எது பொய்?

“நவசக்தி”க்கு மானம் போகிறதாம்

நவம்பர் 5ந் தேதி “நவசக்தி” பத்திரிகை “மானம் போகிறதே” என்று தலைப்புக் கொடுத்து ஒரு உப தலையங்கம் எழுதி இருக்கிறது. அதில் “இந்து” பத்திரிகையில் அர்கோவிந்து என்பவர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை எடுத்துப் போட்டு அழுகின்றது.

அந்தக் கட்டுரைப் பகுதியில் கிறிஸ்தவப் பாதிரியான லாண்டே என்பவர் தென் இந்தியாவுக்கு வந்துபோன பிறகு “பரிசுத்த இந்தியா” என்ற பெயர் கொடுத்து ஒரு புத்தகம் எழுதி இருப்பதாயும் பின்னர் அப்புத்தக விஷயங்கள் சினிமாப்படமாக எடுக்கப்பட்டு அப்படம் இன்று ஐரோப்பாவில் பிரான்ஸ் முதலிய இடங்களில் காட்டப்படுவதாகவும் இனி அது அமெரிக்காவுக்கும் போகுமென்றும் எழுதப்பட்டிருக்கிறதாம்.

அப்புத்தகத்தில் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் விஷயம். “இந்தியாவில் வகுப்புவாத பூசல் தாண்டவமாடுகிறது. இந்தியர்களில் ஆதிதிராவிடர் என்கின்ற வகுப்பார் மிருகங்களிலும் கேவலமாக மதிக்கப் படுகிறார்கள். ஒரு பக்கிரி (பிச்சைக்காரன்) அரை நிர்வாணத்தோடு தெருவில் விழுந்து புரளுகிறான். மற்றொருவன் உடம்பெல்லாம் அலகு குத்திக்கொண்டு காவடி எடுத்து ஆடுகிறான்.

ஒரு இளம் பெண் காஷ்டத்தில் கிடத்தப்பட்டு இருக்கிறாள். பக்கத்தில் எருமுட்டைகளும் விறகும் கிடக்கின்றன. அதன் அருகில் காகம் கழுகு வட்டமிட்டுத் திரிகின்றன”. கும்பகோணம் மகாமகக் காட்சி. இது 144 வருடங்களுக்கு ஒரு முறை நடப்பதாகவும் அது சமயம் இந்துக்கள் தங்கள் பாவம் தொலைவதற்கு ஆக சேற்றுக்குட்டையில் மூழ்குகின்றதாகவும் இருக்கின்றன. இதையும் இது போன்றவைகளையும் சினிமா படத்தில் காட்டுகிறார்களாம். இதற்காக நவசக்திக்கு மானம் போகிறதாம். இதில் எது பொய் என்று நாம் கேட்கின்றோம். இந்தியாவில் வகுப்பு பூசல்கள் என்று நவசக்தி தலைப்புக் கொடுத்து வண்டி வண்டியாய் எழுதிவரவில்லையா? சரணாகதி மந்திரி ஆட்சியில் இன்று எங்கும் நடப்பதென்ன? “இந்தியத் தாயின் அருந்தவப் புதல்வர் களை விலங்கினும் கடையராய் மதிப்பது கொடியது கொடியது” என்று நவசக்தியிலே பல்லாயிரம் தடவை எழுதி வரவில்லையா? அலகு குத்தி காவடி எடுத்தாடக் கூடாதென்று தென் இந்தியாவில் அரசாங்கத்தார் 144 போட்டுத் தடுக்கவில்லையா? தடுத்தும் இனியும் அலகு “பிரார்த்தனை” நடைபெற்று வரவில்லையா?

பெண்ணானாலும் ஆணானாலும் இறந்து போனால் இந்தியாவில் காஷ்டத்தில் வைப்பதில்லையா? கழுகு பருந்து வட்டமிடுவதில்லையா? உயிருடனும் கொளுத்தப்பட்டதாக ருஜúவில்லையா? அடிக்கடி “உடன்கட்டை” “உடன்கட்டை” என்று இந்திய பத்திரிகைகளில் சேதி வருவதில்லையா? கும்பகோணம் மாமாங்க விஷயமாய் நவசக்தி ஆசிரியரே புராணப்பிரசங்கம் செய்ததில்லையா? மாமாங்க குளத்தில் மக்கள் குளிப்பதில்லையா? அது வடிகட்டின தண்ணீரா?

