காங்கரசும் – அரசியலும்

தோழர்களே! நான் இது வரை சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன? அது ஏன் ஆரம்பிக்கப்பட்டது? மதம் கடவுள் சமூகம் சம்பந்தமாக அதன் கருத்து என்ன? என்பது பற்றியும் அதைப்பற்றி எதிரிகள் செய்யும் விஷமப்பிரசாரத்துக்கு சமாதானமும் சொன்னேன். இனி காங்கரசின் அரசியல் தன்மையைப்பற்றி சிறிது பேசுகிறேன்.

காங்கரசின் அரசியல் கொள்கைப்படி சுயமரியாதைக்காரர்கள் தேசத் துரோகிகள் என்றும் தேசத்தை அந்நியருக்குக் காட்டிக் கொடுக்கும் நபர்கள் என்றும் மற்றும் பலவாறாக காங்கரஸ் கூலிகளும், காலிகளும் கூப்பாடு போடுகிறார்கள். ஆதலால் அவர்கள் வண்டவாளம் வெளிப்படுத்த வேண்டியதாகிறது.

காங்கரஸ் வண்டவாளம்

ஆனால் சில காங்கரஸ்காரர்கள் என்பவர்கள் சுயமரியாதைக்காரர்கள் சொல்வதெல்லாம் சரிதான்; ஆனால் சுயராஜ்யம் பெற்ற பிறகே சுயமரியாதை அடைய முடியும் என்கிறார்கள். சுயமரியாதைக்காரர்கள் காங்கரசைப்பற்றி சொல்லுவது என்னவென்றால் அது ஒரு பார்ப்பன ஆதிக்க ஸ்தாபனம் என்றும் சமுதாயத்துறையில் மதிப்பும் செல்வாக்கும் இழந்த பார்ப்பனர்கள் அரசியல் வேஷம் போட்டு பாமர மக்களை ஏய்க்க ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனம் என்றும், அதனால் மக்களுக்கு பல கெடுதிகள் ஏற்பட்டதல்லாமல் யாதொரு நன்மையும் ஏற்பட்டதில்லை என்றும், நாட்டுக்கோ மனித சமூகத்துக்கோ ஏதாவது நன்மை ஏற்பட வேண்டுமானால் இந்த பார்ப்பன ஆதிக்க சபை ஒழிய வேண்டும் என்றும் சுயமரியாதை இயக்கம் சொல்லுகிறது. காங்கரஸ்காரருக்குத் தேசம் என்பது பார்ப்பன சமூகமேயாகும். சுயராஜ்யம் என்பது பார்ப்பன ஆதிக்கம் ஏற்படுத்துவதேயாகும். இதைத் தவிர காங்கரசுக்கும் சுயராஜ்யத்துக்கும் வேறு கருத்து கிடையாது. இதை நான் அனுபவத்தின் மீதே கூறுகிறேன்.

பார்ப்பனரல்லாதாருக்கு காங்கரசில் மதிப்புண்டா?

உதாரணமாக இன்று காங்கரசில் பார்ப்பனர்கள் அல்லாமல் வேறு யாராவது உண்மையான தலைவர்களாகவும், அதிகாரக்காரர்களாகவும் இருக்கிறார்களா என்பதைப்பற்றி சற்று நடுநிலையில் இருந்து சிந்தித்துப்பாருங்கள். தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி ஆகியவர்களே இந்த பத்து வருஷகாலமாக காங்கரஸ் ஸ்தாபனத் தலைவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள்.

பார்ப்பனரல்லாதார் இப்பார்ப்பனர்களது தலைமை பதவிக்கு ஆசி கூறிக்கொண்டும் அடிமைத்துவ பாட்டு பாடிக்கொண்டும் இருந்து சிலர் வயிறு வளர்க்கிறார்கள். சிலர் அவர்கள் கொடுக்கும் ஏதாவது பதவி எலும்பைக் கவ்விக்கடித்து சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதல்லாமல் சுதந்தரத்தோடு சொந்த புத்தியோடு தன் அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்லி வலியுறுத்தத் தக்க மனிதத்தன்மையுடன் பார்ப்பனரல்லாதார்களில் யாராவது காங்கரசில் இருக்கிறார்களா? என்று யோசித்துப் பாருங்கள்.

