காங்கரஸ் செய்யும் பரிசுத்தம்

 

ஸ்தல ஸ்தாபனங்களாகிய ஜில்லாபோர்டு, முனிசிபாலிட்டி முதலியவை களிலும் ஐக்கிய நாணய சங்கங்கள் முதலியவைகளிலும் அரசியல் கட்சி வேற்றுமையோ, மற்றும் வேறு கட்சி வேற்றுமையோ தலைகாட்டும்படி செய்யக்கூடாது என்றும் கட்சி விஷயங்கள் புகுந்தால் நிர்வாகம் நடு நிலை நீதியற்றும் நாணயமற்றும் நடக்க வேண்டியதாக ஆகிவிடும் என்றும் சுமார் 20 வருஷ காலமாகவே எடுத்துச் சொல்லி வருகிறோம். நாம் சொல்லி வருவதை மெய்ப்பிக்க அடிக்கடி ஏராளமான ஆதாரங்கள் ஏற்பட்டு வந்தும் காங்கரஸ் கட்சி தலைவர்கள் என்பவர்கள் சிறிதும் யோக்கியப் பொறுப் பில்லாமல் ஸ்தல ஸ்தாபன தேர்தல்களிலும் நிர்வாகங்களிலும் கட்சியைப் புகுத்தி நிர்வாகத்தின் நேர்மையையும் நாணயத்தையும் பாழ்படுத்தி விட்டார்கள். என்றைய தினம் காங்கரஸ்காரர்கள் காலிகளுடைய உதவி யையும் கூலிகளுடைய உதவியையும் அக்கிரமம், அயோக்கியத்தனம் ஆகியவற்றின் தன்மையையும் கை முதலாகக் கொண்டு ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்களில் வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்களோ அன்று முதலே எவ்வளவு தான் யோக்கியமும், நாணயமும் உள்ளவர்கள் ஸ்தல ஸ்தாபனத்திற்குள் நுழைந்தாலும் 100க்கு 90 பேர்கள் அயோக்கியர் களாகும் படியும் அயோக்கியத்தனங்களை கற்றுக் கொள்ளும்படியும் நேரிட்டு வந்திருக்கிறது. அதிலும் வயிற்றுச் சோற்றுக்கும் வாழ்க்கைக்கும் யோக்கியமான மார்க்கமில்லாத தத்தாரி ஆட்கள் பிரவேசித்து நிர்வாகத்தில் பங்கு கொள்ளச் செய்த பிறகு சற்றேறக்குறைய அம்மாதிரி ஆட்கள் 100க்கு 99 பேரும் அந்த ஸ்தானங்களின் நாணயத்தை விற்றே வயிறு கழுவவும் பணம் சம்பாதிக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டு விட்டார்கள்.

நடுநிலைமையில் இருந்து நாமே யோசிப்போமானால் வீட்டில் வாய்க்கரிசிக்கு வகையில்லாத நபர் முனிசிபாலிட்டியிலும், ஜில்லா போர்டிலும் ஸ்தானம் பெற்றால் சோற்றுக்கு என்ன செய்வான் என்றுதான் படும்.

பணக்காரன், ஏன்? யோக்கியன் கூட ஸ்தானம் பெற்றாலே 100க்கு 90 பேர்கள் சவுகரியப்பட்டால், இடமிருந்தால் எலக்ஷன் செலவு கணக்கை நேர் செய்து சரிகட்ட, சாப்பிடாததைச் சாப்பிடக் கூட ஆரம்பித்து விடுகிறான். வரப்போகும் எலக்ஷன் செலவுக்கு என்று வெளிப்படையாய் பண்டு சேர்க்கிறான். இப்படி இருக்க þ ஆட்களைப் பற்றி கேட்க வேண்டுமா? என்று கேட்கிறோம்.

