சமஷ்டி (அல்லது) பிடரேஷன்
மாகாண அரசியலுக்கு என்று புதிய சீர்திருத்தச் சட்டம் ஏற்பட்டது போலவே இந்தியாவொட்டுக்கும் சேர்ந்த பொது நிர்வாக விஷயங்கள் சில என்று பிரித்து அவைகளுக்காக சமஷ்டி என்று சொல்லப்படும் பிடரல் கவர்ன்மெண்டுக்கு அரசியல் சீர்திருத்தச் சட்டம் ஒன்று சீக்கிரத்தில் வெளியாகப் போகிறது என்பது உறுதி அந்த பிடரல் கவர்ன்மெண்ட் சீர்திருத்த சட்டத்தை இந்தியாவின் நாணையமான அரசியல்வாதிகள் ஆக்ஷேபிப் பதில்லை. ஏதோ சில திருத்தங்கள் மாத்திரம் சொல்வதாகத் தெரிகிறது.
ஆனால் நமது பித்தலாட்ட அரசியல்வாதிகளான காங்கரஸ்காரர்கள் இருக்கிறார்களே அவர்கள் மாத்திரம் தங்கள் வழக்கப்படி “சமஷ்டியை நசுக்கி அழித்து ஒழித்து விடுவோம்” என்று கூப்பாடு போடுகிறார்கள். ஏனென்றால் காங்கரஸ்காரர்களுக்கும் நாணையத்துக்கும் யோக்கியப் பொறுப்புக்கும் வெகு தூரமல்லவா? ஏனெனில் அவர்கள் அறிவாளிகளைப் பார்த்தோ அறிவாளிகளை மனதில் வைத்தோ பேசுகிறவர்கள் அல்ல. மந்திரத்தினால் புதையல் எடுத்துக் கொடுக்கிறவனைப் போல் முட்டாள் ஜனங்களையும் மடையர்களையும் எப்படி ஏய்க்கலாம் என்பதிலும் காசு கொடுத்து காலிகளை நியமித்து எப்படி அறிவற்ற ஜனங்களை ஏமாற்றலாம் என்பதையுமே கருத்தாய் கொண்டவர்களானதால் இவர்கள் அறிவாளிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை.
அவர்களுக்கு ஏற்றாற்போல் இந்த நாட்டில் 100க்கு 92 பேர்கள் தற்குறிகள், தற்குறிகள் பெரும்பாலும் மடையர்களாயிருப்பதில் ஆச்சரிய மென்ன? அவர்கள் தவிர படித்தவர்கள் என்கின்ற 100க்கு 8 பேர்களிலும் 100க்கு 3 பேர்களாய் உள்ள பார்ப்பனர்கள் 100க்கு 100 பேர் படித்தவர்கள். ஆகவே மீதி நம்மவர்களில் படித்தவர்கள் 100க்கு 5 பேர்கள் தான் உண்டு. இதில் கூலிக்கும் சுயநலத்துக்குமாக பகுதிப் பேர் பார்ப்பனர்களுக்கு சிஷ்யர் களாய் விடுகிறார்கள். ஆகவே மீதி உள்ள ஒரு சிலருக்கு பயந்து கொண்டு காங்கரஸ்காரர்கள் (பார்ப்பனர்கள்) யோக்கியமாய் நடக்கவேண்டுமென்று எப்படி ஆசைப்பட முடியும்?
ஆதலால் காங்கரஸ்காரர்கள் எவ்வளவு பொய்யையும் சொல்ல இடமிருக்கிறது. அதனால் அவர்கள் சமஷ்டியை பகிஷ்கரிப்பதாக இன்று வாயில் சொல்லலாம். அரசியல் சட்டம் வெளியான உடன் அதை உடைப் பதாகச் சொல்லி ஓட்டுக் கேட்கலாம். முட்டாள்களின் ஓட்டுகளைப் பெரு வாரியாகப் பெற்றவுடன் “சமஷ்டியை உடைத்து நொறுக்கி இந்து சமுத்திரத்தில் கொட்டுவதற்காக சமஷ்டியை ஏற்று நடத்தப் போகிறோம்” என்று சொல்லிக் கொண்டு அவசர அவசரமாக உச்சிக் குடுமியைத் தட்டி முடிந்து கொண்டு பஞ்சகச்சம் இறுக்கிக்கட்டிக் கொண்டு போர்வையைப் போர்த்துக் கொண்டு நம்மவர்களில் விசுவாசப் பிராணிகளைப் போன்ற 10 பேரை கூட அழைத்துக்கொண்டு கோட்டைக்குள் புகுந்து ராஜ விசுவாசப் பிரமாணம் செய்துவிட்டு பங்கா அடியில் உட்கார்ந்து பேனாவைக் கையிலெடுத்து பார்ப்பானுக்கு உத்யோகம் போட டில்லியில் ஒரு பெரிய சமஸ்கிருத வேத புராண பாடசாலை வைத்து கட்டாயப் பரீøை நடத்தினால் தட்டிக்கேட்கிறவர்கள் யார் என்றுதான் கேட்கின்றோம். யாராவது சட்ட சபை மெம்பர் மூச்சு விட்டால் 75 ரூ. சம்பளத்தை 150 ரூ. ஆக்கி விட்டால் என்னமோ செய்தது போல் கைதூக்கி விடுவார்கள் என்கின்ற தைரியம் சமஷ்டியை “உடைத்து நொறுக்குகிறவர்களுக்கு” உண்டு என்பது நமக்குத் தெரியும்.
ஏகாதிபத்தியத்தை ஒழிக்கும் ராஷ்டிரபதியே போடு தோப்புக் காரணம் என்றால் எண்ணிக்கொள் என்கிறார். (ஏன் அப்படி இல்லாமலா ராஜவிசுவாசப் பிரமாணம் செய்ய மெம்பர்களுக்கு உத்திரவு கொடுத்திருப்பார்)
ஆகவே அடுத்த தேர்தல் வருவதற்குள் காங்கரஸ்காரருக்கு சமஷ்டி ஒழிக்கும் பிரச்சினையே தேர்தல் பிரச்சினையாக வரப்போகிறது என்பது நமதபிப்பிராயம்.
எப்படி இருந்தாலும் பிரிட்டிஷ் சர்க்காரின் யோக்கியதை இந்த கொஞ்ச கால காங்கரஸ் ஆட்சிக்குள் உலகமே சிரிக்கும்படி ஆகிவிட்டதால் தாங்களாகவே யாதொரு காரணமும் சொல்லாமல் காங்கரஸ்காரர்களுக்குந்தான் கொடுத்து தள்ளப்போகிறார்கள். அதன் மூலம் தான் நாட்டுக்கு விமோசன மேற்படலாம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 10.10.1937