முத்துரங்கம் நிலைமை

தோழர் முத்துரங்க முதலியார் காங்கரஸ்கமிட்டி தலைவரல்லவா என்று கேட்கலாம். ஆம், அவர் காங்கரஸ் கமிட்டித் தலைவர்தான். ஆனால் அவருக்கு உள்ள அதிகாரமும் அந்தஸ்தும் என்ன என்று பாருங்கள். மந்திரிகளில், கனம் தோழர் ராமநாதனுக்கு எப்படி விளம்பர மந்திரி பதவியோ அப்படி காங்கரஸ் தலைவர்களில் தோழர் முத்துரங்க முதலியார் விளம்பர தலைவர் பதவி தான் வகிக்கிறார். அதாவது பார்ப்பனத் தலைவர்கள் செய்யும் காரியத்தை – போடும் உத்திரவை விளம்பரம் செய்பவர். காங்கரஸ் பார்ப்பனர்கள் செய்யும் அக்கிரமமான காரியங்களுக்கும் சூழ்ச்சியான காரியங்களுக்கும் பொறுப்பு ஏற்றுக்கொண்டு அவர்கள் மீது “கல்”விழாமல் தடுக்கும் கவசங்களாக இருப்பவர். இவையல்லாமல் மற்றபடி தோழர் முத்துரங்க முதலியார் அவர்கள் இந்த 10 15 வருஷ காலமாக தன் சுதாவாக எடுத்துச் சொன்ன காரியமோ செய்த காரியமோ கொண்டு வந்த தீர்மானமோ அல்லது பார்ப்பனத் தலைவர்கள் அபிப்பிராயங்களை தட்டிச்சொன்ன காரியமோ ஏதாவது ஒன்றை எடுத்துக்காட்டுங்கள். தோழர் எஸ். ÿ நிவாசய்யங்கார் காங்கரஸ் தலைவராயிருக்கும்வரை அவருக்கு பிரதம சிஷ்யராய் இருந்தார். அவர் மாறி கனம் ராஜகோபாலாச்சாரியார் தலைவராக வந்தது முதல் அவருக்கு ஆஞ்சநேயராக இருந்து வருகிறார். இனி யாரைப்பற்றி சொல்லப் போகிறீர்கள்? தோழர்கள் உபயதுல்லா, குப்புசாமி, அண்ணாமலை, சுப்பையா கம்பெனியைப் பற்றி சொல்லுகிறீர்களா? அல்லது வேறு தோழர்கள் தேவர், ராமலிங்கஞ் செட்டியார், நாடிமுத்துப் பிள்ளை, டாக்டர் சுப்பராயன், வெள்ளியங்கிரி கவுண்டர் போன்றவர்களைப் பற்றி சொல்லுகிறீர்களா? இவர்களின் சொந்த யோக்கியதை எவ்வளவு பெரிதாயிருந்தாலும் காங்கரசில் இவர்களுக்கு உள்ள மதிப்பும், செல்வாக்கும் யாருக்குத் தெரியாது? அரசியல் உலகில் இவர்களை யார் சட்டை செய்கிறார்கள்.

என் அநுபவம்

இவர்கள் சொந்தப் புத்தியை நம்மை வைவதற்கும் ஜஸ்டிஸ் கட்சியை வைவதற்கும் உபயோகப்படுத்துவதல்லாமல் பார்ப்பனரிடமோ காங்கரசினிடமோ உள்ள அபிப்பிராய பேதத்தை தெரிவிப்பதற்கு உபயோகப்படுத்தா விட்டாலும் அது விஷயத்தில் சொந்தப்புத்தி இருப்பதாகவாவது எப்போதாவது காட்டிக் கொண்டிருக்கிறார்களா? இதை நான் இன்று நேற்று சொல்லவில்லை. இந்த 10, 15 வருஷ காலமாகவே சொல்லி வருகிறேன். நான் காங்கரசில் இருந்து பலதடவை ஜெயிலுக்குப் போய் பல தலைமைப்பதவி வகித்து “சர்வாதிகாரி” பதவியில் இருந்து வந்த அனுபவத்தையே எடுத்துச் சொல்லிவருகிறேன். இது ஒரு புறமிருக்கட்டும்.

வரிகள் பெருகியதற்கு காங்கரசே காரணம்

காங்கரசுக்கு இன்று வயது 50 வருஷத்துக்கு மேலாகிறது. இந்த ஐம்பது வருஷ வாழ்வில் காங்கரஸ் 2-வித பருவத்தன்மை அடைந்திருக்கிறது. அதாவது முதல் முப்பது வருஷகாலம் சர்க்காருக்கு ராஜபக்தி, ராஜவிசுவாசம் காட்டி அதற்கு கூலியாக தங்களது தேவைகளுக்கு விண்ணப்பம் போடுவது ஒன்று. இந்த பருவத்தில் தான் உத்தியோகங்கள் பெருகினதும், சம்பளங்கள் பெருகினதுமாகும். வெள்ளையாய்ச் சொல்ல வேண்டுமானால் பார்ப்பனர்கள் அரசியலில் உத்தியோகங்களில் பெரும் பெரும் பகற்கொள்ளை போன்ற பதவிகளில் 100க்கு 100 பேராய் கைப்பற்றி பூரண ஆதிக்கத்திற்கு வந்த காலமாகும். அதனால்தான் நமது வரிகளும் அதாவது காங்கரஸ் ஆரம்பிப்பதற்கு முன் இருந்ததை விட இரட்டிப்பு மூன்று பங்கு ஆக பெருக வேண்டியதாயிற்று. சம்பளமும் உத்தியோகமும் எவ்வளவுக்கெவ்வளவு காங்கரசினால் பெருக்கமடைந்ததோ அதுபோலவே வரியும் பெருகிற்று.