இது இப்படி இருக்க, இது விஷயமாய் காங்கரஸ்காரர்களின் யோக்கிய தையையும் அவர்களது வண்டவாளங்களைப் பற்றியும் பேச வேண்டுமானால் அது ஒரு கசுமாலத்தைக் கழுவிவிடுவது போலவே தான் இருக்கிறது. எப்படி யெனில் காங்கரஸ்காரர்களுக்கு ஸ்தல ஸ்தாபன தேர்தல் விஷயமாய் எவ்வித நிர்வாகக் கொள்கையும் இல்லாமல் தேர்தலில் போட்டி போட வேண்டிய வர்களாகி விட்டதால் அவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சினையாக “ஸ்தல ஸ்தாபனங்களில் லஞ்ச ராஜ்யத்தை ஒழிப்பது எங்கள் கொள்கை” என்று சொல்லிக் கொண்டு தேர்தல் வேட்டை ஆடினார்கள். ஆனால் அந்த வேட்டை ஆடுவதற்கு காங்கரஸ்காரர்கள் பிடித்த ஆட்களில் பலர் கஞ்சிக்கு யோக்கியமான வகையில்லாதவர்களும் லஞ்சத்திற் பிறந்து லஞ்சத்தில் ஊறி லஞ்சத்தில் வளர்ந்து லஞ்சத்திலேயே ஆழ்ந்துகிடக்கும் ஆட்களுமாவர். மற்றும் தேர்தலுக்கு 10 – நாளைக்கு முன்வரை “லஞ்சம் வாங்கினார்” “லஞ்சம் வாங்கினார்” “லஞ்ச ராஜ்யம் தாண்டவமாடுகிறது” என்று யாரைப் பார்த்து வாய்வலிக்க நுரை ததும்பக் குலைத்து வைது வந்தார்களோ அந்த ஆட்களிடமே லஞ்சம் (கூலி) வாங்கிக்கொண்டு அவர் காங்கரஸ் மெம்பர் ஆய்விட்டதாகச் சொல்லி அப்படிப்பட்டவரிடம் பார்லிமெண்ட் போர்டு தலைவர்களும் லஞ்சம் வாங்கிக் கொண்டு தேர்தலுக்கு நிறுத்தி வெற்றிமாலை சூட்டினார்கள். காங்கரஸ்காரரின் இந்நடவடிக்கையை நாம் அப்போதே ஆக்ஷேபித்து எச்சரிக்கை செய்து வந்தோம்.

அதற்கு கனம் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சிறு உதாரணத் தோடு சமாதானம் சொன்னார். அது என்ன உதாரணமெனில்,

ஒருவன் எவ்வளவு அயோக்கியனாகவும் கொலைகாரனாகவும் இழி மகனாகவும் கொள்ளைக்காரனாகவும் மாதுரு மணாளனாகவும் இருந்தாலும் ஒரு சிட்டிகை விபூதி பூசிய உடனோ அல்லது ஒரு தடவை ராமா என்ற உடனோ அல்லது தன்னை அறியாமலே அரிசி என்றும் படவா என்றும் உச்சரித்து விட்டால் அவ்வார்த்தைகளின் கடசி எழுத்துக்கள் இரண்டும் சேர்ந்து சிவா என்கின்ற வார்த்தை ஆகிவிடுகிறதினால் அதனாலோ அவனுடைய சர்வ பாபமும் ஒழிந்து மோக்ஷலோகத்துக்கு அருகதை உடையவனாகிவிடுகிறது போல் ஒருவன் எவ்வளவு அயோக்கியனாகவும்…… இருந்தாலும் 4 அணா தக்ஷணை கொடுத்து காங்கரசில் சேர்ந்து கதர் குல்லாய் போட்டுக் கொண்டால் அல்லது காங்கரஸ் மெம்பர் பாரத்தில் கையெழுத்துப் போட்டு விட்டால் பரம பாகவதனாக விபீஷணாழ்வாராக மகா மகா குட்டி ஆத்மாவாக ஆகிவிடுகிறான் என்று சொல்லி நமது வாயை அடக்கினார். ஆனால் உபமான உபமேயங்கள் சொல்லி மக்களை ஏய்த்து வஞ்சகத் தன்மையான ஆசைகாட்டி சுவாதீனம் செய்து பதவியேற்ற காங்கரஸ்காரர் பதவி பெற்றபின்பு “லஞ்ச ராஜ்யம்” என்ன ஆயிற்று என்று பார்த்தால் காங்கரஸ் தலைவர்கள் என்பவர்களே மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டிய அளவுக்கு நாற்றம் நாற ஆரம்பித்து விட்டது. “லஞ்ச ராஜ்ய” தாண்டவத்தை சகிக்கமாட்டாமல் காங்கரஸ் தலைவர்கள் ராஜிநாமா கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இன்ன இன்ன கமிட்டியில் இன்ன இன்னார் இவ்வளவு இவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள் என்று பெயர், விலாசம், குலம் கோத்திரம், கொண்ட இடம், கொடுத்த இடம் எல்லாம் வெளியாக்கப்பட்டு விட்டன. எதில் என்று வாசகர்கள் கேட்கக்கூடும். “தினமணி”யிலும் “மெயிலி”லுமேதான். “தினமணி” எப்படி இருந்தாலும் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பெயரை உடைய ஆசிரியரால் நடத்தப்படுவதால் அது சதாகாலமும் ஜாக்கிரதையாய் இல்லாமல் ஏதோ ஏமாந்த சமயத்தில் உண்மையை கக்கிவிடுகிறது. “மெயி”லும் அப்படியே இருப்பதால் சில சமயங்களில் நடுநிலைமை வகித்து விடுகிறது. அதன் காரணத்தால் எண்ஜான் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பதுபோல் சென்னை மாகாணத்துக்கு மதராஸ் பிரதான பட்டண மென்பதோடு மாகாண ஸ்தல ஸ்தாபன சபைகளுக்கெல்லாம் சென்னை கார்ப்பரேஷனே தலைச் சபையாயுமிருக்கிறது என்பது யாரும் அறிந்ததேயாகும். அச்சபையின் தேசீயத்துக்கு அறிகுறி வேண்டுமானால் மாகாண கவர்னருக்கே “அவர் ஒரு இந்தியராய் இருப்பதால் அவருக்கு வரவேற்பு பத்திரம் கொடுக்கக்கூடாது” என்று தீர்மானம் செய்த “பாரத மாதாவின் அருமைப் புத்திரர்களை”க் கொண்டதே போதுமானது.