முனிசிபல் அதிகாரிகள் அக்குளத்தில் தண்ணீர் பூராவையும் இறைத்துவிட்டு சேற்றில் குளித்துத் தொலையுங்கள் என்று விட்டு விடுவதில்லையா? இதனால் பார்ப்பானும் ரயிலானும் பிழைப்பதைத் தவிர அழுக்கும் சேற்று நாற்றமும் பெருகுவதைத் தவிர அக்குளத்தில் குளிப்பதால் உண்மையில் மக்கள் பரிசுத்தப்படுகிறார்களா? என்று “நவசக்தி”யைக் கடாவுகிறோம்.

“நவசக்தி”க்கு உண்மையில் மானம் போவதாயிருந்தால் இதை மாற்றிக்கொள்ளும்படி இந்திய மக்களுக்கு படும்படி எழுதவேண்டும். மானம் போகும்படி எழுதப்பட்டு இருக்கும் புராணங்களையும் சாஸ்திரங் களையும் தீ இட்டுக் கொளுத்த வேண்டும். அதைவிட்டு விட்டு இதை “ஒரு பொய்ப்பிரசாரம்” என்றும் “இந்தியாவின் உயர்ந்த கலையையும், நாகரீகத்தையும் பாதிரிகள் பார்க்காமல் சாக்கடைகளை மாத்திரம் பார்க்கிறார்கள்” என்றும் மேல் நாட்டில் “நாற்பது வயதில் ஒரு பெண் நாற்பது கணவர்களை மணந்துவிட்டு பின்னும் தன்னை ஒரு கன்னி என்று சொல்லிக்கொள்வது இந்தியாவில் வழக்கமில்லை” என்றும் எழுதி மேல் நாட்டுப் பெண்கள் வழக்கங்களை இழித்துக் கூறி இருக்கிறார்.

இது “நவசக்தி” உண்மை உணர்வோடு எழுதிற்றா? அல்லது பார்ப்பனப் பிரசார உள்ளத்தோடு எழுதிற்றா? என்று சந்தேகப்பட வேண்டியிருக் கிறது. இந்தியாவின் கலையும் நாகரீகமும் என்ன என்று இப்போது நாம் நவசக்தியைக் கேட்கிறோம். கந்தப் புராணமா? பெரியபுராணமா? திருவிளையாடல் புராணமா? பக்த விஜயமா? பாகவதமா? ராமாயணமா? பாரதமா? எது இந்தியாவின் கலை? அல்லது மனுதர்மமா? பராசர ஸ்மிருதியா? இவற்றுள் இல்லாத ஆபாசம் காட்டு மிறாண்டித்தனம், கூடாஒழுக்கம், சிற்றின நடப்பு, அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு, விபசாரம், குடி, சூது, வஞ்சகம், சுயநலம் முதலியவை வேறு எதிலாவது காணமுடியுமா? பைபீளையும் குர்ஆனையும் ஓர் கையில் வைத்துக் கொண்டு இந்து சாஸ்திரங்களையும் சைவ வைணவ வேதங்களானவை களையும் ஒரு கையில் வைத்துக்கொண்டு “நவசக்தி” நாணயக் கண்ணுடன் பார்க்கட்டும். அப்போது எதில் சாக்கடை எதில் உயர்கலை இருக்கிறது என்பதை உணரக்கூடும் என்று சொல்லுகிறோம்.

முதலாவது இந்தியர்களுக்கு ஒரு யோக்கியமான ஒழுக்கமான “கடவுள்” உண்டா என்று “நவசக்தி” தேடிப்பார்க்கட்டும். கடவுள், இந்தியர்கள் தங்கள் கடவுளை கற்பித்துக்கொண்டு இருக்கும் தன்மை ஆகியவையே இந்தியாவில் கலை, நாகரீகம், ஒழுக்கம் ஆகியவைகளுக்கு பிரதிபிம்பம் என்று சொல்லலாம்.