சட்டமறுப்புச் சூழ்ச்சி

இந்த உத்தியோகங்களிலும் சம்பளக் கொள்ளையிலும் தங்களுக்கும் ஒருபங்கு வேண்டுமென்று கேட்பதற்கு ஆகத்தான் முஸ்லீம் லீக்கும் பார்ப்பனரல்லாதார் சங்கமும் ஏற்பட்டதாகும். இதைக் கொடுக்காமல் ஏமாற்றவே காங்கரஸ் ஒரு பல்டி அடித்தது. அந்தப் பல்டிதான் இந்த 20 வருஷகாலமாக நடந்து வரும் இரண்டாவது பருவத்தன்மை. அதாவது சர்க்காரோடு போராடுவதாகவும் அதற்காக சர்க்காரோடு ஒத்துழைக்கக் கூடாதென்றும் உத்தியோகம், பதவி, சம்பளம் ஆகியவை அற்பமென்றும் அது தேசத்துரோகமென்றும் அந்நிய ஆட்சியே கூடாதென்றும் பேசி சட்டம் மீறி ஜெயிலுக்குப் போய் மன்னிப்பு கேட்டுக்கொண்டு வெளிவந்து சரணாகதி அடைந்து பதவி பெற்ற தன்மை. இதில் சிறிதும் நாணயமில்லை என்பதே எனது அபிப்பிராயம். இது பார்ப்பனர்களுடைய வஞ்சகப் புத்தியே ஒழிய இப்பேச்சுகளில் செய்கையில் கொஞ்சமும் உண்மை கிடையாது. மற்றென்ன இருக்கிறது என்றால் தங்கள் கைக்கு பதவிகள் வரக்கூடிய சமயம் ஏற்படும்வரை இப்படியே சொல்லிக்கொண்டு இருந்து சந்தர்ப்பம் கிடைத்த உடன் திடீரென்று நுழைந்து கொள்ளலாம் என்கின்ற தந்திர புத்தியேயாகும். அதற்கு இணங்கவே தான் பொதுமக்கள் ஏமாறுந்தன்மை அடையும் வரை ஒத்துழையாமை – பஹிஷ்காரம் – சட்ட மறுப்பு முதலியவை பேசிக்கொண்டு இருந்து பதவி கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்ட உடன் சட்டப்படி நடப்பதாக வாக்குறுதி கொடுத்து ராஜவிசுவாசப் பிரமாணமும் ராஜபக்தி பிரமாணமும் சட்டத்தை ஒழுங்காய் கட்டுப்பட்டு நடத்திக் கொடுக்கும் பிரமாணமும் ஒரே மூச்சில் செய்து இன்று பதவிக்கு வந்து இருக்கிறார்கள்.

பதவி அடைந்த 6, 7 மாகாணங்களிலும் பார்ப்பனர்களே அதாவது சென்னையில் தோழர் ராஜகோபாலாச்சாரியார் போலவே 6, 7 மாகாணங்களிலும் பார்ப்பனர்களே தலைவர்களாய் இருந்து மந்திரி சபை நடத்துகிறார்கள். பம்பாயில் ஒரு பார்ப்பனரல்லாதாருக்கு உரிமை இருந்ததையும் அதாவது நரிமனை திடீரென்று கவிழ்த்து விட்டு அங்கும் ஒரு பார்ப்பனரையே தலைவராக ஏற்படுத்திக்கொண்டார்கள். அதாவது எவ்வளவு மானம் கெட்ட பார்ப்பனரல்லாதாராய் இருந்தாலும் ஏதாவது ஒரு சமயத்தில் மோசம் செய்து விடுவான் என்று பார்ப்பனர்கள் சந்தேகப்பட்டும் ஒரு மாகாணத்தில் ஒருவன் ஏதாவது சொந்த புத்தியோடு காரியம் செய்தால் அது மற்ற மந்திரிகளையும் கவிழ்த்துவிட நேருமோ என்று பயந்தும் ஒருவன் சொல்லுகிறபடியே எல்லா மாகாண மந்திரிகளும் ஆடத்தகுந்த மாதிரி எல்லா மாகாணத் தலைவர்களையும் முதல் மந்திரிகளையும் பார்ப்பனர்களாகவே வைத்துக் கொண்டார்கள். உதாரணமாக தீண்டாமை விலக்க வேண்டும் என்று ஒரு மந்திரி ஒரு மாகாணத்தில் சட்டம் செய்து விட்டால் மற்ற மந்திரிகளும் செய்ய வேண்டி வந்துவிடும். பிறகு அது பார்ப்பன சமூகத்தின் ஆதிக்கத்தையும் உயர்வையும் அடியோடு ஒழித்து விடும். ஆதலால் தீண்டாமை ஒழிக்கிறோம், ஒழிக்கிறோம் என்று தீண்டாமை ஒழிக்கப்படாத முறையிலேயே பேசி ஒழியாத மாதிரியிலேயே காரியம் செய்யவேண்டும். இதற்கு பார்ப்பனரல்லாதார் ஒருவராவது கடைசிவரை உள் ஆளாய் இருப்பாரா என்பது பார்ப்பனர்களுக்கு சந்தேகம். ஆதலால்தான் எந்த மாகாணத்திலும் பார்ப்பனரல்லாதார்களை அவர்கள் நம்புவதில்லை.