அப்படிப்பட்ட சபையில் லஞ்சமோ ஒ ஒ லஞ்சம் என்று விலை கூறப்படுகிறது.

இதை “தினமணி” பத்திரிகை மாத்திரம் எடுத்துக் காட்டவில்லை. தமிழ் மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தோழர் முத்துரங்க முதலியாரும், கார்ப்பரேஷன் டிப்டி மேயரும் காங்கரஸ் கமிட்டி காரியதரிசியுமான தோழர் பக்தவச்சலம் எம்.எல்.எ. அவர்களும் காங்கரஸ் எம்.எல்.எ. ஆன தோழர் சொக்கலிங்கம் அவர்களும் ஆகிய மூன்று பிரதான பாரத புத்திரர்கள் கூறுகின்றார்கள் என்றால் இனி இது விஷயத்தில் அறிவும் நாணயமும் உள்ள எவருக்காவது சந்தேகமிருக்க முடியுமா என்று கேட்கிறோம்.

ஆனால் இதற்கு சமாதானமாக “தினமணி” பத்திரிக்கை ஒரு அயோக்கியத்தனமான காரணம் காட்டுகிறது. அது என்னவென்றால் “ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள ஆட்களை காங்கரசில் சேர்த்ததால் அவர்கள் காங்கரசுக்கு வந்தும் தங்கள் வழக்கப்படி லஞ்சம் வாங்கிவிட்டார்கள்” என்று எழுதுகிறது. அப்பத்திரிகைக்குச் சிறிதாவது மானமோ, வெட்கமோ, புத்தியோ இருந்தால் இப்படி எழுதி இருக்காது. ஏனெனில் தோழர் கனம் ஆச்சாரியார் “எப்படிப்பட்ட அயோக்கியரானாலும் காங்கரசில் சேர்ந்து விட்டால் யோக்கியனாய்விடுவான்” என்றதற்கு இதுவா “தினமணியின்” பதில் என்று கேட்கிறோம். அப்படிப்பட்டவர்களைக் காங்கரசில் காங்கரஸ் தலைவர்கள் ஏன் சேர்த்தார்கள்? அந்தக்காலத்தில் அவர்கள் புத்தி என்ன சாப்பிடப் போயிருந்தது? என்று கேட்டால் இவர்கள் என்ன பதில் சொல்லக் கூடும்? நிற்க, இன்று காங்கரசில் உள்ள பார்ப்பனரல்லாதாரில் “தினமணி” ஆசிரியர் உள்பட எத்தனை பேர் “ஜஸ்டிஸ்” கட்சியில் ரகசியமாகவோ, வெளிப் படையாகவோ எச்சிலை பொறுக்காதவர் இருக்கக்கூடும்?

அப்படிப்பட்டவர்கள் பூராவும் இன்று ஜஸ்டிஸ் கட்சியை விட்டு காங்கரசுக்கு போய்விட்டதால் லஞ்ச ராஜ்யத்தை ஒழிக்க வேண்டியது காங்கரசின் உண்மையான கடமையாக இருக்குமானால் காங்கரசின் பேரால் ஸ்தல ஸ்தாபனத்தில் இருக்கும் பார்ப்பனரல்லாதார் அத்தனை பேரும் மரியாதையாய் விலகிக்கொண்டு வேறு ஒருவருக்கு இடம் கொடுப்பது தானே யோக்கியமாய் இருக்கும். ஆகவே இன்று காங்கரசில் லஞ்ச ராஜ்யம் நடப்பதும் லஞ்சப்பேய் தாண்டவமாடுவதும் காங்கரஸ் தலைவர்கள் மூலம் ஒப்புக்கொண்டாய் விட்டது. ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து காங்கரசுக்குப்போன தேசியவாதிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள். “தினமணி” ஆசிரியரின் காலை நக்கி “இனிமேல் எங்களை வெளிப்படுத்த வேண்டாம்” என்று சொல்லப்போகிறார்களா? அல்லது புத்தி கற்பிக்கப் போகிறார்களா?

குடி அரசு – தலையங்கம் – 31.10.1937

You may also like...