திருச்சியில் சுயமரியாதைக் கூட்டம் காங்கிரஸ் காலிகள் விஷமம் காலிகள் விஷமத்துக்கு போலீஸ் உடந்தை
தலைவர் அவர்களே! தோழர்களே!!
இக்கூட்டத்தில் காங்கிரஸ்காரர்கள் நடந்து கொள்ளும் காலித்தனத்தைப் பாருங்கள். காங்கரஸ் மந்திரிசபை ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில் நமக்கு பேச்சு சுதந்தரம் எப்படியிருக்கிறது. கலவரம் செய்வதும் காலித்தனம் செய்வதும் காங்கரஸ்காரர்கட்கு மட்டும் சொந்தமல்ல; காப்பி ரைட்டல்ல. கட்சி அபிப்பிராய பேதங்கட்காக ஒருவர் கூட்டத்தை ஒருவர் கலைத்து விடுவது, கலவரம் செய்வது என்றால் அது இந்நாட்டில் எக்கட்சியாரும் இனி பொதுக் கூட்டங்கள் அமைதியாக நடத்தமுடியாது. கலகத்திற்கு நாங்கள் பயப்படவில்லை. அடிதடிக்கும் நாங்கள் அஞ்சவில்லை. வீண் கூச்சல் போட்டு எங்களை மிரட்டிவிட எண்ணுவது அறியாமையாகும். இந்தக் கூலிகளின் – காலிகளின் கூப்பாட்டுக்குப் பயந்தால் நாங்கள் எங்கள் வேலைகளை எப்படி செய்ய முடியும்? பார்ப்பன ஆதிக்கத்தையும் காங்கரஸ் பித்தலாட்டங்களையும் எப்பாடு பட்டாவது ஒழிக்கவேண்டு மென்பதுதான் எங்கள் வேலையாகும். இதற்காக எங்கள் உயிரையும் கொடுப்போம். இதற்காக எத்தனை கலவரங்கள், கூச்சல்கள், எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் நாங்கள் வரவேற்கத் தயாராக யிருக்கின்றோம். பொது மக்கள் காங்கரஸ்காரர்கள் காலித்தனங்களையும், அட்டூழியங்களையும் இன்று இங்கு தெரிந்துகொள்ளும்படி நேர்ந்ததற்காக நான் சந்தோஷப்படுகிறேன்.
~subhead
போலீசார் அலôயம்
~shend
இங்கு வந்திருக்கும் போலீஸார் காலிகளின் கூச்சல்களை அடக்காமல் அலட்சியமாயிருக்கிறார்கள். போலீஸ் நிர்வாகம் காங்கரஸ் மந்திரிகள் கையிலிருப்பதினால் காங்கரஸ்காலிகளின் அட்டூழியங்கட்கும் கலவரங் கட்கும் சலுகை காட்டுவதாகத் தெரிகிறது. பொதுஜன வரிப்பணத்திலிருந்து சம்பளம் பெறும் போலீஸ் அதிகாரிகள் போலீஸ் பார்ப்பன உத்தியோகஸ்தர்கள் பொதுக்கூட்டங்களில் ஒரு கட்சியார் கலகம் செய்யும் பொழுது கலகத்தைத் தூண்டிவிட்டுக்கொண்டு அலட்சியமாய் இருப்பது ஒரு நாளைக்கு போலீஸ் இலாகாவுக்கே கேடு பயக்கும்.
~subhead
தோழர்களே!
~shend
நாங்கள் வகுப்புவாதிகள்தான். இந்த நாட்டில் பார்ப்பான் உயர்வு, பறையன் தாழ்வு என்ற பல பிளவுகள் உள்ள வரை உயர் சாதிக்காரர்கள் மட்டும் எல்லாத் துறைகளில் ஆதிக்கம் செலுத்துவதை ஒழிக்க நாங்கள் பாடுபடுகிறோம். பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்கு காங்கரஸ் பயன்படும் வரை நாங்கள் காங்கரஸை எதிர்ப்போம். மந்திரி சபை அக்ரகாரமயமாகப் போய்விட்டது. ஹிந்தி படிக்க வேண்டுமென்றும் அதனால்தான் ஆரிய நாகரிகம் வளரும் என்றும் பார்ப்பன மந்திரிகள் துணிவாகக் கூறுகிறார்கள். நம்மவர்கள் மதத்தின் பெயராலும் சமூகத்தின் பெயராலும் அடிமைப் படுத்தப் பட்டதைப்போன்றே அரசியல் பெயராலும் நம்மவர்கள் அடிமைப்படுத்தப் பட்டும் ஏமாற்றப்பட்டும் வருகிறார்கள். காங்கரஸ் திட்டங்களால் கிளர்ச்சிகளால் மக்கள் என்ன பயன் அடைந்தார்கள்? காங்கரஸ் மந்தி ரிகள் சம்பளம் குறைவா? காங்கரஸ் கட்சியார் பலவித திட்டங்களும் என்ன கதியாயிற்று? சர்க்கார் காங்கரஸ்காரர்கட்கு பணிந்தார்களா? காங்கரஸ்காரர்கள் சர்க்காரிடம் சரணாகதியடைந்தார்களா?
~subhead
காங்கரஸ் பார்ப்பனர் பித்தலாட்டம்
~shend
புதிய சீர்திருத்தம் உடைந்ததா? ஏகாதிபத்தியம் ஒழிந்ததா? ஏழைகள் வரிச்சுமை நீங்கிற்றா? பசிக்கொடுமை, வேலையில்லாத் திண்டாட்டம் நீங்கி விட்டதா? காங்கரஸ் ராமராஜ்யத்தில் பார்ப்பான் மண் வெட்டி வயல் வேலை செய்து பிழைப்பானா? வர்ணாச்சிரமம் பேசி சோம்பேறியாகயிருந்து ஊரை ஏமாற்றி உயிர் வாழ்வானா? பொதுமக்கள் இவைகளை நன்றாக உணர்ந்தால் காங்கரஸ் பார்ப்பனர்களின் பித்தலாட்டங்களும், பொய்ப் புரட்டுகளும், பார்ப்பன ஆதிக்கத்திற்குப் பாடுபடும் சூழ்ச்சிகளும் நன்றாகத் தெரியவரும். இந்நாட்டில் பார்ப்பன ஆதிக்கம், காங்கரஸ் புரட்டு காங்கரஸ் அக்ரஹார மந்திரிசபை யாவும் விரைவில் வீழ்ச்சியடையத்தான் போகின்றது. மீண்டும் ஜஸ்டிஸ் கட்சியாரிடம் ஆதிக்கம்வரத்தான் போகிறது. நீங்கள் நம்புங்கள். அக்ரகார மந்திரி சபை ஒழியவும், காங்கரஸ் பார்ப்பன ஆதிக்கம் வெட்டிப் புதைபடவும், நீங்கள் எங்களுடன் ஒத்துழைக்கும்படி வேண்டுகிறேன்.
குறிப்பு: 28.08.1937 இல் திருச்சி டவுன்ஹால் முன்பாக திருச்சி மாவட்ட சுயமரியாதைச் சங்கம், நகர சுயமரியாதைச் சங்கம் ஆகியவைகளின் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு – சொற்பொழிவு – 05.09.1937