ஆகவே காங்கரஸ் பார்ப்பன ஆதிக்கமுள்ளது என்பதற்கும் பார்ப்பன ஆதிக்கத்தை பலப்படுத்திக்கொள்ளவே ஏற்பட்டதென்பதற்கும் அதற்கு அனுகூலமாக காரியங்கள் பிரத்தியக்ஷத்தில் இருந்து வருவதையும் எடுத்துச் சொன்னேன். இனி காங்கரஸ் ராஜவிசுவாசப் பிரமாணம் செய்து பதவிக்கு வந்து சர்வாதிகாரம் செய்யக்கூடிய பலத்துடன் பதவி ஏற்று இன்று கணக்குக்கு கிட்டத்தட்ட 6 மாதம் ஆகப்போகிறது. இந்த 6 மாத கணக்கை சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

காங்கரசுக்காரர் பதவி ஏற்று இன்றைக்கு கிட்டத்தட்ட 6 மாத காலமாகப் போகின்றது. இந்த ஆறு மாதத்திய வரவு செலவு கணக்கு என்ன என்று பார்ப்போம். காங்கரசின் வேலைத்திட்டம் என்னவென்றால் அவர்கள் தேர்தல் காலங்களில் ஓட்டர்களுக்குச் சொன்னவைகளும் கராச்சித் திட்டமுமேயாகும். இந்தக் காரியங்களில் அவர்கள் எதை செய்திருக்கிறார்கள்? எதைச் செய்ய முயற்சிக்கிறார்கள்? என்பதைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள்.

மொத்தத்தில் சொல்ல வேண்டுமானால் காங்கரசுக்காரர்கள் காங்கரசால் மக்களை ஏமாற்றி எலக்ஷன்களில் வெற்றி பெறுவது என்பதல்லாமல் அவர்கள் இந்த 15, 20 வருஷகாலமாகவே அவர்களது சகல திட்டங்களிலும் சகல வாக்குத்தத்தங்களிலும் தோல்வியே அடைந்து வந்திருக்கிறார்கள். அதாவது காங்கரஸ்காரர்கள் பதவி ஏற்காமல் வெளியில் இருந்துகொண்டு ஒத்துழையாமை, சட்டமறுப்பு, நிர்மாணத்திட்டம் ஆகிய காரியங்களிலும் தோல்வியே அடைந்து வந்திருக்கிறார்கள்.

எல்லாம் தோல்வி

அவர்களது பஹிஷ்காரத் திட்டங்கள் எல்லாவற்றிலுமே தோல்வி அடைந்தார்கள். தோல்வி அடைந்தது மாத்திரமல்லாமல் பஹிஷ்காரத் திட்டத்தை மீறி காங்கரஸ் கட்டளைக்கு விரோதமாய் தேர்தல் முதலியவை களில் மாறு வேஷத்துடன் பிரவேசித்து அதிலும் ஒன்றும் செய்ய முடியாமல் தோல்வி அடைந்தார்கள்.

சட்ட சபைகளில் இருந்து வெளியேறும் நாடகம் நடத்தி அவற்றிலும் படுதோல்வி அடைந்து மறுபடியும் உள்ளே போனார்கள்.

சட்டசபைகளை ஸ்தம்பிக்கச் செய்ய, முட்டுக்கட்டை போட சட்டசபைக்குப் போனார்கள். அங்கு போய் பதவி ஏற்றார்கள், சம்பளம் பெற்றார்கள்.

சைமன் கமிஷன் பஹிஷ்காரம் செய்தவர்கள் சைமன் கமிட்டிக்கு நேரு திட்டம் சமர்ப்பித்தார்கள்; அதிலும் தோல்வி அடைந்தார்கள்.

உப்பு சத்தியாக்கிரகம் ஆரம்பித்தார்கள்; அதிலும் தோல்வி அடைந்தார்கள்.

வட்டமேஜை மகாநாடு பஹிஷ்காரம் செய்தார்கள்; அதிலும் தோல்வி அடைந்து வட்ட மேஜைக்கு வாரண்டு வந்து பிடித்துக் கொண்டு போனது போல் போய்ச் சேர்ந்தார்கள்.

வட்ட மேஜைக்குப் போயும் அங்கும் தோல்வி அடைந்து திரும்பி வந்தார்கள்.

திரும்பி வந்ததும் சட்ட மறுப்பு, மறியல் முதலியவைகள் செய்தார்கள். அவற்றில் அடியோடு மன்னிப்பு கேட்க வேண்டியதாயிற்று.

