கிறார்கள். காங்கரசின் சூழ்ச்சியின் போதெல்லாம் அரசாங்கத்தார் உங்களைக் கைவிடாமல் ஆதரித்து வந்திருக்கிறார்கள். இந்த சமயம் அதிலும் நம் தென்னாட்டில் அரசாங்கத்தார் கவலையற்று காங்கரஸ்காரர்களுக்கு அதிக இடம் கொடுத்து மற்ற சமூகத்தை அழுத்த இடம் கொடுப்பதாய் தெரியவருகிறது. அதற்குக் காரணம் முஸ்லீம்களில் இன்று தக்க தலைவர்கள் இல்லை என்பதுதான். வடநாட்டில் காங்கரஸ்காரர்கள் ஜபம் முஸ்லீம்களிடம் செல்லுவதில்லை. தோழர்கள் ஜவஹர்லால் முதல் சகல காங்கரசு தலைவர்களும் முஸ்லீம் லீக்கை ஒழிக்க வேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தும் அது கொஞ்சமும் பயன்படவில்லை. ஜனாப் ஜின்னா அவர்கள் மீது காங்கரஸ்காரர்களுக்கு வெகு ஆத்திரம் இருந்து வருகிறது. ஏனெனில் அவர் காங்கரஸ் எலும்பு துண்டுகளை திரும்பிக்கூட பார்ப்பதில்லை. காங்கிரசின் தேசீய மாயமானை ஜின்னா சிறிதும் மதிப்பதில்லை. அவர் உண்மையில் உத்தியோகத்துக்கு ஆசைப்பட்டிருந்தால் ஒரு கவர்னராகி இன்று ரிட்டையராகி இருப்பார். அல்லது மாதம் 5 ஆயிரம் 6 ஆயிரம் ரூபா சம்பள உத்தியோகம் பார்த்து கழித்திருப்பார். அப்படிப்பட்ட ஒரு சுயநலமற்ற பெரியாரை இன்று காங்கரஸ் கூலிப் பத்திரிகைகளும் சாக்கடை எச்சிலைப் பத்திரிகைகளும் காங்கரஸ் கூலிகளும் வெகு கேவலமாய் எழுதுகின்றன; பேசுகின்றன. இவர்கள் ஜின்னாவின் கால் தூசிக்கு கூட இணையாகமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். தென்னாட்டாருக்கு அரசியல் ஏ.பி.சி.டி. தெரியாததற்கு முன்னமே ஜின்னா அவர்கள் பம்பாயில் வில்லிங்டன் துரையை பஹிஷ்கரித்தவர். அந்நியர் ஆதிக்கத்துக்கு சிறிதுகூட இடம் கொடாதவர். ஆதலால்தான் இன்று காங்கரஸ் தலைவர்கள் ஜின்னாவைக் கண்டு இவ்வளவு பயப்படுகிறார்கள். அவர் லீக்குக்கு தலைவராயிருப்பது லீக்குக்கு பெரிய பாக்கியமாகும். இந்த சமயத்தில் தான் முஸ்லீம்கள் கண் விழித்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் முஸ்லீம்லீகுக்கு தக்க மதிப்பு இல்லை. இதற்குக் காரணம் இன்னும் அதிக தகுந்த தலைவர்கள் இல்லை என்பதுதான். சட்டசபை எலக்ஷனில் லீக்கு சரியானபடி வெற்றிபெறவில்லை. நம் தலைவர் ஜனாப் கே.ஏ. ஷேக்தாவுத் சாயபு லீக்கு பேரால் நின்று வெற்றி யடைந்ததினாலேயே அவர் வெற்றிக்கு லீக்குதான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. அவர் தனியாய் நின்றிருந்தாலும் லீக்குக்கு விரோதமாய் நின்று இருந்தாலும் கட்டாயம் வெற்றி பெற்றிருப்பார். அதாவது அவரது சொந்தப் பெருமையாலும் செல்வாக்காலும் முஸ்லீம் பொது ஜனங்களுக்கு அவரிடம் இருக்கும் மதிப்பினாலுமே வெற்றியடைந்தார்.

அடுத்தாற்போல் தேர்தல்கள் பல வரலாம். காங்கரஸ் மந்திரிகள் வெகு சீக்கிரத்தில் வெளியில் தள்ளப்படலாம். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. சர்க்கார் இவர்களை வெளியே தள்ளச் சமயம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அதற்குள் காங்கரசின் கேவல நிலை உலகம் அறிந்துவிட்டது. ஆகையால் பதவி மோகம் பிடித்து சமூகத்தை காட்டிக் கொடுத்து காங்கரசுக்கு அடிமைப்பட்ட முஸ்லீம்கள் மாத்திரமல்ல, இந்துக்கள் என்போர்களும் சீக்கிரத்தில் தங்கள் முட்டாள் தனத்துக்கு வருந்தி வெட்கத்துடன் வெளிவரப் போகிறார்கள் என்பதும் உறுதி. ஆகவே முஸ்லீம்கள் லீக்கை பலப்படுத்தி ஏராளமான மெம்பர்களைச் சேர்த்து தற்காப்புக்குத் தயாராயிருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

தமிழ் நாட்டில் உள்ள முஸ்லீம்கள் பார்ப்பனரல்லாதார் இயக்கத் தோடு சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.

பார்ப்பன ஆதிக்கத்துக்கு சூழ்ச்சி செய்யும் காங்கரஸ் தலைவர்கள் என்போர்களும் அவர்கள் கூலிகளும் இதை வகுப்புவாதம் என்று கூட கூறுவார்கள். இதற்கு யாரும் பயப்படக்கூடாது. இப்படித்தான் சில நாளைக்கு முன் நம்மைத் தொட்டால் பாவம் என்று சொன்னார்கள் இதே பார்ப்பன அயோக்கியர்கள். தக்கபடி அவர்களுக்கு புத்தி கற்பிக்கப் பட்ட பின்பு இப்போது நம்மை சகோதரர் என்று சொல்லி தழுவி வருகிறார்கள். இது அன்பாலல்ல, புத்தி கற்பித்ததால்தான். ஆகவே நாம் இரு சமூகமும் வகுப்புவாதம் என்கின்ற பூச்சாண்டிக்கு பயப்படாமல் ஒற்றுமையாய், உறுதியாய் நின்று காங்கரஸ் ஆபத்திலிருந்தும் பார்ப்பன சூழ்ச்சியிலிருந்தும் சமாளிக்க முயற்சிப்போமாக.

குறிப்பு: 22.10.1937 ஆம் நாள் ஈரோடு முஸ்லீம் லீக் கட்டடத்தில் நடைபெற்ற முஸ்லீம் லீக் ஆண்டு விழாவில் ஆற்றிய உரை.

குடி அரசு – சொற்பொழிவு – 24.10.1937

You may also like...