இந்தியர்க்கு கடவுள்களில் விபசாரம், இடி, கொலை, கொள்ளை, வஞ்சகம், குரோதம், மூர்க்கம் முதலிய “அரும்” குணங்களை அணியாகக் கொண்ட கடவுள்கள் எத்தனை என்று கேட்கிறோம்.

இந்தியாவின் நாகரீகம்தான் என்ன என்று “நவசக்தி” சொல்லட்டுமே பார்க்கலாம்.

இந்தியாவின் நாகரீகத்துக்கு இந்தியாவின் பழைய கோபுரங் களையும் சித்திரங்களையும் பார்க்கட்டும்.

உண்மையைச் சொல்லுகிறோம். ஒரு கழுதை ஒரு பெண்ணுடன் கலவி செய்வதாக கோபுரங்களிலும் தேர்களிலும் சித்திரிக்கப்படுகின்றன.

இன்று முழு நிர்வாண உருவமும் கலவிக் காட்சியும் நம் புண்ணிய க்ஷேத்திரங்களில் புகழ்பெற்ற “சன்னிதானங்களில்” பரக்கக்காணலாம். இந்தியர்களின் அன்பு என்னும் நாகரிகத்துக்கு எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும் வில்லு, அம்பு, வேல், கத்தி, கோடாலி, மழு, கதாயுதம், சக்கிராயுதம் முதலியவைகளையே கையில் சதா வைத்துக் கொண்டிருக் கின்றன. பழைய நாகரிகத்தைப் புதுப்பிக்கும் இன்றைய காங்கரஸ் ஆட்சியும் இந்திய “தலைவரும்” கொண்டுள்ள நாகரிகம்தான் என்ன?

காந்தியாரே அரை நிர்வாணத்துடன் பெண்கள் முன்நிற்கிறார். மற்றவர்களுக்கும் மேல் வேஷ்டி கூட அவசியமில்லை என்கின்ற உணர்ச்சி பெருக்குகிறார். முரட்டுத்துணியை அணியச் சொல்லுகிறார். ராட்டினம் சுற்றச் சொல்லுகிறார். நெல்லுக் குத்தச் சொல்லுகிறார். காங்கிரசோ அவரவர் இஷ்டம் போல் உடுத்திக்கொள்ளச் சொல்லுகிறது. மாட்டு வண்டியும் பனை ஓலையும் பிரமாத நாகரிகமாய் கருதப்படுகிறது. இந்தப் பிரமாதத்தில் அஹிம்சையும் ஜீவகாருண்யமும் பறந்தோடி விட்டது. இந்த லட்சணத்தில் நவசக்தி மேல் நாட்டை பரிகசிக்கிறது. 40 வயதில் 40 பேரை மணந்துவிட்டு தன்னை கன்னி என்று சொல்லிக் கொள்ளுகிறாளாம்.

துரெளபதை எத்தனை பேரை ஏககாலத்தில் கணவர்களாய் கொண்டு மணந்துவிட்டு சிறப்புள்ள ஸ்திரீகள் வரிசையில் வந்தாள். அதுதான் போகட்டும் இன்று பிரக்தியட்சத்தில் 30 வயதில் 3000 பேரை காசுக்காகவே கலந்த பெண்ணை தேவதாசியாய் தெய்வ கன்னிகையாய் இருத்தி கன்னி என்று கூட இந்தியாவில் அழைப்பதில்லையா என்று நவசக்தியை கேட்கிறோம். ஒரு பெண் 40 பேரை மணந்து கொண்டதால் அது பெரிய அனாகரீகமாய் விடுமா? அல்லது விபசாரமாகி விடுமா என்று கேட்கிறோம்.

எனவே நவசக்திக்கு மானம் போவது உண்மையாய் இருக்குமானால், உண்மை குறைகூறுவர்களுக்கு உற்றதுணையாய் இருந்து மானம் போவதற்குக் காரணமாய் இருக்கும் ஊழல்கள் எதுவானாலும் அதை அழிக்க முன்வர வேண்டுமே ஒழிய ஊழல்களை மறைத்து வைக்க முயற்சிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். மறைத்து வைத்த ஊழல்கள் நாற்றமெடுத்து நோய் உண்டாக்க காரணபூதமாகி விடும்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 07.11.1937

You may also like...