இவ்வளவு தோல்விகள் அடைந்த பின் ஒத்துழையாமை, சட்ட மறுப்பு, பகிஷ்காரம் ஆகியவைகள் கைவிடப்பட்டன என்று காங்கரசிலேயே தீர்மானம் போட்டதுடன் இனி சட்டங்களை மீறுவதில்லை, மறியல்கள் செய்வதில்லை என்று சர்க்காருக்கு காந்தியார் எழுதிக்கொடுத்து ஜெயிலில் இருந்து வெளிவந்து தேர்தல் பிரசாரம் நடத்தினார்கள்.

இந்திய சட்டசபை

இந்திய சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அங்கு போய் காங்கரசுக்கு மெஜாரிட்டி இருந்தும் காங்கரசுக்காரர்கள் போக்குவரத்துப் பிரயாணப்படி வாங்கியதைத் தவிர சர்க்கார் தீர்மானங்கள் சிலவற்றை தோற்கடிக்கும் நாடகம் நடத்தியதைத்தவிர இவர்களால் சர்க்காரின் ஒரு சிறு திட்டத்தையோ தீர்மானத்தையோ நடைபெறாமல் நிறுத்திவிடவில்லை.

மற்றும் தற்கால சாந்தியாய் ஏற்பட்ட அடக்கு முறை சட்டங்கள் முதலியவற்றிற்கு பூரண ஆயுள் கொடுத்தார்கள்.

வரிகள் உயர்த்தப்பட்டனவே ஒழிய ஸ்டாம்பு முதலிய எந்த விஷயத்திலும் ஒரு சின்ன காசு அளவு குறைக்கப்படவில்லை.

சட்டசபை ஓட்டு கேட்கும் போது தங்கள் காரியங்கள் நடைபெற வில்லையானால் ராஜிநாமா செய்து விட்டு வெளியில் வந்துவிடுவோம் என்று சொன்னவர்கள் ஒரு காரியமும் செய்ய முடியவில்லை என்று தெரிந்தும் இன்னமும் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அங்கு தொழிலாளிகள் சம்மந்தமாக வந்த சட்டங்களில் தொழிலாளர் களுக்கு துரோகம் செய்தார்கள். மற்றும் வேறு பல கம்பனிச்சட்டங்கள், இன்ஷுரன்ஸ் சட்டங்கள், ரயில்வே சம்மந்தமான விஷயங்கள் முதலியவைகள் வந்த காலத்தில் முதலாளிகளுக்கு அனுகூலமாகவே இருந்தார்கள். இவற்றில் பலவற்றில் பெருந்தொகையாக பிரதிப்பிரயோஜனம் கூட உண்டு என்கின்ற பழிப்புக்கு இடம் செய்து கொண்டார்கள்.

சென்னை சட்டசபை

சில தனிப்பட்டவர்களின் இன்றைய நிலைமையைப் பார்த்தால் இந்த மாதிரி காரியத்தால் அல்லாமல் வேறு வகையில் இவர்களுக்கு இவ்வளவு பணம் ஏது? என்று சந்தேகப்படும்படியாகவே இருக்கிறது.

இது நிற்க, சென்னை சட்டசபை நிலைமை என்ன என்று பார்ப்போம். இன்று சென்னை சட்டசபையில் காங்கரசுக்கு பெருமித மெஜாரிட்டி இருந்து வருகிறது. எதிர்க்கட்சிக்காரர்கள் எல்லாம் பலவித சூழ்ச்சியால் விலைக்கு வாங்கப்பட்டு எதிர்ப்பே இல்லாமல் செய்து கொள்ளப்பட்டாய் விட்டது.

மேல் சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சர். உஸ்மான் அவர்கள் ஆச்சாரியாரைப் பற்றி புகழ்மாலை சாற்றிய வண்ணமாய் இருக்கிறார்.

கீழ்ச் சபையில் எதிர்க்கட்சித் தலைவர் குமாரராஜா அவர்கள் ஆச்சாரியாருக்கு பூமாலை சூட்டிய வண்ணமாய் இருக்கிறார். இனி காங்கரஸ்காரர் இஷ்டத்திற்கு மாறு பேசுகிறவர்கள் யாருமே இல்லை. இருந்தாலும் அவை காரியத்துக்கு உதவாதவைகள் தான். ஆகவே காங்கரஸ்காரர்கள் இந்த தனி அரசு காலத்தில் என்ன செய்தார்கள் என்று பாருங்கள். காங்கரஸ் திட்டத்தில் எதை நடத்தி வைத்தார்கள் என்று பாருங்கள்.

காங்கரஸ் திட்டத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையும் தீண்டாமை விலக்கும் முக்கியமானவை. இவைகளில் என்ன செய்திருக்கிறார்கள்? காங்கரஸ் தனி அரசு ஆட்சியில் இந்து முஸ்லீம் வேற்றுமை அதிகப்பட்டுவிட்டது. தீண்டாமைவிலக்குக்கு சட்டம் செய்வது கூடாது என்று தீர்மானிக்கப்பட்டு தீண்டாமையை சட்ட மூலம் ஒழித்த வேறு அரசாங்கங்களை பாராட்டுவதுடன் நின்றுவிட்டது. தேசீயக் கல்வித்திட்டம் ஹிந்தி கட்டாயப்பாடமாகவும் பழங்கால கைத்தொழில் பயில்வதே கல்வித் திட்டமாகவும் ஆகிவிட்டது.

காங்கரசில் ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளதான பாஷாவாரியாக மாகாணங்களை அரசியலிலும் பிரிப்பது என்பதைச் செய்ய இஷ்டமில்லாமல் சூழ்ச்சிகள் செய்து அம்முயற்சி அடக்கப் பட்டு வருகிறது.

மதுவிலக்குப் புரளி

மதுவிலக்கு சட்ட ரீதியாகவோ திட்ட ரீதியாகவோ இல்லாமல் விளையாட்டுப் பிள்ளை மண் கொழிக்கும் மாதிரி விளம்பரத்தில் செய்து கொண்டு அக்கம் பக்கத்தில் போய் குடிப்பதற்கு செளகரியமும் வைத்துக்கொண்டு தினமும் சில்லறை சிப்பந்திகள் மடி நிறையும்படி கேசு செய்து எண்ணிக்கை காட்டுவதே மது விலக்கு முயற்சியாய் இருக்கிறது. மதுவிலக்கு பண நஷ்டத்திற்கு யாதொரு பரிகாரமும் தேடாமல் கல்வி, சுகாதாரம், வைத்தியம் ஆகியவைகள் தலையில் தைரியமாய் கை வைக்கப்பட்டு வருகிறது.

கதர் விஷயம் பயன்படாது என்று தெரிந்தும் கதரை ஆதரிக்க “கதர் காட்டுமிராண்டித் திட்டம்” என்ற தோழர் ராமநாதனை விலைக்கு வாங்கி அவரைக் கொண்டு கதரின் பேரால் சில ஆட்களை கட்சிப் பிரசாரத்துக்கு வைத்திருப்பதற்கு ஆக பொது மக்கள் வரிப்பணத்தில் 2 லக்ஷ ரூபாய் கிராண்டு கொடுத்து விட்டு அதைச் சரிக்கட்ட ஜவுளி வியாபாரிகளுக்குப் புது வரி போடப்பட்டாய் விட்டது.

தேசீயக் கடனை ஏன் ஒழிக்கவில்லை

தேசியக் கடன்களை கேன்சில் செய்வதாக காங்கரசில் செய்த தீர்மானங்கள் வண்டி வண்டியாய் இருக்க அவைகளை காற்றில் பறக்கவிட்டு, பழைய கடனை ஒப்புக்கொண்டு – ஆதரிக்கச் செய்தும் பயன்படாமல், புதுக்கடனும் வாங்கியாய் விட்டது.

மாகாண சட்டசபைகளில் செய்யக்கூடிய அதிகாரத்தைக் கொண்டு அடக்குமுறைச் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டியதற்கு பதிலாக அடக்குமுறைச் சட்டப்படி காங்கரஸ்காரர்கள் மீதே நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட்டு வருகிறது. முன்பு இல்லாத மாதிரியில் பத்திரிகைகளுக்கு ஜாமீன் கேட்கப்படுகிறது. நீதி நிர்வாக இலாகாக்களை பிரிவினை செய்யவேண்டும் என்னும் கோரிக்கையானது காங்கரசின் 30, 40 வருஷ திட்டமாயும் கோரிக்கையாயும் இருந்துகூட இப்போது காங்கரஸ் பதவிக்கு வந்தவுடன் கவர்னருக்கு சரணாகதி அடைந்து நீதி நிர்வாக இலாகா பிரிக்க முடியாதது என்று தீர்மானிக்கப்படக்கூடியதாக ஆகிவிட்டது.

வரிகுறைப்பு எங்கே?

பொதுவாக வரி குறைப்பது என்பது புதுவரி போடும் வேலையில் கவலை செலுத்தப்படுகிறது. சம்பளங்கள் குறைப்பு என்பதும் சம்பளம் தவிர வீட்டு வாடகை, சர்க்கார் செலவில் மோட்டார் கார் வாங்கிக் கொடுத்தல், மோட்டார் கார் அலவன்சு கொடுத்தல் ஆகியவைகளில் புதுப்புது செலவினங்கள் ஏற்படுத்தப்படுகிறது. அரசியல் உத்தியோகத்தில் வெள்ளையர்- இந்தியர் வித்தியாசங்களை ஒழிப்பது என்பதும் இப்போது வெளிப்படையாய் வெள்ளைக்கார உத்தியோகஸ்தர்களுக்கு தனி மரியாதை இருக்க வேண்டியது தான் என்று ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டது. காங்கரஸ்காரர்களிடம் உள்ள ஜனநாயகம் என்பது பொது ஜனங்களைப் பார்த்து “நான் அப்படித்தான் செய்வேன், வேண்டுமானால் அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்” என்கின்ற எதேச்சாதிகாரமாக மாறி விட்டது.

ஸ்தல ஸ்தாபன வெற்றியானது சூழ்ச்சியால் வெற்றி அடையப்பார்க்க வேண்டியதாய் விட்டதே ஒழிய நேர் வழியில் முயற்சித்த இடங்களில் எல்லாம் தோல்வியே கிடைத்திருக்கிறது.

பிரித்த ஜில்லா போர்டுகளை ஒன்று சேர்த்தல் என்பது கட்சி நலனுக்கு கவனிக்கப்பட்டு நபருக்கு தகுந்தாற்போல் தனித்தனி முறை கையாளப்பட்டு வருகிறது.

ஸ்தல ஸ்தாபனங்களில் லஞ்சமும் கண்டிறாக்ட்டு ராஜ்யமும் ஒழிக்கப் போவதாக கூறி ஓட்டுப் பெற்றவர்கள் காங்கரஸ் மெம்பர்களே லஞ்சம் வாங்கி வருவதையும் கண்டிறாக்ட்டு பெற்று வருவதையும் பெயர் விபரம் புள்ளிவிபரம் ஆகியவையுடன் காங்கரஸ் பத்திரிகைகளே எடுத்துக்காட்டி வருகின்றன.

ஜில்லா போர்டுகளை இணைக்காததேன்?

ஜில்லா போர்டுகளை எடுத்து விடுவதாய்ச் சொன்னதையும் ஜில்லா போர்டுகளுக்கு ஸ்பெஷல் ஆபீஸர்கள் அல்லது நிர்வாக ஆபீஸர்கள் போடுவதாய்ச் சொன்னதையும் இப்போது காற்றில் பறக்கவிட்டு அவை செய்யாமல் இருப்பதற்கு மெம்பர்களிடம் தலைவர்களிடம் வியாபாரம் பேசப்படுகிறது. சில பேர்களில் காங்கரசுக்கும் காங்கரசில் செல்வாக்கு உள்ளவர்களுக்கும் பணம் கொடுத்து பிரிவினையை ஒன்று சேர்க்காமல் தப்பித்துக் கொள்ளவும், நிர்வாக அதிகாரி போடாமல் பார்த்துக்கொள்ளவும் முயற்சி நடந்து வருகிறது.

கடன் வாய்தா மசோதா ஒழிந்ததேன்?

காங்கரஸ் கொண்டு வருவதாய் சொன்ன சட்டங்கள் கொண்டு வரப்படாமல் நிறுத்திக் கொள்ள வேண்டியதாய் விட்டன. கொண்டு வந்த சட்டங்களும் தலைமேலடிக்கப்படுகின்றன. சட்டங்கள் செய்யும் விஷயத்தில் காங்கரசுக்கு புத்தியும் இல்லை; அனுபவமும் இல்லை; நாணையமும் இல்லை; உறுதியும் இல்லை; வெட்கமும் இல்லை என்று மெய்ப்பிக்கப்பட்டு விட்டது.

அவசரப்பட்டு இன்ன சட்டம் செய்வதாகச் சொல்லுவதும் முதலாளிமார்களோ பார்ப்பனர்களோ தங்கள் சுயநலத்துக்கு விரோதமாய் இருக்கிறது என்று கூப்பாடு போட்டால் அல்லது காங்கரஸ் தலைவர்களை சரிப்படுத்திக் கொண்டால் அதைத் தந்திரமாக கைநழுவ விட்டுவிட்டு உப்பு சப்பற்ற – வெறும் வேஷத்துக்கும் ஏய்ப்பதற்கும் மாத்திரம் பயன்பட்ட போலிச் சட்டங்களை விளம்பரப்படுத்திக்கொண்டு தங்களுக்குள்ளாகவே நாலுபேர்களை வெளிவேஷத்துக்கு எதிர்க்கும்படி செய்து ஏதோ வெகு பிரயாசையின் மீது மகா பிரமாதமான சட்டத்தை செய்து விட்டதாக கூலிப் பத்திரிகைகளை விட்டு விளம்பரம் செய்யச் செய்வதுமான தந்திரத்தில் முடிவடைந்து விடுகிறது.

சமதர்ம விஷயமும் சமதர்மக்காரர்களால் ஓட்டுப் பிரசாரம் செய்து கொண்டதல்லாமல் இன்று காங்கரசுக்கு ஓட்டுப்பிச்சை வாங்கிக் கொடுத்த சமதர்மக்காரர்கள் முக்காடு போட்டுக் கொண்டு திரியும்படியான வெட்கங்கெட்ட நிலையில் வைக்கப்பட்டு விட்டார்கள்.

மந்திரிகளுக்குள் ஒற்றுமையுண்டா?

மந்திரிகளுக்குள் ஒற்றுமை இல்லாமல் ஆளுக்கு ஒருவிதம் பேசுவதும் காங்கரஸ்காரர்களே மந்திரிகளை குறை கூறுவதும் தோழர் சத்தியமூர்த்தி அவர்களே காங்கரஸ் மந்திரிகள் செய்வது ஒழுங்கில்லை என்று சொல்லுவதுமான நிலையில் இருப்பதோடு உள்ளுக்குள் கட்சிப்பிளவுகளும் மனஸ்தாபங்களும் வலுத்து வருகின்றன.

காங்கரஸ் கட்டுப்பாடும் ஒழுங்கு நடவடிக்கையும் பத்திரிகையில் எழுதுவதுடன் சரியே ஒழிய காரியத்தில் யாரும் கட்டுப்படுவதில்லை.

ஒழுங்கு நடவடிக்கைப் பலன்

ஒழுங்கு நடவடிக்கையின் பேரால் தண்டிக்கப்பட்ட ஆட்கள் 100க்கு 90 பேர்கள் விஷயத்தில் எவரும் கீழ்ப்படியவே இல்லை. தண்டனை நிறைவேற்றப் படவேயில்லை. ஆகவே வெறும் வேஷத்தில் பலமற்ற அப்பாவிகளை மிரட்டி பணம் வாங்கவே ஒழுங்கும் கட்டுப் பாடும் நடவடிக்கையும் இருந்து வருகின்றன.

காங்கரசில் சேர்ந்த முஸ்லீம்களுக்கு முஸ்லீம்களிடமும் நாட்டுப் பொது மக்களிடமும் செல்வாக்கோ நம்பிக்கையோ கிடையாது என்பதோடு முஸ்லீம்கள் மந்திரி, காரியதரிசி தவிர மற்ற யாவரும் காங்கரசுக்கு விரோதமாகவே இருந்து வருகிறார்கள்.

ஆதிதிராவிடர்களும் காங்கரசை எதிர்க்கிறார்கள். ஆதிதிராவிட மந்திரிக்கு ஆதிதிராவிட சமூகத்திலேயே செல்வாக்கும் நம்பிக்கையும் இல்லை.

ஆகவே இன்று காங்கரஸ் வெறும் பத்திரிகை பிரசாரத்திலும் பொதுஜனங்கள் வரிப்பணத்தில் மந்திரி கோஷ்டியும் காரியதரிசி கோஷ்டியும் ஊர் ஊராய் சென்று ஏமாற்றுப் பிரசாரம் செய்து ஏய்ப்பதிலும் உயிர் வைத்திருக்கிறதே ஒழிய உண்மையில் காங்கரஸ் தனது கொள்கையில் வெற்றியோ அல்லது மக்களுக்கு அதனால் பலனோ ஏற்பட்டதென்று எவரும் சொல்ல முடியாது.

வேலையற்ற – வயிறு வளர்ப்புக்கு வேறு வகையற்ற – பதவிக்கு வீங்கிய கூட்டம் காங்கரசை நடத்திக்கொண்டிருப்பதாலேயே அது பொதுஜனங்களுக்கு பயனளிக்கத்தக்கதாயிருக்கிறது என்று யாரும் எண்ணிவிட முடியாது.

காங்கரஸ்காரர் யோக்கியதை

உண்மையில் காங்கரசுத் தலைவர்கள் என்பவர்கள் வெளியில் இருந்து பொறுப்பில்லாமல் அனுபவ ஞானமில்லாமல் பாமர மக்கள் மகிழும்படி ஏமாறும்படி பேசிப் பழக்கமும் ஞானமும் உள்ளவர்களே ஒழிய அவர்களுக்கு நிர்வாக அனுபவமும் அரசியல் ஞானமும் இல்லை என்கிற யோக்கிதையும், பார்ப்பன சமூக நன்மையே அரசியல் திட்டம் என்கின்ற கொள்கையும் உடையவர்களாயிருப்பதால் அவர்களிடம் இதற்கு மேல் வேறு எதுவும் எதிர்பார்க்கவும் முடியாது. இதிலிருந்தாவது மக்கள் அறிவு பெற்று இனி புத்திசாலித்தனமாய் நடந்து கொள்ளுவார்கள் என்று கருதுகிறேன்.

தோழர்களே! காங்கரஸ் என்பது பற்றியும் அவர்களது கொள்கை திட்டம், இந்த ஆறுமாத காலவேலை, அதனால் ஏற்பட்ட பலன் என்பதைப் பற்றி எனது அபிப்பிராயத்தைத் தெரிவித்து விட்டேன். இதை நீங்கள் தயவு செய்து நிதானமாய் யோசித்து பார்த்தும் நாளைக்கு இங்கு வரும் காங்கரஸ் தலைவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லுகிறார்கள் என்பதைப் பொறுமையோடு கேட்டும் பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று கேட்டுக் கொண்டு விடைபெற்றுக் கொள்ளுகிறேன்.

(19.12.1937 குடி அரசு – நாமக்கல் சுயமரியாதை மாநாட்டு சொற்பொழிவு “சுயமரியாதை இயக்கத் தத்துவம்” தொடர்ச்சி)

குடி அரசு – சொற்பொழிவு – 26.12.1937

You may also like...